June

June

10 நாட்களில் 4000 கோடி ரூபா அச்சீடு – இனிமேல் பணம் அச்சடிக்க மாட்டோம் என்கிறார் ரணில் !

இலங்கையின் பணவீக்கத்தை தடுப்பதற்காக அடுத்தாண்டு தொடக்கம் பணம் அச்சிடப்படுவது நிறுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச்சில் 21.5 சதவீதம், ஏப்ரலில் 33.8 சதவீதம் என பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்து வரும் மாதங்களில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதனை நிவர்த்திக்கவென ரணில் விக்ரமசிங்க பிரதமராக பொறுப்பேற்ற பின்னரும், பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

…….

, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ரணில் அளித்த பேட்டியில், ‘‘அரசிடமும் பணம் இல்லை. மக்களிடமும் பணம் இல்லை. இதனால் எங்களுக்கு வேறு வழியில்லை. புதிதாக ஒரு லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளை அச்சிட உள்ளோம்.ரூபாய் நோட்டுகளை அச்சிட்டால்தான் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியும்.” என கூறிய ரணில் விக்கிரமசிங்க இன்று மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க கடந்த 10 நாட்களில் 4000 கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதாக திஸ் அத்தநாயக்க தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

கூறு போட்டு அதானி குழுமத்துக்கு விற்கப்படும் இலங்கையின் வடபகுதி – மீனவ சங்கம் விசனம் !

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வட பகுதியை இந்திய அரசு அபிவிருத்தி செய்வதாககூறி வடபகுதியை இந்திய அரசிற்கு விற்கப் போகிறார்கள் என மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர் மொகமட் ஆலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“நாட்டில் காணப்படுகின்ற அரசியல் நிலை இதற்கு அப்பால் எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள் மீனவர்களுக்கு கிடைக்காமை தொடர்பான பிரச்சனை,  இதேபோல் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட – அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்சாரம் மற்றும் அதற்கு அப்பால் அதானி குரூப் எடுத்துள்ள காற்றாலை மின்சாரத் திட்டம் மற்றும் ஏனைய விடயங்கள் அத்தோடு கனியவள மண் அகழ்வு,  அதனோடு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சமகாலத்தில் சட்டவிரோதமாக செய்யப்படுகின்ற மீன்பிடி முறைகள் , வடக்கில் உள்ள மீனவ அமைப்புகளை புதுப்பித்தல் போன்ற பல விடயங்களை நாங்கள் பேசியிருக்கிறோம்.

கடந்த வியாழக்கிழமை ஒரு இந்தியன் குழு ஒன்று மன்னார் மாவட்டத்தில் அதானி குரூப் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து சென்றிருக்கின்றது.
தற்போது இலங்கைக்கு இந்தியாவின் எரிபொருள் விநியோகம் வழங்கப்படாது ஆனால் இந்தியா தற்போதைய நிலையில் எமக்கு உரிய உதவிகளை வழங்கத் தயாரில்லை. ஆனால் வடபகுதியில் வளங்களை பாவிப்போம் என்பது அவர்களுடைய குறிக்கோளாகக் காணப்படுகிறது.

ஆனால் தற்பொழுது இலங்கையில் உள்ள வளங்களை சரியாக பயன்படுத்த இலங்கை அரசுக்கு தெரியவில்லை. காலத்துக்கு ஏற்றவாறு எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு எடுக்கப்படாமையினால் நாடு வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டடிருக்கிறது.

இந்த அரசாங்கம் நாட்டினை கூறு போட்டு ஒவ்வொரு பகுதியாக விற்றிருக்கின்றது. அதானி என்பவர் இந்தியாவில் பாரியபணம் படைத்த ஒரு பெரிய தொழிலதிபர். அங்கே அவருக்கு நிறைய பிரச்சனைகள் அதாவது அவரால் முன்னெடுக்கப்பட இருக்கின்ற துறைமுக நகரங்கள் கூட ஒரு பிரச்சனையாக காணப்படுகிறது. அவரைக் கொண்டு வந்து வடபகுதியை விற்க போகின்றார்கள். நிச்சயமாக தற்போதுள்ள சூழ்நிலையில் வடபகுதியினை அபிவிருத்தி செய்வதாக கூறி திட்டங்களை நடைமுறைப்படுத்திஇந்தியாவுக்கு வடபகுதியினைவிற்க போகின்றார்கள்” என்றார்.

 

தொடரும் எரிபொருள் நெருக்கடி – அதிகரித்த வீட்டுப்பிரசவங்களின் எண்ணிக்கை !

கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் வீட்டுப் பிரசவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடி, பொருளாதார நெருக்கடிகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு செல்வதில் உள்ள சிரமம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

நிக்கவெரட்டிய, புறக்கோட்டை, மோதர உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடந்த இரண்டு நாட்களாக இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எவ்வாறாயினும், குடும்ப சுகாதார ஊழியர்களின் உதவியுடன் பிரசவங்கள் மேற்கொள்ளப்பட்டதால், குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் நலமுடன் இருப்பதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு – ஒரே சட்டம் செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு !

ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த செயலணியின் தலைவர் வண.கலகொட அத்தே ஞானசார தேரரால் இது கையளிக்கப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியானது 2021 ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த செயலணியின் தலைவராக வண.கலகொடே அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள் இல்லை – ரத்து செய்யப்பட்ட சேவைகள் !

எரிபொருள் நெருக்கடி காரணமாக ரயில்  நிலைய அதிகாரிகள் (SMs) மற்றும் இளநிலை ஊழியர்கள் பணிக்கு வராததையடுத்து  கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறைக்கு (KKS) புறப்படவிருந்த ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக  இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோட்டையிலிருந்து காலை 6.35 மணிக்கு மட்டக்களப்புக்கு புறப்பட வேண்டிய உதயதேவி எக்ஸ்பிரஸ்  ரயிலும், 6.05 மணிக்கு காங்கேசன்துறைக்குக்கு புறப்பட வேண்டிய யாழ்தேவி ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை  நேற்று இரவு 9.45 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி புறப்படவிருந்த  ரயில் சேவையும் கட்டுப்பாட்டாளர்கள் இல்லாத காரணத்தால் இரத்து செய்யப்பட்டது. நேற்றிரவு திடீரென ரயில்கள் இரத்து செய்யப்பட்டமை குறித்து  ரயில் நிலைய ஊழியர்கள் மீது பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இன்று மேலும் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் வேலையில்லாது இருக்கும் 8 மில்லியன் பேர் – 73 சதவீதம் பெண்கள் !

இலங்கையில் குறைந்தபட்சமாக வேலை தேடுபவர்களை விட எந்தவொரு தொழிலையும் செய்யாதோர் அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் 2021ஆம் ஆண்டிற்கான நாட்டின் வேலைப்படை தரவுளின் படி, நாட்டின் பொருளாதாரத்தில் செயற்பாட்டில் உள்ள மக்கள் தொகை சுமார் 8.55 மில்லியன் ஆக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

அதேசமயம் நாட்டின் பொருளாதாரத்தில் செயற்பாட்டில் அல்லாதோர் சுமார் 8.58 மில்லியனாகவும் காணப்படுகிறது. அவர்களில் , 73 சதவீதமானேர் பெண்களாக உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் தொடர்பான அச்சம் – பாராளுமன்ற உறுப்பினர்களின் முகவரிகள் இணையத்திலிருந்து நீக்கம் !

இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகவரிகளும் நீக்கப்பட்டுள்ளன.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்களின் கைபேசி இலக்கங்கள் மற்றும் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள அவர்களது வசிப்பிடங்களின் முகவரிகள் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருந்தன.

அமெரிக்காவை அடுத்து சீனாவும் இலங்கை மாணவர்களுக்கு உதவி – 1 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு அரிசி வழங்கும் சீனா !

1000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அரிசி 44 கொள்கலன்களில் கொண்டு வரப்பட்டு இலங்கை மாணவர்களுக்கு வழங்குவதற்காக கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கம் 7,900 பாடசாலைகளில் உள்ள 1.1 மில்லியன் மாணவர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு அரிசியை வழங்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த வாரம் மேலும் இரண்டு அரிசி இருப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை சீருடை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

 

இலங்கையில் உள்ள சிறுவர்களும் உணவு பாதுகாப்புக்காக அமெரிக்காவினால் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்று இடம்பெற்ற ஜீ – 7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுபோக அறுவடைக்கான எரிபொருளை வழங்குங்கள் – விவசாய அமைச்சு கோரிக்கை !

சிறுபோக அறுவடை மற்றும் யூரியா உரத்தை விநியோகிக்க போக்குவரத்துக்கு தேவையான எரிபொருளை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 20,275,000 லீற்றர் டீசல், சிறுபோக அறுவடை மற்றும் உர போக்குவரத்துக்கு தேவைப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் சுமார் 4,77,000 ஹெக்டேயர் பரப்பளவில் நெற்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அறுவடை இம்மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

மேலும், இந்திய அரசினால் வழங்கப்படும் 65,000 மெற்றிக் தொன் யூரியா 2000 பாரவூர்திகள் மூலம் 566 கமநல சேவை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நெற்செய்கை தொடர்பான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டுமென அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் புடினுடன் பேச முயற்சிக்கும் கோட்டாபாய – ஜுலை 10 உடன் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

 

ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டாரில் எரிபொருளைப் பெறுவதற்கு எரிசக்தி அமைச்சர் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறிய அவர், இந்தியாவும் மிகவும் நம்பிக்கையான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.