13
13
“அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஏற்பட்ட நிலைமையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஏற்படும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (13.11.2920) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் பேசும் போது..,
மஹிந்தவின் புதிய கட்சியானது சுதந்திரக் கட்சிக்கு மட்டுமல்லாது நாட்டினுடைய முழு அரசியலுக்கும் சேதம் விளைவிக்க போகின்றது. மேலும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து 100 நாட்களில் செய்தவற்றைக் கூட இந்த அரசாங்கம் இதுவரையில் செய்யவில்லை .
தற்போது பாரிய சுகாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளதாகத் தெரியவில்லை . இந்நிலையில் டொனால்ட் ட்ரம்புக்கு ஏற்பட்ட நிலைமையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஏற்படும்.கோட்டாபய ராஜபக்ஷவும் இரண்டாவது தடவை ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போகும் நிலை ஏற்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 83 வயது பெண்ணொருவரும், சிலாபம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவர், இரத்மலானை பகுதியை சேர்ந்த 69 வயது ஆண், கொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்த 78 வயது ஆண் மற்றும் 64 வயதுடைய கொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்த ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் மேலும் 198 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்து 12 ஆயிரத்து 425ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 921ஆக அதிகரித்துள்ளது.
இதே நேரம் “நாட்டில் கொரோனா தொற்று சமூகமயமாக்கப்படவில்லை. இலங்கை இன்னும் கொரோனா தொற்று மூன்றாம் கட்டத்திலுள்ளது . நிலைமையைக் கட்டுப்படுத்துவது கடினமல்ல” என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்கக்கூடாது என பிரித்தானியாவிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்தியத் இந்தியாவின் நெய்தி ஊடகங்கள் பல தெரிவித்துள்ளன.
2000ஆம் ஆண்டளவில் பிரித்தானியா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இணைத்தது. யுத்தம் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இலங்கையில் எந்த விதமான வன்முறைகளும் இடம்பெறாததையடுத்தும் புலிகள் அமைப்பின் தடையை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த நிலையில் புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சும் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தது.
இவ்வாறான சூழலில் புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கக்கூடாதென இந்தியா. பிரித்தானிய உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு மக்கள் மிக மோசமான வறுமையில் வாடிக்கொண்டிருக்க நாய்க்கு 19 அடியில் தங்கச்சிலை வைத்த ஜனாதிபதி !
நாய் ஒன்றின் 19 அடி தங்க சிலையை திறந்து வைத்துள்ளார்.
“கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்போது சிறுபான்மையினரின் உரிமைகளை அரசாங்கம் மதிக்கவேண்டும்” என ஐ.நா.அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர், இலங்கை அரசாங்கத்துக்கு குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது தொடர்பாக பலத்த விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே, இவ்விடயம் தொடர்பாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு, ஐ.நா.அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“தொற்று நோயால் இறந்தவர்கள் மூலம் வைரஸ் பவவுவதைத் தடுப்பதற்கு, அந்த உடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான அனுமானம், ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக தகனம் என்பது அவரவர் கலாசார தேர்வுகளை அடிப்படையாக கொண்டவை’ எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்போது சிறுபான்மையினரின் உரிமைகளை அரசாங்கம் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அரசாங்கம் பின்பற்றவேண்டும் எனவும் அந்த சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு, முஸ்லிம் சமூகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அதேபோன்று முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கை நியாயமானது என்பதன் அடிப்படையில் பல சமூக அமைப்புக்களும் அவர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
“நாட்டில் கொரோனா தொற்று சமூகமயமாக்கப்படவில்லை.இலங்கை இன்னும் கொரோனா தொற்று மூன்றாம் கட்டத்திலுள்ளது . நிலைமையைக் கட்டுப்படுத்துவது கடினமல்ல” என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“உலக சுகாதார அமைப்பு மற்றும் தொற்றுநோயியல் பிரிவின் அளவுகோல்களின்படி, வைரஸ் இலங்கையில் சமூகமயமாக்கப்படவில்லை .
வைரஸின் சமூக மயமாக்கல் என்பது எங்கிருந்து தோன்றியது என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதேயாகும். தற்போது மினுவாங்கொட மற்றும் பேலிய கொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மாத்திரமே கொரோனா தொற்றாளர்களாக காணப்படுகின்றனர்., குறித்த கொத்தணியில் முதலாவது கட்டதில் உள்ளவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது நாட்டின் பொருளாதார நிலைமையைப் பொறுத்தவரை நாடு முழுமையாக மூடும் சாத்தியம் இல்லை , நாட்டை முடக்காது கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிவக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்படுகின்ற அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறந்ததாக இல்லை என குற்றம் சுமத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி , சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கையிலுள்ள சிங்கள ஊடகமொன்றே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
சமூகத்திலுள்ள பெரும்பாலானோருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகின்ற நிலையில் சுகாதார அமைச்சு சமூகத் தொற்று இல்லை என கூறி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியுள்ளதெனவும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தாமல், மக்களின் துன்பங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்த, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையிலேயே, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.இந்த நிலைமை தொடர்ந்தால் அரசாங்கம் பாரிய தோல்வியொன்றைச் சந்திக்கும்” என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம், நேற்றையதினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,
கடந்த தேர்தல் காலத்தின்போது பலருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. சுதந்திரக் கட்சி சார்ந்தவர்கள் மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.
பருத்தித்துறையில் இவ்வாறு பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவரின் பதவி கடந்த ஓகஸ்ட் மாதம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் உள்ள பட்டியலில் அவரின் பெயர் இருந்ததாகவும் பின்னர் வந்த பட்டியலில் இல்லையென்றும் அவர் இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதுபோன்று 600ற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன. வடபிராந்திய போக்குவரத்துத் திணைக்களத்தில் தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுகின்றனர். தேர்தல் காலத்தில் தமக்குப் பணியாற்றியவர்கள் இவ்வாறு பதவியில் இணைக்கப்படுகின்றனர்.
இரண்டு அரசாங்கங்களும் மாறி மாறி இவ்வாறான செயற்பாடுகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட செலவீனங்களையும் தாண்டிய சட்டவிரோதமான செலவீனங்களுக்கும் சேர்த்து அங்கீகாரம் பெறுவதற்கு விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற வடமாகாண போக்குவரத்து சபையானது சீரழிந்து வருகிறது. ஏதாவது விபத்தொன்று இடம்பெற்றால் இதற்கான தீர்ப்புக்காக சம்பந்தப்பட்ட சாரதிகள் கொழும்புக்கு அனுப்பப்படுகின்றனர். ஏனைய மாகாணங்களில் அவ்வாறு இல்லை. வடமாகாணத்தின் கல்வி நிலைமை மோசமாகியுள்ளது. கல்வி நிர்வாக சேவையின் வகுப்பு ஒன்றைச் சேர்த்த வடபகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை.
பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் ஆக்குகின்றோம் என்ற போர்வையில் பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லும் நிலைமைகள் காணப்படுகின்றன. மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ள முன்பள்ளிகளுக்கு வசதிகள் எதுவும் இல்லை. இவ்வாறான நிலையில் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் முன்பள்ளிகளை அமைத்து ஆசிரியர்களுக்கு சம்பளங்களை வழங்கி அவற்றை நிர்வகித்து வருகிறது.
மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ள விடயம் வேண்டும் என்றே சீரழிக்கப்படுகின்றன. இந்த மாதிரியான முறைகேடான செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும். யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடபகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் அரசாங்கம் பாரிய தோல்வியொன்றைச் சந்திக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.