”எனது மனதின் வேதனை ஒன்றை இங்கு நான் கூறியாக வேண்டும். இது எனது வேதனை மட்டுமல்ல இலங்கை வாழ்மக்களின்பால் மானசீகமாகவே அக்கறை கொண்டவர்களின் வேதனையும் தான். கடந்த 30 ஆண்டுகளின் அவலங்களுக்கும் தேக்கத்திற்கும் பின்னரும் எந்த அரசியல் நடவடிக்கைகள் இந்த இழிநிலைக்கு எமது நாட்டை இட்டுச் சென்றனவோ, அதே பாதையில்த்தான் இப்போதும் செல்வதுபோல் தெரிகிறது. அதே ஓட்டை விழுந்த கப்பலில்தான் அரசியல் பயணங்கள் தொடர்வதுபோல் தெரிகிறது. அப்படியானால் எம் இனிய மக்களுக்கு என்றுமே விமோசனம் இல்லையா? என கேட்கத் தோன்றுகிறது? இந்த நிலைமையை இந்த நிகழ்ச்சி (சுவிஸில் இடம்பெற்ற தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு.) ஓரளவாவது மாற்றியமைக்க வேண்டும். வாயளவில் அல்லாது செயலளவில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் வேண்டும். ஒரு புதிய பரிணாமம், ஒரு புதிய பாதை திறக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். போர் முடிவுற்ற சூழ்நிலையில் நாம் சரியாகப் பயணிக்க வேண்டும் என்பதே இலங்கை மக்கள் அனைவரது சுபீட்சத்திலும் அக்கறை கொண்டவர்களின் ஆதங்கமாகும்.”
வரதகுமார் – நிறைவேற்று செயலர். தமிழர் தகவல் நடுவம் மீட்சி: இதழ் 13, நவம்பர் 2009
”Role of Diaspora in renewing hope and rebuilding lives of the war affected communities in Sri Lanka: Some thoughts and Action. – இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வை மீள்கட்டமைப்பதிலும், மீள நம்பிக்கையூட்டுவதிலும் புலம்பெயர்ந்தவர்களின் பாத்திரம்: சில சிந்தனைகளும் செயற்பாடுகளும்” என்ற தலைப்பிலான சந்திப்பு ஒன்றினை தமிழர் தகவல் நடுவம் ஒக்ரோபர் 02 2010ல் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் சமூகங்களைச் சேர்ந்த கல்வியியலாளர்களும் மனித உரிமைவாதிகளும் கலந்துகொள்கின்றனர். இவர்கள் செப்ரம்பர் 25 2010 முதல் ”Post-war challenges facing Tamil speaking peoples of Sri Lanka. – இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் போருக்குப் பின் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில் பலசுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட தகவலுடன் இந்த அழைப்பை விடுத்துள்ள தமிழர் தகவல் நடுவம் இதனை தாங்கள் மேற்கொள்ளளும் பல்வேறு முன்முயற்சிகளில் ஒன்று என்று மட்டும் குறிப்பிட்டு உள்ளது. தமிழர் தகவல் நடுவம் கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வந்தபோதும் மே 18 2009ற்குப் பின் முரண்பட்ட அரசியல் சக்திகளையும் உள்வாங்கி செயற்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி வருகின்றது. இதுவிடயத்தில் பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அவை காத்திரமான பலனை அளிக்கவில்லை என்பதே உண்மை. ஆனாலும் உரையாடுவதும் விவாதிப்பதும் ஆரோக்கியமானதே. அதற்கான தளத்தை தமிழர் தகவல் நடுவம் பேணி வருகின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து தமிழர் தகவல் நடுவம் அதனுடன் தன்னையும் பின்னிப் பிணைத்து வந்துள்ளது. அதனால் தமிழர் தகவல் நடுவம் பற்றிய ஆய்வும் மதிப்பீடும் அவசியமானது. ஆனால் இக்கட்டுரையானது தமிழர் தகவல் நடுவத்தின் அண்மைக் காலத்தைய சில நடவடிக்கைகளை மட்டுமே கவனத்திற்கொள்கிறது.
செப்ரம்பர் 25, 2010 முதல் நடாதத்தப்படுகின்ற சந்திப்பு தமிழர் தகவல் நடுவத்தின் பல்வேறு முன்முயற்சிகளில் ஒன்றல்ல. இது குறிப்பாக சூரிச் இல் 2009 நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெற்ற தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் சந்திப்பின் தொடர்ச்சியே. அக்கூட்டத்தின் மறைமுகமான நிகழ்ச்சி நிரல் மேற்கத்தைய அரசுகளின் ‘ரெஜீம் சேன்ஜ்’யை மையப்படுத்தியே இருந்தது. ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சியை மாற்றியமைப்பதன் பின்னணியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்காக தமிழ்பேசும் சமூகங்களை ஒருகட்டமைப்பினுள் கொண்டு வந்து ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக நிறுத்த முற்பட்டனர். ஆனால் தமிழ்பேசும் சமூகங்களின் பிரதிநிதிகளை குறைந்தபட்ச புரிந்துணர்வு ஒன்றுக்கு கொண்டு வந்து அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுப்பது என்பது வெளிப்படையான நிகழ்ச்சி நிரலாக தமிழர் தகவல் நடுவத்தினால் முன்வைக்கப்பட்டது.
இந்த மாநாட்டுக்கு ஏற்பட்ட 100 000 பவுண் வரையான செலவையும் – ”இதனை நடாத்துவதற்கான பெரும்பாலான செலவினை சுவிஸ் அரசாங்கமும், IWGயும், Essex பல்கலைக்கழகத்தின் மனித உரிமை மையமும் பகிர்ந்து கொண்டன” என வி வரதகுமார் தங்கள் உத்தியோகபூர்வ ஏடான மீட்சியில் தெரிவித்து இருந்தார். International Working Group on Sri Lanka என்ற அமைப்பே இம்மாநாட்டை ஒழுங்கு செய்வதாகவும் Initative on Conflict Prevention through Quiet Diplomacy, தமிழர் தகவல் நடுவம் ஆகியனவே இம்மாநாட்டின் ஏற்பாடுகளைச் செய்வதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
சூரிச் மாநாடு மாநாடு பற்றிய மேலதிக வாசிப்பிற்கு:
லண்டனில்? சூரிச்சில்? இரகசிய மாநாடு??
தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்
தமிழ் பேசும் கட்சிகளின் திசைமாறிய மாநாடு : த ஜெயபாலன்
நடந்தது என்ன? சூரிச் மாநாடும் எழுந்த விமர்சனங்களும்! : மீட்சி
கடந்த ஆண்டு நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெற்ற சூரிச் மாநாடு பற்றி வி வரதகுமார் வருமாறு தெரிவித்து இருந்தார். ”பங்குபெற்றோர் யாவரும் ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றிக்காக ஒற்றுமையுடனும், ஒன்றுபட்ட நோக்குடனும் உழைப்பது என உறுதி பூண்டனர். தம்மிடையே பேசி முக்கியமான விளக்கங்களைப் பெற்று ஒரு பொது நோக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அத்துடன் தமிழ் பேசும் மக்கள் ஒரு சமாதானமான செழிப்பான சமூகமாக உருவாவதற்குத் தேவையான அவர்களது உரிமைகளை பெறவதற்காகத் தொடர்ந்தும் இப்டியான கலந்துரையாடலில் பங்கெடுத்துக் கொள்வதெனத் தீர்மானம் எடுத்துக் கொண்டனர்.”
ஆனால் அடுத்த ஒரு ஆண்டுக்குள் அவ்வாறான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ள தமிழர் தகவல் நடுவம் முன்னைய சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு இவ்வாறான ஒரு கலந்துரையாடல் இடம்பெறுவதை அறிவிக்கவில்லை. இதுதொடர்பாக இலங்கையில் உள்ள தமிழ்பேசும் சமூகங்களின் அரசியல் கட்சிகளோடு தேசம்நெற் தொடர்புகொண்ட போது அவர்கள் இதுபற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை.
இப்போதைய கலந்துரையாடல் ‘Post-war challenges facing Tamil speaking peoples of Sri Lanka.- இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் போருக்குப் பின் எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற அடிப்படையில் இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலுக்கு இலங்கையில் இருந்தும் இலங்கைக்கு வெளியே இருந்தும் கல்வியியலாளர்களும் மனித உரிமைவாதிகளும் அழைக்கப்பட்டு உள்ளனர். சந்திரஹாசன், பாக்கியசோதி சரவணமுத்து, சீலன் கதிர்காமர், ராஜன் பிலிப்ஸ், பேராசிரியர் சிற்றம்பலம் உட்பட இன்னும் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்துள்ளர். இவர்கள் பெரும்பாலும் மனித உரிமைகள் அமைப்புகள் உட்பட்ட அரசுசாரா பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இக்கலந்துரையாடலும் முன்னைய சூரிச் மாநாடு போன்று பெரும் நிதிப் பங்களிப்பின்றி மேற்கொண்டிருக்க முடியாதாகையால் தமிழர் தகவல் நடுவம் இச்சந்திப்பின் பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டுமே இச்சந்திப்புக்களின் உண்மையான நோக்கங்களை தமிழ் மக்கள் அறிந்துகொள்ள முடியும்.
தமிழர் தகவல் நடுவம் எப்போதும் அரசு மற்றும் கட்சிகள் பொது அமைப்புகளிடம் திறந்த கொள்கையையும் வெளிப்படைத் தன்மையையும் வலியுறுத்தி வருகின்றது. ஆனால் இவற்றை தமிழர் தகவல் நடுவம் கடைப்பிடிப்பதில் எப்போதும் தயக்கம் காட்டியே வந்துள்ளது. சூரிச் மாநாட்டிலும் அதில் கலந்துகொண்ட கட்சிகள் தேசம்நெற் இணையத்தைப் பாரத்தே அம்மாநாடு பற்றிய உள் தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டி இருந்தது.
புலம்பெயர்ந்த மக்கள் இலங்கையின் அரசியல் நடவடிக்கைகளில் எழுந்தமானமாக நேரடியாக ஈடுபடுவதை எப்போதும் விமர்சிக்கும் தமிழர் தகவல் நடுவம், அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடாகவே புலம்பெயர்ந்த தமிழர்கள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள் நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமிழ் அரசியல் பிரதிநிதிகளை கீழ்மைப்படுத்தும் என்றும் தமிழர் தகவல் நடுவம் தெரிவித்து வந்துள்ளது. ஆனால் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் முக்கிய சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளும் தமிழர் தகவல் நடுவம் அது பற்றி எவ்விதமான விடயத்தையும் இதுதொடர்பாக மாநாட்டை மேற்கொண்ட தமிழ் கட்சிகளுக்கு அறிவிக்கவில்லை.
தமிழர் தகவல் நடுவம் பற்றிய சந்தேகப் பார்வையும் நம்பிக்கையின்மையும் ஏற்படுவதற்கு இவ்வாறான இறுக்கமான மூடிய வெளிப்படையற்ற நகர்வுகளே காரணமாக இருந்துள்ளது. அதனாலேயே சூரிச் மாநாட்டில் தமிழர் தகவல் நடுவத்தினால் குறிப்பாக எதனையும் சாதிக்க முடியவில்லை. இப்போது சூரிச் மாநாடு கிடப்பில் போடப்பட்டு லண்டன் மாநாடு. இதுவே கடந்த காலங்களில் தமிழர் தகவல் நடுவத்தின் செயற்பாட்டு போக்காக இருந்து வருகின்றது.
2009 மே 18க்குப் பின் தமிழர் தகவல் நடுவம் வேறு வேறு முயற்சிகளில் இறங்கியது. அதற்காக வேறு வேறு சந்திப்புக்களையும் ஏற்பாடு செய்தது. இந்த சந்திப்புக்களின் நோக்கங்களில் அரசியல் ரீதியான முரண்பட்ட நலன்களும் இருந்தது. அப்படி இருக்கையில் ஒரே குழுவில் செயற்பட்டவர்களுக்கு இடையேயே ஒளிவுமறைவுகள் மலிந்து காணப்பட்டது. அதனால் தமிழர் தகவல் நடுவத்தினை எல்லோரும் சந்தேகப் பார்வையுடன் பார்க்கின்ற நிலை உருவானது.
தமிழ் மக்களிடையே புரிந்தணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அரசியல் ரீதியாக முரண்பட்டவர்கள் அனைவரையும் அழைத்து ஒரு சந்திப்பு நடந்து கொண்டு இருக்கும்; அதே நேரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மட்டும் அழைத்து மற்றும்மொரு சந்திப்பு தனியாக நடைபெறும். பின்னர் இவர்கள் அனைவருக்கும் எதுவும் தெரியாத வகையில் அரசசார்பற்ற அமைப்புகளை வரவழைத்து மற்றுமொரு சந்திப்பு நடைபெறும். தமிழர் தகவல் நடுவம் தன்னுடைய தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப தமிழ் அரசியல் ஆர்வலர்களை பிரித்தாளுகின்ற தந்திரத்தை நீண்ட நாட்களாகவே கொண்டுள்ளது. தமிழர் தகவல் நடுவத்தின் சில கூட்டங்களுக்கு தொடர்ச்சியாகச் செல்லும் ஒருவர் இதனை மிக இலகுவில் கண்டுகொள்ள முடியும். இது தமிழர் தகவல் நடுவத்தின் மிகப் பெரும் பலவீனமாகவும் தமிழர் தகவல் நடுவத்தினால் எதனையும் முழுமையாகச் சாதிக்க முடியாமல் போவதற்கான காரணமாகவும் உள்ளது.
இக்கட்டுரையில் ஆரம்பத்திலேயே வி வரதகுமாருடைய குறிப்பில் உள்ள ”கடந்த 30 ஆண்டுகளின் அவலங்களுக்கும் தேக்கத்திற்கும் பின்னரும் எந்த அரசியல் நடவடிக்கைகள் இந்த இழிநிலைக்கு எமது நாட்டை இட்டுச் சென்றனவோ, அதே பாதையில்த்தான் இப்போதும் செல்வதுபோல் தெரிகிறது. அதே ஓட்டை விழுந்த கப்பலில்தான் அரசியல் பயணங்கள் தொடர்வதுபோல் தெரிகிறது.” என்ற குறிப்பு தமிழர் தகவல் நடுவத்திற்கும் மிகப் பொருத்தமானதே. இந்த ஓட்டை வீழ்ந்த கப்பலில் சூரிச் என்றும் லண்டன் என்றும் வி வரதகுமார் நீண்ட காலம் பயணிக்க முடியாது. இந்தக் கப்பலை நம்பியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட முக்கிய போராளிகள் காத்திருந்ததாக தன்னை வெளிப்படுத்த விரும்பாத முக்கிய அரசியல்வாதி ஒருவர் சூரிச் மாநாட்டில் சந்தித்த போது தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். ஆகவே தமிழர் தகவல் நடுவத்தின் கடந்த 30 ஆண்டுகால அரசியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதில் உள்ள ஓட்டைகள் அடைக்க முடிந்தால் அடைக்கப்பட வேண்டும். முடியாத நிலையில் அக்கப்பல் மூழ்குவது தவிர்க்க முடியாதது.