January

January

கோழி வளர்ப்பினால் மோதல் – யாழில் ஒருவர் பலி !

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் கோழி வளர்ப்பினால் அயலவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்ற 36 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடைர்புடைய 57 வயதான நபர் ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு ( Bushra Bibi) 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனினும், அந்த வழக்குகள் அரசியல் பழிவாங்கல் காரணமாக தொடரப்பட்டிருப்பதாக இம்ரான் கான் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தண்டனையை எதிர்த்து இம்ரான் கான் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், மற்ற வழக்குகளில் பிணை கிடைக்கவில்லை.

இதற்கிடையே, அரச இரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கான் மற்றும் அவரது உதவியாளர் ஷா முகமது குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று (30) நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இன்று மேலும் ஒரு ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்த போது, அவருக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் கிடைத்த பரிசுப்பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதன்போது, இருவருக்கும் தலா 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் இருவரும் 10 ஆண்டுகளுக்கு அரச பதவிகளை வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு எத்தனையாம் இடம்..?

Transparency International நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 115 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

 

0 (அதிக ஊழல்) – 100 (ஊழலற்ற நாடு) எனும் அளவில் நாடுகளை மதிப்பீடு செய்து Transparency International நாடுகளை தரப்படுத்துகின்றது.

 

இந்த பட்டியலில் 180 நாடுகள் தரப்படுத்தப்படுகின்றன.

 

இந்த பட்டியலுக்கு அமைய, இலங்கை 2023 ஆம் ஆண்டு 115 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இலங்கை 117 ஆவது இடத்தில் இருந்தது.

 

இலங்கையுடன் ஈக்வடோர் , இந்தோனேஷியா , மலாவி, பிலிப்பைன்ஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் 115 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளன.

 

ஊழலற்ற நாடாக டென்மார்க் முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, பின்லாந்து, நியூசிலாந்து, நோர்வே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன.

 

சோமாலியா, வெனிசுலா, சிரியா, தெற்கு சூடான் மற்றும் ஏமன் ஆகியவை குறியீட்டில் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.

 

நீதித்துறை பலவீனப்படுத்தப்படல், அரச அதிகாரிகளிடம் பொறுப்புக்கூறல் குறைதல் என்பன ஊழல் அதிகரிக்க காரணமாகவுள்ளதாக Transparency International சுட்டிக்காட்டியுள்ளது.

வற் வரியை குறைக்குமாறு கோரி வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவது வீண் செயல் -அமைச்சர் பந்துல குணவர்தன

வெட் வரியை குறைக்குமாறு கோரி வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவது வீண் செயல் எனவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் குழுக்கள் அவ்வாறு செய்யாமல் பொருத்தமான மாற்று வழிகளை முன்வைக்க வேண்டும் எனவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிப்பணம் அத்தியாவசிய கொடுப்பனவுகள் மற்றும் அரச ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாந்தனை நாட்டிற்கு அழைத்துவருவது தொடர்பில் நடிவடிக்கை – சாந்தனின் தாயாரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

 

அதன்போது சாந்தனின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று(30)சந்தித்து, சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.

 

அத்தோடு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காரணமாக தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தாயார் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு அமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாந்தனை நாட்டிற்கு அழைத்துவருவது தொடர்பில் நடிவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

 

இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கற்கைநெறிகள் விரைவில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

அறிவு மற்றும் பண்பு மிக்க சமூகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த பட்டப் படிப்பு பிரிவின் புதிய கட்டிடத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

2019 ஆம் ஆண்டில் இந்த கட்டிட நிர்மாணத்திற்கு அடிக்கல் நடுவதற்கு பிரதமராக வந்திருந்தேன். இன்று கட்டிடத்தைத் திறப்பதற்கு ஜனாதிபதியாக வந்துள்ளேன். கொரோனா தொற்று பரவலால் இந்த கட்டிட நிர்மாண பணிகள் தாமதமாகியிருந்தன.

 

கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான கற்கை நெறிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.

 

தொழில்நுட்ப யுகம் ஒரே இடத்தில் ஸ்தம்பித்து நிற்காது. வரலாற்றில் இருந்த அணுகுமுறைகள் இன்று வேறுவிதமாக வளர்ச்சியடைந்துள்ளன.

 

தொழில்நுட்ப யுகத்தின் தேவைக்கேற்ப இலங்கையில் கல்வி முறையை வலுப்படுத்துவோம்.

 

அறிவு மற்றும் பண்புமிக்க சமூகத்தின் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நெல் கொள்வனவு செய்ய தனியாருக்கு அனுமதி – கிளிநொச்சி விவசாயிகள் விசனம்!

நெல் சந்தைப்படுத்தல் சபையை விடுத்து தனியாருக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு அனுமதிப்பது என்பது தொடர்பான விவசாய அமைச்சரின் கருத்தானது மனவேதனையளிப்பதாக இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் இந்த காலபோக செய்கையில்,

 

“விளைச்சலில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்ட நிலையில் அரசாங்கத்திடம் இழப்பீடு கேட்டு நிற்கின்ற நேரத்தில் அரசாங்கம் நெல்லையும் கொள்வனவு செய்யாது தனியாருக்கு வழங்கினால், தனியார் நினைத்த விலையில் கொள்வனவு செய்வார்கள்.

 

அத்துடன், தனியார் இன்னும் குறைந்த விலையில் நெல்லை கொள்வனவு செய்வார்கள். இதன் காரணமாக விவசாயிகளே பாதிக்கப்படுவார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

மருத்துவமனைக்குள் நுழைந்து மூன்று பாலஸ்தீனிய இளைஞர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய படையினர் !

மருத்துவமனை பணியாளர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய படையினர் மேற்குகரையில் மருத்துவமனையொன்றிற்குள் நுழைந்து மூவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

Israel’s war on Gaza live: Israeli forces kill 3 in West Bank hospital | Israel War on Gaza News | Al Jazeera

மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள இபின் சின மருத்துவமனைக்குள் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் போல நுழைந்த இஸ்ரேலிய படையினர் மூன்று பாலஸ்தீனிய இளைஞர்களை சுட்டுக்கொன்றனர் என இஸ்ரேலிய பாலஸ்தீன தகவல்கள் தெரிவித்துள்ளன.

தாதிமார்கள் ஹிஜாப்அணிந்த பெண்கள் மருத்துவர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய விசேட படைப்பிரிவினர் மருத்துவமனைக்குள் நுழைவதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன.

ஒருவர் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு செல்கின்றார் மற்றுமொருவர் குழந்தைகள் நாற்காலியுடன் காணப்படுகின்றார்.

மருத்துவமனைகள் நுழைந்த இஸ்ரேலிய படையினர் பின்னர் ஒவ்வொருவராக மூன்றாவது தளத்திற்கு சென்று இரண்டு இளைஞர்களை கொலை செய்தனர் என மருத்துவமனைக்குள் காணப்பட்டவர்களை மேற்கோள்காட்டி பாலஸ்தீன அரச செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பை சேர்ந்தவர்களே கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் குறிப்பிடத்தக்க பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்ட மருத்துவமனைக்குள் மறைந்திருந்த  முகமட் ஜலாம்னே என்பவரே கொல்லப்பட்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினர் மீதான தாக்குதல்கள் உட்பட பலதாக்குதல்களில் ஈடுபட்டுள்ள ஜெனின் பட்டாலியனை சேர்ந்த ஜெனின் முகாமை சேர்ந்த முகமட் அல் கஜாவியும் அவரது சகோதரரும் கொல்லப்பட்டனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

31,000 போதை மாத்திரைகளுடன் மன்னாரில் இளைஞர் ஒருவர் கைது !

மன்னார் – சௌத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை ஒன்றில் இருந்து போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடம் இருந்து 31,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தாய் ,தந்தை இருவருக்கும் இடையில் தகராறு – தற்கொலை செய்து கொண்ட சிறுமி !

பதுளை – புவக்கொடமுல்ல பிரதேசத்தில் தாய் ,தந்தை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலுக்குள்ளான மகள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் 16 வயதுடைய தரம் 11 இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவியாவார்.

இவர் தனது மேலதிக வகுப்புகளுக்கு பெற்றோரிடம் பணம் கோரிய நிலையில் இது தொடர்பில் தாய் மற்றும் தந்தைக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பெற்றோரின் தகராறில் மன உளைச்சலுக்குள்ளான மகள் அதிகளவிலான மருந்துகளை உட்கொண்டுள்ளார்.

இந்நிலையில் திடீரென சுகயீனமடைந்த மகளை அவரது தந்தை பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

மகளை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் இரத்த அழுத்த மருந்துகளை அதிகளவில் பருகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.