27

27

இலங்கையில் தொடரும் பொருளாதார சிக்கல் நிலை – வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 60% குடும்பங்கள் !

இலங்கையில் குறைந்தது 60% குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர் என ஸ்ரீலங்கா சமசமாஜ கட்சியின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையும் இதற்கான முக்கிய காரணமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டுக்கு ஆண்டு சராசரியாக 5% முதல் 6% வரை மட்டுமே உயரும் பொருட்களின் விலைகள், கடந்த மாதத்திற்குள் குறைந்தபட்சம் 14% வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உணவுகூட வாங்க முடியாத நிலையேற்பட்டுள்ளதுடன், இன்று மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை பசி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிய அவர், சில குடும்பங்கள் சிரமத்துடன் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உண்ண முடிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் பல்வேறு உட்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு இடையே, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, தேவையற்ற அபிவிருத்திகளை ஒத்திவைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

டோஹாவில் இலங்கையர் சுட்டுக்கொலை !

கட்டாரின் டோஹாவில் அடுக்குமாடி கட்டிடம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.

அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவதற்கு இளைஞர் ஒருவர் அடையாள அட்டையை கோரியமை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு திரும்பிய இளைஞர் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் இலங்கையர் என்பது பின்னர் தெரியவந்தது.

2022 ன் முதல் 25 நாட்களில் அச்சிடப்பட்ட 146 பில்லியன் ரூபா !

2022 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி 146 பில்லியன் புதிய நாணயத் தாள்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

அதாவது நாளொன்றுக்கு 6 பில்லியன் ரூபா என்றவாறு 25 நாட்களுக்கு அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரை பயங்கரவாதியாக அறிவித்தது ரஷ்ய அரசாங்கம் !

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் அவரது அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் விமான நிலையத்தில் அவர் பருகிய தேநீரில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதில், அவர் கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்கு சென்றார். இந்த கொலை முயற்சிக்கும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக திரண்டன. நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ரஷ்ய அரசாங்கம் இருப்பதாக அமெரிக்க உளவு பிரிவு மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.

அதன் பின்னர் ரஷ்ய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இந்நிலையில், நவால்னி ஜெர்மனியில் சிகிச்சை பெற்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி மீண்டும் ரஷ்யாவுக்கு திரும்பியபோது, அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பண மோசடி வழக்கில் அவரை கைது செய்ததாக ரஷ்ய காவல்துறையினர் கூறிய நிலையில், இந்த வழக்கில் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து, நவால்னி மாஸ்கோ சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவரை பயங்கரவாதியாக ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், நவால்னியின் ஆதரவாளர்கள் பலரும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக திருத்தப்படுகிறதாம் இலங்கையின் பயங்ரவாத தடைச்சசட்டம் !

புதிய ஆண்டின் முதலாவது இராஜதந்திர மாநாட்டின்போது, வெளிநாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஜனவரி 26 ஆம் திகதி உரையாற்றினார்.

தற்போதைய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்ட வழக்கமான விளக்கங்களின் தொடர்ச்சியாக, முழு இராஜதந்திரப் படையினரையும் சந்திப்பதற்கான வாய்ப்பை வெளிநாட்டு அமைச்சர் பாராட்டினார். பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 49 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பான தகவல்களைப் பகிர்வதே இன்றைய மாநாட்டின் நோக்கமாகும்.

மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் 2021 அமர்வில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதை அமைச்சர் நினைவு கூர்ந்தார். இந்த சூழலில், சர்வதேச சமூகத்துடனான ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் சார்ந்த உணர்வுடனான ஆக்கபூர்வமான ஈடுபாட்டை அமைச்சர் குறிப்பிட்டார்.

பொறுப்புக்கூறல், நீதி மறுசீரமைப்பு மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகளினூடாக இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், தற்போது ஏற்பட்டுள்ள உறுதியான முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு இந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதற்கிணங்க, கடந்த வருடத்தில் உள்நாட்டு நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பான விளக்கங்கள் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் தலைவி திருமதி தாரா விஜயதிலக, நிலையான அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி சாமிந்திரி சப்பரமாது, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. தீப்தி லமாஹேவா, காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டப் பிரிவின் தலைவர் திரு. த. தப்பரன் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு மற்றும் கண்காணிப்புக்கான பணிப்பாளர் திரு. நிஹால் சந்திரசிறி ஆகியோரினால் வழங்கப்பட்டன.

43 வருடங்களின் பின்னர் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். உத்தேசத் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இறுதி அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விளக்கமளித்தார்.

கண் பரிசோதனை எனக்கூறி காசு கொள்ளையடிக்க முற்பட்ட யாழ்ப்பாணத்து தனியார் கண் மருத்துவ நிறுவனம் !

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையிலான பாடப்பிரிவுகள் உள்ளன.

இந்த நிலையில் குறித்த படசாலையில் பயின்று வரும் மாணவர்களுக்கு கடந்த 16 ஆம் திகதி கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 370 மனவர்களைக் கொண்ட இந்த பாடசாலையில் உள்ள 320 மாணவர்கள் மட்டுமே இந்த பரிசோதனையில் பங்கேற்றனர்.

அவர்களில் 71 மாணவர்களுக்கு கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கண் பரிசோதனை மேற்கொண்ட தனியார் கண் மருத்துவ நிறுவனம் ஒன்று 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு உண்டு எனத் தெரிவித்து அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள தங்களது மருத்துவ நிலையத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன் போது மேலதிக பரிசோதனை மேற்கொண்டதில் 10 மாணவர்களை தவிர ஏனைய 61 மாணவர்களுக்கும் கண்ணில் பாதிப்பு உண்டு எனவும் இவர்கள் மூக்கு கண்ணாடி பயன்படுத்த வேண்டும் என்றும் குறித்த நிறுவனத்தினரால் தெரிவிக்கப்பட்டு கண்ணாடிகளின் விலைகளும் பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்தனர்.

Gallery
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களில் சந்தேகம் எழுப்பட்ட நிலையில் நடவடிக்கையில் இறங்கிய சுகாதார பிரிவினர் அம்மாணவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கண் வைத்திய நிபுணரிடம் பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். அதன்படி படிப்படியாக மாணவர்கள் அழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 71 மாணவர்களில் வருகை தந்த 55 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 38 மாணவர்களுக்கு கண்ணில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் ஏனைய 17 மாணவர்களுக்கு கண்ணில் சிறு குறைபாடுகள் இருப்பதாகவும் மாவட்ட கண் வைத்தியர் அறிக்கையிட்டிருந்தார் என கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.

எனவே இதன் மூலம் தங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு ஏழை மாணவர்களை குறித்த நிறுவனம் பயன்படுத்தியமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு இவ்விடயம் தொடர்பில் கல்வி மற்றும் சுகாதார துறையினர் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க வழிசமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.