பொன்சேகாவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கோருகிறது ஐ.நா

_philipalston.jpgமுன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கடந்த 13ஆம் திகதி ‘சன்டே லீடர்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் நீதி விசாரணைக்குப் புறம்பான உடனடி மற்றும் விசாரணையின்றி மேற்கொள்ளப்படும் மரண தண்டனை விவகாரங்களுக்கு பொறுப்பான விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்டன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

சரணடைந்தவர்களை சுடுமாறு இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிக்கு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்குமாறு அக்கடிதத்தில் அவர் கேட்டிருக்கிறார்.

பாலசிங்கம் நடேசன், சீவரட்னம் புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூன்று புலி இயக்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2009 மே 17 ம் 18ஆம் திகதி இரவு மரணமுற்ற சூழ்நிலை தொடர்பாகவே ஐக்கிய நாடுகள் சபை விசாரணை செய்கிறது.

தனக்கு கிடைத்துள்ள தகவல் மேற்குறிப்பிட்ட பேட்டியில் சரத் பொன்சேகா விடுத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாக தனது கடிதத்தில் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நடேசன், புலித்தேவன், ரமேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உயிரிழந்த சூழ்நிலை தொடர்பாக விடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் சிலவற்றை 58 ஆவது படைப்பிரிவுடன் அப்போது இருந்து வந்த ஊடகவியலாளர்களின் கூற்றுக்கள் உறுதி செய்வதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

அனைத்து ஆயுத மோதல்களுக்கும் பொருத்தமான சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் குறிப்பாக 1949 இன் ஜெனீவா ஒப்பந்தத்தின் 5 ஆவது ஷரத்தை சுட்டிக்காட்டும் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தனது கடிதத்தில் குற்றச்சாட்டுகளின் சரியான தன்மை பற்றி கேட்டுள்ளதுடன் அக்குற்றச்சாட்டுகள் சரியானவை அல்ல என்று கூறுமிடத்து அது பற்றிய தகவல் மற்றும் ஆவண சான்றுகளையும் கேட்டுள்ளார்.

அத்துடன் நடேசன், புலித்தேவன், மற்றும் ரமேஷின் குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பான தகவல்களும் அக்கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளரின் கடிதத்துக்கு உத்தியோகபூர்வ பதில் அனுப்புவது மற்றும் தேவையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தீர்மானிக்கும் முன்னர் அக்கடிதம் தொடர்பாக அரசாங்கம் கவனமாக பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • மேளம்
    மேளம்

    பொறுத்திருந்து பார்ப்போம். ஆடி அடங்கும் வாழ்க்கையடா… ஆறடி நிலம் கூடச் சொந்தமில்லை என்பது நமக்குத் தெரியும். இதுவும் தெரியாமல் துள்ளுகின்றவை பொதி சுமக்கத்தான் வேண்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பொன்சேகாவின் குற்றச்சாட்டு பற்றிய தகவல்களையும் ஆதாரங்களையும், ஐ.நா பொன்சேகாவிடமல்லவா முதலில் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். பொன்சேகாவிடமிருந்து ஐ.நாவிற்கு தகவல்களும் ஆதாரங்களும் கிடைத்த பின் அவை பற்றிய விளக்கங்களை மகிந்த அரசிடம் கேட்டிருக்கலாம். யாரை ஏமாற்ற ஐ.நா தற்போது நாடகமாடுகின்றது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பார்த்திபன்,
    அமெரிக்கா பொன்சேகாவிடம் கேட்டுவிட்டது என கதை வந்தபோது ஐயையோ….நாட்டின் இறைமைக்குள் கைவைத்து விட்டார்கள்…எப்படி ஒரு ராணுவ அதிகாரியை கேள்விகேட்கலாம்…நடந்த எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு…என்னிடம் கேட்க இவர்களுக்கு துணிவில்லை… ஸ்ரீலங்கா மாதாவை குழிதோண்டிப்புதைக்க சர்வதேச சதி நடக்கிறது….நான் நாட்டுக்காக என் தலையையும் கொடுப்பேன் என முழங்கியது யாரோ அவரிடமே கேட்டுள்ளனர். ஸ்ரீலங்காவில் இருப்பது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை அல்லவா?

    எல்லா விடயங்களும் ஐ.நா விடம் உண்டு. ஆனால் எப்போதுமே இவை பற்றி என்ன உங்கள் கருத்து என கேட்பது வழமை. இவ்வாறுதான் வீடியோ வெளிவந்தபோது சுட்டது நாங்கள் இல்லை…புலிக்கு தாடி இருக்கு…சூட்டுச்சத்தம் சிங்கிரனைஸ் ஆகுதில்லை…சுட்டுக்கொல்லப்பட்டது புளொட் அங்கத்தினர் என பல விளக்கங்களை அளித்தது எல்லாம் மறக்க முடியுமா?

    அரசாங்கமே பதில் அனுப்ப முன்னர் பரிசீலித்து வருகிறது எனச்சொல்லி இருக்கிறது ஆனால் நீங்கள் தான் ஆத்திரப்படுகிறீர்கள் பார்த்திபன்!

    மற்றும்படி ஐ.நா பற்றி எனக்கு ஒன்றும் நல்லபிப்பிராயம் இல்லை!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    நான் ஆத்திரப்படவில்லை. உள்ளதைத் தான் எழுதினேன். அன்று சரத் பொன்சேகா இராணுவ அதிகாரி, ஆனால் இன்று அவர் எதிர்க்கட்சி வேட்பாளர் மட்டுமே. அதனால் அவரிடம் ஐ.நா கேள்வி எழுப்புவதை மகிந்த விமர்சிக்க முடியாது. அப்ப உங்க கருத்துப்படி அரசாங்கம் உண்மையான தகவல்களை ஐ.நாவிற்கு வழங்கும், அதை வைத்து ஐ.நாவும் தவறொன்றும் நடக்கவில்லையென்று அறிக்கை விடும். அதை வைத்து நாமெல்லாம் விழா எடுத்துக் கொண்டாடலாமா??

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ஐ.நா எந்த ஒரு மனிதனிடமும் ( அம்மனிதர் மறுப்புத் தெரிவித்தால்) விசாரணை நடத்த அந்த நாட்டு அரசிடம் அனுமதி பெறவேண்டும். அவர் ராணுவ அதுகாரியாக இருந்தாலென்ன எதிர்க்கட்சி வேட்பாளராக இருந்தாலென்ன சாதாரண பிரஜை ஆக இருந்தாலென்ன ஒன்றுதான். அவ்வாறு ஒரு தலைப்பட்சமாக விசாரணை நடத்துவதாயின் ஐ.நாவின் உறுப்பினர்களின் அனுமதி வேண்டும் (உ+ம்: ஐ.நா பாதுகாப்பு சபை). ஸ்ரீலங்காவில் வெள்ளைவான் கடத்தல் கேசுகள் போல் செய்யமுடியாது. ஐ.நா வை விடுங்கள் எந்த ஒரு வெளிநாட்டினரையும் விசாரணை நடத்தும்போதும் அந்நாட்டின் தூதராலயத்தில் இருந்து ஒரு அதிகாரியை உடனிருக்கக் கோரும் சர்வதேச சட்டம் உள்ளது. அவை ஸ்ரீலங்காவில் தூக்கி எறியப்படுவதை வைத்து நியாயம் எனச் சொல்ல முடியாது பார்த்திபன்.

    இங்கே வேறுபாடு அப்போது அவர் அரசபீடத்துடன் ஐக்கியமாக இருந்தார் இப்போது எதிரில் இருக்கிறார் அது தான் ஸ்ரீலங்காவின் மனித உரிமை. அவ்வாறே திசை நாயகம் எழுதிக்கொடுத்த அறிக்கைகளை காவித்திரிந்து அன்றைய யீ.என்.பி அரசின் வண்டவாளங்களை வெளிக்கொணர்ந்த மகிநதா அதே திசைநாயகம் இன்றைய அரசின் நடவடிக்கைகளைப்பற்றி எழுதியவற்றை வைத்து உள்ளே போட்டது நாம் கண்ணால் கண்டதுதானே? (திசை நாயகத்தின் தந்தை இதைச் சொல்லி இருக்கிறார்)
    ஐ.நா உண்மையானவற்றை வழங்காது விடின் அந்நாட்டினர் மறுதலிக்க ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுவது வழமையான ஒன்று. ஐ.நா தவறொன்றும் நடக்கவில்லை என அறிக்கை விட்டதோ இல்லையோ ஸ்ரீலங்காவின் ”உண்மையான” அறிக்கைகளுக்கு இணையத்தில் விழா விழா எடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள்!

    பார்த்திபன், தேசத்தில் ….
    ”….‘சண்டே லீடர்’ பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. விளக்கம் கோரியிருப்பதை நாட்டுப் பிரச்சினையாக அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டுமென பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க வேண்டுகோள் விடுத்தார். ‘இதனையொரு அரசியல் பிரச்சினையாகப் பார்க்காமல் தேசியப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்தார்..”
    நீங்கள் என்னவோ அவரிடம் ஐ.நா கேள்வி எழுப்புவதை மகிந்த விமர்சிக்க முடியாது என்கிறீர்கள்?

    http://thesamnet.co.uk/?p=18360

    Reply