முல்லைத்தீவில் 20 மாணவிகள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் யூன் 24இல் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவரோடு முன்னிலையானார்.
முல்லைத்தீவின் முக்கிய பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியர் சில மாணவர்களின் துணையோடு மிகக் கீழ்த்தரமான பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை அண்மையில் அம்பலமாகி இருந்தது. 1,500 முதல் 2,000 வரையான மாணவ மாணவிகள் கற்கின்ற இப்பாடசாலையில் காபொத சாதரண தர, உயர்தர வகுப்புகளுக்கு கணித பாடம் கற்பிக்கின்ற ஆசிரியரே இந்த பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். தனது முப்பதுக்களை இன்னமும் தொட்டிராத திருமணமாகாத இந்த ஆசிரியர் தச்துதன் என அறியப்படுகின்றார். இவரது படமும் வெளியிடப்பட்டுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்ட இவர் கணித பாட ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி தேசம்நெற்கு தகவலளித்த அப்பாடசாலையின் கபொத உயர்தர முதலாம் ஆண்டு மாணவர், இவருடைய பாலியல் சேட்டைகள் அனைத்தும் அவருடைய பேர்சனல் க்கிளாஸ் (personal class) நடைபெறும் வீட்டிலேயே நடைபெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட 20 மாணவிகள் இவரிடம் தனியார் கல்விக்கு சென்றவர்களாகவே உள்ளனர். குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவிகளே பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றுமொரு பெண்கள் பாடசாலையில் இருந்து இவரிடம் பேர்சனல் க்கிளாஸ் க்கு வந்த ஒரு சில மாணவிகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட பாடசாலையின் மாணவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் தச்சுதன் முல்லைத்தீவில் தனியாக ஒரு வீட்டை எடுத்து பேர்சனல் க்கிளாஸ் எடுத்து வந்ததாகவும் அங்கு அவர் கபொத சாதாரண தரம் முடித்து உயர்தரம் முதலாம் ஆண்டு கற்கச் சென்ற மாணர்கள் சிலருக்கு மது பானங்களை வாங்கிக் கொடுத்து நட்பாகி தன்னுடைய கபடநாடகத்திற்கு அவர்களைப் பயன்படுத்தி உள்ளார். இம்மாணவர்களும் பருவ வயதின் கோளாறுகளுக்கு உட்பட்டு மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை அரைநிர்வாணமாக நிர்வாணமாக தங்கள் மொபைல் போன்களில் படங்களை எடுத்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு இந்த மோபைல் போன்களையும் தச்சுதனே வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் அம்மாணவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.
மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தியதுடன் நிற்காமல் பேர்சனல் க்கிளாஸ் நடக்கும் வீட்டின் குளியல்அறையில் மாணவிகளுக்கு தெரியாமல் கமரா பொருத்தப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டும் உள்ளதாக அம்மாணவர் மேலும் தெரிவித்தார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் அத்தனை பேரும் தரம் 11 தரம் 12 யைச் சேர்ந்தவர்களே. அதாவது கபொத சாதாரண தர மாணவிகளும் உயர்தரத்திற்குச் சென்ற முதலாம் ஆண்டு மாணவிகளும் எனத் தெரியவருகின்றது.
ஆசிரியர் தச்சுதனுடன் சம்பந்தப்பட்ட சில மாணவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே சில மாணவர்கள் அவர்களுடைய மோபைல்களைப் பறித்து சோதணையிட்டுள்ளனர். அதன் போது மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள், விடியோக்கள், மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொள்ளும் விடியோக்கள் என்பன இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் மீது ஏனைய மாணவர்கள் இளைஞர்கள் சிலர் தாக்கவே அம்மாணவர்கள் தச்சுதனை நோக்கி விரலைக் காட்டியுள்ளனர். இந்த இளைஞர்கள் ஆறு பேர் பொலிஸாரிகனால் கைது செய்யப்பட்டனர்.
தச்சுதனைப் தேடிப் பிடித்து அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்கள் இளைஞர்கள் தெருவுக்கு இழுத்து வந்து அவரைத் தாக்கி உள்ளனர். இந்நிலையில் தலைமறைவான ஆசிரியர் தச்சுதன் யூன் 24 இல் சட்டத்தரணியூடாக நீதிமன்றில் முன்னிலையாகி உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் எஸ் தனஞ்செயன் முன்னிலையாகி இருந்தார்.
பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் மருத்துவ பரிசோதணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது அவர்களில் ஒரு மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. ஆசிரயர் தச்சுதனை மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதாலும் அவர் குற்றத்துடன் சம்பந்தப்பட்ட தடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டி இருப்பதாலும் தச்சுதனுக்கு பிணை வழங்கக் கூடாது என காவல்துறையினர் கேட்டிருந்தனர். முலைத்தீவு மாவட்ட நீதிபதி ரி சரவணராஜா ஆசிரியர் தச்சுதனை யூன் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
தச்சுதன் குறித்த பாடசாலையில் வைத்து மாணவிகளுடன் எவ்வித சேட்டையிலும் ஈடுபட்டதாக எந்தக் குற்றச்சாட்டுகளும் இதுவரையில்லை. ஆனால் இவர் இச்சம்பவத்திற்கு முன்னதாக வேறொரு பாடசாலையின் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டு பிரச்சினைக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.
பெண்கள் குறிப்பாக இளம் மாணவிகள் பாதிக்கப்படுகின்ற போது அவர்கள் சமூகத்தின் பழிக்கு ஆளாகவேண்டி வரும் என்பதால் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை அவர்கள் மௌனமாகவே கடந்து போகின்றனர். அதனால் இப்பாலியல் கொடுமையை இழைக்கின்றவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவதேயில்லை. முல்லைத்தீவில் நடந்த சம்பவம் முதலாவது சம்பவம் அல்ல. அதே போல் அது கடைசிச் சம்பவமாக இருக்கப் போவதுமில்லை.
2009இற்கு முன்னதாக இவ்வாறான சம்பவங்கள் எதுவும் தமிழ் பகுதிகளில் நடைபெறவில்லை என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிப்பது மிகவும் வேடிக்கையானது. பொங்கு தமிழ் நடத்திய பேராசிரியர் கணேசலிங்கம் தன்னுடைய வீட்டில் வேலை செய்து வந்த மலையகச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கு இலங்கையில் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அச்சிறுமி பின்னர் தமிழீழ விடுதலைப் புலகளால் காணாமலாக்கப்பட்டார்.
20.09.2005இ யாழ்ப்பாணத்தில் நீதியரசர் திருமதி சிறிநிதி நந்தசேகரம் முன்னிலையில் ‘பொங்கு தமிழ்’ கனேசலிங்கம் என்று யாழ்ப்பாணத்தில் பிரபலமாகத் அறியப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் தங்கராசா கனேசலிங்கம்இ ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவர் முள்ளையவளையைச் சேர்ந்த முத்தையா யோகேஸ்வரி என்ற பதின்மூன்று வயது வேலைக்காரப் பெண்னைப் பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காகவே நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். சிறு வயதிலிருந்து கனேசலிங்கம் வீட்டில் வேலைக்காரியாய் இருந்த யோகேஸ்வரியை கணேசலிங்கம் நாற்பது தடவைகள் பாலியற் கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த றமேடியஸ் என்பவர் யோகேஸ்வரிக்காக வழக்காடினார். தங்கராசா கணேசலிங்கம் சார்பில் இன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியும் அன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ம் வாதிட இருந்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இவர்கள் வழக்கில் இருந்து வாபஸ்பெற்றனர். அதன் பின் தங்கராசா கணேசலிங்கத்தின் சட்டத்தரணியாக ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ந ஸ்ரீகாந்தா வழக்கை எடுத்திருந்தார். இவ்வழக்குடன் தொடர்பற்ற வேறு காரணங்களுக்காக மனித உரிமைவாதியான றேமடியாஸ் இலங்கை இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கற்ற மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதும் அவ்வாசிரியருக்காக தமிழ் தேசியசவாத சட்டத்தரணிகள் வாதிட்டதும் தெரிந்ததே.
மாணவிகளுக்கு வீட்டுக்கு வெளியே பாதுகாப்பானதாகக் கருதப்படும் பாடசாலைகளில் கல்வி நிலையங்களில் எமது மாணவிகளுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களுமே மாணவிகளை துகிலுரியும் நிறுவனங்களாகி உள்ளன.