22

22

இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்த வளி மாசடைதல் !

இலங்கையில்  பலத்த காற்று வீசுவதால் எதிர்பாராத அளவுக்கு வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணம், கொழும்பு,புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி  தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மின்னுற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், மின்பிறப்பாக்கிகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாலும் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனால் முகமூடிகள் அணிந்து செல்வது பாதுகாப்பானது என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதேவேளை சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகளும், பிள்ளைகளும் இதுதொடர்பில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

யேமன் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படை நடத்திய வான்வழி தாக்குதல் – 100பேர் வரை உயிரிழப்பு !

வடக்கு யேமனில் உள்ள தடுப்பு முகாம் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 100பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 138பேர் காயமடைந்தனர்.

ஹெளதி கிளர்ச்சியாளர்களின் கோட்டையான சாதாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கைக் கட்டுப்படுத்தும் ஹெளதி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் தாஹா அல்-மோட்டவாகல், இதனை உறுதிப்படுத்தினார். காயமடைந்தவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் மீது ஹெளதிகள் முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தி, சவுதி நகரங்களில் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஏவிய பின்னர், ஹெளதி கிளர்ச்சி இயக்கத்துடன் தொடர்புடைய இராணுவ இலக்குகள் என்று சந்தேகிக்கும் நிலைகள் மீது சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டணி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும், தெற்கே முக்கிய துறைமுக நகரமான ஹொடைடாவில், ஹெளதிகளால் வெளியிடப்பட்ட காணொளி இடிபாடுகளில் இருந்த உடல்களைக் காட்டியது மற்றும் சவுதி தலைமையிலான கூட்டணி ஒரு தொலைத்தொடர்பு மையத்தை தாக்கியது. யேமன் நாடு தழுவிய இணைய முடக்கத்தை சந்தித்தது.

தென்மேற்கு ஆசிய நாடான யேமனில், சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹெளதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் செயற்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

யேமனில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. யேமன் போரில் இதுவரை குழந்தைகள் உட்பட 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் பெரும்பாலான மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் நிற்கின்றனர்.

இந்நிலையில், யேமன் மீது சவுதி விமான தாக்குதல் நடத்தியதற்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏமன் நாட்டுப் பொதுமக்கள் மீது குண்டுமழை பொழிவதை ஏற்கமுடியாது என சவுதி அரேபியாவிற்கு கண்டனம் தெரிவித்தார்.

“ராஜபக்ஷ அரசு முழுமையாக இலஞ்சத்தால் நிறைந்துள்ளது.” – சஜித் பிரேமதாச

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி இயற்கை உரங்களை பயன்படுத்தி அறுவடை செய்யப்பட்டதா..? என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நிர்ணயித்த விலைக்கு இலங்கையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியாது. தொற்றுநோயின் போது பொதுமக்கள் எவ்வாறு சிரமப்பட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அரசாங்கம் பொய்களை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது.  அரிசி மீதான விலைக் கட்டுப்பாட்டை அமுல்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது.

தற்போதைய நிர்வாகம் கப்பம் மற்றும் இலஞ்சம் நிறைந்தது. ஆட்சியில் இருக்கும்போது உர மானியம் வழங்குவதாக உறுதியளித்த நிலையில் , அரசாங்கத்தின் தவறான முடிவுகளால் விவசாயிகள் சுமைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

13 ஐ அழிக்க அணிதிரளுங்கள் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி துண்டுப்பிரசுரம் !

13ம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணி திரண்டு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி துண்டுப்பிரசுரம் விநியோகித்துள்ளது.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ம் திருத்தத்திற்குள் முடக்கம் சதி முயற்சியை முடியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவை கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாண நகர் பகுதியில் இன்றையதினம் இவ்வாறு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் பணவீக்கம் !

நவம்பரில் 11.1%ஆக இருந்த பணவீக்கமானது டிசம்பரில் 14% ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உணவு மற்றும் உணவு அல்லாத வகை பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை உணவுப் பணவீக்கமானது நவம்பரில் 16.9% ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 21.5% ஆக அதிகரித்துள்ளது.

மேலும் உணவு அல்லாத பண வீக்கமானது நவம்பரில் 6.2% ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 7.6% ஆக அதிகரித்துள்ளது.

உணவு வகைகளில், காய்கறிகள், அரிசி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் மதுபானங்கள், புகையிலை ஆகியவற்றில் இந்த மாதத்தில் காணப்பட்ட விலை அதிகரிப்பு காரணமாக, உணவு அல்லாத வகை பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

“இந்தியா பேச வேண்டியது தமிழர்களிடமே அன்றி சிங்களவர்களிடம் அல்ல.” – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம்

தமிழர் தாயகத்தில் இந்தியாவுக்கு ஏதாவது தேவையென்றால், இந்தியா பேச வேண்டியது தமிழர்களிடமே அன்றி சிங்களவர்களிடம் அல்ல என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்றுடன்(சனிக்கிழமை) 1800 வது நாளை கடந்துள்ளது.

இதனையடுத்து அவர்களால் இன்று ஆர்பாட்டபேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே  இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

“இந்தியா தலைமைப் பாத்திரம் ஏற்று,  ஐ.நா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தினால், தமிழர் தாயகத்தில் கச்சத்தீவு, திருகோணமலை துறைமுகம் மற்றும் பிற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இந்தியாவுக்கு  வழங்குவதற்கு தமிழர்கள் தயாராக உள்ளனர்.

தமிழர் தாயகத்தில் இந்தியாவுக்கு ஏதாவது தேவையென்றால், இந்தியா பேச வேண்டியது தமிழர்களிடமே அன்றி சிங்களவர்களிடம் அல்ல. இந்தியா இலங்கையுடன் பேசினால், இந்தியா இலங்கையுடன் செய்து கொண்ட சொந்த ஒப்பந்தத்தை அது மீறும்.

இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடு என்பதையும், ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான அந்தஸ்து நிலுவையில் இருப்பதையும் நாம் அறிவோம். இந்தியாவின் தலைமைத்துவத்தை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அது தனது ஒப்பந்தத்தை இலங்கையில் மீறியது என்பது குறிப்பிடத்தக்கது.

1987 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்த போது, வடகிழக்கு தமிழர்கள் பூர்வீக குடிகள் என்றும், வடகிழக்கு  தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்டு அது தமிழர்களுக்கு சொந்தமானது என்றும் இந்தியாவால்ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வடக்கு கிழக்கில் உள்ள காணிகள்  தமிழர்களுக்கு உரிமையானது, அவர்களது நிலத்தின் மீது அதிகாரம் உள்ளது. உட்பட பல விஷயங்கள் இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியா வாங்கியது. இது இந்தியாவின் உடன்படிக்கையின் தூய்மையான மீறலாகும், வடகிழக்கு பகுதி தமிழர்களுக்கே உரியது என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும்.

இலங்கையுடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடும் முன் இந்தியா தமிழர்களிடம் கேட்டிருக்க வேண்டும். சீனத் தொடர்புகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இலங்கை புவிசார் அரசியலை விளையாட விரும்புகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

தமிழர்களின் அனுமதியின்றி வடக்கு கிழக்கில் எவராலும் காணிகளையோ எண்ணெய் தாங்கிகளையோ கொள்வனவு செய்ய முடியாது.எனத் தெரிவித்துள்ளனர்.

“வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் நியாயமான நோக்கங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மக்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற விவசாய மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் தடைசெய்யப்பட முடியாதவை என்பதே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் நியாயமான நோக்கங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மருதங்கேணி, வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இன்று(22) நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை யாரும் தடைசெய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் அமைந்துள்ள கட்டைக்காடு எழுவரைக் குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு பிரதேச மீனவர்களுக்கு உடனடியாக அனுமதியளிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

வடமாராட்சி கிழக்கு பிரதேசத்தில் மக்களின் செயற்பாடுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் – குறிப்பாக விவசாயம் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு, பருவகால குளங்களில் கடலுணவு வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மை செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக ஆராயும் நோக்கில் இன்றைய கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி, “சுண்டிக்குளம் தேசிய பூங்காவிற்கான பிரதேசமாக சுமார் 19,000 ஹக்ரேயர்களும் நாகர் கோவில் பிரதேசத்தில் சரணாலயமாக மேலும் 19,000 ஹக்ரேயர்களும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, மணற்காடு சவுக்குத் தோப்பு பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் பிரகடனப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றினால் வாழ்வாதார செயற்பாடுகள், அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் அன்றாட வாழ்விற்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக மக்களால் பிரதேச செயலகத்திடம் முறையிடப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, வனப் பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதேச பிரதானிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

அனைத்து தரப்பினரது கருத்துக்களையும் செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேற்குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளை தெரிவித்ததுடன், இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி எந்தத் தரப்பினது நியாயமான நோக்கங்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் கொள்கை முடிவு மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

“எங்களை தவிர ஏனைய எல்லா வட-கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சியை ஏற்க தயாராகி விட்டார்கள்.” – கஜேந்திரகுமார் விசனம் !

“வட- கிழக்கு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 நாடாளுமன்ற பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியாகிய  நாம் இருவரை தவிர மற்ற எல்லோரும் ஒற்றையாட்சியை ஏற்க தயாராகி விட்டார்கள். என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட செற்பாட்டாளர்களுடன் நேற்று (21.01) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் எமது கட்சி செயற்பாட்டாளர்களும், சிவில் அமைப்புக்களும், சிவில் செயற்பாட்டாளர்களும் சந்தித்து தமிழ் கட்சிகள்  என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் முகவர் அமைப்புக்கள்  சேர்ந்து கலந்துரையாடி தமிழ்  மக்களுடைய  அரசியல் அபிலாசைகளை ஒற்றையாட்சிக்குள் முடக்குகின்ற  சதி முயற்சியை முறியடிக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணியும்  சிவில் சமூகங்களும் இணைந்து முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தி,  அதன் முதல் கட்டமாக எதிர்வரும் 30  ஆம் திகதி யாழில் நடைபெறும் எதிர்ப்பு போராட்டம் முதலாவது நடவடிக்கையாக அமையும். அதன் பின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த விழிப்புணர்வு போராட்டம் நடைபெறும். அதன் பின் ஒவ்வொரு கிராமங்களிலும் வீடுவீடாகச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில்  தேசியத்தை நேர்மையாக நேசிக்கும் அனைத்து தரப்புக்களுடனும் சேர்ந்து இந்த முயற்சியை முன்னெடுக்க ஒன்றினைந்து செயற்பட விரும்புகின்றோம் எனக் கேட்டிருந்தோம். அதே கோரிக்கையை நாம் வவுனியாவிலும் கோருகின்றோம்.

சர்வதேச ரீதியில் இலங்கையில் இருக்க கூடிய அனைத்து மக்கள் கூட்டங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியலமைப்பு நிறைவேறுவது அத்தியாவசியம் என்றும் அப்படி அனைத்து தரப்புக்களும்  ஏற்றுக் கொள்ளும் அரசியலமைப்பு ஒன்று நிறைவேற்றப்பட்டால் தான் விசேடமாக தமிழ் தரப்புக்கு  இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டதாக கருத்தப்படும்.  அதுவரைக்கும் இனப்பிரச்சனை நீடிக்கின்றது என்ற செய்தியையே வழங்கும் என்பதையும் கூறியுள்ளார்கள்.

கோட்டபாய ராஜபக்ச புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வர எத்தனித்துள்ளார். அவர் இந்த புதிய அரசியலமைப்பை இந்தியாவிற்கு சீனாவை காட்டி சீனாவை நாங்கள் தவிர்க்க விரும்பினால்  தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஒற்றையாட்சிக்குள் முடக்க  நீங்கள் ஒத்துழைக்க  வேண்டும். அதனை நீங்கள் செய்தால் நாம் சீனாவின் விடயத்தில் பரிசீலிக்கலாம் என்ற  ஒரு கருத்தை சொல்ல இருக்கும் பின்னனியில்  இந்தியாவின் கடுமையான அச்சுறுத்தல் காரணமாகவும், கட்டளையும் தான் அவர்களுடைய முகவர் அமைப்புக்கள் இன்று  ஒன்று சேர்ந்து  13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்திய பிரதமரிடடம் இந்திய விரும்பி கேட்டதை தங்களுடைய கோரிக்கையாக முன் வைத்துள்ளார்கள்.

எங்களைப் பொறுத்தவரை ஒற்றையாட்சிக்குள் எந்தவொரு இடத்திலும் தமிழருக்கு தீர்வு வரப்போவதில்லை. மாறாக ஒற்றையாட்சி அரசியலமைப்பை போன ஆட்சிக் காலத்தில்  ஏக்கய ராச்சிய என ஏற்றுக் கொண்டது. ஒற்றையாட்சி என்ற சிங்கள வசனத்தை ஒருமித்த நாடு என தமிழ் மக்களுக்கு பூச்சாண்டி காட்டி ஏக்கய ராச்சிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வைக்கும் சதி ஒன்றை செய்தது.  அதனை நாம் முறியடித்தோம்.

13 வது திருத்தச் சட்டம் அல்லது இன்னொரு வடிவமாக இருக்கலாம் ஒற்றையாட்சியை நிராகரிப்பது தான் எம்மிடம் இருக்கும் ஓரே ஒரே வழி. இலங்கையில் நிறைவேற்றி இருக்கின்ற மூன்று அரசியலமைப்புக்களையும் நாம் நிராகரித்து இருப்பதனால் தான் போர் முடிந்து 13 வருடங்களுக்கு பிறகும் இந்த தீவில் ஒரு இனப்பிரச்சனை இருக்கின்றது என பேசக் கூடியதாக இருக்கின்றது.

அந்த பேச்சுக்கே இடமில்லாமல் செய்யும் அளவுக்கு இந்த இந்திய அடிப்படை அமைப்புக்கள் தமது எஜமான் விரும்பியதற்கு செயற்பட தயாராக இருக்கிறார்க்கிறார்கள். நான்காவது அரசியலமைப்பு வெறுமனே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டும் நிறைவேறுவது ஆபத்தானது. மக்களது சர்வசன வாக்கெடுப்புக்கு விடாது வெறுமனே நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறக் கூடிய ஆபத்தும் இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் இன்றைக்கு இருக்கின்ற வட- கிழக்கு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 நாடாளுமன்ற பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியாகிய  நாம் இருவரை தவிர மற்ற எல்லோரும் ஒற்றையாட்சியை ஏற்க தயாராகி விட்டார்கள். அதை முறியடிப்பதற்கும்  மக்கள் விழிப்புணர்வு அடைந்து இந்த மோசனமான துரோகத்திற்கு எதிராக அணி திரள வேண்டும்.
இதற்கு எதிராக வன்னியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றோம். தமிழ் தேசத்தின் நலன் கருதி இந்த தமிழ் தேசத்தை நேசிக்கும் ஒவவொரு தரப்பும் எம்மோடு கைகோர்த்து இந்த விடயத்தில் ஒன்று பட வேண்டும் என உரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.

இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய தம்பதியினர் – காரணம் என்ன..?

திருமணமான தம்பதியால் இளைஞன் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இளைஞன் ஒருவரை நிர்வாணப்படுத்தி தாக்கிய தம்பதி! - தமிழ்வின்

சம்பவம் தொடர்பில் சியம்பலாண்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தம்பதிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

குறித்த இளைஞன் தனது மனைவிக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொந்தரவு செய்ததால் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் வீடு எரிந்து தாயும் – மகளும் உயிரிழந்த விவகாரம் – நேரில் சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் !

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் 47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி என்ற 07 பிள்ளைகளின் தாயாரும் அவரது மகளான 17 வயதுடைய லக்சிகா ஆகியோர் தீயில் எரிந்து கருகிய நிலையில் அடையாளம் காணப்பட்டனர்.

இச் சம்பவம் தொடர்பாக நேற்று தருமபுர பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுரம் பொலிசார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை)  சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் பார்வையிட்டார்.

குறித்த சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் அதேவேளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன் அப்பகுதியில் ஒரு போத்தலில் பெற்றோல் மற்றும் ஒரு கத்தி, ஒரு தொலைபேசி என்பனவற்தை தடையவியல் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.