“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நாம் கோருவதை விட முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் கோருவதை அரசாங்கம் செய்யக்கூடும்” என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் நீதியமைச்சர் அலிசப்ரியிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனின் கோரிக்கையை வரவேற்கின்றேன்.ராஜபக்ஷ குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பினை பேணுகின்ற ஒருவரே முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன். அவர் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் அல்ல. ஆனால் அவரை நாடாளுமன்றத்தில் அமர்த்தியுள்ளனர்.
அவர் கூறுவது அரசாங்கத்தின் கோரிக்கையாகவும் இருக்க கூடும். பல வருடங்களாக சிறையில் வாழுகின்றவர்களை விடுதலை செய்து தமிழர்களின் மனங்களை தங்களது பக்கம் திருப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் செயற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
இத்தனை வருடங்களாக சிறையில் வாழ்க்கையை கழித்த தமிழ் உறவுகள் மற்றும் இளைஞர்களுக்கு இந்த அரசாங்கம் நிச்சயம் எதையாவது செய்யும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
மேலும், சிறைக்கைதிகளின் விடுதலையை அரசியல் மயமாக்கியமையால் தான் இதுவரைகாலமும் எந்ததொரு நன்மையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. கூடிய குற்றங்களை செய்தவர்கள் இன்று வெளியில் திரிவதுடன் செல்வாக்கானவர்களுடன் கூட அவர்கள் தொடர்பில் இருக்கின்றனர்.
ஆனால் அவர்களுக்கு கீழே மிகவும் அடிமட்டத்தில் இருந்து சிறு குற்றங்களை புரிந்த பலர் 18 வருடங்களுக்கு மேலாக சிறையிலுள்ளனர். நாம் கோருவதை விட முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் கோருவதை அரசாங்கம் செய்யக்கூடும். கைதிகளின் விடுதலையையும் அரசியலாக்கி உள்ளமையினால், அரசாங்கத்தில் உள்ள ஒருவரை இவ்விடயம் தொடர்பாக கேள்வி கேட்டு, அவர்களே இதற்கு தீர்வை வழங்க முனையக்கூடும்” எனவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.