ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் அவரது அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் விமான நிலையத்தில் அவர் பருகிய தேநீரில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதில், அவர் கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்கு சென்றார். இந்த கொலை முயற்சிக்கும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக திரண்டன. நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ரஷ்ய அரசாங்கம் இருப்பதாக அமெரிக்க உளவு பிரிவு மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.
அதன் பின்னர் ரஷ்ய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இந்நிலையில், நவால்னி ஜெர்மனியில் சிகிச்சை பெற்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி மீண்டும் ரஷ்யாவுக்கு திரும்பியபோது, அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பண மோசடி வழக்கில் அவரை கைது செய்ததாக ரஷ்ய காவல்துறையினர் கூறிய நிலையில், இந்த வழக்கில் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து, நவால்னி மாஸ்கோ சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவரை பயங்கரவாதியாக ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், நவால்னியின் ஆதரவாளர்கள் பலரும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.