அமெரிக்காவில் பல மாகாணங்களில் ஜனாதிபதி டிரம்ப்பின் ஆதரவாளர்கள் சாலையில் இறங்கி பேரணிகளை நடத்தி வருகிறார்கள். அதேபோல் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியிலும் இவர்கள் பேரணிகளை நடத்தி வருகிறார்கள். தபால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இவர்கள் பேரணிகளை நடத்தி வருகிறார்கள்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக 160 மில்லியன் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுவரை செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கையின்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 72,062,575 மக்கள் வாக்குகளை பெற்றுள்ளார். 50.4% மக்கள் வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 68,595,653 மக்கள் வாக்குகளை பெற்றுள்ளார். 48% மக்கள் வாக்குகளுடன் டிரம்ப் பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஜோ பிடன் 264 வாக்குகளுடன் வெற்றியை நெருங்கி உள்ளார். பிடன் வெற்றிபெறுவதற்கு இன்னும் 6 வாக்குகளே தேவை. அதே சமயம் டிரம்ப் 214 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். டிரம்ப் இந்த தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு குறைந்துள்ளது.
அமெரிக்காவில் பதிவான 160 மில்லியன் வாக்குகளில் 101 மில்லியன் தபாலை வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. பென்சில்வேனியா, நெவாடா, ஜார்ஜியா, நார்த் கரோலினா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இங்கு வெளியாகும் முடிவுகள்தான் ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை தீர்மானிக்கும்.
இதில் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கரோலினா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் டிரம்ப் வெகு சில வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இந்த நிலையில் டிரம்ப் முன்னிலை வகிக்கும் போதே வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று டிரம்பின் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது மீதம் இருக்கும் தபால் வாக்குகளை எண்ண கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்.“அது முறைகேடாக பதிவான வாக்குகள், உடனே இந்த மாகாணங்களில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்” என்று டிரம்பின் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு டிரம்ப் முன்னிலை வகித்து வரும் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கரோலினா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் இவர்களை பேரணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு முன் கூடி வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று கோஷம் எழுப்பி வருகிறார்கள். முக்கியமாக பென்சில்வேனியாவில் 20 எலக்ட்ரல் வாக்குகள் இருப்பதால் அங்கு கூடி அதிக அளவில் கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டம் சில இடங்களில் இதனால் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நெவாடா உள்ளிட்ட சில மாகாணங்களில் தேர்தல் முடிவுகளை மொத்தமாக வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் அறிவிக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளனர். கவுண்டி விவரங்களை உடனுக்குடன் அறிவிக்காமல், மொத்தமாக வாக்கு எண்ணப்பட்ட பின் முடிவுகளை அறிவிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.