கண்டி யாழ்ப்பாணம் ஏ 9 வீதி பொது மக்களின் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படுமேயானால் 580 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் யாழ். மாவட்டக் கிளைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பல வருடகாலமாக ஏ 9 வீதி மூடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நாட்டில் சுமுக நிலை ஏற்பட்டுள்ளதால், ஏ 9 வீதியில் போக்குவரத்துக்கு திறந்தால் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தயாராக உள்ளதாக கூறுகின்றார்.
அரச பஸ்களை மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு வடக்கு பகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கிய போக்குவரத்து சேவையை முழுமையாக ஈடுசெய்ய இயலாது. தனியார் பஸ்களின் சேவையும் அத்தியாவசியமாகும்.
எனவே, அரசாங்கம் அனுமதியளிக்கும் பட்சத்தில் சாதாரண கட்டணத்தில் யாழில் இருந்து கொழும்புக்கு தனியார் பஸ் சேவையினை வழங்க எமது சங்கம் தேவையான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.