மூன்றாவது அணியை நோக்கி : ச அரவிந்தன்

Aravinthan_S_TULFஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை வாழ் மக்கள் மத்தியிலும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியிலும் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இத்தேர்தல் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதும் காத்திரமானதுமான ஒரு தேர்தலாகவே அமைந்துள்ளது. காரணம் கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையில் நிலவிவந்த அரசியல் சூழல்கள் முற்றிலும் மாறுபட்ட நிலையில் இத்தேர்தலை நடாத்தத் திட்டமிடப் பட்டிருப்பதுவே.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதற்கொண்டு ஆட்சிக்கு வந்த பச்சை மற்றும் நீலக்கட்சிகள் தத்தமது சுயநல அரசியலுக்காக இனவாதத்தைப் பேசிப்பேசி ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சியமைத்ததன் விளைவுதான் இலங்கையில் வாழும் பல்வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் இனரீதியான பாகுபாட்டை ஏற்படுத்தியமையே நாட்டில் ஏற்பட்ட பேரவலங்களுக்குக் காரணமாக அமைந்தது. பதவிவெறி பிடித்த ஆட்சியாகையில் குரோதத்தனமான செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டது ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, இலங்கைவாழ் சகல தரப்பினருமே. இருப்பினும் கூடுதலாகப் பாதிக்கப்பட்டது சிறுபான்மைச் சமூகம்தான் என்பதை நாம் மிகுந்த தேவதனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.

இது இவ்வாறிருக்க ஜனாதிபதித் தேர்தல்களில் சிறுபான்மை அரசியல்த் தலைமைகள் இதுவரை காலமும் காத்திரமான பங்கு வகித்ததாகச் சரித்திரமே கிடையாது. காரணம் இத்தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பு ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கே அதிலும் ஆட்சியமைக்கக் கூடிய பச்சை அல்லது நீலக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே வாய்ப்புக்கள் அதிகம் என்பதனால் அந்தந்தக் காலங்களில் எந்தெந்தப் பக்கம் காற்று வீசுகின்றதோ அந்தந்தப் பக்கங்களில் சாய்வதை வழமையான ஒரு செயற்பாடாக சிறுபான்மை அரசியல் தலைமைகள் கடைப்பிடித்து வருகின்றனர்.

இதுவரை காலமும் நாட்டில் மக்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லுறவையும் கட்டியெழுப்புவது தொடர்பில் எந்தவொரு சக்தியும் சிந்தித்தது கிடையாது. அதுபற்றி சிந்திப்பதற்கு நாட்டில் இருந்த சூழலும் அதற்கு இடமளிக்கவில்லை. ஆனால் இனியாவது இதுதொடர்பில் சிந்தித்துச் செயற்பட வேண்டிய கடமை சிறுபான்மைத் தலைமைகளுக்கு உண்டு.

இலங்கை அரசியலில் ஒரு மூன்றாவது அரசியல் சக்தியைக் கட்டியெழுப்புவது தொடர்பில் சிந்திக்க வேண்டிய காலகட்டமிது. இலங்கையில் வாழும் சகலஇன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கௌரவமான அரசியல்த் தீர்வினை முன்வைக்கக் கூடிய ஒரு சக்தியை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் வாழும் சகலஇன மக்களும் சமத்துவத்துடனும் சமாதானத்துடனும் வாழக்கூடிய சூழுல் உருவாக வாய்ப்புண்டு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கம் முன்னணி வேட்பாளர்களில் யாரை சிறுபான்மை இன மக்கள் ஆதரிக்கப் போகின்றார்கள் என்ற கேள்விக்கு முடிவு காணவேண்டிய காலமும் தேவையும் வந்துள்ளது. இவ்விடயத்தில்தான் சிறுபான்மை இன மக்களுக்கு மிகவும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மிகவும் நிதானத்துடனும் அவதானத்துடனும் அற்ப சொற்ப சலுகைகளுக்கு முன்னுரிமை கொடுக்காது சிறுபான்மை இன மக்களுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை முன்வைத்து அதனை முன்கொண்டு செல்லக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும்.

என்னைப் பொறுத்த வரையில் மகிந்தாவோ அல்லது பொன்சேகாவோ சிறுபான்மை இனத்துக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு செய்த அநீதிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் எத்தனையோ இளைஞர் யுவதிகளையும் அப்பாவிப் பொதுமக்களையும் கொண்றுகுவித்து அவர்களின் உடலத்தின்மேல் மேடை போட்டு அரசியல் பேச நினைக்கின்றனர். மூன்று லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அகதி முகாம்களில் சொல்லொணா துயரங்களை அனுபவித்துக்கொண்டு உறவுகளைப் பிரிந்தும், இழந்தும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். நடத்தி முடிக்கப்பட்ட கொடிய யுத்தத்தின் வடுக்களை எமது சமூகம் இன்னமும் 60, 70 ஆண்டுகளுக்கு சுமக்கப் போகின்றனர் என்பதை நாம் மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. இவற்றை எல்லாம் மறந்து நாம் எவ்வாறு இவர்கள் இருவரையும் ஆதரிக்க முடியும். இத்தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் வெல்வதற்குரிய வாய்ப்புக்கள் மகிந்தாவுக்கு அல்லது பொன்சேகாவுக்கேதான் அதிகம் உள்ளது. என்றாலும் எமது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அநீதிகள் எல்லாவற்றுக்கும் இவ்விருவருக்கும் சமமான பங்குண்டு.

எம்மில் சிலர் சிந்திக்கக் கூடும் எய்தவன் இருக்க நாம் ஏன் அம்பை நோக வேண்டும் என. யுத்தத்திற்கான ஆணை பிறப்பிக்கப்பட்ட காலம்முதல் இந்த யுத்தத்தை வென்றே தீருவேன் எனக் கங்கணங் கட்டிக்கொண்டு நின்றது சரத் பொன்சேகாதான் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது. அது மட்டுமல்ல இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் இலங்கை வாழ் சிறுபான்மை இன மக்கள் தொடர்பாக மிகவும் கேவலமான கருத்துக்களை வெளியிட்டு இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அக்கருத்துக்களுக்கு எந்தவொரு சிறுபான்மை இனத் தலைவர்களும் கண்டனத்தை வெளியிடவில்லை. ஆனால் அண்ணன் ஹக்கீம் மட்டும் அதற்கான கண்டனத்தை தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு விடயமாகும்.

யுத்தம் உக்கிரமடைந்த காலங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி யுத்தப் பிரதேசங்களில் அகப்பட்டிருக்கும் மக்களைப் பாதுகாப்பதற்கு UNHCR, ICRC போன்ற நிறுவனங்களின் உதவியைப் பயன்படுத்தி அந்த மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுங்கள் என பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அவர்கள் அதை செவிமடுக்காதது எத்தனையோ எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தது அரச தலைவர் மட்டுமல்ல இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும்தான்.

இன்று சிறுபான்மை மக்கள் தொடர்பில் இருந்துவந்த கரிசனை அன்று இருந்திருந்தால், யுத்தப் பிரதேசத்தில் பொதுமக்கள் இருக்கும்வரை என்னால் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அரச தலைவருக்கு மறுப்புத் தெரிவித்திருந்தால், எத்தனையோ அப்பாவி உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும். இவை எல்லாவற்றையும் மறந்து நாம் இவர்களை ஆதரித்தால் விலை மதிப்பற்ற உயிர்களையும் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டு இன்னும் பல ஆண்டுகள் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்துகொண்டு வாழப் போகும் எமதினிய உறவுகளுக்கு நாம் செய்யப்போகும் வரலாற்றுத் துரோகமாகும். அதுமட்டுமல்ல வடகிழக்குப் பிரதேசங்களில் காணாமல் போனவர்கள் எத்தனையோ பேர். அவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை. கண்டதுண்டமாக வெட்டி சந்திகளில் போடப்பட்டவர்கள் எத்தனையோ பேர். குற்றங்கள் ஏதும் செய்யாது சந்தேகத்தின் பேரில் சிறைகளில் வாடுகின்ற அப்பாவிகள் எத்தனையோ. இவை எல்லாவற்றுக்கும் பொறுப்பான இந்தக் கொடூர அரசியல் சாம்ராஜ்யத்துக்கும் இந்த சாம்ராஜ்யத்துக்கு விலை போகும் சிலருக்கம் முற்றுப்புள்ளி வைப்பதற்கான முதற்படியாக இத்தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தவரையில் இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கல் போன்றதோர் அதிகாரப் பகிர்வினை ஏற்படுத்தி இலங்கையில் வாழும் சகல தரப்பு மக்களும் சமத்துவத்துடனும் சமாதானத்துடனும் வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம். அதற்கான அரசியல் சூழ்நிலையை இலங்கையில் ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்பினை இலங்கைவாழ் மக்கள் அனைவரும் வழங்க வேண்டும். இத்தேர்தல் தொடர்பில் நாம் நிதானமாகவும் தெளிவாகவும் ஆராய்ந்து வருகின்றோம். வெகுவிரைவில் தமிழர் விடுதலைக் கூட்டணி உத்தியோக பூர்வமான முடிவினை வெளியிடும்.

ச அரவிந்தன் (மத்திய குழு உறுப்பினர், தமிழர் விடுதலைக் கூட்டணி)

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • rajah
    rajah

    yes mr aravinthan where is you now ? tamil peples lost to much now we are not want tamil eelam
    we want the peace and every one outher life so not dication for the president tulf long times
    lost oure maind now young generation

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    இந்தியாவிட்ட இருந்து ஒருமாதம் முன்னுக்கே வந்த ”கோரிக்கையை” நிதானமாகவும் தெளிவாகவும் ஆராய்ந்து வெகுவிரைவிலும் குழப்பமில்லாமல் வெளியிடப்போறியள் ஆக்கும். அதுக்கு ஒரு வெள்ளோட்டம் விட்டுப்பாக்கிறியள்!

    அதென்ன ஒற்றுமையையும் நல்லுறவையும் கட்டியெழுப்ப சிந்திக்கவில்லையோ? அதில உங்கட கூட்டணியும் அங்கம் தானே அரவிந்தன். அது சரி இன்னும் ஏன் ‘தமிழர் விடுதலை’ எண்டு எழுதிக்கொண்டு திரியிறியள். சிங்களவர்கள் பெயரளவில ஒற்றுமை கதைச்சுக்கொண்டு பிரிவினை கேக்கிறாங்கள் என சொல்லப்போகினம். முதலில ‘ஈழம்’ பெயர் கொண்ட கட்சிகள் அவுட்…அடுத்தது இந்த ‘புரட்சி’ ‘விடுதலை’ கொண்ட கட்சிகள் அண்ணை!

    Reply