26

26

யாழ். மாவட்டத்தில் விவாகரத்து கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!

யாழ்ப்பாண மாவட்டத்தில் விவாகரத்து கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நீதிமன்ற புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாண்டில் மட்டும் 46 பேர் விவாகரத்து கோரி யாழ்.நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் 123 பேர் விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்திருந்ததாகவும், முப்பது வயதிற்குட்பட்ட இளம் தம்பதியினரே இவ்வாறு விவாகரத்து கோரி நீதிமன்றங்களில் வழக்குகளை தொடர்ந்துள்ளதாகவும் நீதிமன்ற புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

புரிந்துணர்வின்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையின்மை, பொருளாதாரப் பிரச்சினைகள், என்பனவே யாழ் மாவட்டத்தில் விவாகரத்து அதிகரிப்பதற்கான காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விவாகரத்து கோரும் தம்பதிகள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்த நீதிமன்றங்கள் முயல்கின்ற போதும் விவாகரத்துக் கோருவதில் பலர் பிடிவாதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு விவாகரத்துக் கோருபவர்களில் அரசாங்க ஊழியர்களே அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாண சமூகத்தின் மத்தியில் பலருக்கு இணக்கமான குடும்பவாழ்வு இல்லாத நிலை தோன்றியுள்ளதாகவும் சில சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். வயதான தம்பதிகள் மத்தியில் இவ்வாறான முரண்பாடுகள் தோன்றுவதாகவும் ஆனால், தங்களின் பிள்ளைகளின் நலன்குறித்த எண்ணத்தினாலும், சமூகத்திற்கு பயந்த நிலையிலும் விவாகரத்தை நாடாமல் போலியான குடும்ப வாழ்க்கையை அவர்கள் நடத்துவதாகவும் சமூகவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு.

ஐக்கிய தேசியக்கட்சியின் பட்டியலில் போட்டியிட்டு தற்போது அரசாங்கத்தின் பக்கம் தாவியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறீரங்கா தமக்கு வாக்களித்த ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களை ஏமாற்றிட்டார் எனவும், அவருக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்குமிடையில் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிறீரங்காவுடனான உடன்பாடுகள் அனைத்தும் ரத்துச் செய்ய்பட்டுள்ளதாகவும் சிறிரங்கா எடுக்கும் தீர்மானங்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சி ஒருபோதும் தடையாக இருக்காது எனவும், இதே நேரம் அவரது தனிப்பட்ட தீர்மானங்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சி பொறுப்பேற்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீரங்கா கொழும்பைத் தளமாக் கொண்ட தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் ‘மின்னல்’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் என்பதும் கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் ஐக்கியதேசியக்கட்சி பட்டியலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்படத்தக்கது.

மன்னார் நாகதாழ்வுப் பகுதியில் மக்கள் மீள்குடியமர அனுமதி.

மன்னார் நாகதாழ்வுப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேசச் செயலர் பிரிவுக்குட்பட்ட நாகதாழ்வுப் பகுதியில் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக 1985 ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேறத் தொடங்கினர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் மன்னார் நகர் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் வசித்து வந்தனர்.

இவ்வாறு தங்கியிருந்தவர்களில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கான தற்காலிக இருப்பிடங்களை மன்னார் வாழ்வோதயம் அமைப்பும், வீட்டுப்பாவனைப் பொருட்களை ஐ.நாவின் உயர்ஸ்தானிகராலய பணிமனையும்; வழங்கின. இவர்களுக்கு அறுமாதகால உலருணவுப்பொருட்களை வழங்க பிரதேசச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னிப் பாடசாலைகளுக்கு தளபாடங்களை வழங்க நடவடிக்கை.

வன்னிப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கும் பாடசாலைகளுக்கு அடுத்தவாரம் புதிய தளபாடங்கள் வழங்கப்படும் என மாகாணக் கல்விப்பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளவும் இயங்கத் தொடங்கியுள்ள பாடசாலைகளில் தளபாடப் பற்றாக்குறைகள் காரணமாக மாணவர்கள் நிலத்தில் அமர்ந்து கற்றலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இப்பாடசாலைகளுக்கு தளபாடங்களை பெற்றுக்கொடுப்பதில் ஆளுநர் துரித கதியில் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அடுத்த வாரமளவில் இத்தளபாடங்கள் வலையக் கல்விப்பணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சரத்பொன்கோவுடன் கைதான நால்வர் விடுதலை.

அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுடன் கைது செய்யப்பட்ட நால்வர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் மூவர் மற்றும் ஒரு ஊடகவியலாளர் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை இவர்களை விடுதலை செய்தது.

மேஜர் ஜெனரல் உபாலி எதிரிசிங்க, மேஜர் ஜெனரல் சுனில் சில்வா, பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிவலன ஆகிய முன்று இராணுவ அதிகாரிகளும். ஊடகவியலாளர் றுவான் வீரக்கோன் ஆகிய முவருமே சரத் பொன்சோகாவுட்ன இணைந்து அரசாங்கத்தைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டவர்களாவர்.

லண்டன் தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த கலைவிழா

Selvarajah_Nஇலண்டன் ஆங்கிலோ தமிழ்ச் சங்கம் 21 ஆண்டுகளாக நடத்திவரும் வடக்கு லண்டன் தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த கலைவிழா நேற்று 25.09.2010 என்பீல்டில் நடைபெற்றது. லீவலி உயர் தர பாடசாலையில் (Leavalley High School Hall, Bullsmoor Lane, Enfield EN3 6TW) 25.09.2010 சனிக்கிழமை மாலை 5.30முதல் இரவு 10.30 வரை நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக, நூலகவியலாளர் திரு என்.செல்வராஜா கலந்துகொண்டார்.

பேச்சு, கவிதை, வாய்ப்பாட்டு. நடனம், விசைப்பலகை, மிருதங்கம், வயலின், நாடகம், தனி நடிப்பு, மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து வழங்கும் வாத்திய இசை நிகழ்ச்சி என்பன கலைவிழாவில் நடைபெற்றன.

தமிழர் மேம்பாட்டுப் பேரவையினர் நடத்தும் வருடாந்த தமிழ் மொழிப் பரீட்சையில் அதி உயர் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் அன்றையதினம் நடைபெற்றது.

இலண்டன் ஆங்கிலோ தமிழ்ச் சங்கத்தின் தலைவராக திரு.க.புவனேந்திரனும், உபதலைவராக திரு.க.மதிசூடியும், செயலாளராக திருமதி சந்திரா இரவீந்திரகுமார் அவர்களும், உப செயலாளராக திருமதி தி.குணரத்தினம் அவர்களும் இயங்கி வருகின்றனர்.

தேசிய தலைவரொருவர் மூன்றிலிரண்டுக்கும் கூடுதலான பெரும்பான்மையைப் பெறுவது அரிதாகவே இடம்பெறும் – பான் கீ மூன்

mainpic1.jpgஇலங்கைக்கு எதிரான குற்றச் சாட்டுகளை விசாரணை செய்யும் சட்ட ரீதியான அதிகாரம் எதுவும் தமது நிபுணர் குழுவுக்குக் கிடையாதென்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பின்போதே பான் கீ மூன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையுடனான எதர்கால உறவு எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றியே நிபுணர் குழு தமக்கு ஆலோசனை வழங்கு மென்றும், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அதிகாரம் எதுவும் அதற்குக் கிடையாதென்றும் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் லுசியன் ராஜகருணாநாயக்க நியூயோர்க்கிலிருந்து தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்துவதற்காக மேற்கொண்ட துரித நடவடிக்கைகளை ஐ. நா. செயலாளர் பாராட்டியதுடன், புலிகள் இயக்கத்தினரால் பல தசாப்தங்களாகப் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்குப் புனர்வாழ்வளிக்க மேற் கொண்ட நடவடிக்கைகளையும் பான் கீ மூன் பாராட்டியுள்ளார்.

புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிருத்தி இலக்கை அடைவதற்கான முன்னேற்றத்தையும் அதற்கான செயற்பாடுகளையும் அவர் பாராட்டியுள்ளார். அரசியல் தீர்வு, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறும் தன்மை ஆகிய விடயங்கள் குறித்தும் ஜனாதிபதிக்கும் ஐ. நா. செயலாளருக்குமிடையிலான சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நீண்ட நாளைய முரண்பாடுகளுக்கான காரணத்தையும் அவை மீண்டும் ஏற்படாதிருப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிவதற்காக பொறுப்புக் கூறும் தன்மையின் கொள்கைகளுக்கு அமைவாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷ அந்தக் குழு முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று ஆணைக்கு விசாரணை மேற்கொண்டமை குறித்தும் ஜனாதிபதி விபரித்துள்ளார். இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குமான தகவல்களை எந்தத் தனி நபரோ அல்லது அமைப்போ கொண்டிருந்தால் அதனைச் செவிமடுப்பதற்கு ஆணைக்குழு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிப்பதற்காக நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இக்குழு தனது இடைக்கால அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். புலிகள் தோற்கடிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களில் 90% மீள்குடியேற்றம் நிறைவடைந்துள்ளதுடன், யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் சமூக, பொருளாதார அபிவிருத்தியில் ஐ. நா. சபையும் அதன் முகவர் அமைப்புகளும் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இரண்டு தேர்தல்களிலும் ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ள வெற்றி குறித்து ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல் ஸ்திரத்தன்மையின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடு சிறந்த இலக்கை அடையுமென்று தெரிவித்துள்ளதுடன் தேசிய தலைவரொருவர் மூன்றிலிரண்டுக்கும் கூடுதலான பெரும்பான்மையைப் பெறுவது அரிதாகவே இடம்பெறும் எனவும் இதனை ஜனாதிபதி பெற்றிருப்பது அவரது தலைமைத்துவ தகைமைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘லயன்’களை இடித்து தரைமட்டமாக்கி கிராமங்களை உருவாக்கும் திட்டம்

sri-lanka.jpgமலையகப் பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் ‘லயன்’ வரிசைக் குடியிருப்புகளை இடித்தழித்துவிட்டுத் தனித் தனி வீடுகளைக் கொண்ட கிராமங்களை அமைப்பதற்கு விரைவில் அடித்தளமிடப் படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார். இந்தியா வழங்கும் ஆறாயிரம் வீடுகளைக் கொண்டு, ‘லயன்’ குடியிருப்புகளைத் தரைமட்ட மாக்கிவிட்டுத் தனித் தனி வீடுகளைக் கொண்ட கிராமம் உருவாக்கப்படுமென்று பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வருட இறுதிக்குள் இதற்கான அத்திவாரம் இடப்படுமென்றும் மூன்றாண்டுகளுக்குள் ஆறாயிரம் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு விடுமென்றும் பிரதியமைச்சர் கூறினார். தோட்டங்களில் கிராமங்களை அமைப்பதற்காகத் தொழி லாளர்களின் ‘லயன்’ வரிசை குடியிருப்புகள் தொடர்பான மதிப்பீடொன்றை மேற்கொள்வதாகத் தெரிவித்த பிரதியமைச்சர், முதற் கட்டமாக எந்தத் தோட்டத்தில் எத்தனை வீடுகள் அமைக்கப்படும் என்பதைப் பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

‘தேயிலைத் தோட்டத் தொழிற்துறை படிப்படியாக நலிவடைந்து வருகிறது. இலங்கையிலும் இதே நிலைதான்.  இன்னும் பதினைந்து ஆண்டுகளில் தோட்டத் தொழில் அருகி விடக்கூடும். அதற்கு முகங் கொடுக்கும் வகையில் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை, வாழ்வாதாரம் என்பவற்றில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்றார்.