இராஜேஸ் பாலா

இராஜேஸ் பாலா

இன்று (08.03.09) அகில உலக பெண்கள் தினம்! : இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

International_Women_Dayஇன்னும் இரு வருடங்களில் ‘அகில உலக பெண்கள் தினம் நூற்றாண்டு விழா’ எடுக்கவிருக்கிறது. 98 வருடங்களாகத் தொடரும் அகில உலக மாதர் தினமான இன்று கிட்டத்தட்ட 61 நாடுகளில் சுமார் ஆயிரம் வைபவங்கள், விழாக்கள், சொற்பொழிவுகள், கலைவிழாக்கள், ஊர்வலங்கள் என்பன பெண்களால் நடத்தப்படவிருக்கின்றன.

கடந்த நூற்றாண்டிலிருந்து இதுவரை உலகம் எத்தனையோ முன்னேற்றங்களை கண்டிருக்கின்றது. அந்த மாற்றத்தால் நிறையப் பயன் பெற்றவர்கள் பெண்கள் எனபது மறுக்க முடியாத உண்மை. கடந்த நூற்றாண்டில் நடந்த இரு உலகப் போர்களும் (முதலாம் உலக யுத்தம்1914-1919, இரண்டாம் உலக யுத்தம் 1939-1945) பெண்களின் வாழ்க்கை மாற்றமடைய முக்கிய காரணிகளாகவிருந்தன. ஆண்கள் தங்கள் நாட்டைக் காப்பாற்ற போருக்குச் சென்றார்கள். அதே நேரம் பெண்கள், இதுவரையும் ஆண்கள் தங்கள் குடும்பத்துக்காகவும் சமுதாயத்துக்காகவும் செய்த அரசியல், தொழிற்சாலை வேலைகளையும், போருக்கான ஆயுத உற்பத்தி வேலையையும் செய்ய வேண்டிய நிலைக்குப் பெண்கள் தள்ளப் பட்டார்கள்.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இதுவரை பெண்களின் நிலையில் பல முன்னேற்றங்கள் பெரும்பாலான ரீதியில் மேற்கு நாடுகளில்  ஏற்பட்டாலும் வளர்ச்சியடையாத, வளர்ச்சியடையும் பல நாடுகளில் பெரும்பாலான பெண்களின் நிலையில் பெரிய விதத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்று உலகில் அதி தீவிரமாக வளர்ந்து வரும் ‘அடிப்படைவாதக் கொள்ளைகள்’ (பெரும்பாலும் சமய ரீதியானது சில கொள்கைகள் இன ரீதியானவை) பெண்களை மிகவும் பின் தங்கிய நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிது.

ஓரு சமுதாயத்தின் கலாச்சார, சமயப் பாதுகாவலாளார்களாகப் பெண்கள் கணிக்கப்படுகிறார்கள். பெண்களின் உடைகள், வாழ்க்கை முறை என்பன கலாச்சாரப் பிணைப்பு, கலாச்சாரக் கட்டுக்கோப்புக்கள் என்ற பெயரில் ஆண்களால் கட்டுப்படுத்துப்படுகின்றன.

ஓட்டுமொத்தமாகப் பார்த்தால் பெண்ணினம், இன்று பல துறைகளிலும் முன்னேறியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆணினம் பொறாமைப்படுமளவுக்குக் கல்விப் படிப்பில் மட்டுமல்லாது, பல தொழிற்துறைகளிலும் பிரகாசிக்கிறார்கள். பொருளாதார முன்னேற்றததைக் கண்டிருக்கிறார்கள். ஓரு குறிப்பிட்ட சிறு தொகையினர் அரசியற் தலைவிகளாக வந்திருக்கிறார்கள்.படை வீரர்களாகப் பணி புரிகிறார்கள். விஞ்ஞானிகளாக விண்ணில் பறக்கிறார்கள்.

ஆனாலும் இன்று, ”பெண்ணியம்” என்ற கோட்பாடு ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்லாது ஒடுக்கபட்ட அத்தனை மக்களுக்கும் போராடும் ஒரு தத்துவ நியதியைக் கொண்டிருக்காமல் ஒரு குறிப்பிட்ட வர்க்கப் பெண்கள் மட்டும் தாங்கள் சரியென நினைக்கும் வாழ்க்கை முறையைக் கொண்டு நடத்தப் பெண்ணிய வாதத்தையும் பெண்ணிய தத்துவங்களையும் கையாடிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் பல திசைகளிலுமிருந்தும் வருகின்றன.

என்னதான் பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் பெண்ணிய சிந்தனைகள் பல மாற்றங்களை முன்னெடுக்க முனைகிறது. பெண்களைப் பாதுகாக்கப் பல சட்டங்கள் உண்டாக்கவும் தொழில் நிலையங்களில் சம உரிமை, சம ஊதியம் பெறவும் இப்போராட்டஙகள் உதவுகின்றன. விக்டோரியா மகாராணி காலத்தில் பெண்கள் ஆண்களின் ‘உடமைகள்’ என்ற சட்டம் இருந்தது. இன்று அந்த சட்டம் மாற்றப்பட்டு, மனைவியின் சம்மதம் இன்றி அவளை அவளின் கணவர் தொடுவதும் இன்று சட்ட விரோதமாகியிருக்கிது.

இப்படி எத்தயையோ மாற்றங்களைக் கண்டாலும், பெண்கள் உண்மையாகவே தாங்கள் போராடும் ‘சமத்துவத்தை’ அடைந்து விட்டார்களா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இங்கிலாந்தில் ஒரு கிழமைக்கு இரு பெண்கள் அந்தப் பெண்களின் கணவர் அல்லது காதலனாற் கொலை செய்யப்படுகிறாள். ஓவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியற் கொடுமைக்காளாகிறார்கள். சமய. குடும்ப கவுரவம் என்ற பெயரில் பல பெண்கள் அவர்களின் பெற்றோர், உறவினர்களாற் கொலை செய்யப்படுகிறார்கள்.

வறிய நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்களாகப் பெண்கள் விலை பேசப்பட்டு மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறார்கள்.

வளர்ச்சியடையாத நாடுகளில் நடக்கும் அரசியல் போராட்டங்களால் அவதிப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளுமாகும். வசதி படைத்த நாடான அமெரிக்காவிலேயே மிகவும் கொடிய வறுமையை அனுபவிப்பவர்கள் கறுப்பு இனப் பெண்களாகும். ஆனாலும் அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களில் பெண்கள் எப்போதும் முக்கிய பங்கெடுத்திருக்கிறார்கள்.கறுப்பு இன மக்களின் போராட்டத்தில் பெண்களின் பங்கு எப்படி முன்னிலை வகித்தது என்பது சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும்

1861-65  வரை நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரின் பின்னால் நடந்த சமுதாய, பொருளாதார மாற்றங்கள் அமெரிக்காவில் பல மாற்றங்களை உண்டாக்கின. பெண்களும் சொத்துடமை வைத்திருக்கலாம் (கோன் வித் த விண்ட் என்ற படம் இதற்கு ஒரு உதாரணம்) என்பது போன்ற அடிப்படைச் சட்டங்கள் பெண்களின் வாழ்க்கை மாற்ற மடையவும் பொருளாதாரத்தில் உயர்நிலை காணவும் உதவின.

அத்துடன் 19ம் நூற்றாண்டின் கடைசிக் கால கட்டத்தில் இரஷ்யாவில் கொழுந்து விட்டெரியத் தொடங்கிய மார்க்சியப் புரட்சிக் கருத்துக்கள் மேற்கத்திய பெண்களின் போராட்டத்திற்கும் பெண்கள் தினக் கொண்டாட்டங்களுக்கம் வித்திட்டதா என்பது பற்றியும் பல ஆய்வுகள் செய்யலாம்.

பெண்கள் தங்கள் சம உரிமைக்கான போராட்டத்தை தொடங்க முதல் பெண்களுக்கும் வாக்குரிமை கொடுக்க வேண்டும் என்று முதல் குரல் எழுப்பியவர் (1869) ஜோன் ஸ்ருவார்ட் என்ற ஒரு பிரிட்டிஷ் ஆண் பாராளுமன்றவாதியாகும்.

1893ல் பிரித்தானியக் காலனியாகவிருந்த நியுசீலாந்து நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமையளிக்கும் உரிமை கொடுக்கப்பட்டது.

பிரித்தானியாவில் பல போராட்டங்களுக்குப் பின்தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கப் பட்டது. ஆனாலும் இன்னும் பல நாடுகளில் பெண்களின் பாராளுமன்ற பிரவேசம் மிகவும் குறைந்த நிலையியே இருக்கிறது. இவவருடம், சவுதி அரேபியாவில் முதற்தடவையாக ஒரு பெண் பிரதி நிதித்துவம் பெற்றிருக்கிறார்.

இன்று நடைமுறையிலிருக்கம் பெண்ணிய சிந்தனைகளுக்க வித்திட்டவர்கள் அமெரிக்கப் பெண்கள் என்றால் அது மிகையாகாது.

1909ம் ஆண்டு, அமெரிக்காவின் நியுயோர்க் நகரிலிருந்த உடுப்புத் தொழிற் சாலையிலிருந்த பெண்களின் ஞாபகார்த்தக்கூட்ட அணிவகுப்பாக சோசலிசப் பார்டடியைச் சேர்ந்த பெண்களாற் தொடங்கிய (28.2.1909) இந்த நிகழ்ச்சி அகில உலகப்பெண்கள் தினம் என்று உருவாகியது. 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹேகன் நகரில் நடந்த முதலாவது பெண்கள் மகாநாட்டில் பெண்களுக்காக ஒரு தினத்தை விசேடமாகக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானம் ஜேர்மனிய நாடடைச் சேர்ந்த சோசலிஸ்ட் பார்ட்டி அங்கத்தவரான கிலாரா ஷெட்கின் என்ற பெண்மணியாற் கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து நடந்து வந்த அகில உலகப் பெண்கள தின விழாக்களும் அதன் வளர்ச்சியும் 1975ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினர் பெண்கள் தின விழாவை ‘அகில உலக மாதர் தினமாகப் பிரகடனப்படுத்தியது.  உலகம் பரந்த விதத்தில் பார்த்தால் பெண்களின் அரசியற் பங்கு மிகக்குறைவாகவேயுள்ளது. ஆண்கள் தந்கள் அதிகாரத்தை நிலை நிறுததப் பெண்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்.

இன்று, பெண்கள் தினத்தன்று, தென்னிந்திய வியாபாரிகள் இவ்வினத்தை ‘மலிவு சேலை வியாபார’ தினமாக நடத்துகிறார்கள். மலிவான சேலைக்குள் பெண்ணிய சிந்தனைகளைச் சுருட்டிவிடப் பார்க்கிறார்கள். இந்தியப் பெண்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இன்னும் 33 விகிததிற்கு வரவில்லை. மத வெறி பிடித்த – (பெண்ணைத் தெய்வமென மதிக்கும்)  இந்து தீவிரவாதிகளன் கொடிய பாலியல் வெறிக்கு ஒவ்வொரு வருடமும் நூற்றக்கணக்கான தலித் பெண்கள் பலியாகிறார்கள்.

பாலஸ்தினியாவின் காஷாப் பகுதியிலும் சூடானின் டாவோர் அகதி முகாமிலும் ஆயரக் கணக்கான பெண்களும் குழந்தைகளும் படும் துயர் சொல்ல முடியாதவை.

இலங்கையில் ஆயிரக் கணக்கான தமிழப் பெண்களும் குழந்தைகளும் போர் சூழ்நிலைக்குள் அகப்பட்டு சொல்லவொண்ணாத் துயரை முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் கிழக்கிலங்கைப் பெண்கள் பலர் பாதுகாப்புப் படையின் பாலியற் கொடுமைக்காளாகித் துன்பப்படுகிறார்கள். இவை மிகவும் கடுமையாகக் கண்டிக்கப் படவேண்டியவை. இவர்களின் துயர் விரைவில் தீர்க்கப்பட அரசியல் மாற்றங்கள் முன்னெடுக்கப்படப் பெண்களின் பங்கு மிக மிக அவசியம்.