May

May

அமெரிக்க வரலாற்றில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக டிரம்ப் !

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைக்க டிரம்ப் பணம் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் டிரம்ப் 34 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

இந்நிலையில் அமெரிக்காவில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக டிரம்ப் கருதப்படுகிறார்.

டிரம்ப் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 11 ஆம் திகதியன்று தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் டிரம்ப்பிற்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே நாடுகள்!

ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் கூட்டாக பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

இதனுடன், பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதில் தமக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை என பிரான்ஸும் அறிவித்துள்ளது.

அதன்படி, தகுந்த நேரத்தில், பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிக்க தான் தயாராக இருப்பதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் காசா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

பலஸ்தீனத்துக்கான அங்கீகாரம் சரியான தருணத்தில் கொடுக்கப்பட வேண்டும் என தான் கருதுவதாகவும், உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை தான் உடனடியாக எடுப்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது பிரித்தானிய நாடாளுமன்றம் !

பிரித்தானிய நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக இன்று (வியாழக்கிழமை) கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் அறிவித்திருந்தார்.

இதன்படி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதுடன் பொதுத் தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடையும் என்று கூறப்பட்டிருந்தது

இதனைத் தொடர்ந்து 5 வாரங்களின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“All eyes on Rafah” -பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கோடிக்கணக்கான மனிதர்கள் !

காசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வெளியான “All eyes on Rafah” என்ற ஹேஷ்டெக் கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில், அதிகளவாக பகிரப்பட்டு கவனம் பெற்றுள்ளது.

அதன்படி, AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட “All eyes on Rafah” வாசம் பொருந்திய புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது.

இது, இஸ்டாகிராமில் மட்டும் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், All eyes on Rafah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் 2.75 கோடிக்கு மேல் பகிரப்பட்டுள்ளது.

காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையை கண்டிக்கும் வகையில், “All eyes on Rafah” என்ற ஹேஷ்டேக் நேற்று முதல் வைரலாகி வருகின்றது.

குறித்தப் புகைப்படத்தில் மிக நெருக்கமாக அமைந்துள்ள தற்காலிக கூடாரங்கள் இடம்பெற்றுள்ளன.

பாலைவனப் பின்னணியில், மலைகளுக்கு இடையே தற்காலிகக் கூடாரங்களில் இருக்கும் பலஸ்தீனர்களின் துயரமான நிலையை எடுத்துரைப்பது போல் அந்தப் புகைப்படம் அமைந்தது.

All eyes on Rafah என்ற புகைப்படத்தை, சர்வதேசக பிரபலங்கள் தங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

ரபாவில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ள முகாம்கள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் !

இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகரம் மீது காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பின் ஆயுத படை பிரிவினர் பாரிய ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் படையினர் ஹமாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது  வான்வெளி தாக்குதலில் நடத்தி உள்ளது.

வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரபாவில் தஞ்சம் புகுந்துள்ள முகாம்கள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியது.

இந்த மிலேச்சதனமான தாக்குதலில் 35 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர் என காசா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மற்றும் ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் காசாவில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

எற்கனவே ரபா எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் நிவாரண பொருட்கள் எதுவும் கிடைக்காததால் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர்.

தற்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பொதுமக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர். இதற்கிடையில் தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களில் இஸ்ரேல் படையினர் நடத்திய புதிய தாக்குலுக்கு 8 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் புதையுண்டு போன 2000 பேர் !

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு அருகே இருக்கும் தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.

இதையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் உறங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர்.

இதனால் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகவும், 650-க்கு மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டனர் என்று முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரோடு புதையுண்டதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மையம் ஐ.நா.விடம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உதவ தயாராக இருப்பதாக அவுஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிக்கொப்டர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான அறிகுறிகள் எவையும் இல்லை – ஈரான் இராணுவம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிக்கொப்டர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான அறிகுறிகள் எவையும் இல்லை என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

மலைப்பகுதியில் விழுந்ததும் ஹெலிக்கொப்டர் தீப்பிடித்து எரிந்துள்ளது அது தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் இல்லை என ஈரான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் என ஏ.பி செய்தி வெளியிட்டுள்ளது.

ஹெலிக்கொப்டர் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஈரான் இராணுவத்தின் இந்த அறிக்கை தொலைக்காட்சியிலும் வெளியாகியுள்ளது.

ஹெலிக்கொப்டர் விபத்திற்கு எவர்மீது குற்றச்சாட்டுகள் அந்த அறிக்கையில் சுமத்தப்படாதமை குறிப்பிடத்தக்கது.

ஹெலிக்கொப்டருடனான தொடர்பாடல்களின் போது சந்தேகத்திற்கு இடமான எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு இலங்கை மாணவர்களை வரவேற்கும் இந்தியா!

சுயநிதித் திட்டத்தின் கீழ் இந்தியப் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு இலங்கை மாணவர்களின் விண்ணப்பங்களைக் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வரவேற்கிறது.

அதன்படி, 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான MBBS, BDS, BE, B.Tech, B.Pharm, B.Arch, Diploma level Technical மற்றும் Diploma in Pharmacy ஆகிய கற்கைநெறிகளுக்குத் தகுதியான இலங்கை மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களைக் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலத்தில் சமர்ப்பிக்க முடியும்.

MBBS/BDS பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் NEET தேர்வு மற்றும் க.பொ.த உயர் தரப் பரீட்சையில் உயிரியல் ,பௌதிகவியல், இரசாயனவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாட நெறிகளில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொறியியலில் BE/B.Tech மற்றும் Diploma in engineering ஆகிய கற்கைநெறிகளுக்கு பௌதிகவியல், இரசாயனவியல் மற்றும் கணிதம் ஆகிய பாட நெறிகளில் 60 சதவீதம் மற்றும் க.பொ.த உயர் தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

B.Pharmacy மற்றும் Diploma in Pharmacy ஆகிய கற்கைநெறிகளுக்கு உயிரியல், பௌதிகவியல் மற்றும் இரசாயனவியல் ஆகிய பாட நெறிகளில் 60 சதவீதம் மற்றும் க.பொ.த உயர் தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

B.Arch கற்கைநெறிக்கு புதுதில்லியின் கட்டிடக்கலை கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது விண்ணப்பங்களைக் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும்.

எனது தமிழ் கலாச்சாரத்தில் இருந்து கற்றுக்கொண்ட விடயங்களே வெற்றிக்கு காரணம் – மாஸ்டர் செவ் 2024 போட்டியில் வெற்றிபெற்ற பிரின் பிரதாபன் !

பிரிட்டனின் மிகப்பிரபலமான சமையல் போட்டியான மாஸ்டர் செவ் 2024 போட்டியில் தமிழ் கால்நடை மருத்துவர் பிரின் பிரதாபன் வெற்றிபெற்றுள்ளார்.

தமிழ் கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் தனது தமிழ் பின்னணியிலிருந்து தைரியமான ஆக்கபூர்வமான சுவைகளின் சேர்க்கைகளை உருவாக்கப்பெற்ற உத்வேகத்தின் காரணமாகவே மாஸ்டர் செவ்வில் வெற்றிபெற முடிந்தது என தெரிவித்துள்ளார்.

தனது பெற்றோர்களே தனக்கு உணவு மற்றும் சுவையின் மீதான ஆர்வத்தை தூண்டினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்

பிரின் பிரதாபனின் தந்தை கோபால் ஒரு பொறியியலாளர் தாயார் டார்க்கே வங்கியில் பணிபுரிகின்றார்.

எனது சமையலில் தமிழ் கலாச்சாரம் முக்கிய பங்கு வகித்தது இந்த விடயத்தில் நான் அதிஸ்டசாலி என அவர் தெரிவித்துள்ளார்.

எனது பெற்றோர் மிகச்சிறந்த சமையல்திறன் மிக்கவர்கள் எனது வாழ்நாள் முழுவதும் அற்புதமான தமிழ் சுவையால் வழிநடத்தப்படும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் பின்னணியை பொறுத்தவரை ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு காரணம் உள்ளது சிலர் பொருட்களை சேர்க்க முடியாது சில பொருட்களை சேர்க்க முடியும் சுவைகள் சிலவேளை ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் எனது தமிழ் கலாச்சாரத்திலிருந்து பாடங்களை கற்று நான் தயாரிக்கும் பல உணவு வகைகளில் அவற்றை சேர்த்துள்ளேன் ஐரோப்பிய உணவு வகைகளிலும் சேர்த்துள்ளேன் எனவும் அவர் தமிழ்கார்டியனிற்கு தெரிவித்துள்ளார்.

 

 

இஸ்ரேல் தற்போது இராஜதந்திரரீதியில் தனிமைப்படுத்தப்படுவது குறித்து அமெரிக்கா கவலை !

இஸ்ரேலிற்கு பாரம்பரியமாக ஆதரவை வெளியிட்டு வந்த நாடுகளால் இஸ்ரேல் தற்போது இராஜதந்திரரீதியில் தனிமைப்படுத்தப்படுவது குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

 

நோர்வே அயர்லாந்து ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையிலேயே அமெரிக்க இஸ்ரேல் தனிமைப்படுவது குறித்து கவலை வெளியிட்டுள்ளது.

 

அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் இதனை தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேல் இராஜதந்திரரீதியில் தனிமைப்படுத்தப்படுவது குறித்து கரிசனையடைந்துள்ளீர்களா என்ற கேள்விக்கு ஆம் என அவர் பதிலளித்துள்ளார்.

 

இது நியாயமான கேள்வி சர்வதேச அமைப்புகளில் இஸ்ரேலிற்கு ஆதரவாக செயற்படுகின்ற நாடு என்ற அடிப்படையில் நாங்கள் இஸ்ரேலிற்கு எதிரான குரல்கள் அதிகரிப்பதை பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலிற்கு கடந்தகாலங்களில் ஆதரவை வெளியிட்ட குரல்கள் கூடவேறுதிசையில் பயணிக்கின்றன எனவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

 

இது எங்களிற்கு கரிசனையளிக்கின்றது இது இஸ்ரேலின் நீண்டகால பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்யாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பொதுமக்களை பாதுகாக்கும் மனிதாபிமான உதவிகள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் அதேவேளை ஹமாசை தோற்கடிக்கும் தந்திரோபாயத்தை முன்னெடுப்பதன் மூலமே இஸ்ரேல் சர்வதேச ரீதியில் தனிமைப்படுவதை தவிர்க்க முடியும் என சுலிவன் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை பேச்சுவார்த்தைகள் மூலமே பாலஸ்தீன தேசத்தை அடையமுடியும் ஒரு தலைப்பட்சமான பிரகடனங்கள் மூலம் அதனை அடைய முடியாது எனவும் அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் தெரிவித்துள்ளார்.