20

20

“நீதிமன்றத்தின் தடையுத்தரவை மீறி மாவீரர்தின நினைவேந்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும்சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” – எச்சரிக்கின்றார் பிரதிப் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண

“தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவை யாரேனும் மீறினால் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ”என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் காவற்துறை பேச்சாளர் பிரதிப் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண.

வடக்கிலுள்ள 6 நீதிமன்றங்களில் காவற்துறையினர் நேற்று மாவீரர் தின நினைவேந்தலுக்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதையடுத்து வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட நீதிமன்றங்கள் மாவீரர் தின நினைவேந்தலுக்குத் தடையுத்தரவுகளை வழங்கியுள்ளன.

இது குறித்து காவற்துறை பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்ததாவது:-

“மன்னாரிலும் வவுனியாவிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடைசெய்யும் உத்தரவை நீதிமன்றங்கள் நேற்று வழங்கியுள்ளன. மன்னாரில் ஐந்து பேருக்கு எதிராகவும், வவுனியாவில் எட்டுப் பேருக்கு எதிராகவும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான நடவடிக்கைகளில் இந்த நபர்கள் ஈடுபட்டிருந்ததைத் தொடர்ந்தே இந்த உத்தரவைப் பெற்றோம். இந்தத் தடை உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராகப் பொலிஸார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறான நிகழ்வுகள் தமிழ் – சிங்கள மக்களுக்கு இடையிலான பிரிவினையை அதிகரிக்கும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராக வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பொலிஸார் பெற்றுள்ளனர். எனவே, இந்தத் தடை உத்தரவை யாரேனும் மீறினால் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா பிரீமியர் லீக்2020 – Jaffna Stallions அணியின் உரிமையாளர்களில் ஒருவராகிறார் Microsoft Ventures நிறுவனத்தின் நிறுவுனர் !

2020ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் வரும் நவம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகின்றது. டிசம்பர் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடர், ஹம்பாட்தோட்டை, சூரியவௌ மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ள மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரில் மொத்தமாக 23 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் யாழ்ப்பாண பகுதியை மையப்படுத்தி கலந்து கொள்ளும் Jaffna Stallions அணியின் உரிமையாளர்களில் ஒருவராக  Microsoft Ventures நிறுவனத்தின் நிறுவுனரும், அமெரிக்காவின் Seattle மாநிலத்தை தளமாகக் கொண்டியங்கும் தொழில்முனைவருமான Rahul Sood,  இணைந்துள்ளார்.

Jaffna Stallions அணியின் வளர்ச்சியிலும் சர்வதேச ரீதியாக அதனைப் பிரபலப்படுத்துவதிலும் Rahul Sood முக்கிய பங்காற்றவுள்ளார் .

இது தொடர்பாக  Jaffna Stallions அணியின் பிரதம மூலோபாய அதிகாரியான (Chief Strategy Officer) ஆனந்தன் ஆர்னல்ட் குறிப்பிடும் போது “Jaffna Stallions அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவராக Rahul Soodஐ வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். சர்வதேச வர்த்தகத்திலும், புதிய தொழில் முயற்சிகள் ஆரம்பிப்பதிலும் அவருக்கு இருக்கும் அனுபவம் எங்களிற்கு பயனுள்ளதாக இருக்கும். எங்களது அணியை சர்வதேச ரீதியாக பிரபலப்படுத்துவதிலும் அதன் வளர்ச்சியிலும் Rahul Sood அளப்பரிய பங்காற்றுவார்” என தெரிவித்துள்ளார். .

இதே நேரம் , இந்தத் தொடருக்கான ஒளிபரப்பாளர்கள் உரிமையைப் பெற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளின் பெயர் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை சுயாதீனத் தொலைக்காட்சியான ஐ.ரி.என்., இங்கிலாந்தின் ஸ்கை ஸ்போர்ட்ஸ், பாகிஸ்தானின் ஜியோ மற்றும் பி.டி.வி (Geo and PTV) ஆகிய அலைவரிசைகள் உரிமையைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“எமது இந்த ஆட்சியில் பயங்கரவாதிகளை நினைவுகூர நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம்.அதை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” – கெஹலிய ரம்புக்வெல திட்டவட்டம் !

“எமது இந்த ஆட்சியில் பயங்கரவாதிகளை நினைவுகூர நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம்.அதை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”  என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மாவீரர் தின நிகழ்வுகளைத் தடையின்றி நடத்துவதற்குத் தேவைப்பட்டால் ராஜபக்ச அரசுடன் பேசுவோம் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு. எமது நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பு. இந்தநிலையில், அந்த அமைப்பின் சார்பில் பலியானவர்களை எப்படி நினைவுகூர முடியும்?

நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டமும், கொரோனாத் தனிமைப்படுத்தல் சட்டமும் நடைமுறையில் இருக்கின்றபோது பொதுவெளியில் விடுதலைப்புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்தவே முடியாது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்தான் மாவீரர் நாள் வாரத்தைப் பிரகடனப்படுத்தியிருந்தார். இந்த வாரம் (மாவீரர் வாரம்) பயங்கரவாதிகளை நினைவுகூரும் வாரம். இவர்களை நினைவுகூர கடந்த நல்லாட்சி அரசு நாட்டின் சட்டத்தை மீறி அனுமதி வழங்கியது என்பதற்காக எமது இந்த ஆட்சியில் பயங்கரவாதிகளை நினைவுகூர நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதி கோரி தமிழ்க் கட்சிகள் எம்முடன் பேச்சு நடத்த முடியாது. அதற்கு அரசு தயார் நிலையிலும் இல்லை.

அதை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மக்கள் விரும்பினால் போரில் உயிரிழந்தவர்களை தத்தமது வீடுகளிலிருந்து நினைவுகூரலாம். அதை எம்மால் தடுத்து நிறுத்த முடியாது” -எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

ஹாங்காங் மீதான சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணையும் உலக நாடுகள் !

இங்கிலாந்து தனது ஆதிக்கத்தின்கீழ் இருந்து வந்த ஹாங்காங்கை 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைத்தது. அதையடுத்து சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் தன்னாட்சி பிராந்தியமாக ஹாங்காங் இருந்து வருகிறது. ஆனால் அதன் தன்னாட்சியை சிதைக்கின்ற வகையில் சீனா பல நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது.

குறிப்பாக சர்வதேச நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை ஹாங்காங்கில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதை எதிர்த்து போராடுகிறவர்களை தனது நிர்வாகம் மூலம் ஒடுக்குகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக போராடிய சட்டசபை உறுப்பினர்களை சீன நிர்வாகம் பதவி நீக்கம் செய்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஹாங்காங் விடுதலைக்கான போராட்டம் - எதிர்

இதனால் சீனாவினுடைய அடக்கு முறைகளுக்கு  எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய உலக நாடுகள் அணி திரண்டுள்ளன. இந்த நாடுகளின் வெளியுறவு மந்திரிகள், கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஹாங்காங் சட்டசபை உறுப்பினர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று சீனாவை வலியுறுத்தி உள்ளனர்.

சீனாவின் செயல்பாடுகள், சட்டபூர்வ கடமைகளின் தெளிவான மீறல் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஹாங்காங் மக்களின் உரிமைகளை பலவீனப்படுத்துவதின் மூலம் விமர்சன குரல்களை சீனா ஒடுக்குவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஹாங்காங்கின் ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றை காக்க மக்கள் தங்கள் நியாயமான கவலைகளை வெளிப்படுத்த உரிமை வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

எனவே சீனா, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஹாங்காங் சட்டசபை உறுப்பினர்களை மீண்டும் தங்கள் கடமைகளை செய்யும் வகையில் மீண்டும் பதவி அமர்த்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“ஐரோப்பாவில் ஒவ்வொரு 17 நொடிகளுக்கு ஒருவர் வீதம் கொரோனா வைரஸால் பலியாகின்றனர்” – உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் !

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐரோப்பாவில் ஒவ்வொரு 17 நொடிகளுக்கு ஒருவர் கொரோனா வைரஸால் பலியானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் இரண்டாம் கட்ட நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக ஜெர்மனி, ஸ்வீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொரோனா  பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐரோப்பாவில் ஒவ்வொரு 17 நொடிகளுக்கு ஒருவர் கொரோனா  வைரஸால் பலியாகினர்” என்று தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளியானது மீள எண்ணப்பட்ட ஜோர்ஜியா மாநில வாக்கு எண்ணிக்கை முடிவுகள் – ஜோ பைடன் புதிய சாதனை !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், தேர்தலில் மோசடி நடைபெற்றதாக தொடர்ந்து குற்றம்சாட்டினார். குறிப்பாக ஜோர்ஜியா, அரிசோனா, பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகவும், அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரிகள் ஏற்கவில்லை.
எனினும், ஜோர்ஜியா மாநிலத்தில், டிரம்புக்கும், பைடனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்த அளவில் இருந்தால் மறு வாக்கு எண்ணிக்கைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. இந்த முறை வாக்குகள் அனைத்தும் கைகளால் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் பைடன் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநில செயலாளரின் இணையதளத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெற்றியாளரை இயந்திர வாக்கு எண்ணிக்கை துல்லியமாக தெரிவித்ததை, மறு வாக்கு எண்ணிக்கை உறுதிப்படுத்தியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோர்ஜியா மாநிலம் ஜனநாயக கட்சியின் வசம் சென்றுள்ளது. 30 ஆண்டுகளில் முதல்முறையாக வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் என்ற பெருமையை ஜோ பைடன் பெற்றுள்ளார்.

ஒக்ஸ்போர்ட்டின் கொரோனா தடுப்பூசி – “முதியோர்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது” !

கடந்த வருட இறுதியில் தொடங்கி படிப்படியாக உலகம் முழுவதும் பரவலடைந்துள்ள கொரோனா வைரஸினுடைய தாக்கத்தால் உலக அளவில் அதிகமாக முதியோர்களே பாதிக்கப்பட்டு இறந்து போகும் நிலை காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்டோரை காக்கவும் உலகின் முன்னணி நாடுகள் பல கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியானது, “60 முதல் 70வயதானவர்களுக்கு ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வைரஸிலிருந்து அதிக ஆபத்தில் இருக்கும் வயதினரைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

560 ஆரோக்கியமான வயதுவந்த தன்னார்வலர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்திய பின்னர் வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட சோதனைகளில் கொரோனா வைரஸை தடுப்பூசி நிறுத்துமா? என்பதை ஆராய்ச்சியாளர்கள் சோதிக்கின்றனர். இந்த முக்கியமான கட்டத்தின் ஆரம்ப முடிவுகள் எதிர்வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஃபைசர்-பயோஎன்டெக், ஸ்பூட்னிக் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட சோதனைகளில் நல்ல முடிவுகளை பிரதிபலித்துள்ளன. கொவிட் தடுப்பூசியை வளர்ப்பதில் உள்ள சவால், ஒருவர் எவ்வளவு வயதானவராக இருந்தாலும் வைரஸுக்கு எதிராக போராட உடலைத் தூண்டுவதாகும்.

“புதிய அரசாங்கமானது பௌத்த கோயில்கள் கட்டுவது, பௌத்த புராதன சின்னங்களைப் பராமரிப்பது என பல திட்டங்களின் கீழ் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து கபளீகரம் செய்கிறது” – சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு !

“புதிய அரசாங்கமானது பௌத்த கோயில்கள் கட்டுவது, பௌத்த புராதன சின்னங்களைப் பராமரிப்பது என பல திட்டங்களின் கீழ் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து கபளீகரம் செய்து வருகின்றது. இதனை அரசாங்கம் நழறுத்த வேண்டும்” என  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தன்னுடைய கோரிக்கையினை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்  சுரேஷ் பிரேமச்சந்திரன் . அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது ஒரு வருட நிறைவு விழாவில் தான் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்டவராகவும் சிங்கள மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். கடந்த ஒருவருட சாதனைகளை அவர் பட்டியலிடும் பொழுது, முதலாவதாக கிழக்கிலங்கையில் சிங்கள பௌத்த புராதனச் சின்னங்களை அடையாளமிடுவதற்கான ஆணைக்குழுவை நான் நியமித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரையை கபளீகரம் செய்து, அதனை சிங்கள விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல, வடக்கு-கிழக்கின் முக்கியமான பல பகுதிகளை முழுமையாக கபளீகரம் செய்து, அங்கும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறு போன்ற பகுதிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையானது இந்த பிரதேசத்தின் நிர்வாகத்தைக் கையேற்பதன் மூலம் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருக்கோ? அல்லது பிரதேச செயலருக்கோ? எத்தகைய நிர்வாக அதிகாரமும் இல்லாமல் செய்து, அதனை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையேற்பதன் ஊடாக அதனை முழுமையான சிங்களக் குடியேற்றத்திற்கு உட்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருப்பினும்கூட, அடுத்த கட்டங்களில் என்ன நடக்குமென்று கூறமுடியாது. இதனைப் போன்றே, திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஏறத்தாழ ஒன்பது காணித்துண்டுகள் அடையாளம் காணப்பட்டு பௌத்த கோயில்கள் கட்டுவதற்காக அடையாளமிடப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்தில் 20,2343 ஹெக்டெயர் நிலப்பரப்பும் அதே பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புல்மோட்டையில் மூன்று வெவ்வேறு இடங்களில் 11ஹெக்டெயர், 7 ஹெக்டெயர், 1ஹெக்டெயர் நிலப்பரப்பு காணிகளும் குச்சவெளி திரியாய் கிராமத்தில் 20ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி கும்புறுபிட்டி கிழக்கு கலப்பையாறு கிராமத்தில் 20 ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி புல்மோட்டை 3 பிரதேசத்தில் 6ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி புல்மோட்டை 1 நிலப்பரப்பில் 13 ஹெக்டெயர் நிலப்பரப்பும் அதே பிரதேசத்தில் மற்றொரு பகுதியில் 19 ஹெக்டெயர் நிலப்பரப்பும் பௌத்த கோயில்கள் கட்டுவதற்காக அரசாங்கம் ஒப்புதலளித்து வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களும் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட குச்சவெளி பிரதேச எல்லைப்புற கிராமங்களும் சிங்கள மயமாக்கப்படுவதற்கான அடிப்படையிலேயே புத்த கோயில்களுக்கான காணிகளை கையகப்படுத்துவதும் முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின்கீழ் காணிகளை அபகரிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்பேசும் மக்கள் செறிந்துவாழும் குச்சவெளி போன்ற ஒரே பிரதேச செயலகப்பிரிவில் ஒன்பதுக்கும் மேற்பட்ட பௌத்த கோயில்களைக் கட்டுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்துவதன் நோக்கம் என்ன? சிங்கள மக்களே இல்லாத இத்தகைய பிரதேசத்தில் மிக நெருக்கமான முறையில் பௌத்த கோயில்களைக் கட்டுவதற்கு முயற்சிப்பதும், இதனை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் காணிகளை வழங்க முன்வருவதும், மிகப் பாரிய அளவிலான சிங்கள பௌத்த விஸ்தரிப்பினை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும். இது அந்தப் பிரதேசங்களில் பெரும்பான்மையாக வாழும் சிறுபான்மை தேசிய இனங்களை சிறுபான்மையாக்கும் முன்னெடுப்பாகும்.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை, போன்ற எல்லைப்புற பிரதேசங்களிலும் வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களின் எல்லைப்புற பிரதேசங்களிலும் அங்கு வசித்து வந்த தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வந்திருக்கின்றனர். இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் தமிழ் மக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. வடக்கிலும் கிழக்கிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் கடந்த எழுபது வருடங்களாக முற்றுப்பெறாத நிலையில், இந்த புதிய அரசாங்கமானது பௌத்த கோயில்கள் கட்டுவது, பௌத்த புராதன சின்னங்களைப் பராமரிப்பது, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினூடாக காணிகளை நிர்வாகம் செய்வது போன்ற பல திட்டங்களின் கீழ் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து கபளீகரம் செய்துவருவதையே மேற்கண்ட நடவடிக்கைகள் தெளிவுபடுத்தி நிற்கின்றது.

இலங்கை அரசாங்கங்களின் இத்தகைய நடவடிக்கையானது தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு-கிழக்கின் நிலத்தொடர்ச்சியை இல்லாமல் செய்து வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக இரண்டு பகுதிகளாக மாற்றுவதற்கான முயற்சியே ஆகும். இதனூடாக தமிழ் மக்களின் இருப்பும் அடையாளமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

நீதிமன்றங்களினூடாக பெற்றுக்கொள்ளப்படும் தற்காலிகத் தடை உத்தரவுகள் என்பது இவற்றுக்கான நிரந்தரத் தீர்வாக அமையாது. வடக்கு-கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவை தொடர்பாக காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசாங்கத்தின் இத்தகைய கபடத்தனமான சூழ்ச்சிகளை முறியடித்து, தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.” என அவர் தன்னுடைய கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நாட்டில் பிரிவினையினை உருவாக்கி இனவாதத்தை தூண்டும் பிரதானியாக ஜனாதிபதியே உள்ளார்” – முஜிபூர் ரஹ்மான் குற்றச்சாட்டு !

“இந்த நாட்டில் பிரிவினையினை உருவாக்கி இனவாதத்தை தூண்டும் பிரதானியாக ஜனாதிபதியே உள்ளார்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று(19.11.2020) வியாழக்கிழமை, வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது, அதேபோல் ஜனாதிபதி நேற்ற முன்தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார். நேற்று அவர் உரையாற்ற முன்னர் பல பரபரப்புகள் காணப்பட்டன,

ஆனால் அவரது உரையில் சில காரணிகளை முன்வைத்தார். இதில் அவர் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஜனாதிபதி என்பதை மறந்து தனது வெற்றிக்கு வாக்களித்த மக்களை மாத்திரம் நினைவுபடுத்தி பேசினார். எனவே அவரது உரை நாட்டு மக்களுக்கான உரை அல்ல. இது பிளவுக்கான ஆரம்பம் என்பதை அவர் காட்டுகின்றார்.

மேலும் ,ஜோ பைடன் அண்மையில் ஒரு விடயம் கூறினார், அமெரிக்காவில் இனி சிவப்பு , நீல பிளவுகள் இல்லை, ஒட்டுமொத்த அமெரிக்காவாக நாம் இணைய வேண்டும் என்றார். ஆனால் நம் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் வேளையில் இன பிளவை, வர்க்க வாதத்தை ஊக்குவித்துள்ளார். அடிப்படை வாதத்தை நிறுத்த வேண்டும் என கூறிய ஜனாதிபதியே பிளவுகளை ஏற்படுத்தியுள்ளார்

இந்த நாட்டினை அபிவிருத்தியின் பக்கம் கொண்டுசெல்ல வேண்டும் என்றால், நாடாக ஒன்றிணைய வேண்டும் என்றால் முதலில் சகல இன மத மக்களையும் ஜனாதிபதி அரவணைக்க வேண்டும். ஆனால் இன்னும் பிரிவினையின் பக்கமே ஜனாதிபதி நின்று சிந்திக்கின்றார். இது ஜனநாயக நாட்டினை கட்டியெழுப்பும் கொள்கை அல்ல” எனவும் அவர் ஜனாதிபதி மீது தனது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி. அவர் வன்னிதேர்தல் தொகுதியில் உள்ள தமிழ் மக்களை அடிமையாக்கி வைத்துள்ளார்” – நடராஜா ரவிக்குமார் குற்றச்சாட்டு !

“பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி. அவர் வன்னிதேர்தல் தொகுதியில் உள்ள தமிழ் மக்களை அடிமையாக்கி வைத்துள்ளார்”  என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான நடராஜா ரவிக்குமார் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

மட்டக்களப்பு முனைத்தீவு அருள்மிகு ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு விசேட பூஜை நடைபெற்றது.

வழிபாடுகளை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி.ரிசாத் பதியூதின் வன்னிதேர்தல் தொகுதியில் உள்ள தமிழ் மக்களை அடிமையாக்கி வைத்துள்ளார்.

முஸ்லிம்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு தேவையில்லை. ஆனால் பலவந்தமாக அவர்கள் எங்களுக்கு ஆதரவளித்தார்கள். எமது கிழக்கு தமிழ் மக்களுக்கு மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்துவீர்களானால் உங்களுக்கு தக்க பாடம் நாங்கள் புகட்டுவோம். கிழக்கு மண் தமிழ் மக்களுடைய மண்ணாகும். எங்களுடைய போராட்ட வீரர்கள் போராடி பெற்றுத் தந்த இந்த மண்ணை முஸ்லிம்களை ஆள விடமாட்டோம்.

மேலும் ,முஸ்லிம் மக்களுடைய ஜனாஸாவை அடக்கம் செய்ய வேண்டுமென அசாத் சாலி கூறுகின்றார். இது முஸ்லிம் நாடல்ல. இது சிங்கள பௌத்த நாடாகும். இந்த நாட்டிற்குள்ளே இருப்பது ஒரே சட்டமாகும்” எனவும் அவர் கூறியுள்ளார்.