06

06

“எதிர்க்கட்சியினருக்கு புஸ்வாணம் மாத்திரம் வெடிக்கத் தெரியும்.” – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

“எதிர்க்கட்சியினருக்கு புஸ்வாணம் மாத்திரம் வெடிக்கத் தெரியும்.” என  அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நிவாரணப் பொதி வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாது என்பதை நிரூபிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நமகால பொருளாதார நிலை தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பது மிகவும் திட்டமிட்ட செயல். இது குறித்து நாங்கள் தம்பட்டம் அடிக்க மாட்டோம். சரியான நேரத்தில் இது குறித்துச் செயற்படுவோம். எதிர்க்கட்சிகள் எப்போதும் இந்த நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. இதுவரை கட்சி சொன்னது, செய்தது எல்லாம் பொய்யாகிவிட்டது. அவர்களுக்கு புஸ்வாணம் மாத்திரம் வெடிக்கத் தெரியும்.

நாட்டிலுள்ள அரச ஊழியர்கள் மற்றும் சமுர்த்தி பெறுனர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. வீட்டுத்தோட்டம் அமைக்கப் பணம் ஒதுக்கப்பட்டது. தோட்டப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு துறையையும் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவுகளை எடுத்துள்ளோம். இவை தேர்தலை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகள் அல்ல. நாட்டு மக்களுக்கு உரிய நேரத்தில் வழங்கிய நிவாரணங்கள் இவை.

ஜனவரி 15 நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் எனக் கூறப்படுகிறது. ஆனால் ஜனவரி 15 ஆம் திகதி மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதியைத் திறந்து வைப்போம்.

பசில் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் நாடு மீண்டும் அழிக்கப்படும் என்றும்  பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும்  தெரிவித்தனர். இந்தச் சலுகைகளை வழங்குவது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை என்பதை நிரூபிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

மன்னாரில் வெடித்துச்சிதறிய எரிவாயு அடுப்பு – எரிந்து நாசமாகிய வீடு !

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தரவான் கோட்டை பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மதியம் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தரவான் கோட்டை பகுதியை சேர்ந்த கூலி தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவரின் வீட்டில் மேற்படி எரிவாயு மற்றும் அடுப்பு வெடிப்புச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

குறித்த வெடிப்பு காரணமாக வீடு எரிந்து முற்றுமுழுதாக நாசம் ஆகிய நிலையில் குறித்த பெண் அதிர்ச்சியின் காரணமாக மயக்கம் அடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வீட்டில் தனிமையில் வசிப்பதுடன் பனம் பொருள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இன்றைய தினம் வியாழக்கிழமை (6) மதியம்  குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண் வசித்த முழு வீடும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் அருகில் இருந்த கிராம மக்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. எனினும் வீட்டில் இருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் சாம்பலாகி உள்ளது.

இந்த நிலையில் மன்னார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , நகர சபை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்திற்கு என தனியான ஒரு தீயணைப்பு ஏற்பாடு இன்மையால் இவ்வாறான பல தீ விபத்துக்கள் பாரிய சேதங்களை ஏற்பட்ட பின்னரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

“சுனாமி பேரலையாக கொரோனா மாறும்.” – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்களான டெல்டாவும், ஒமிக்ரோனும் வேகமாக பரவி வருகின்றன.
அமெரிக்காவில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்திருந்தது நேற்று அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதேபோல், டென்மார்க், போர்த்துக்கல், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.
இந்நிலையில், ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 71 சதவீதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 27-ம் திகதி முதல் ஜனவரி 2-ம் திகதி வரையிலான ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 71 சதவீதம் அதிகரித்துள்ளது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே, ஒமிக்ரோன் வைரசும், டெல்டா வைரசும் சேர்ந்து சுனாமி பேரலையாக கொரோனா மாறும் ஆபத்து உள்ளது என  உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தொடர்ந்து வெடித்துக்கொண்டிருக்கும் எரிவாயு சிலிண்டர்கள். – சதி முயற்சி என்கிறது ஆளுந்தரப்பு !

“எரிவாயு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த காஸ் வெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் சதி உள்ளதா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. என ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடி கட்டிடத்தை இன்று (வியாழக்கிழமை)  திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

”அந்நிய செலாவணி   கையிருப்பு குறைந்துள்ளது. அதனால், பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. எரிவாயு தொடர்பில்  சிக்கல் உள்ளது. எரிவாயு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த காஸ் வெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் சதி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால்  கொழும்பு 07 பகுதியில்  எரிவாயு வெடிப்பதில்லை.

வட மாகாணத்தில் எரிவாயு வெடிப்பதில்லை. கண்டி, குருநாககல் பகுதிகளில்  எரிவாயு வெடிக்கவில்லை. எனவே, இந்த எரிவாயு வெடிப்புகள் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். அதிமேதகு ஜனாதிபதி அவர்கள்   எரிவாயு வெடிப்பு தொடர்பில்  இரகசிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த எரிவாயு வெடிப்புகள் குறித்து நாட்டு மக்கள் இப்போது ஆர்வமாக உள்ளனர். மக்கள் இப்போது எரிவாயு பயன்படுத்த  பயப்படுகிறார்கள். அடுத்த சில வாரங்களில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புகிறேன்.

கொவிட் தொற்றினால் பாடசாலை மாணவர்கள்  தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை இழந்தனர். அவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். எதிர்காலத்தில் இந்த கோவிட் தொற்றுநோயிலிருந்து மீண்டு வருவோம் என்று நம்புகிறேன்.

சமீபத்தில், ஆசிரியர்கள் தங்கள் பிரச்சினையை தீர்க்க அரசாங்கத்தை வற்புறுத்தினர். தற்போது ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளோம். இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசு முயன்ற போது பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அவர்களை போராட்டத்திற்கு தூண்டினர்.  மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் சிலர் தெருவில்  வீதியில் இறங்கினர்.

ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி  ஒதுக்கப்பட்டது.   ஆசிரியர்களைப்  பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறியவர்கள் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கூட  அங்கீகரிக்கவில்லை.” என தெரிவித்தார்.

“ஒரே இரவில் பறிக்கப்படும் 10 ஆயிரம் ஏக்கர்கள் நிலங்கள்.” – சாணக்கியன் விசனம் !

“தெற்கில் மக்கள் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளார்கள்.எனவே அவர்களில் சிலரை இணைத்து நாம் புதிய அரசியல் பாதையில் செல்ல  வேண்டும் என்பதே எனது அவாவாகும்” என  நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

அம்பாறை  மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி   இராசமாணிக்கம் அமைப்பினால் மாதிரிப் பரீட்சை வினாத்தாள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை  பாண்டிருப்பு நாவலர்   வித்தியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை)  நடைபெற்ற போது அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அங்கு தனது கருத்தில் தெரிவித்ததாவது,

மாகாண சபை முறைமையினை பலவீனமாக்க வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் அக்கறையாக கிழக்கு மாகாண ஆளுநர் தொடக்கம் அதிகாரிகள் சிலரும் இருப்பது நிதர்சனமான உண்மையாகும். இவ்வருடம் கிழக்கு மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதி நிலைமையினைநோக்குவோமாயின் கவலையாகவே உள்ளது.இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதிகளில் நிர்வாகத்திற்கே நிதிகள் வழங்கப்பட்டுள்ளதே தவிர மேலதிகமாக வேலைத்திட்டங்களை செய்வதற்கான நிதிகள் வந்து சேரவில்லை.இவ்வாறு உள்ள நிலையில் மாகாண பாடசாலை விடயத்தில் எவ்வாறான அபிவிருத்திகளை மேற்கொள்வது என்பது சவாலான விடயமாகும்.அத்துடன் எமக்கான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்காமல் விட்டால் முழுமையாக எமது வேலைத்திட்டங்களை செய்ய முடியாது.

கடந்த 74 ஆண்டுகளாகவே தீர்வு நிலைமை தொடர்ந்து வருகின்றது.எமக்கென அதிகாரங்கள் எமது கைகளில் இருக்க வேண்டும்.இன்று கல்முனை என்றாலே கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மட்டும் தான் பேசப்படும் விடயமாகும்.கல்முனை என்று இன்று நான் சொன்னால் கூட எனக்கு எதிராக விமர்சனங்கள் வரும்.மாணவர்களின் கல்வி தொடர்பில் அக்கறை யை நாம் செலுத்த வேண்டுமாயின்  நிரந்திர அரசியல் தீர்வினை அடைய வேண்டும்.

இதை விட நான் தமிழ் மக்கள் என கூறுவது தமிழ் இஸ்லாம் கிறிஸ்தவ மக்களையே நான் கூறுகின்றேன்.இதனை 3 ஆக பிரித்து சொல்ல வேண்டிய அவசியமில்லை.எமக்கு மாகாண சபையின் ஊடாக நிதி அதிகாரமிருந்தால் நாங்கள் ஆளுநரிடம் பிச்சை கேட்பது அவசியமில்லை.

சில விடயங்களை நாம் காலில் விழுந்து கேட்டால் கூட கிடைக்கப்பெறாத நிலைமையிலே உள்ளது.தற்போது கூட வந்த வளங்கள் அனைத்தும் உகண தமண தெஹியத்த கண்டிய பதியத்தலாவ அந்த பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதனை நாங்கள் வெளிப்படையாக சொன்னால் இவர் துவேசமாக கதைப்பதாக கூறுவார்கள்.எனவே தான் இவ்வாறான வளங்களை பெறுவதற்கு தமிழ் மக்களாகிய நாங்கள் ஒன்றாக வாழ்வதற்கு இணங்க வேண்டும்.

அப்படி இல்லாமல் நாம் சண்டைபிடித்து கொண்டு இருப்போமாயின் எமது வளங்கள் வேறு இடங்களுக்கு போய் விடும்.எதிர்வரும் மாகாண சபை தேர்தலாக இருக்கட்டும் அல்லது அரசியல் தீர்வாகவும் இருக்கட்டும் இரு சமூகமும் ஒன்றாக இருக்காவிடின் தமிழ் பேசாத ஒரு முதலமைச்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அது ஒரு சதித்திட்டமாகும்.இந்த இடத்தில் இவ்விடயத்தை கூறுவதற்கு காரணம் கல்வியலாளர்களாகிய நீங்கள் சமூகத்தில் பல்வேறு கருத்துக்களை கொண்டு செல்லக்கூடியவர்கள்.ராஜபக்ச குடும்பத்தினுள் அடிபிடி பிரச்சினைகள் உள்ளது.அந்த வகையில் இரு சமூகங்களுக்கு இடையில் பிரச்சினை எழுவது தவிர்க்க முடியாத விடயமாகும்.

ஆகவே இவற்றை எப்படி பேசி தீர்க்கலாம் என்பதை ஆராய வேண்டும்.இதற்கு உங்களை போன்ற புத்திஜீவிகளின் ஆதரவு எமக்கு தேவையாகும்.எமக்கு நிதி அதிகாரம் கிடைக்கப்பெற்றால் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதிகளை பெற்று கொள்ள கூடியதாக இருக்கும்.இலங்கையில் சாப்பிட கூட வழி இல்லாமல் மக்கள் இருக்கின்றார்கள்.

அரசியல் தீர்வில் தான் எமது மக்களின் பொருளாதார அபிவிருத்தியும் தங்கி இருக்கின்றது .எனவே எதிர்காலத்திலாவது நாம் சிந்தித்து செயற்பட வேண்டும்.தமிழ் மக்களை கடந்த காலங்களில் அடித்தமையினால்  களைத்துவிட்டார்கள் என்பது தான் அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு.40 வருடங்களாக தமிழர்களுக்கு அடித்து விட்டோம் இனி அவர்களுக்கு அடித்தால் சிங்கள மக்களிடம் எடுபடாது என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது.அடுத்த 20 வருடங்களுக்கு இஸ்லாமிய மக்களை தான் குறி வைக்க போகின்றார்கள்.

இதனை அம்மக்கள் உணர்ந்து விட்டார்கள்.இதனால் மொட்டிற்கு அவர்கள் தேர்தலில் வாக்களிக்க வில்லை.எனவே கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களை மறந்து எதிர்காலத்தில் பயணிப்பதற்கு நாங்கள் தயார்.ஒரு சிலர் இருக்கலாம் ஏனைய மக்களுடன் வாழலாம் என நினைக்கலாம்.

இன்று தமிழ் சமூகம் உணர்ந்துள்ளது இரு சமூகமும் ஒன்றாக சேரந்து வாழ வேண்டும் என வந்திருக்கின்றார்கள்.இதற்கும் எனக்கு விமர்சனங்கள் வரலாம்.எனக்கு விமர்சனம் தான் எனது வளர்ச்சியில்  கூட பாதை அமைத்து தந்திருக்கின்றது.

பிரதேச சபை தேர்தல் கேட்க வேண்டிய என்னை விமர்சித்து பாராளுமன்ற உறுப்பினராக மாற்றி விட்டார்கள்.தற்போது இன்று என்னை விமர்ச்சித்து விமர்ச்சித்து என்ன பதவி கிடைக்க போகின்றது என்று தெரியாது.எனவே இனிவரும் காலங்களில் இரு சமூகமும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் குடியேற்ற திட்டங்கள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது.ஒரு நாளுக்குள் 10 ஆயிரம் ஏக்கர்கள் ஒரு இரவுக்குள் பறிக்கப்படுகின்றன.இனியாவது இவ்வாறான விடயங்களுக்கு இடங்கொடுக்காது இரு சமூகமும் பார்க்க வேண்டும்.2022 ஆண்டு நாட்டில் பொருளாதார சிக்கல்கள் வரலாறு காணாத வகையில் வரும். 4 மற்றும் 5 ஆம் மாதங்களில் உணவு பஞ்சம் வரும்.

தெற்கில் மக்கள் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளார்கள்.எனவே அவர்களில் சிலரை இணைத்து நாம் புதிய அரசியல் பாதையில் செல்ல  வேண்டும் என்பதே எனது அவாவாகும்” என தெரிவித்தார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள புதிய பாடம் !

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு கொரிய மொழி பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொரிய குடியரசின் பிரதிப் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருக்கு இடையில் சியோல் நகரில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தென் கொரியாவில் பணிபுரியும் 22,000 இலங்கையர்களைப் பற்றிக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் கொரிய மொழி புலமையை இலக்காகக் கொண்ட கற்றல் கற்கைநெறிகளின் பிரபல்யம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸுக்குப் பதிலளித்த பிரதிப் பிரதமர் யூ இயூன் ஹை, இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் துறையின் முன்முயற்சிகளுக்கு விரிவான ஆதரவை வழங்குவதில் கொரியக் குடியரசு அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து !

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தம் இன்று(வியாழக்கிழமை) மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

காணி ஆணையாளர் நாயகம், திறைசேரியின் செயலாளர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி மற்றும் Trinco Petroleum Terminal தனியார் நிறுவனம் ஆகியன குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

இதற்கமைய, 99 எண்ணெய் தாங்கிகளில் 85 எண்ணெய் தாங்கிகள் இலங்கைக்கும் ஏனைய 14 எண்ணெய் தாங்கிகள் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.