தேசிய புலனாய்வு துறையினரின் தகவலுக்கமைய வெளிநாட்டு கடற் பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளுக்குச் சொந்தமான ‘பிரின்ஸஸ் கிரிஸான்டா’ என்ற பாரிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கடற்படை கப்டன் டி. கே. பி. தஸநாயக்க தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினரால் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்தக் கப்பலை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திஸரசமரசிங்க தலைமையிலான உயர் அதிகாரிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஆயிரக் கணக்கான கடல் மைல்களுக்கு அப்பால் கைப்பற்றப்பட்ட இந்தக் கப்பல் மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தின் போது பிரபாகரன் உட்பட புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் தப்பிச் செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்தார்.
எல்.ரி.ரி.ஈ. இயக்கத்திற்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆயுதங்களை கடத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட இந்தக் கப்பல் இலகுரக விமானம் இறங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. 90 மீட்டர் நீளமும் 33 மீட்டர் உயரமும் கொண்ட இந்தக் கப்பலில் 5000 மெற்றிக் தொன் எடையுள்ள பொருட்கள் கொண்டுசெல்ல முடியும்.
புலிகளிடமிருந்த பல கப்பல்கள், கடற்படையினரால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டன. புலிகளிடமிருந்த மிகப் பெரிய கப்பல் இது என்று கடற்படைத் தளபதி சுட்டிக் காட்டி னார். கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த ஆழ்கடலில் தரித்து நின்ற கப்பலை பார்வையிடுவதற்கென கொழும்பு துறைகத்திலிருந்து இரண்டு டோராக்களில் ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் கொழும்பு துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிடப்பட்ட பின்னர் கடற்படைத் தளபதி தலைமையில் ஊடகவியலாளர் குழுவினர் கப்பலை சென்று பார்வையிட்டனர். வெற்றிகரமாக கப்பலை துறைமுகத்திற்கு கொண்டு வந்ததை பாராட்டும் வகையில் கப்டன் தஸநாயக்கவிடம் கடற்படைத் தளபதி நற்சான்று பத்திரத்தை சமர்ப்பித்தார்.
இந்தக் கப்பல் ஆயுதக் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் செயற்பாடுக ளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளமை புலனாய்வு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் மூலமும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் மூலம் கடற்படையினர் வெற்றிகரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்ததுடன் புலிகளின் கப்பல்களை இதுபோன்று கொழும்புக்கு கொண்டுவரவும் முடிந்தது என்று கடற்படைத் தளபதி குறிப்பிட்டார். இலங்கை கடற்படையினரின் பாவனைக்கு இந்த கப்பல் பயன்படுத்தப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.