அரவிந்தன் எஸ்

அரவிந்தன் எஸ்

மூன்றாவது அணியை நோக்கி : ச அரவிந்தன்

Aravinthan_S_TULFஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை வாழ் மக்கள் மத்தியிலும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியிலும் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இத்தேர்தல் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதும் காத்திரமானதுமான ஒரு தேர்தலாகவே அமைந்துள்ளது. காரணம் கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையில் நிலவிவந்த அரசியல் சூழல்கள் முற்றிலும் மாறுபட்ட நிலையில் இத்தேர்தலை நடாத்தத் திட்டமிடப் பட்டிருப்பதுவே.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதற்கொண்டு ஆட்சிக்கு வந்த பச்சை மற்றும் நீலக்கட்சிகள் தத்தமது சுயநல அரசியலுக்காக இனவாதத்தைப் பேசிப்பேசி ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சியமைத்ததன் விளைவுதான் இலங்கையில் வாழும் பல்வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் இனரீதியான பாகுபாட்டை ஏற்படுத்தியமையே நாட்டில் ஏற்பட்ட பேரவலங்களுக்குக் காரணமாக அமைந்தது. பதவிவெறி பிடித்த ஆட்சியாகையில் குரோதத்தனமான செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டது ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, இலங்கைவாழ் சகல தரப்பினருமே. இருப்பினும் கூடுதலாகப் பாதிக்கப்பட்டது சிறுபான்மைச் சமூகம்தான் என்பதை நாம் மிகுந்த தேவதனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.

இது இவ்வாறிருக்க ஜனாதிபதித் தேர்தல்களில் சிறுபான்மை அரசியல்த் தலைமைகள் இதுவரை காலமும் காத்திரமான பங்கு வகித்ததாகச் சரித்திரமே கிடையாது. காரணம் இத்தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பு ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கே அதிலும் ஆட்சியமைக்கக் கூடிய பச்சை அல்லது நீலக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே வாய்ப்புக்கள் அதிகம் என்பதனால் அந்தந்தக் காலங்களில் எந்தெந்தப் பக்கம் காற்று வீசுகின்றதோ அந்தந்தப் பக்கங்களில் சாய்வதை வழமையான ஒரு செயற்பாடாக சிறுபான்மை அரசியல் தலைமைகள் கடைப்பிடித்து வருகின்றனர்.

இதுவரை காலமும் நாட்டில் மக்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லுறவையும் கட்டியெழுப்புவது தொடர்பில் எந்தவொரு சக்தியும் சிந்தித்தது கிடையாது. அதுபற்றி சிந்திப்பதற்கு நாட்டில் இருந்த சூழலும் அதற்கு இடமளிக்கவில்லை. ஆனால் இனியாவது இதுதொடர்பில் சிந்தித்துச் செயற்பட வேண்டிய கடமை சிறுபான்மைத் தலைமைகளுக்கு உண்டு.

இலங்கை அரசியலில் ஒரு மூன்றாவது அரசியல் சக்தியைக் கட்டியெழுப்புவது தொடர்பில் சிந்திக்க வேண்டிய காலகட்டமிது. இலங்கையில் வாழும் சகலஇன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கௌரவமான அரசியல்த் தீர்வினை முன்வைக்கக் கூடிய ஒரு சக்தியை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் வாழும் சகலஇன மக்களும் சமத்துவத்துடனும் சமாதானத்துடனும் வாழக்கூடிய சூழுல் உருவாக வாய்ப்புண்டு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கம் முன்னணி வேட்பாளர்களில் யாரை சிறுபான்மை இன மக்கள் ஆதரிக்கப் போகின்றார்கள் என்ற கேள்விக்கு முடிவு காணவேண்டிய காலமும் தேவையும் வந்துள்ளது. இவ்விடயத்தில்தான் சிறுபான்மை இன மக்களுக்கு மிகவும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மிகவும் நிதானத்துடனும் அவதானத்துடனும் அற்ப சொற்ப சலுகைகளுக்கு முன்னுரிமை கொடுக்காது சிறுபான்மை இன மக்களுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை முன்வைத்து அதனை முன்கொண்டு செல்லக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும்.

என்னைப் பொறுத்த வரையில் மகிந்தாவோ அல்லது பொன்சேகாவோ சிறுபான்மை இனத்துக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு செய்த அநீதிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் எத்தனையோ இளைஞர் யுவதிகளையும் அப்பாவிப் பொதுமக்களையும் கொண்றுகுவித்து அவர்களின் உடலத்தின்மேல் மேடை போட்டு அரசியல் பேச நினைக்கின்றனர். மூன்று லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அகதி முகாம்களில் சொல்லொணா துயரங்களை அனுபவித்துக்கொண்டு உறவுகளைப் பிரிந்தும், இழந்தும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். நடத்தி முடிக்கப்பட்ட கொடிய யுத்தத்தின் வடுக்களை எமது சமூகம் இன்னமும் 60, 70 ஆண்டுகளுக்கு சுமக்கப் போகின்றனர் என்பதை நாம் மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. இவற்றை எல்லாம் மறந்து நாம் எவ்வாறு இவர்கள் இருவரையும் ஆதரிக்க முடியும். இத்தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் வெல்வதற்குரிய வாய்ப்புக்கள் மகிந்தாவுக்கு அல்லது பொன்சேகாவுக்கேதான் அதிகம் உள்ளது. என்றாலும் எமது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அநீதிகள் எல்லாவற்றுக்கும் இவ்விருவருக்கும் சமமான பங்குண்டு.

எம்மில் சிலர் சிந்திக்கக் கூடும் எய்தவன் இருக்க நாம் ஏன் அம்பை நோக வேண்டும் என. யுத்தத்திற்கான ஆணை பிறப்பிக்கப்பட்ட காலம்முதல் இந்த யுத்தத்தை வென்றே தீருவேன் எனக் கங்கணங் கட்டிக்கொண்டு நின்றது சரத் பொன்சேகாதான் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது. அது மட்டுமல்ல இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் இலங்கை வாழ் சிறுபான்மை இன மக்கள் தொடர்பாக மிகவும் கேவலமான கருத்துக்களை வெளியிட்டு இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அக்கருத்துக்களுக்கு எந்தவொரு சிறுபான்மை இனத் தலைவர்களும் கண்டனத்தை வெளியிடவில்லை. ஆனால் அண்ணன் ஹக்கீம் மட்டும் அதற்கான கண்டனத்தை தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு விடயமாகும்.

யுத்தம் உக்கிரமடைந்த காலங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி யுத்தப் பிரதேசங்களில் அகப்பட்டிருக்கும் மக்களைப் பாதுகாப்பதற்கு UNHCR, ICRC போன்ற நிறுவனங்களின் உதவியைப் பயன்படுத்தி அந்த மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுங்கள் என பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அவர்கள் அதை செவிமடுக்காதது எத்தனையோ எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தது அரச தலைவர் மட்டுமல்ல இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும்தான்.

இன்று சிறுபான்மை மக்கள் தொடர்பில் இருந்துவந்த கரிசனை அன்று இருந்திருந்தால், யுத்தப் பிரதேசத்தில் பொதுமக்கள் இருக்கும்வரை என்னால் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அரச தலைவருக்கு மறுப்புத் தெரிவித்திருந்தால், எத்தனையோ அப்பாவி உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும். இவை எல்லாவற்றையும் மறந்து நாம் இவர்களை ஆதரித்தால் விலை மதிப்பற்ற உயிர்களையும் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டு இன்னும் பல ஆண்டுகள் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்துகொண்டு வாழப் போகும் எமதினிய உறவுகளுக்கு நாம் செய்யப்போகும் வரலாற்றுத் துரோகமாகும். அதுமட்டுமல்ல வடகிழக்குப் பிரதேசங்களில் காணாமல் போனவர்கள் எத்தனையோ பேர். அவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை. கண்டதுண்டமாக வெட்டி சந்திகளில் போடப்பட்டவர்கள் எத்தனையோ பேர். குற்றங்கள் ஏதும் செய்யாது சந்தேகத்தின் பேரில் சிறைகளில் வாடுகின்ற அப்பாவிகள் எத்தனையோ. இவை எல்லாவற்றுக்கும் பொறுப்பான இந்தக் கொடூர அரசியல் சாம்ராஜ்யத்துக்கும் இந்த சாம்ராஜ்யத்துக்கு விலை போகும் சிலருக்கம் முற்றுப்புள்ளி வைப்பதற்கான முதற்படியாக இத்தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தவரையில் இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கல் போன்றதோர் அதிகாரப் பகிர்வினை ஏற்படுத்தி இலங்கையில் வாழும் சகல தரப்பு மக்களும் சமத்துவத்துடனும் சமாதானத்துடனும் வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம். அதற்கான அரசியல் சூழ்நிலையை இலங்கையில் ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்பினை இலங்கைவாழ் மக்கள் அனைவரும் வழங்க வேண்டும். இத்தேர்தல் தொடர்பில் நாம் நிதானமாகவும் தெளிவாகவும் ஆராய்ந்து வருகின்றோம். வெகுவிரைவில் தமிழர் விடுதலைக் கூட்டணி உத்தியோக பூர்வமான முடிவினை வெளியிடும்.

ச அரவிந்தன் (மத்திய குழு உறுப்பினர், தமிழர் விடுதலைக் கூட்டணி)

இலங்கை – இந்திய அணிகள் மோதும் 2 வது போட்டி இன்று ஆரம்பம்

greenpark.jpgசங்கக்கார தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் இருதரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இந்திய – இலங்கை அணிகள் மோதும் 2 வது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று (24 ஆம் திகதி) தொடங்குகிறது. அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் கப்டன் டோனிக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. லேசான காயம்தான் பயப்படும்படி எதுவும் இல்லை.

முன் எச்சரிக்கை காரணமாக தினேஷ் கார்த்திக் அவசரமாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் டெஸ்ட் அணியில் இடம்பெற்று இருந்தார். 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு இல்லாததால் ரஞ்சி போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் தற்போது இந்திய வீரர்களோடு இணைந்து கொண்டார். டோனி உடல் தகுதி பெற்று விடுவார். அவர் ஆடாத பட்சத்தில் தான் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அகமதாபாத் ஆடுகளம் முழுக்க முழுக்க துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால் பந்து வீச்சாளர்கள் சிக்கி திணறி விட்டார்கள். அகமதாபாத் டெஸ்டில் 7 வீரர்கள் சதம் அடித்தனர்.இந்திய அணியில் டிராவிட், டோனி, காம்பீர், டெண்டுல்கர் ஆகியோரும் இலங்கை அணியில் டில்சான், ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோரும் சதம் அடித்தனர்.

அது மாதிரியான ஆடுகளம் இல்லாமல் முடிவு தெரியும் வகையில் “பிட்ச்” இருக்க வேண்டும் என்று இரு அணி கப்டன்களும் தெரிவித்துள்ளனர். மைதானம் முதல் 3 தினங்கள் துடுப் பாட்ட வீரர்களுக்கும் கடைசி இரண்டு தினங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. கடைசியாக கான்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த டெஸ்டில் இந்தியா 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

ஏ 9 வீதியில் தனியார் பஸ் சேவை!

bus.jpgகண்டி யாழ்ப்பாணம் ஏ 9 வீதி பொது மக்களின் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படுமேயானால் 580 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த  தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் யாழ். மாவட்டக் கிளைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பல வருடகாலமாக ஏ 9 வீதி மூடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நாட்டில் சுமுக நிலை ஏற்பட்டுள்ளதால், ஏ 9 வீதியில் போக்குவரத்துக்கு திறந்தால் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தயாராக உள்ளதாக கூறுகின்றார்.

அரச பஸ்களை மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு வடக்கு பகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கிய போக்குவரத்து சேவையை முழுமையாக ஈடுசெய்ய இயலாது. தனியார் பஸ்களின் சேவையும் அத்தியாவசியமாகும்.

எனவே, அரசாங்கம் அனுமதியளிக்கும் பட்சத்தில் சாதாரண கட்டணத்தில் யாழில் இருந்து கொழும்புக்கு தனியார் பஸ் சேவையினை வழங்க எமது சங்கம் தேவையான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தற்காலிக அரசை அமைப்பது வெறும் கற்பனை – கே.பி.விரைவில் கைதாவார்; அமைச்சர் போகொல்லாகம

rohithaogollagama.bmpநாடு கடந்த தற்காலிக தமிழீழ அரசாங்கத்தை அமைப்பது கே.பி.யின் (குமரன் பத்மநாதன்) கற்பனையே என்றும் அதனை கற்பனை மட்டத்திலேயே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் போகொல்லாகம, கே. பத்மநாதன் என்பவர் சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் ஒருவராகும். அவரை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்குமாறு நாம் கோரியுள்ளோம். வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் இது தொடர்பாக சர்வதேச அரசாங்கங்களிடம் கடிதம் மூலம் கேட்டுள்ளோம்.

கே.பி. கைது செய்யப்பட்டு இலங்கையிடம் கையளிக்கப்படும் சந்தர்ப்பத்தில் நாட்டின் சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும். நாடு கடந்த தற்காலிக அரசாங்கம் அமைப்பது என்பது அவரின் கற்பனையாகும். அந்தக் கற்பனை மட்டத்திலேயே அதனை நாம் கட்டுப்படுத்துவோம். கே.பி. விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடத்தப்பட்ட நியூஸிலாந்து கம்பனியின் கப்பல் தற்போது சோமாலிய கடற்பரப்பில் உள்ளது. இதிலுள்ள 7 இலங்கையரை விடுவிப்பது தொடர்பில் நாம் நியூஸிலாந்து கம்பனியிடமும் நைரோப்பியுடனும் தொடர்பு கொண்டுள்ளோம்.

சங்காய் ஒத்துழைப்பு அமையமானது இலங்கைக்கு பேச்சுவார்த்தைக்கான பங்காளி என்ற அந்தஸ்த்தை வழங்கியுள்ளது. பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையிட்டு இதன் போது பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையிலுள்ள சகல இனக் குழுக்களுக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்படுமென நம்பிக்கை வெளியிடப்பட்டிருப்பதுடன் அதன் மூலம் நாட்டில் இறுதிச் சமாதானத்தை ஏற்படுத்த முடியுமென்று தெரிவித்திருக்கின்றது.

இந்த பேச்சுவார்த்தைக்கான பங்களிப்பானது மகிந்த ராஜபக்ஷவின் அரசுக்குக் கிடைத்த மற்றுமொரு வெற்றியாகும். இதில் பாகிஸ்தான், இந்தியா பார்வையாளராகவுள்ளன. இந்த அமைப்பில் சீனா, கிர்கிஸ்தான், கசகஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய ஆறு நாடுகள் உள்ளன. இதன் நோக்கம் பொருளாதாரம் மற்றும் அரசியல் உட்பட ஏனைய விடயங்களில் இணைந்து செயற்படுவதாகும் என்றும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.