31

31

இஸ்லாம் பாடநூல்கள் சம்பந்தமான தீர்மானம் எடுக்கும் உரிமை ஞானசார தேரருக்கு உண்டா? – இம்ரான் மஹ்ரூப் கேள்வி !

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் அச்சிட்டு விநியோகிக்கப்பட்ட இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறப்படுவதன் நோக்கம் என்ன..?  என்பதை நீதி அமைச்சர் அலிசப்ரி உள்ளிட்ட அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் தலைமையிலான ஒரேநாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைக்கமைய இஸ்லாம் பாட நூல்கள் மீளப் பெறப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்ததது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் பேசிய அவர்,

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் நியமிக்கப்படும் துறைசார்ந்த வாண்மை மிகுந்தோரினால் தான் பாடநூல்கள் எழுதப்படுகின்றன. இஸ்லாம் பாடநூல்களும் அவ்வாறு தான் எழுதப்படுகின்றன. இவ்வாறு எழுதி வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட இஸ்லாம் பாடநூல்கள் சம்பந்தமான தீர்மானம் எடுக்கும் உரிமை ஞானசார தேரருக்கு உண்டா? என்பதைக் கேட்க விரும்புகின்றேன்.

இந்த விடயத்தில் அரசில் முக்கிய பங்கு வகிக்கும் அமைச்சர் அலிசப்ரி கவனம் செலுத்த வேண்டும். இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் தேசிய காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் மௌனம் காப்பதன் அர்த்தம் என்ன? இந்த மௌனம் இவர்களது சம்மதத்தோடு தான் இந்த நாடகம் அரங்கேற்றப்படுகின்றதா என்ற சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இது குறித்து இவர்களும் தெளிவுபடுத்த வேண்டும். அற்ப சுய இலாபத்துக்காக சமுக உரிமைகளை தாரைவார்க்க வேண்டாமென நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த அரசிடமிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகத்தான் அரசுக்கு ஆதரவு வழங்குவதாக கூறும் இவர்கள் பெற்றுக் கொடுக்கும் நன்மை இதுதானா என்பதைத் தெளிவு படுத்த வேண்டும்.

முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் அதாவுல்லா, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோரும் கூட இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது முஸ்லிம் மக்களது உரிமை சார்ந்த பிரச்சினை இல்லை என இக்கட்சிகள் கருதுகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது. மீளப்பெறப்படும் இஸ்லாம் பாடநூல்களில் என்ன மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என்பதையாவது இவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். எந்த மார்க்கத்தினதும் விடயங்களில் தீர்மானம் எடுக்கும் உரிமையை அந்தந்த மார்க்க அறிஞர்கள் தான் செய்ய வேண்டும்.

மார்க்கத்தோடு தொடர்பில்லாத வேறு யாரும் செய்ய முடியாது. இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிணைக் கைதி விடுவிக்கப்பட வேண்டும் – ஜோ பைடன் தலிபான்களிடம் வேண்டுகோள் !

ஆப்கானிஸ்தானில் பொறியியாளராக பணியாற்றிய அமெரிக்க கடற்படை வீரர் மார்க் ஃப்ரீரிச்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தலிபான்களால் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டார்.
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக நடத்திய 20 வருடங்களுக்கு மேலான போரை முடித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்தது.கடந்த ஆக்ஸ்ட் மாதம் அந்நாட்டு  படைகள் முழுமையாக  அங்கிருந்து வெளியேறின. இதை அடுத்து ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க கடற்படை வீரர் மார்க் ஃப்ரீரிச்ஸ் கடத்தப்பட்டதன் இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு அவரது சகோதரி ககோரா  மார்க்கை மீட்க வேண்டும் என்று அமெரிக்க அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு நாளும் மார்க்கை வீட்டிற்கு அழைத்து வராதது அவர் ஆபத்தில் இருப்பதை உணர்த்துவதாக ககோரா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தலிபான்கள் மார்க்கை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கர்கள் உள்பட எந்தவொரு அப்பாவி குடிமகனின் பாதுகாப்பையும் அச்சுறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது, பணயக்கைதிகளாக பிடித்திருப்பது கோழைத்தனமான செயலாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“டக்ளஸ்தேவானந்தா அமைச்சு பதவியில் இருந்து விலகுவதே சிறந்தது.” – வடமராட்சி மீனவர்கள்

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்ட செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “கடற்தொழில் அமைச்சர் இது தொடர்பில், நடவடிக்கை எடுக்க முடியாவிடின் அவர் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதே சிறந்தது.” என தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த மீனவர்களின் வலைகளே அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது.

அதனை கண்டித்து மீனவர்கள் சுப்பர்மட பகுதியில் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீதிகளில் படகுகளை, வலைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அவ் வீதி ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

தமக்கான தீர்வு கிடைக்கும் வரையில் தாம் வீதியை மறித்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தெரிவிக்கையில், தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றன. மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக பல்வேறு தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்தோம். பல கட்டங்களாக போராட்டங்களை முன்னெடுத்தோம். இது எதற்குமே பயனில்லை.

மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. அவர்களை கட்டுப்படுத்தவோ அவர்களை தடுத்து நிறுத்தவோ எவரும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. அத்துமீறி எமது எல்லைக்குள் நுழையும் மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களை விரட்டியடிக்க எம்மால் முடியும். ஆனால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டும், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த கூடாது என்ற எண்ணத்திலையே நாம் பொறுமை காக்கிறோம்.

அத்துமீறும் மீனவர்களை, அவர்களின் படகுகளுடன் சிறைப்பிடித்து எமது கரைக்கு கொண்டு வரவும் எம்மால் முடியும். எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதேவேளை , எமது பிரச்சனைகள் தொடர்பில் இந்தியா கரிசனை கொள்ளாவிடின் நாம் சீனாவின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம். கடற்தொழில் அமைச்சர் இது தொடர்பில், நடவடிக்கை எடுக்க முடியாவிடின் அவர் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதே சிறந்தது என தெரிவித்தனர்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கு – அட்மிரல் வசந்த கரன்னாகொடவின் மனு ஏப்ரலில் விசாரணை !

வடமேல் மாகாண ஆளுனர் அட்மிரல் வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் பிரதிவாதியாக தன்னை பெயரிட்டமைக்கு எதிராகவே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தன்னை பிரதிவாதியாக பெயரிடும் தீர்மானம் ஆதாரமற்றது என்று சுட்டிக்காட்டும் வசந்த கரன்னாகொட அதனை இரத்து செய்யும் நீதிப் பேராணை கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு கோரியுள்ளார்.

யாழில் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம் !

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் இன்றையதினம் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஒன்றுகூடிய ஊடகவியலாளர்கள் கறுப்புக் கொடிகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்துடன், இது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்பையும் பெறும் நோக்கில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அனைத்து ஊடக அமைப்புக்களும் ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் ‘கறுப்பு ஜனவரி’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – ஆசிரியர் கைது !

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் மேலதிக வகுப்பு நடத்தி வந்த ஆசிரியரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாணந்துறையில் பயிற்சி வகுப்பு நடத்தி வரும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான ஆசிரியர் சிறுமியை புத்தக அறைக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. வகுப்பு முடிந்ததும் நடந்த சம்பவத்தை சிறுமி தனது தந்தையிடம் கூறியதையடுத்து பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரான ஆசிரியர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை தெற்கு காவற்துறை பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

“மனித உரிமை விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டியது அவசியம்.” – பிரிட்டன் அமைச்சர் வலியுறுத்தல் !

மனித உரிமை விவகாரம்,சட்டத்தின்ஆட்சி நல்லாட்சி ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டிய கட்டாயம் குறித்து இலங்கைக்கான தனது விஜயத்தின் போது எடுத்துரைத்ததாக மத்திய தென்னாசியாவிற்கான பிரிட்டன் அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கருத்துவேறுபாடுடைய விடயங்கள் உள்ளன. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில்நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சமாதானத்தை கட்டியெழுப்புதல் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் தீர்மானம் உள்ளது.
ஐக்கியநாடுகளின் செயற்பாடுகளிற்கான பிரிட்டன் ஆதரவுகுறித்து நான் இலங்கை ஜனாதிபதியுடனும் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்களுடனும் நான் ஆராய்ந்தேன்.

இலங்கை அரசாங்கம் மனிதஉரிமைவிவகாரம்,சட்டத்தின்ஆட்சி நல்லாட்சி ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டிய கட்டாயம் குறித்து நான் எடுத்துரைத்தேன். இலங்கையின் அனைத்து சமூகத்தினருக்கும் நன்மையளிக்க கூடிய பொருளாதார அபிவிருத்தி குறித்த அரசாங்கத்தின் பேராவலுடனான திட்டத்திற்கான அடிப்படை இது.

ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணையகத்தின் செயல்முறையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தை நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் மேலும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தினேன். இது நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமைகுறித்த அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஆதரவாக அமையும்.மேலும் இது அனைத்து இலங்கையர்களிற்கும் அவசியமான பொருளாதாரபாதுகாப்பிற்கு அவசியமானஸ்திரதன்மையை உறுதிசெய்யும்.

நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் அனைத்து விடயங்களிலும் ஆக்கபூர்வமான சகாவாக விளங்க விரும்புகின்றோம். மனித உரிமைகள் உட்பட ஐக்கிய இராச்சியம் எந்த விவகாரங்களில் ஆதரவளிக்கலாம் என்பதை நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருவோம்.

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவை செயற்பாடுகளை பொறுத்தவரை இலங்கை தொடர்பான முகன்மை குழுவின் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கையுடனான எங்கள் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை நாங்கள் தொடர எண்ணியுள்ளோம். நல்லிணக்கம் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கிய தனது  அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் அதனுடன் தொடர்புபட்ட இலங்கையர்களிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் அரசாங்கம் தெளிவாக தெரிவிக்கவேண்டியது முக்கியம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கும் விடயத்தில் இன்னும் அக்கறையுடன் இருக்கிறார் !

ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கும் விடயத்தில் இன்னும் அக்கறையுடன் இருப்பதாக, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(30) காலை இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பு ஒன்றின் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் அமைச்சர் அலி சப்ரியும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது, பயங்கரவாத தடை சட்டத்துக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள திருத்தங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ள சுமந்திரன், இந்த திருத்தங்கள் புதியனவல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கும் விடயத்தை ஒத்திவைப்பது குறித்தும் இதன்போது சுமந்திரன் அதிருப்தி வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.