இக்கடிதம் தேசம்நெற் இணையத்தின் கருத்தக்களம் பகுதியில் பதிவிடப்பட்டு உள்ளது. அகதி என்ற பெயரில் இக்கடிதத்தைப் பதிவிட்டுள்ள கருத்தாளர் தான் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வாழ்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இக்கருத்தாளர் பற்றிய எவ்வித விபரமும் தேசம்நெற் ஆசிரியர் குழுவினருக்குத் தெரியாது. ஆனாலும் அவர் வெளிக்கொண்டுவர விரும்பும் சிறப்புமுகாம் – சிறைமுகாம் அவலம் கருதி இக்கடிதத்தை தேசம்நெற் பிரசுரிக்கிறது.
தமிழகத்தின் சிறப்புமுகாம்கள் பற்றி அம்முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த எஸ் பாலச்சந்திரன் தேசம் சஞ்சிகையின் 16வது இதழில் – 2004 ஜனவரியில் ‘சிறப்புமுகாம் மிகப்பெரும் மனித உரிமைமீறல்’ என்ற தலைப்பில்ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதி இருந்தார்.
மேலும் துறையூர் சிறப்புமுகாமில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சிவா 1994 ஒக்ரோபர் 10ல் வழங்கிய சாட்சியம் தேசம் சஞ்சிகையின் இதழ் 18ல் 2004 மேயில் ‘நாம் புதைக்கப்படுபவர்கள் அல்ல விதைக்கப்படுபவர்கள் : கூண்டிலிருந்து ஒரு குரல்’ என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது.
இவற்றினை இன்னும் சில தினங்களில் மீள்பிரசுரம் செய்கிறோம்.
தேசம்நெற்.
._._._._._.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு அப்பாவி அகதியின் இக் கடிதத்தை யாராவது இந்த “அருள” சகோதரர்களுக்கு அனுப்பி வைப்பார்களா?
சிறப்பு முகாம்
செங்கல்பட்டு
19.09.2010
மதிப்புக்குரிய அருள் சகோதரர்களே!
சதா நேரமும் ஈழத் தமிழனுக்காக மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் உங்கள் மகிமை பற்றி தெரியாமல் “தமிழரங்கம்” ரயாகரனும் “தேசம்நெற்” ஜெயபாலனும் நீங்கள் யாரோ தமிழனைக் கடத்தி காசு சம்பாதிப்பதாக எழுதியதை அறிந்து கண்ணீர் வடித்தேன். உங்கள் மொழியில் சொல்வதானால் அவர்கள் “மனநோயாளிகள்”;. உங்கள் நண்பர் நாவலன் மொழியில் சொல்வதானால் அவர்கள் “மகிந்தவின் கைக்கூலிகள்”. எனவே அவர்கள் தவறுகளை மன்னித்து தொடர்ந்தும் எங்களுக்காக குரல் கொடுங்கள். எங்களுக்கு விமோசனம் கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் அல்லவா! பாவம் ஈழத்தமிழன். அவன் இளிச்சவாயனாக இருக்கும்வரை உங்கள் போராட்டம்(!) தொடரட்டும்.
நீங்கள் ஆயிரக்கணக்கில் சம்பளம் பெறுவதையும் லட்சக்கணக்கில் வியாபாரம் செய்வதையும் பொறுக்கமுடியாத ரயாகரனும் ஜெயபாலனும் நீங்கள் செய்த கடத்தலைக் கொச்சைப் படுத்துகின்றனர். நீங்கள் குறிப்பிட்டது போன்று உண்மையில் அவர்கள் மனநோயாளிகள்தான். ஏனெனில் நீங்கள் செய்த கடத்தல் பணி எந்தளவு பெரிய “புரட்சிப்பணி” என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமா? ஒரு புறத்தில் அரச கைக்கூலியான குகநாதனுடன் வியாபாரம். மறுபுறத்தில் புலிகளின் தலைவர் பாலசிங்கத்துடன் பேட்டி. அதற்கும் மேலாக முள்ளிவாயக்காலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ்மக்களை கொன்று குவித்த இந்திய அரசை எதிர்த்து பக்கம் பக்கமாக கட்டுரை. அதே மறுபுறத்தில் இந்த கொலைகளுக்கு உதவி புரிந்த கருனாநிதி அரசின் உதவியுடன் குகநாதனை கடத்தி பணம் பறிப்பு. உங்களின் இந்த பலே கில்லாடித்தனங்களை புரிந்துகொண்டு நாவலன் போல் மாக்சியத்தின் பேரால் இதை நியாயப்படுத்தாமல் இதனை தமிழ்மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்திய ரயாகரனும் ஜெயபாலனும் உண்மையிலே உங்கள் மொழியில் மனநோயாளிகள்தான்.
தமிழ்மக்கள் தொடர்ந்து போராடினால்தான் உங்கள் கல்லா நன்றாக நிரம்பும் என்ற சின்ன “லாஜிக்” கூட புரிந்து கொள்ள முடியாமல் “தமிழ்மக்கள் தொடர்ந்தும் தமிழீழத்திற்காக போராட வேண்டும்” என்று நீங்கள் (பணம் பெற்றுக் கொண்டு) எழுதிய கட்டுரையை சிலர் சீரியஸாக எடுத்துக்கொண்டு “இதை சொல்ல உங்களுக்கு என்ன தகுதி?” என்று கேட்கின்றனர். பாவம் சின்னப் பயல்கள். உங்கள் மகத்தான பங்களிப்புகள் தெரியாமல் புலம்புகின்றனர். அவர்களையும் மன்னித்துவிடுங்கள்.
முள்ளிவாயக்காலில் பிரபாகரனுக்கு பக்கத்தில் இருந்து முழங்கிய பீரங்கியில் இருந்தது நீங்கள் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்காது.(இன்னும் பத்துவருடம் கழித்து நீங்கள் எழுதப்போகும் கதையில் உள்ள இந்த விடயம் எனக்கு எப்படி தெரிந்தது என்று அச்சரியப்பட வேண்டாம். எல்லாம் “இனியொரு”வில் வெளியான உங்களின் சில கட்டுரைகளைப் படித்த கோளாறுதான் இது.)
அதைவிட ஈழத்தமிழனுக்காக தன்னுயிரை எரித்த முத்துக்குமரனுக்கு மண்ணெண்ணையும் தீப்பெட்டியும் வாங்கிக் கொடுத்த உங்கள் மகத்தான பங்களிப்பு இவர்களுக்கு தெரிய வாயப்பில்லை. (அது சரி தமிழனுக்காக உயிரைவிட நீங்கள் என்ன முத்துக்குமார் போன்று முட்டாள் அல்லவே. நீங்கள் தமிழனை வைத்துப் பிழைக்கும் புத்திசாலிக் கூட்டம் அல்லவா.)
நீங்களும் தானும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதிவிட்டதாக உங்கள் நண்பர் நாவலன் கூறுகிறார். அது உண்மையாயின் அதில் எத்தனை கட்டுரை தமிழ்நாட்டில் உள்ள அகதிமுகாம் கொடுமைகள் குறித்து எழுதப்பட்டன என்பதை கொஞ்சம் தெரிவியுங்கள். ஏனெனில் நீங்கள் மகிந்த கொடுமைகள் குறித்து மட்டும்தான் எழுதுவீர்கள். இந்திய அரசுக்கும் அதன் உளவுப்படைகளுக்கும் பிடிக்காத விடயங்களை எழுதமாட்டீர்கள் என இங்கு சிலர் கூறுகின்றனர். அது உண்மையா சகோதரர்களே?
யுத்தம் முடிந்து இரண்டு வருடம் ஆகிறது. ஆனால் புலி எனக் குறறம்சாட்டி கைது செய்து எந்தவித விசாரணையும் இன்றி பல வருடங்களாக இந்த சிறப்பு முகாமில் பூட்டிவைத்து சித்திரவதை செய்கிறது இந்திய மத்திய மாநில அரசுகள். வன்னியில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை மகிந்த அரசு விடுதலை செய்ய வேண்டும் என எழுதியும் போராடியும் வரும் நீங்கள் தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்னும் பெயரில் அப்பாவி தமிழ் அகதிகளை அடைத்துவைத்து சித்திரவதை செய்யும் கருனாநிதி அரசுக்கு எதிராக ஏன் எழுதவும் போராடவும் தயங்குகிறீர்கள்?
நீங்கள் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் ஒரு கட்டுரை கூட இந்த சிறப்புமுகாம் அகதிகள் பற்றி இல்லையே. அது ஏன்?
குகநாதனுக்கு எதிராக உயர்நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்த நீங்கள் அதே உயர்நீதிமன்றில் இந்த சிறப்புமுகாம் கொடுமைகளுக்காக ஒரு மனு தாக்கல் செய்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை?
குகநாதனுக்கு எதிராக பல வழக்கறிஞர்கள் பொலிஸ்கமிசனர் அலுவலகம் வந்து போராடியதாக அறிகிறேன். அது உண்மையாயின் இந்த வழக்கறிஞர் கூட்டத்தை பயன்படுத்தி இந்த சிறப்புமுகாம் அகதிகளுக்காக ஒரு முறை பொலிஸ்கமிசனர் அலுவலகம் செல்வீர்களா?
இவ்வாறு எல்லாம் கேள்வி கேட்டு உங்களை தர்மசங்கடப் படுத்துவது என் நோக்கம் அல்ல. மாறாக நீங்கள் உண்மையிலே ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்க விரும்பினால் முதலில் உங்கள் நாட்டில் உங்க மத்திய மாநில அரசுகள் அகதிகளுக்கு செய்யும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுங்கள். சிறப்பு முகாம் என்னும் பெயரில் நடத்தும் சித்திரவதை முகாமை மூட வழி செய்யுங்கள். அதன்பின் மகிந்த அரசின் கொடுமைகளை தாராளமாக கண்டியுங்கள். அப்பதான் உங்களைத் தமிழ்மக்கள் நம்புவார்கள். இல்லையேல் தமிழ்மக்களின் துயரத்தில் காசு சம்பாதிக்கும் ஈனப்பிறவிகள் என்று வரலாறு உங்களைக் கூறும்.
இப்படிக்கு
உங்களின் மகத்தான போராட்டத்தால் ஈழம் கிடைக்குதோ இல்லையோ குறைந்தது சிறப்புமுகாமாவது மூடப்பட வழிபிறக்கும் என அப்பாவியாக நம்பிக்கொண்டிருக்கும் ஒரு அகதி.
சிறப்பு முகாம் – செங்கல்பட்டு.

