November
November
தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வடக்கிலுள்ள தமிழர்கள் கார்த்திகை தீப திருநாளை அனுஸ்டித்தபோது, இராணுவத்தினர் பல இடங்களிலும் சமய அனுஸ்டானங்களை செய்யவிடாது தடுத்துள்ளனர்.
இந்நிலையிலேயே குறித்த செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து ப.சத்தியலிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“கார்த்திகை தீபம் ஏற்றிய இந்துக்களை அச்சுறுத்தி தீபங்களை வீசியெறிந்த இராணுவத்தினரின் செயல் உச்சபட்ச அடக்குமுறையாகும். இச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு, இலங்கையில் சமய, கலாச்சார நிகழ்வுகளை சிறுபாண்மையினர் அச்சமின்றி கடைப்பிடிக்கும் சூழல் ஏற்படவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கை அரசு தமது ஏவல் படைகள் மூலமாக, தமிழர்களை தமது அடக்குமுறைகளின்கீழ் கொண்டுவரவேண்டும் என்ற நோக்குடன் செயற்படுகின்றது” என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.
இம்முறை கார்த்திகைத் தீபத் திருநாளில் தீபமேற்றிய யாழ் பல்கலைக்கழக மாணவன் கைதுசெய்யப்பட்டமை மற்றும் தீபமேற்றுவதற்கு பாதுகாப்புத் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கார்த்திகைத் தீபமானது தமிழ் மக்களால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொண்டாடப்படும் ஓர் விடயம். எமது சைவசமயத்தில் இக் கார்த்திகைத் தீபத்திற்கென ஒரு நீண்ட வரலாற்றுக் கதையே உள்ளது.
இலங்கை அரசு தமது ஏவல் படைகள் மூலமாக, தமிழர்களை தமது அடக்குமுறைகளின்கீழ் கொண்டுவரவேண்டும் என்ற நோக்குடன், இவ்வாறான சைவசமயத்தின் வரலாற்றுத் தொன்மை மிக்க கார்த்திகைத் திருநாளை முன்னெடுக்கவிடாது தடுத்துள்ளனர்.
குறிப்பாக கார்த்திகைத் தீபம் ஏற்றியவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், தீபமேற்றுவதற்கு தயாராக இருந்த நிலையில் தீபங்களையும், பொருட்களையும் சிதைத்த நடவடிக்கைகள் எமது மனங்களில் பாரிய வேதனையினை ஏற்படுத்தியது. இலங்கை பாதுகாப்புத் தரப்பினரின் தொடர்ச்சியான இத்தகைய நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டேயிருக்கின்றன.
தற்போது தமிழர்களின் மதநடவடிக்கைகளைக்கூட செய்யவிடாது தடுக்கின்ற அளவிற்கு இலங்கை அரசின் அடக்குமுறைச் செயற்பாடுகள் வலுத்திருக்கின்றன. தமிழர்கள் மீது இலங்கை அரசு பிரயோகிக்கும் இத்தகைய அடக்கு முறைகளை இன்னும் எவ்வளவு காலத்திற்கு சர்வதேசம் வேடிக்கை பார்க்கப்போகின்றது எனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் – எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
“மூன்றாவது கொரோனா அலை வருவதற்கு முன்னர் இந்த அலையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் இந்த அலையே பாரிய அலையாக மாறலாம்” என வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் முன் எப்போதும் இல்லாத வயைில் கெரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவருகின்றது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொரோனா தொற்று காரணமாக இதுவரை இலங்கையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணித்துள்ளனர். அதனால் சுகாதார ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை முறையாக எடுத்துச் செயற்படாவிட்டால் இந்த இரண்டாவது அலையிலேயே இடம்பெறும் மரண எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று மடங்காகலாம்.
மேலும் மனிதர்கள் மூச்சை சுவாசித்து வெளியேற்றுவதன் மூலம் இந்த வைரஸ் தொடர்ந்து உயிர் பெறுகின்றது. அதனால் இலங்கை போன்ற தீவு நாடு உள்நாட்டுக்குள்ளே முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பேணிக்கொண்டு, சவர்க்காரமிட்டு கைகளை கழுவி முறையான சுகாதார வழிகாட்டலுடன் எமது நடவடிக்கைகளை மேற்கொண்டால் எமது பூமியில் இருந்து இந்த வைரஸை அழிக்கலாம்.
அத்துடன் ஒருசிலருக்கு இந்த கொரோனா வைரஸ் உடலுக்குள் தொற்றிக்கொண்டாலும் அவர்களுக்கு நோய் அறிகுறிகள் காட்டுவதில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்றாலும் அவர்கள் அறியாமலே, இந்த வைரஸ் பரவும் நிலை இருக்கின்றது. அதனால் மூன்றாவது கொரோனா அலை வருவதற்கு முன்னர் இந்த அலையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் இந்த அலையே பாரிய அலையாக மாறலாம் என தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைக்கு அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாராளுன்றில் தொடர்ந்தும் பேசிய அவர்,
“மஹர சிறைச்சாலையில், நேற்றிரவு (29) மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கைகள் அதிகரிக்கும் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தண்டனை பெறுபவர்கள் சிறைச்சாலைகளில் இருந்தாலும், அவர்கள் அரசின் பொறுப்பில் இருப்பதாகவே கருதப்படும். எனவே, இந்தச் சம்பவத்துக்கான முழுப் பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது உடனடியாக எழுந்த சர்ச்சை அல்ல. ஏற்கனவே மஹர உள்ளிட்ட சிறைச்சாலையில் உள்ளவர்களைக் கொரோனா அச்சுறுத்தலை அடுத்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்கள். மஹர சிறைச்சாலையில் கொரோனாவால் மட்டும் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக சிறைச்சாலைகளில் இருவர் இருக்க வேண்டிய இடத்தில் 8 பேரளவில் இருக்கின்றார்கள்.
இதனால்தான் கொரோனா வைரஸ் அங்கு வேகமாகப் பரவி வருகின்றது. இந்தநிலையில், தங்களை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுதான் கைதிகள் கோரியிருந்தார்கள். இது நியாயமான கோரிக்கையாகும்.இதனை நிராகரித்தமையால்தான் இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது ஜனநாயகத்துக்குக்கு எதிரான செயலாகும் ஆகவே இது தொடர்பாக சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் உரிய பதிலை வழங்க வேண்டும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சர்வதேச ரீதியில் அவமதிப்பை ஏற்படுத்தவே மஹர சிறைச்சாலை கலவரம்” என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:-
“கொரோனா நோயாளிகளின் நெரிசலின் விளைவாக இந்தச் சம்பவம் நடக்கவில்லை. சதுரங்க உள்ளிட்ட குழுவினர் அங்குள்ள கைதிகளுக்குப் போதை மாத்திரைகளை விநியோகித்துள்ளனர். இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது ஒருவரின் இரத்தத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இந்தப் பரிசோதனையை இருவருக்குச் செய்த பின்னர், வெலிக்கடை சிறைச்சாலையில் முடிந்தவரை மாத்திரையை விநியோகிக்கவும், ஒரு கொலைகார சூழ்நிலையை உருவாக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த கைதிகளால் சதுரங்க வழிநடத்தப்பட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவினர் இதைப் பற்றி அறிந்து கொண்டு சதுரங்க என்ற இந்தக் கைதியை வேறு சிறைக்கு மாற்றினர். இதில் சம்பந்தப்பட்ட ஒரு சில கைதிகளையும் மாற்றினர். இதனால் வெலிக்கடை சிறைச்சாலையில் இந்தச் சூழ்நிலையை உருவாக்க முடியவில்லை. ஆனால், துரதிஷ்டவசமாக, மஹர சிறைச்சாலையில் இந்தத் திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது நெரிசலால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்டது எனக் கருத முடியாது. அப்படி நினைப்பது இலகுவானது. இதனை நான் அறிந்ததால் இங்கு கூறுகின்றேன்.
இது திட்டமிட்ட செயல். கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது சிறையில் கொலைகள் நடந்தன. அவர் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் இப்படியான சம்பவம் நடந்துள்ளது எனச் சித்தரிக்கவும் இது நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் ஜனாதிபதிக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதே இதில் இருக்கும் உண்மையான கதை” – என்றார்.
“பிரான்சில் மோசமான நோக்கத்துடன் போலீசாரை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது தண்டனைக்குரிய குற்றம்” என அறிவிக்கும் வகையில் புதிய பாதுகாப்பு மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படும் என அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனிடையே கடந்த வாரம் தலைநகர் பாரீசில் கருப்பினத்தை சேர்ந்த இசைக் கலைஞர் ஒருவரை வெள்ளையின போலீஸ் அதிகாரிகள் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சர்ச்சைக்குரிய இந்த பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் போலீசாரின் மிருகதனத்தை காட்டும் இது போன்ற சம்பவங்களை அம்பலப்படுத்த முடியாமல் போகும் என மசோதா எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் இந்த பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரீசில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது.
போலீசார் மீது கற்கள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். ஆனால் பாரீஸ் நகரம் முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது. இந்த வன்முறையில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர்.
வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் வாள்வெட்டுக் கும்பலின் அட்டூழியத்தில் இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ள நிலையில் 3 வீடுகள் அடித்துடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டும் முதியவர் படுகாயத்திற்குள்ளாகியும் உள்ளார்.
பருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சி சிங்கை நகர் பகுதியில் உள்ள குறித்த வீட்டாருக்கு சொந்தமாக பிறிதொரு இடத்தில் இருக்கும் வயல் காணியில் ஒரு குழுவினர் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இது குறித்து சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட தரப்பினரிடம் குறித்த காணி உரிமையாளர்கள் ஆட்சேபனை தெரிவித்து தொடர்ந்தும் மணல் அகழ்வில் ஈடுபடவேண்டாம் என வலியுறுத்தியிருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சட்டவிரோத மணல் அகழ்வு கும்பல் நேற்றுமுன்தினம் மாலை குறித்த வீட்டிற்கு வாள்களுடன் சென்று மிரட்டிச் சென்றுள்ளனர். இதையடுத்து குறித்த வீட்டார் பருத்தித்துறை காவற்துறையில் மிரட்டல் சம்பவம் குறித்து முறையிட்டதாகவும் அது தொடர்பில் எதுவித நடவடிக்கையினையும் காவற்துறையினர் உடனடியாக மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு குறித்த வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த சட்டவிரோத மணல் அகழ்வு கும்பல் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை வாள்களால் கொத்தியும் உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர்.
நேற்றுமுன்தினம் மாலை வாள்களுடன் வந்து மிரட்டிய நிலையில் அச்சமடைந்த குறித்த வீட்டார் அயல் வீட்டில் சென்று இரவு தங்கியிருந்த நிலையில் அங்கும் அத்துமீறி உள்நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் அவர்களை தாக்க முற்பட்ட போது தடுக்க முற்பட்ட அந்த வீட்டைச் சேர்ந்த முதியவரை தாக்கி படுகாயத்திற்குள்ளாக்கிச் சென்றுள்ளனர்.
இத்தாக்குதலில் சிங்கை நகர் வல்லிபுரக்குறிச்சியைச் சேர்ந்த சின்னத்துரை துரைராசா (வயது – 68) என்ற முதியவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தவிர குறித்த பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் கதவையும் வாள்வெட்டுக் குழுவினர் கொத்தி சேதமாக்கிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மணல் அகழ்வு இடம்பெற்றுவரும் காணிககு சொந்தமான குடும்பத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை – பிரதீபன் (வயது-24) என்ற இளைஞனை நேற்றுமுன்தினம் மாலை முதல் காணவில்லை என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை குடி நீர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் காணாமல் போயுள்ள நிலையில், இன்று வடமராட்சி முராவில் பகுதியில் இருந்து அவர் சென்ற மோட்டார் சைக்கிள் சேதமாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
டிப்பர் வாகனத்தினால் மோதி சேதமாக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் குறித்த இளைஞர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் தெரியவில்லை என குடும்பத்தார் தெரிவித்ததாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்..
குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்புடையதாக கருதப்படும் டிப்பர் வாகனம் ஒன்றை பருத்தித்துறை காவற்துறையினர் மீட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில்மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் இன்று மட்டும் 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 946ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 484ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 323 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 17 ஆயிரத்து இரண்டு பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 366 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கைக்குள் மேலும் 07 பேர் கொரோனாவினால் காவுகொள்ளப்பட்டனர். இவர்கள் கொழும்பு, கொத்தட்டுவ, மொரட்டுவ, அக்குரஸ்ஸ, சிலாபம் பகுதிகளை சேர்ந்தவர்களாவர். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.