05

05

தமிழ் போராட்டங்கள் – ஜி20 போராட்டங்கள் போன்றவை தடை செய்யப்படலாம்!!!

Steve_O_Connellலண்டனில் இடம்பெற்ற தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் ஜி20 போன்ற பெரும்  போராட்டங்களை மெற்றோ பொலிட்டன் பொலிஸார் தடைசெய்யவதற்கான தெரிவு அவர்களுக்கு இருப்பதாக அமைச்சரவை உறுப்பினர் ஸ்ரீவ் ஓ கொன்னல் தெரிவித்துள்ளார். இவர் மெற்றோ பொலிட்டன் பொலிஸ் ஆணையகத்தின் குரொய்டன் – சட்டம் பகுதிப் பிரதிநிதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் இக்கருத்தை யூலை 22ல் இடம்பெற்ற இக்குழுவின் சந்திப்பில் வெளிப்படுத்தி இருந்தார்.

பிரித்தானியாவில் ஆட்சியில் உள்ள கொன்சவேடிவ் – லிபிரல் டெமொகிரட் கூட்டாட்சி மெற் பொலிஸ் சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு 25 வீதத்தால் குறைத்துள்ளது. அதனால் மெற் பொலிஸ் தனது சேவைகளை மட்டுப்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளது. அதனால் 7.5 மில்லியன் பவுண் செலவை ஏற்படுத்திய தமிழ் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்; ஜி20 போராட்டங்கள் என்பனவற்றை எதிர்காலத்தில் அனுமதிக்க முடியுமா என்ற ஐயம் எழுப்பப்பட்டு உள்ளது.

‘தற்போதுள்ள நெருக்கடியான  சூழலில் வாழ்பவர்களை எது முக்கியம் எனக் கேட்டால் அவர்கள் இளைஞர்களின் வன்முறை, கடத்தல், பாதுகாப்பு என்பனவே முக்கியமானது எனப் பதிலளிப்பார்கள். போராட்டங்களைக் கவனிப்பது முக்கிய பொறுப்பாக இருக்க முடியுமா?’ என்று ஸ்ரீவ் ஓ கொன்னல் கேள்வி எழுப்பி உள்ளார்.

‘நான் ஒட்டுமொத்தமாக அனைத்து போராட்டங்களையும் தடை செய்யும் நிலைப்பாட்டைக் கொள்ளவில்லை. பிரித்தானியாவில் போராட்டங்களுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு.  பெரும்பாலான போராட்டங்கள் அனுமதிக்கப்படும். ஆனால் தமிழ் மக்களின் ஜீ20 போன்ற பெரிய அளவிலான போராட்டங்களே இதனால் பாதிக்கப்படும்’ என்றும் ஸ்ரீவ் ஓ கொன்னல் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மெற் பொலிஸ் கொமிஸ்னர் சேர் போல் ஸ்ரீபன்சன் ‘பிரித்தானியாவுக்கு கருத்துச் சுதந்திரம் தொடர்பில் ஒரு பாரம்பரியம் உண்டு. லண்டனில் இடம்பெறும் போராட்டங்கள் அதில் முக்கியமானவை. இது லண்டன் நகருக்கும் பெருமை சேர்க்கின்ற விடயம்’ எனத் தெரிவித்து இருந்தார்.

சேர் போல் ஸ்ரீபன்சன் மேலும் தெரிவிக்கையில் ‘எதிர்காலத்தில் போராட்டங்களை ஏற்பாடு செய்பவர்களே அவற்றைக் கண்காணிப்பதற்கான தொண்டர்களை ஏற்பாடு செய்வதன் மூலம் பொலீஸ்க்கு ஏற்படும் செலவைத் தவிர்க்க முடியும்’ என்றார்.

ஸ்ரீவ் ஓ கொன்னலின் கருத்தை எதிர்த்த மெற் பொலிஸ் ஆணையகத்தின் தொழிற்கட்சி உறுப்பினர் வாஸ் சோகுரோஸ் ‘ஸ்ரீவ் ஓ கொன்னல்  எமது போராடும் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை கீழ்ப்படுத்தவும் பொலீஸ் வரவுசெலவுத் திட்டத்தை மேலும் 25 வீதத்தால் குறைக்கவும் சொல்கின்றாரா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

லண்டனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் மக்டோனால்ட் சாப்பிட்டார் என சண் டெய்லி மெயில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருந்தன. இதற்கு எதிராக பரமேஸ்வரன் தொடுத்த வழக்கில் நீதிமன்ற விசாரணைகள் இல்லாமலேயே இரு தரப்பினரும் உடன்பாட்டுக்கு வந்து யூலை 29ல் இரு பத்திரிகைகளும் தங்களது செய்தி தவறானது எனத் தெரிவித்தனர். இரு பத்திரிககைளும் இணைந்து 77500 நட்டஈடு வழங்கவும் உடன்பட்டனர்.

வர்த்தக முக்கியஸ்தரின் பல்கலைக்கழக இறுதியாண்டில் படிக்கும் மகன் தற்கொலை !!!

Kannan_Shanmugakumaranபிரித்தானிய தமிழ் வர்த்தகப் புள்ளியாக அறியப்பட்ட சண் என்ற சண்முககுமாரன் நவரட்ணம் அவர்களின் மகன் யூலை 23 2010ல்  தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத் துறையில் இறுதியாண்டில் கல்விகற்கும் கண்ணன் சண்முககுமாரனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவது: சண் குடும்பத்தினர் தம் வியாபார நிறுவனத்திற்கு அருகில் குடியிருந்தனர். லூட்டனில் உள்ள இவர்களின் வீட்டில் தனியாக தங்கியிருந்து மகன் கண்ணன் படித்துக் கொள்வது வழமை. தற்போது சமர் ஹொலிடே என்பதால் அப்போதும் கண்ணன் தனியாக லூட்டனில் தங்கி படித்து வந்தார். சம்பவத்திற்கு முதல்நாள் இரவு யூலை 22 சண் குடும்பத்தினர் கண்ணனை வந்து பார்த்து அவருக்கான உணவுகளை எல்லாம் தயாரித்து உணவருந்தி மகிழ்ந்து இருந்ததாக சண் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

மறுநாள் யூலை 24 அன்று லூட்டனில் உள்ள அவர்களின் வீட்டை நீண்ட காலமாகப் பராமரித்து துப்பரவு செய்யும் வெள்ளைகார வயோதிப மாது வழமைபோல் தனது கடமைகளைச் செய்யச் காலை வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கே கண்ணன் வேட்டியில் சுருக்கிட்டு மாடிப் படிக்கட்டுப் பகுதியில் தொங்கிக் கொண்டு இருந்தார். அதனைப் பார்த்துப் பயந்துபோன வயோதிப மாது அவசரசேவைக்கு உடனடியாக அழைப்பு விடுத்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும் மருத்துவப் பிரிவினரும் கண்ணனின் உடலை மருத்துவ வண்டியில் எடுத்துச் சென்றனர். பொலிஸார் கண்ணனின் லப்ரொப்பையும் மோபைல் போனையும் தடயப் பொருட்களாகக் கொண்டு சென்றனர். அதன் பின்னர் மதியம் ஒரு மனியளவில் ஃபமிலி லெய்சன் ஒபிசர்ஸ் சண் குடும்பத்திற்கு இந்த அதிர்ச்சியான துக்ககராமான செய்தியைத் தெரியப்படுத்தினர். அவர்கள் லூட்டன் வந்த போது கண்ணனின் உடல் ஏற்கனவே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இருந்தது.

தங்கள் மகனின் மிகச் சடுதியான உயிரிழப்பை ஏற்றக்கொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாத வேதனையுடள் குடும்பத்தினர் தவிப்பதை சண்னின் நண்பர் லண்டன் குரலுக்கு விபரித்தார்.

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான தற்கொலைகள் வழமையாகி வருகின்றது. பாதிக்கப்பட்ட குடும்பங்களால் இதனைப் புரிந்துகொள்ள இயலாமல் உள்ளதுடன் குடும்பத்தை நிலைகுலையச் செய்கின்றது. தற்கொலை பற்றிய விழிப்புணர்வு தமிழ் சமூகத்திற்கு மிக அவசியமாகின்றது.

முகாமைத்துவ இறுதியாண்டு மாணவனான கண்ணன் ரக்பீ விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர். தனது உடலை திடகாத்திரமாகவும் பலமாகவும் வைத்திருப்பதில் நாட்டம் உடையவர். அவரைத் தன்னையே அழிக்கும்படி தூண்டிய மனநிலைக்கு என்ன காரணம் என்பதை குடும்பத்தினராலும் நண்பர்கள் உறவுகளாலும் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

2008ல் அகிலன் கோபாலகிருஸ்ணன் தனது மருத்துவ காரணங்களால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். தங்கள் மகனின் இழப்புப் போன்று மற்றவர்களுக்கு ஏற்படுவதைத் தவிர்க்க தொலைபேசி ஆலோசனைச் சேவையை கோபாலகிருஸ்ணன் தம்பதிகள் அகிலன் நினைவாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சண் குடும்பத்தினர் மிகுந்த கடவுள் நம்பிக்கையும் கடவுள் பக்தியும் உடையவர்கள். நல்லூரில் 10ம் திருவிழாவைச் செய்து வந்த இவர்கள் ஆச்சுவே முருகன் ஆலயத்தில் 10வது திருவிழாவைச் சிறப்பாகச் செய்து வந்தனர். கண்ணனும் மிகுந்த கடவுள் பக்தி உடையவர். இறுதியில் அந்த வேட்டியிலேயே தன்னுயிரையும் முடித்துக் கொண்டார்.

இவருடைய ஓகஸ்ட் 1 2010ல் இறுதிக் கிரியைகள் ஹென்டனில் இடம்பெற்றது.

‘I am nothing. I am just a tool in the hands of God!’ அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா : பி எம் புன்னியாமீன்

Mother_Theresa_with_armless_babyகருணையின் வடிவம் என்று போற்றப்படும் அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கொல்கத்தாவில் மிஸனரிஸ் ஒப் செரிட்டி (Missionaries of Charity) தலைமையகத்தில், ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளின் சிறப்பு வழிபாட்டுடன் ஆகஸ்ட் 26. 2010ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று செப்டம்பர் மாதம் 5ம் திகதி அன்னை தெரெசாவின் 13 வது சிரார்த்த தினமாகும்.

“அன்னை தெரெசா இறைவனால் அளிக்கப்பட்ட மதிப்பிட முடியாத ஒரு கொடை. இறைவனால் வழங்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அன்பளிப்புக்காக மனித குலம் இறைவனுக்கு நன்றி சொல்லும் ஒரு ஆண்டாகவே இந்த நூற்றாண்டு விழா அமையும் என தான் நம்புவதாகவும்,  தனது வாழ்நாள் முழுவதும் அன்போடு மக்களுக்கு அயராத உழைப்பை அன்னை மேற்கொண்டார்”, எனவும்  புனித பாப் ஆண்டவர் பெனடிக்ட் அவர்கள் அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா ஆரம்பம் குறித்து வெளியிட்டுள்ள தனது செய்தியில் தெரிவித்திருந்தார்.

“அவரது வாழ்வும், மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகளும், தொடர்ந்து இளைஞர்கள், முதியவர்கள், ஏழை, பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தும்” என, அன்னை தெரெசாவால் ஏற்படுத்தப்பட்ட மிஸனரிஸ் ஒப் செரிட்டி அமைப்பின் தற்போதைய தலைவியான அருட்சகோதரி நிர்மலா ஜோசி
தெரிவித்திருந்தார்.

அன்னை தெரெசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய மத்திய அரசு அவரது உருவம் பொறித்த ரூபாய் 5 பெறுமதிமிக்க நாணயத்தை வெளியிட்டுள்ளது.

“ஏழை மக்களுக்கு தொண்டாற்றுவதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் அன்னை தெரெசா” என்று நாணயத்தை வெளியிட்டு பேசுகையில் இந்திய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். மேலும் ஏழைகளுக்குத் தொண்டாற்ற ஆரம்பித்தபோது தெரெசாவின் கையில் இருந்தது 5 ரூபாய் மட்டுமே. இதை நினைவுகூரும் வகையில் ஐந்து ரூபாய் நாணயத்தில் அவரது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் முகர்ஜி குறிப்பிட்டார்.

அன்னை தெரெசா குறித்த நூற்றாண்டு மலரின் முதல் பிரதியை குடியரசு ஜனாதிபதி பிரதிபா பாட்டேலிடம் முகர்ஜி கையளித்தார். “அன்னை என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர். கடவுள் அனைத்து இடங்களிலும் இருக்க முடியாது. எனவேதான் அன்னை தெரெசா போன்ற கருணை உள்ளம் கொண்டவர்களை படைத்தார். நீல கறை கொண்ட வெள்ளைப் புடவை அணிந்த அவர் மற்றும் கிறிஸ்தவ அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் பல அனாதைகளுக்கும், முதியோர்களுக்கும், வேலையில்லாதவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை அளிப்பவர்களாக திகழ்ந்தனர். அன்னை தெரெசாவின் சிறப்பான சேவைக்காக அவருக்கு 124 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் பாரத ரத்னா விருதும் அடங்கும்” என்று குடியரசு ஜனாதிபதி பிரதிபா பாட்டேல் புகழாரம் சு10ட்டினார்.

மேலும் அன்னை தெரெசாவின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட அமெரிக்கா அரசு தீர்மானித்துள்ளது. செப்டெம்பர் 5. 2010ம் திகதி இந்த தபால் தலை வெளியிடப்படுமென அமெரிக்காவின் தொடர்பாடல் அமைச்சு அறிவித்திருந்தது. அதேநேரம் உயிருடன் இருந்தபோதே இந்திய தபால் முத்திரையில் உருவம் பதிக்கப்பட்ட முதலாவது நபரும் இவரேயாவார்.

Mother_Teresa1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ஆம் தேதி, மாசிடோனியா Republic of Macedonia நாட்டின் தலைநகராக இருக்கும் ஸ்கோப் Skopje நகரில் அவர் பிறந்தார். அவரது இயற்பெயர் அக்னஸ் கோன்ஜா போயாக்யூ, Agnes Gonxha Bojaxhiu (கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் “ரோஜா அரும்பு” என்று பொருள்) அவர் பிறந்த போது ஸ்கோப் நகரம் அல்பேனியாவில் இருந்தது. 1929 ஆம் ஆண்டு அன்னை தெரெசா இந்தியாவுக்கு வந்தார். பின்பு இந்திய குடியுரிமை பெற்றார். மேற்கு வங்கத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய இவர் செப்டம்பர் 5. 1997இல் (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவில் காலமானார். அன்னை தெரெசா இறைவனடிசேரும் போது அன்னாருக்கு வயது 87.

முதுமைப் பருவத்தில் அடிக்கடி நோய்வாய்பட்ட அன்னை அவர்கள் இனி தன்னால் இத்தனைப் பெரிய பொறுப்பை ஏற்று நடத்த முடியாது என்பதை உணர்ந்தார். இளம் வயதில் அன்னையின் அன்பால் கவரப்பட்டு மதம் மாறி அவருடைய கன்னியர் சபையில் சேர்ந்த நேபாளத்தைச் சேர்ந்த அருட்சகோதரி நிர்மலா ஜோசி அவர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்து சபையின் பொறுப்புகள் முழுவதையும் அவரிடம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றின் வழியாக ஒப்படைத்தார். அவர் உருவாக்கிய மிஷனரிஸ் ஒப் செரிட்டியின் தலைமையகத்திலேயே அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நடவடிக்கையை மறைந்த போப் இரண்டாவது ஜான் பால் 2003 ஆம் ஆண்டில் முன்னெடுத்தார். அக்டோபர் 19, 2003 ல் அன்னை தெரேசாவிற்கு “அருளாளர் பட்டம்” அளிக்கப்பட்டது.

ஸ்கோப் நகரில் நிக்கல் – டிரானா போயாக்யூ தம்பதியரின் இளைய புத்திரியே அக்னஸ். இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார். 1919 இல், அரசியலிலிருந்து விலகிய அவர் நோய்வாய்ப்பட்டு, அக்னஸ{க்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார். தந்தையின் மரணத்திற்குப் பின், தாயார் அவரை ரோமன் கத்தோலிக்கராக வளர்த்து வந்தார்.

“ஜோன் கிராப்”ஸின் வரலாற்றுக் குறிப்புகளின்படி குழந்தைப் பருவத்தில் அக்னஸ் மதப்போதனையினாலும் சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன்னை அர்ப்பணிப்பதற்குத் தீர்மானித்தார். பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன் கனவை முன் வைத்த போது “சின்னவள் நீ, பக்குவமற்றவள்” என்று தாய் வழிகாட்டியுள்ளார்.

தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி, லொரேட்டோ சகோதரிகளின் சபையில் மத பிரசாரகராக தன்னை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியாவின் பள்ளிக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க லொரேட்டோ சகோதரிகள் பிரயோகிக்கும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக, அயர்லாந்தின் ரத்ஃபர்ன்ஹாமில் உள்ள லொரேட்டோ கன்னியர் மடத்திற்கு முதலில் சென்றார்.

1929 ஆம் ஆண்டு அவர் இந்தியா சென்று,  இமய மலை அருகே உள்ள டார்லிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார். மே 24.1931 இல் “வாக்குத்தத்தம்” எடுத்துக் கொண்டு அருட்சகோதரியானார். அவ்வமயம் மதபிரசாரகர்களின் காவல் புனிதரான ‘தெரேசா டி லிசியு”வின் பெயரைத் தனக்குத் தெரேசா எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். கிழக்குக் கொல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது இறைபணியை ஆரம்பித்தார். கிழக்குக் கொல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது அர்ப்பணிப்பு பிரமாணங்களை 1937 மே 14 ஆம் தேதி எடுத்துக் கொண்டார்

சுதந்திரம் பெறும் முயற்சியில் தீவிரமாக வெள்ளையர்களுடன் இந்தியர்கள் போராடி வந்த காலகட்டத்தில் நாளாந்த உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் பராமரிப்பின்றி தத்தளிப்பவர்களையும்,  நோயால் வாடுகின்றவர்களையும் நேசிக்க ஆரம்பித்தார் அன்னை தெரேசா. இந்திய நாட்டிற்கு அளப்பரிய சேவையாற்றியமைக்காக 1948 ஆம் ஆண்டு இந்தியா அரசு குடியுரிமை வழங்கியது.

பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சு10ழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமதிகமாய் கலங்கச் செய்தது. 1948 இல் ஏழைகளுடனான தனது ஊழியத்தை ஆரம்பித்தார். பாரம்பரிய லொரேட்டோவின் அங்கியைக் களைந்து,  நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் நடமாடினார்.

தொடக்கத்தில் மோதிஜில்லில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர், பட்டினியால் வாடுவோர் போன்றவர்களின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அவரது முயற்சிகள் விரைவிலேயே இந்தியப் பிரதமர் உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன.

தெரேசா தனது நாட்குறிப்பில்,  தனது முதல் வருடம் கஸ்டங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் சௌகர்யத்திற்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் எழுதியிருந்தார்.

1950 அக்டோபர் 7 ஆம் தேதி அன்னை தெரெசாவின் தலைமையில் மிஸனரிஸ் ஒப் செரிட்டி இல்லம் (Missionaries of Charity) ஸ்தாபிக்கப்பட்டது. தூய்மையான பணிக்கு எடுத்துக் காட்டாக நீல நிறக்கரையுடன் கூடிய வெள்ளை கைத்தறிச் சேலையை அணிந்தார். அன்னையுடன் முதன் முறையாக இணைந்து கொண்ட சுபாஸினிக்கு தனது இயற்பெயரைச் சு10ட்டினார். இந்தியாவின் கொல்கத்தாவில் ஏழை மக்களுக்கும், சிறார்களுக்கும் பெரும் உதவி புரிந்த அன்னை தெரெசா அங்கு ஆசிரமம் ஒன்றையும் அமைத்து செயற்பட்டார். இதில் நோயாளிகளுக்குத் தன்னாலான தொண்டுப் பணிகளை முன்னெடுத்தார்.

மிஸனரிஸ் ஒப் செரிட்டி இல்லம் (Missionaries of Charity) பிற்காலத்தில் உருவெடுக்கப் போகும் பங்குக் குழுமத்தை ஆரம்பிக்க தெரெசாவுக்கு வத்திக்கானின் அனுமதி கிடைத்தது. செரிட்டியின் கடமையாக அன்னை கூறியது, “உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள்,  வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள்,  தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும்,  கவனிக்கப் படாதவர்களெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப் பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்.” கல்கத்தாவில் 13 உறுப்பினர்களைக்  கொண்ட சிறியதொரு அமைப்பாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. இன்று 4000க்கும் மேலான அருட்சகோதிரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும்,  எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும்,  தர்ம ஸ்தாபனங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர்,  ஊனமுற்றோர்,  முதியோர்,  மது அடிமைகள், ஏழை எளியோர்,  வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்காக வியாபித்துக் காணப்படுகிறது.

கத்தோலிக்க கன்னியாஸ்திரியான அன்னை தெரெசா நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும்,  நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும்,  இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே,  முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஸனரிஸ் ஒப் செரிட்டியை விஸ்தரித்தார்.

50 ஆண்டுகள் ஏழை – எளியவர்களுக்குத் தொண்டுப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். அன்னை தெரேசாவின் அன்பின் பணியாளர் சபை, அவர் மரணத்த வேளை, 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருந்தது. இதில் எச் ஐ வி/எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள் மற்றும் இல்லங்கள்,  இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைத் திட்டங்கள்,  அனாதை இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் அடங்கும்.

1970 களுக்குள் இவர் சிறந்த பரோபகாரி எனவும் ஏழைகளுக்கும்,  ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்று உலகம் முழுவதும் புகழப்பட மேல்கம் முக்கெரிட்ஜ் இன் “சம்திங்க் பியுடிஃபுல் ஃபார் காட்” என்ற விளக்கப்படமும் ஒரு காரணமாகும் எனப்படுகிறது. அன்னையின் தொண்டூழியம் அனைத்து எல்லைகளையும் கடந்து செரிந்தது,  சிறந்தது. அதனால் அவர் உலகப் பிரஜையாக உன்னத ரதத்தில் பவனி வந்தார். அவரைப் பாராட்டாத நாடுகளில்லை, தலைவர்கள் இல்லை. அவர் பெறாத விருதுகளில்லை. அன்னை தெரெசாவின் சிறப்பான சேவைக்காக அவருக்கு சுமார் 124 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பெற்ற சில விருதுகளும் பரிசுகளும் பின்வருமாறு:

1962-ல்,  பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்ஸின் “ரமோன் மேக்சேசே” விருது.

1964-ல், மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்திருந்த போப்பாண்டவர் தாம் பயன் படுத்திய வெண்ணிறக் காரை அன்னைக்கு பரிசாக அளித்தார். அன்னை அதை ஏலத்தில் விட்டு கிடைத்த பணத்தில் கொல்கொத்தா சாந்தி நகரில் தொழுநோயாளிகளுக்கென மருத்துவ மனை ஒன்றைக் கட்டினார்.

1971-ல், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ‘Good Samaritan’ விருதும்,  ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் மனிதாபிமானத்திற்கான டாக்டர் விருதும்.

1971-ல், அருட் தந்தை ஆறாம் சின்னப்பர், சமாதானத்துக்கான முதல் அருட் தந்தை 23 ம் அருளப்பர் பரிசை,  அவரது ஏழை எளியோர் சேவையையும் கிறிஸ்துவ தர்ம பறைசாற்றலையும், சமாதான முயற்சியையும் பாராட்டி அவருக்கு அளித்தார்.

1972-ல், அமைதி விருதான “நேரு” விருது

1976-ல், விசுவ பாரதி பல்கலைக் கழகத்தின் ‘தேசி கோத்தமா” விருது

1978-ல் இங்கிலாந்து அரசின் ‘தலை சிறந்த குடிமகன்’ விருது

1979-ல் நோபல் பரிசு

அன்னை தெரேசா சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார். சமாதானத்தின் அச்சுறுத்தல்களாக விளங்கும், ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக அவ்விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விழா விருந்தை மறுத்த அவர் தனது பரிசுத்தொகையான 192,000 பவுண் நிதியை இந்தியாவின் ஏழைகளுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் கொடுத்த காரணம் “இவ்வுலக விருதுகள் உலகத்தின் ஏழைகளுக்கு உதவ வழிகோலும் பட்சத்தில் மட்டுமே முக்கியமானதாகக் கருதப்படும்” என்பதே. அன்னை தெரேசா பரிசை பெற்ற பொழுது அவரிடம், “உலக சாமாதானத்தை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?”, என்றுக் கேட்டனர். அதற்கு அவர், “வீட்டிற்கு போய் உங்கள் குடும்பத்தை அன்பு செய்யுங்கள்” என்று கூறினார். இக்கருத்தை வலியுறுத்தி தனது நோபல் நன்றியுரையில் . “உலகம் முழுவதும் ஏழை நாடுகளில் மட்டுமல்ல,  மேற்க்கத்திய நாடுகளிலும் கூட ஏழ்மையானது அகற்றுவதற்கு மிகக் கடினமானதாகவே இருக்கிறது” என்றுரைத்தார். “தெருவில் பசித்திருக்கும் மனிதன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு ஒரு தட்டு சாதமோ,  ஒரு ரொட்டித்துண்டையோ கொடுத்து நான் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். அவனது பசியைத் நான் தீர்த்து விட்டேன். ஆனால் வெளியேற்றப்பட்ட ஒரு மனிதன், யாருக்கும் தேவையற்றவனாக, அன்பு செய்யப்படாதவனாக, கலங்கியவனாக, சமுதாயத்தை விட்டு ஒதுக்கப்பட்டவனாக இருக்கும் போது அத்தகையதொரு ஏழ்மையே என்னை அதிகம் பாதிக்கிறது. அதையே நான் மிகக் கடினமாக உணர்கிறேன்.”

1980-ல்,  மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் மிக உயர்ந்த விருதான இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான “பாரத் ரத்னா” விருது

1981-ல்,   ஹெய்டி ஆட்சியாளரான ஜியாண்-குளோட் டவலியரினால் “லெஜென் டி  ஹொனர்” (Legion d’Honneur) என்ற விருது.

1982-ல்,  ஆஸ்திரேலியாவின் “கௌரவ தோழர்” விருது.

1983-ல், BART MARANCH THE ORDER OF MERIT என்ற பிரிட்டிஸ் அரசி எலிசபெத்திடம் இருந்து பெற்ற விருது

1985-ல், அமெரிக்க ஜனாதிபதி ரோனல்ட் ரீகன் அன்னை தெரெசாவுக்கு சுதந்திரத்துக்கான ஜனாதிபதியின், பதக்கத்தை வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்.

1991-ல், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனிடம் இருந்து பெற்ற “பாரதிய வித்யா பவன்” விருது

1992-ல், “பாரதத்தின் தவப் புதல்வி” விருது மற்றும் “பாரத சிரோமணி” விருது

1993-ல், ரஷ்ய அரசின் உலகப் புகழ் பெற்ற ‘லியோ டால்ஸ்டாய்” விருது

1994-ல், அல்பேனிய நாடு அவருக்கு தேசத்தின் தங்க மரியாதையை அளித்து கௌரவப்படுத்திய தோடல்லாமல், 1991-ல் குடியுரிமையும் அளித்திருந்தது.

1995-ல், கொல்கொத்தாவின் “நேதாஜி விருது” மற்றும் “தயாவதி மோடி” அறக்கட்டளை விருது

1996-ல், ‘அனைத்துலக நம்பிக்கை ஒற்றுமை’ விருது.

1996-ல், நவம்பர் 16, அன்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன் அமெரிக்க கௌரவ பிரஜா உரிமையை வழங்கினார்.

1997-ல்,  அமெரிக்க காங்கிரஸ் “தங்கப்பதக்கம்” வழங்கியது.

2003-ல்,  அக்டோபர் 19ம்திகதி “அருளாளர் பட்டம்” திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திக்கான் நகரில் அறிவித்தார்.

அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம்,  இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992 ல் வெளியிடப்பட்டது.

எத்தனை பட்டங்கள் கிடைத்த போதிலும் வெள்ளை சேலையும், சாதாரண பாதனிகளையும் அணிந்து கொண்டிருந்த அன்னை தெரேசா தன்னை புகழ்வோரிடமெல்லாமல் எப்போதும் சொல்லும் வார்த்தை,  ‘I am nothing. I am just a tool in the hands of God!’ என்பதுதான்.

ஆசிரிய இடமாற்றங்களில் தலையிடுவதை அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டும்- ஜனாதிபதி

mahinda-rajapaksa.jpgஅரசியல் இலாபத்தை நோக்காகக் கொண்டு ஆசிரிய இடமாற்றங்களில் செல்வாக்குச் செலுத்தும் நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விருப்பு வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் ஆசிரிய இடமாற்றங்களில் தலையிட்டு எதிர்கால சந்ததியினரின் கல்வி முன்னேற்றத்திற்குத் தடையாக செயற்படக்கூடாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஊவா மாகாணத்திற்கென புதிதாக 500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியதாவது,

ஆசிரியர்கள் மதத் தலைவர்களுக்கு அடுத்த படியாக சமூக கெளரவத்தையும் மதிப்பை யும் பெற்றுக்கொள்பவர்கள். அந்த கெளரவத்தை அவர்கள் பாதுகாத்துக் கொண்டு மாணவர்களுக்கு நண்பர்களாக, சகோதரர்களாக சில வேளைகளில் பெற் றோர்களாகவும் அன்பு காட்டி வழி நடத்துவது முக்கியமாகும்.

ஒவ்வொரு ஆசிரியரும் தம்மிடம் கற்கும் மாணவர்களை சமூகத்தின் உயர் பிரஜைகளாக உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரிய ஆசிரியைகள் பல்வேறு கட்சிகள், கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கலாம். எனினும், பாடசாலையில் அவர்கள் அதனைப் பாராட்டக்கூடாது. சகலரையும் சமமாக வழி நடத்துவதற்கும் சிறந்த நல்லொழுக்க முள்ள பரம்பரையை உருவாக்குவதற்கும் அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

அரசாங்கம் சமீப காலமாக ஊவாவிற்கு மட்டும் 5000ற்கு மேற்பட்ட ஆசிரியர்களை நியமித்துள்ளது. ஊவா மாகாண பாட சாலைகளைப் பொறுத்தவரையில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற ரீதியில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எனினும் கொழும்பில் 21 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரே கற்பித்தலில் ஈடுபடுகின்றனர்.

இந்த வகையில் இங்கு ஆசிரியர் களுக்கான குறைபாடு இருக்க முடியாது. உள்ள ஆசிரியர்களை முறையாகப் பகிர் ந்துகொண்டால் இன்றுள்ள பிரச்சினை களுக்கும் தீர்வு கிட்டும் என்பது எனது நம்பிக்கை.

அரசாங்கம் நாடளாவிய ரீதியில் 45, 000 ஆசிரியர்களை புதிதாக நியமித்துள்ளது. எனினும், நியமனங்கள் கிடைத்து சில மாதங்களிலேயே ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று வேறு அரச அலுவலகங்களுக்குச் சென்று விடுகன்றனர். அவர்களுக்கு ஆசிரிய தொழிலின் பெறுமதி தெரிய வில்லை என்றே கருத முடிகிறது.

இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் கவனமெடுக்க வேண்டும். தமது விருப்பு வாக்குகளை இலக்காகக் கொண்டு ஆசிரியர்களுக்கு மாற்றம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு அவர்கள் செயற்பட வேண்டியது அவசியம்.

ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தாம தமாவது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். கல்வித்துறையை மேம்படுத்தும் பல்வேறு செயற்றிட்டங்கள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாம் பதவியேற்ற காலத்தில் நாட்டில் 05 வீதமானோரே கணனி அறிவைக் கொண்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 45 வீதமாக அதிகரித்துள்ளது என்றார்

நியூசிலாந்தில் விமான விபத்து: இலங்கை விமானி உட்பட 9 பேர் பலி

நியூசிலாந்தில் நேற்று இடம் பெற்ற விமான விபத்தில் இலங்கையைச் சேர்ந்த சமிந்த நளின் சேனாதீர என்ற விமானி கொல்லப்பட்டுள்ளதாக வெளி விவகார அமைச்சு ஊர்ஜிதம் செய்துள்ளது. இந்த விபத்தில் விமானி உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தின் ‘ஸ்கெடைவிங்’ என்ற நிறுவன மொன்றுக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் சுற்றுலாத் தளமொன்றிலிருந்து பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆகாயத்திலேயே தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

பலியான வர்களில் நால்வர் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்கள், ஏனையவர்கள் பிரிட்டன், அயர்லாந்து, அவுஸ்திரேலியா, ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ். குடா நாட்டு மக்களுக்கு ‘புரோட் பேண்ட்’ இணைய சேவை

நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே புரோட் பேண்ட் அதி நவீன இணையத்தள வசதிகளை குடாநாட்டிலுள்ள மக்களுக்கும் வேண்டியளவு பயன்படுத்தக் கூடிய விதத் தில் தரைமார்க்கமான ‘ஒப்டிகல் பைபர்’ இணைப்பை ஸ்ரீலங்கா டெலிகொம் வழங்கியுள்ளது.

ஏ-9 பாதையூடாக இந்த இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், குடா நாட்டை இணைக்கும் பிரதான ஒப்டிகல் பைபர் இணைப்பை கட்டுப்படுத்தும் தகவல் தொடர்பாடல் மத்திய நிலையத்தை கிளி நொச்சியில் ஸ்ரீலங்கா டெலிகொம்மின் நிறைவேற்று அதிகாரி கிரேக் யங் திறந்து வைத்தார். குடாநாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா டெலிகொம் தனது சேவையை விஸ்தரித்துள்ளது.

குடாநாட்டு மக்கள் இனிமேல் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி புரோட் பேண்ட் இணையத் தளம், தொலைபேசி இணைப்புகள் பெற முடியும். அத்துடன் ஏனைய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் தமது சேவையை விஸ்தரிக்க முடியும் என்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் தெரிவிக்கிறது. மன்னார், வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளுக்கும் புரோட்பேண்ட் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

சிறுவனைக் கடத்திய சந்தேக நபர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பலி

கப்பம் பெறும் நோக்கில் 9 வயது சிறுவன் ஒருவரைக் கடத்தி கொலை செய்ய முயன்ற சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரண மாகியுள்ளார். சந்தேகநபர் பொலிஸாரை நோக்கி கைக்குண்டொன்றை எறிய முற்பட்ட வேளையிலேயே பொலிஸார் இவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர்.

கடந்த மாதம் 31 ஆம் திகதி 9 வயது சிறுவன் ஒருவனைக் கடத்தி கப்பம் கோரிய சந்தேக நபர்கள் இருவரில் ஒருவரை பொலிஸார் திட்டமிட்டு கைது செய்தனர். சிறுவனை கடத்தி வைத்துக்கொண்டு குறிப்பிட்ட இடத்துக்கு பணத்தைக் கொண்டு வருமாறு கோரியுள்ளனர். அதற்கிடையே சிறுவனின் கழுத்தை நெறித்து நீர்த் தேக்கப்பகுதிக்குள் தள்ளிவிட்டுள்ளனர்.

சிறுவன் தெய்வாதீனமாக உயிர் தப்பி யதுடன், பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார். கப்பப் பணத்தை பெறுவதற்காக தலாத்துஓயா பகுதிக்கு சந்தேக நபர்கள் வந்தபோது பொலிஸார் கைது செய்துள்ள ஒருவர் தப்பியோடியுள்ளார். கைது செய் யப்பட்ட நபர் கடவத்தை பகுதியில் கைக் குண்டு இருப்பதாக பொலிஸாரை அந்த இடத்துக்கு அழைத்துச் சென்ற வேளை கைக்குண்டை பொலிஸார் மீது எறிய எத்தணித்துள்ளர்.

இச்சமயத்தில் பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். படுகாயமடைந்த நிலையில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

இந்திய இராணுவ தளபதி இன்று இலங்கை வருகை

india.jpgஐந்து நாள் உத்தி யோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டு இந்திய இராணுவத் தளபதி விஜயகுமார் சிங் இன்று இலங்கை வருகிறார்.

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அழைப்பினையேற்று வருகை தரும் அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், விமானப் படைத் தளபதி, கடற்படைத் தளபதி ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார்.

இதேவேளை உயிர்நீத்த, இந்திய சமா தானப் படையினருக்காக பத்தரமுல்லை யில் அமைக்கப்பட்டிருக்கும் ஞாபகார்த்த தூபிக்குச் சென்று அவர் அஞ்சலி செலுத்து வாரென அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தலைமையகத்தில் விஜயகுமார் சிங்கிற்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டும். இதனைத் தொடர்ந்து அவர் வவுனியாவுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

நியூஸிலாந்தில் பாரிய நிலநடுக்கம்

நியூஸிலாந்தின் மூன்றாவது பெரிய நகரமான கிறிஸ்ட்சேர்ச் நகரில் நேற்று அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 7 தொடக்கம் 7.4 ரிச்டர் அளவுகளில் இந்த அதிர்வு பதிவாகியிருக்கிறது. இந்த நில அதிர்வினால் பல கட்டடங்கள் இடிந்து நாசமாகியுள்ளதோடு, ஒரு சிலர் பாரிய காயங்களுக்கும் உள்ளாகியிருக் கின்றனர். கிறிஸ்ட்சேர்ச் நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் நிலத்துக் கடியில் சுமார் 16.1 கிலோ மீற்றர் ஆழத் தில் ஏற்பட்ட நில அதிர்வினாலேயே இந்தப் பாரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிர்வினால் உயிரிழப்புகள் ஏதும் இதுவரை பதிவாகவில்லை எனவும், பலர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாகவும் அத்தகவல்கள் மேலும் தெரி விக்கின்றன.