10

10

செப்டெம்பர் 11(9/11) றும் பார்க் 51(Park 51) றும்: எஸ் ஆர் எம் நிஸ்தார்

Is_America_Islamophobicபயங்கரவாதம், இஸ்லாம், முஸ்லீம், குர்-ஆன்(Qur-‘an) என்ற வார்த்தைகள் மிக அதிகமாக ஊடகங்களில் பாவிக்கப்படுவது 2001 ஆண்டுக்கு பிற்பட்ட காலத்திலேயே. இப்போதெல்லாம் பயங்கரவாதத்துடன் இஸ்லாம் பிணைத்து பேசப்பட்டாலும் மனித மேம்பாட்டுக்கு இஸ்லாத்தின் பங்களிப்பு குறைத்து மதிப்பிட முடியாத அளவுக்கு இதே ஊடகங்கள் தன் பங்களிப்பை செய்வதையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. இதற்கு ஒரு உதாரணமாக ” Intellectually most influenced text in the world- The Qur-‘an” என்ற விவரணப்படத்தை சொல்லலாம்.

11ம் திகதி 9ம் மாதம் 2001ஆண்டு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், 21ம் நூற்றாண்டின் உலக (அரசியல்) ஒழுங்கை திசை திருப்பிய ஒரு நிகழ்வு நடந்த ஆண்டு இது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அமெரிக்க நீவ் யோர்க் (New York) நகரத்தின் உலக வர்த்தக மையம் (World Trade Centre) என்ற பெயர் கொண்ட இரட்டைக் கோபுரம் வெறுமனே இரண்டு உயர்ந்த கட்டிடங்களல்ல. அது உலக முதலாளித்துவதின் ஒரு முக்கிய குறியீடு. மேற்கின் வாழ்வியல் விழுமியத்தின் மையப்புள்ளியை சுட்டி நிற்கும் அடையாலம். அமெரிக்காவின் கெளரவ சின்னம். இத்தகைய புகழ்பெற்ற இந்த கோபுரங்கள் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான அல்-கயிடா(Al-Qaeda- தளம்) வினால் தாக்கியழிக்கப்பட்ட சம்பவமே இந்த உலக ஒழுங்கை திசை திருப்பிய நிகழ்வு. மிக மிடுக்காக நிமிர்ந்து நின்ற கோபுரங்கள் தாக்கியழிக்கப்பட்ட வேளையிலே அங்கே பலியிடப்பட்டது சுமார் 3000 அப்பாவி உயிர்களுமே. கோபுரங்கள் இருந்த அடையாலமே இல்லாதவாறு அந்த இடம் “வெறுமை நிலம்” (Ground Zero) என்ற பெயரையும் இன்று பெற்றுள்ளது.

குறிப்பாக இஸ்லாமியரிடையே இந்த நிகழ்வு தொடர்பாக முக்கிய இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன.
1) இது இஸ்லாமிய கொள்கை, கோட்பாட்டுக்கு முற்றிலும் முரணானது, ஆகவே இது அல்-கயிடாவினால் செய்யப்படவில்லை, இது அமெரிக்க, சியோனிஸ கூட்டு (நாடகம்) நடவடிக்கை.
2) ஆம், இது அல்-கயிடாவினால் தான் நிகழ்த்தப்பட்டது, அப்படி அழித்ததில் தப்பே இல்லை, ஏனெனில் அமெரிக்கர், அங்கு இருந்து கொண்டே லிபியாவின் மருந்து தொழிற்சாலைக்கு ரொக்கட் தாக்குதல் செய்ய முடியுமானால். ஏன் அவர்களுக்குள் புகுந்து நாம் தாக்க முடியாது. ஒஸாமா பின்லாடன் ஏற்கவே மேற்கு மீது, குறிப்பாக அமெரிக்கா மீது போர் பிரகடனம் செய்து விட்டார், எனவே அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அவர்களே கவனம் செலுத்த வேண்டுமே அல்லாமல் நாம்மில்லை. இது புது விதமான யுத்த முறை. எமது போராட்ட வடிவத்தை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். இது இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளை கேள்விகுற்படுத்வில்லை. அவர்கள் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வெளியேறுவதுடன் இஸ்லாமிய நாடுகளில் உள்ள பொம்மை ஆட்சியாளருக்கு மேற்கின், குறிப்பாக அமெரிக்க ஆதரவும், நிதியும் நிறுத்தப்பட்டால் நாம் ஏன் அமெரிக்காவை தாக்க வேண்டும். என்ற வாதங்களே அவை.

அல்-கயிடாவின் விமான தாக்குதலுக்கு முன்பும் இந்த இரட்டை கோபுரம், அல்-கயிடாவினால் தாக்குதலுக்கு உள்ளானதாலும், பின்னைய தாக்குதலுக்கு அவர்கள் உரிமை கொண்டாடியதாலும், மேற்குலகிற்கு அது தொடர்ச்சியாக செய்து வந்த எச்சரிக்கைகளையும் சேர்த்து பார்க்கும் போது, இத் தாக்குதுலுக்கான பொறுப்பு அல்- கயிடா வினுடையதே. அத்தோடு அவர்கள் இஸ்லாமிய எல்லையை மீற மாட்டர்கள் என்பதற்கோ அல்லது எப்போதும் அவர்கள் எல்லை மீறி செயல்படவில்லை என்பதற்கோ ஆதாரங்களும் இல்லை.

அதேநேரம் அமெரிக்காவும், இஸ்ரேலிய சியோனிஸ்டுகளும் இஸ்லாத்துக் கெதிரான போக்கை கைக்கொள்ளாதவர் என்றோ அல்லது திட்டமிட்ட சதிகளை எப்போதும் செய்யவில்லை என்று கொள்ளும் அளவுக்கோ அவர்கள் நிரபராதிகளும் அல்ல. ஆகவே இத்தாக்குதலுக்கும் அவர்கள் மேல் பலியை போட்டு அல்-கயிடாவை நிரபராதியாக்கும் முயற்சியும் முஸ்லிம்களுக்கோ, இஸ்லாத்திற்கோ எந்த விதத்திலும் நன்மை பயக்காது என்பதுடன் அப்படியான செயல் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் பிரதிகூலமாக அமையும் என்பதனையும் நாம் மறத்தலாகாது. பயங்கரவாதம் என்றும் பயங்கரவாதமே. தற்காப்பு போரிலும் பயங்கரம்வாதம் பற்றி எச்சரிக்கும் குர்-ஆன் இந்த இரட்டை கோபுர தாக்குதலை வித்தியாசமாக மொழி பெயர்க்கின்றது என்பது ஒரு முட்டாள்தனமான விவாதமாகும்.

இது இப்படியிருக்க இந்த 9/11ன் இன்றைய விசேடம் தொடர்பானதுடன் அது நிகழ்த்தப்பட்ட இடம் சம்பந்தமான புதிய திருப்புமுனையே இக் கட்டுரையின் சாரம்.

எதிர்வரும் சனிக்கிழமை 11ம் திகதி 9ம் மாதம் இரட்டை கோபுரம் தாக்கியழிக்கப்பட்ட 9வது வருடம், அன்றைய தினம் (இந்த வருடத்தின் தற்செயலான சம்பவம்) உலக முஸ்லீம்களின் ஈகை திருநாளின் ( Eid ul- fithr, ஈதுல்- பித்ர்) இரண்டாம் நாளும் ஒன்றா இணைவதாகும். அன்று அமெரிக்காவின் ப்ளொரிடா(Florida) மானிலத்தில் Gainesville என்ற இடத்தில் டொரி ஜொன்ஸ்(Terry Jones) என்ற ஒரு கிறிஸ்தவ பாதிரி குர்-ஆனின் பிரதிகளை இஸ்லாத்துக்கு எதிரான ஆர்பாட்டக்காரர்களுடன் சேர்ந்து “தீயிட்டு எரிக்க” திட்டம் தீட்டியுள்ளார்.  உலக வர்த்தக நிலைய தாக்குதலைக் கண்டித்து புனித குர்ஆன் பிரதிகளை எரிக்க தேவாலயம் முடிவு

இவரின் தேவலயதில் மொத்தம் 50 உறுப்பினரே. அதிலும் 30 பேரே நிறந்தரமகாக கோவிலுகுச் செல்வோர். அவரின் அடியாளர்களில் எத்தனை பேர் இந்த “எரிப்பார்பாட்டத்தில்” கலந்து கொள்வர் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த “குர்-ஆன்” எரிப்பு தீர்மானத்திற்கான அவரின் நியாயம் குர்-ஆன் என்பது ஒரு புனித நூல் அல்ல என்பதுடன், இறைத் தூதர் ஏசு( peace be upon him) இன்று இருந்திருந்தால் அவரும் அதை எரித்திருப்பார் என்பதாகும். இதுவரை 200 குர்-ஆன் பிரதிகளை சேர்த்து வைத்துள்ள இந்த பாதிரி கடவுளால் எந்த இடையூரும் வராவிட்டால் இந்த முயற்சி தங்கு தடையின்றி தொடரும் என்கிறார். இந்த முயற்சியில் எவ்வளவு தூரம் இவர் வெற்றி பெறுவார் என்ற கேள்விக்கப்பால், இந்த திட்டமிட்ட நிகழ்வு முஸ்லிம்களுக்கிடையே மாத்திரம் பரபரப்பை ஏற்படுத்தவில்லை, மாறாக பிற சமயத்தவர், சமயம் சாராதோர் என்ற பேதமின்றி எதிர்ப்பலைகள் கிழம்பிவிட்டன. இதற்கு எதிரான கையெழுத்து வேட்டை பல இடங்களில் முடக்கி விடப்பட்டுள்ள அதே நேரத்தில், ஆர்பாட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் என்று எதிர் நடவடிக்கைகளும் ஆரம்பித்து விட்டன. மேற்குலக வானொலிகளின் எதிர்ப்பு, வெள்ளை மாளிகையின் உத்தியோக எதிர்ப்பறிக்கை என்று இது உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய நிகழ்வாகவே பொதுவாகக் கொள்ளப்படுகிறது. மேலும் பல எதிர் நடவடிக்கைகள் அந்த தினத்துக்காக திட்டமிடப்பட்டுள்ளன.

சரி அந்த பாதிரி எரித்தால் என்ன அந்த எரிப்பு முயற்சியுடன் சேர்ந்து இஸ்லாம் அழிந்து விடவா போகின்றது? முஸ்லிம்கள் அமைதியாக தத்தமது கருமங்களில் கவனம் செலுத்த வேண்டாமோ? ஏனெனில் இஸ்லாத்தின் ஆரம்ப நாளில் இருந்து இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதானே இருக்கின்றன. அதே வேகத்தில் இஸ்லாமும் வளர்ந்து கொண்டுதானே செல்கிறது. இன்று உலகத்தில் ஒப்பிட்டு ரீதியில் கூடுதலாக மக்கள் இணைவது இஸ்லாத்திலேயே என்பதுடன் அதிகமான கிறிஸ்தவ புத்தி ஜீவிகள் இஸ்லாத்தை ஏற்பதும் கண்கூடு. எனவே குர்-ஆன் எரிப்பு என்பது எந்த வகையிலும் இஸ்லாத்தை பாதிக்காது என்பதுடன் அந்த பாதிரி அந்த எரிப்புக்கப்பால் எதையும் சாதிக்கப் போவதுமில்லை. ஒரு வேளை தனது கோயிலின் உறுப்பினர் எண்ணிக்கையையும் இச்செயல் குறைக்கலாம்.

இந்த உத்தேச குர்-ஆன் எரிப்பு நாளில் சுமார் 25 தேவாலங்களும்(Churches), யூத வழிபாட்டுத் தளங்க( Synagogues)ளும் தத்தமது வழிபாட்டு தளங்களில் குர்-ஆனை தங்களின் பக்த கோடிகளுக்காக வாசிக்க முடிவெடுத்துள்ளார்கள். ஒரு மனிதனின் துவேச முயற்சிக்கு எதிராக 25 பேரின் நற்பு முயற்சி. ஆகவே முஸ்லிம்கள் ஆர்பரிக்கத் தேவையில்லை. அத்துடன் இது அமெரிகாவில் புதிய விடயமும் அல்ல. அமெரிக்க அரசியல் அமைப்பு சமய சுதந்திரத்தை வழியுறுத்திவரும் போதும், அமெரிக்கரின் எல்லையற்ற சுதந்திர உணர்வென்பது சில வேளைகளில் ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தி விடுவதை மறுப்பதற்கில்லை. 1866 ம் ஆண்டு இதே அமெரிக்கர்(கிறிஸ்தவரும் உற்பட) ஆபிரிக்க- அமெரிக்கரின் தேவாலயங்களை தீயிட்ட சம்பவங்களும், 1938ல் பாதிரி சார்ல்ஸ் கெளகின்(Fat. Charles Coughlin) யூதர்களுக்கு எதிரானதும் ஜெர்மனிய நாஷிகளை ஆதரித்தும் நிகழ்த்திய பேச்சுக்கள் என்று பல்வேறு சம்பவங்கள், பல்வேறு கால கட்டங்களில் நடந்தேறியுள்ளன. உலகெங்கும் நடந்தேறுகிறது. இனியும் நடக்கும். அப்படியான சம்பங்களின் புது வடிவங்களில் ஒன்றே பாப்பரசர் 16ம் பெணடிக்காக அறியப்பட்ட முன்னை நாள் நாசிகளின் இளைஞர் படையில் இருந்த ஜேர்மனியரான ராட்சிங்கரின் இஸ்லாம் என்ற மதம் “கொடியது” என்ற அறிக்கை ஏற்படுத்திய பரபரப்பு. அதேபோல் இத்தகைய சேறடிப்பு சம்பவத்தின் புதிய முகமே அமெரிக்கர் அவர்களின் ஜனாதிபதியின் சமயம் தொடர்பான சந்தேகத்தை கிளப்பி மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட பார்கும் முயற்சி. இந்த அடிப்படையில் இப்போது நான்கில் ஒரு அமெரிக்கர் அதிபர் பரக் ஒபாமா(Barek Obama)வை ஒரு “இரகசிய முஸ்லிம்” மாகவே பார்கின்றார்களாம். ஆக இவை எல்லாம் ஒருவகை காரணமற்ற இஸ்லாமிய பீதியே(Islamophobia) என்று ஒதுக்கிவிடுவதில் தவறில்லை.

இன்று உலக சனத்தொகையில் சுமார்1.3 பில்லியன்(Billion) முஸ்லிம்கள். CIA யின் கணக்குபடி உலகலாவிய ரீதியில் செயல்படும் அல்- கயிடா தீவிரவாதிகளின் எண்ணிக்கை 14,000. இதை % பார்த்தால் எத்தனை பூஜியங்களுக்கு பினால் ஒரு இலக்கம் வரும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். சரி இவர்களுடன் கூடவே நாடுகள் தோரும் காணப்படும், நம் நாட்டில் காணப்பட்ட முன்னை நாள்(?) ஜிஹாத் அமைப்பும் உற்பட, முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களையும் சேர்த்து பார்க்கும் போது எத்தனை பேர் தீவிரவாத போக்குடையோர் அல்லது தீவிரவாதத்தை ஆதரிக்கின்றனர் என்றால் முன்னால் பூஜியங்கள் நிறைந்த ஒரு எண் தான் மீண்டும் பதிலாக வரும்.

ஆகவே நியாய சிந்தையுடைய முஸ்லிம்கள் காலத்துக்கு காலம் வைக்கப்படும் இத்தகைய பொறிகளுக்குள் அகப்பட்டுக்கு கொள்லாமல் விழிப்பாக இருக்க வேண்டும். இந்த பொறிகளில் ஒன்றே இலங்கையில் முஸ்லிம்களுக் எதிரான அடக்குமுறை இலங்கை அரசாங்கதால் முடக்கிவிடப்பட்டுள்ளது என்று காவப்படும் செய்தி. இலங்கை என்பது எம் நாடு அதில் எமக்கு உரிமையுண்டு என்று உரிமையுடன் செயல்படும் போது காரணமற்ற பயங்களுக்குள் நாமும் புதைந்து விட வேண்டியதில்லை.

இப்படி இந்த குர்-ஆன் எரிப்பு என்ற விடயத்துடன் தொடர்புபட்டதே Park 51 என்ற ஒரு இடமும், அந்த இடம் தொடர்பான உரிமை பிரச்சினையும். இந்த விடயம் அமெரிக்காவில் காரசாரமான வாத பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது Lower Manhattan, அதாவது “வெறுமை நிலம்”(Ground Zero) என்றறியப்பட்ட இடத்திலிருந்து கல்லெறி தூரத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பள்ளிவாசலுக்கும், இந்த பார்க் 51 திட்டவாளர், றவூப் கான், அவர் மனைவி டெய்சி கான் ஆகியோருக்கும் ஒரு தலையிடியாக மாறி வருகின்றதாம். இந்த உத்தேச கட்டிட இடத்தை சுற்றி துயிலுரி(strip clubs) நிலையங்கள், மது பாண சாலைகள், மற்றும் மேற்கத்திய களியாட்டு நிலையங்கள் என்று இன்னோரன்ன அம்சங்களை கொண்ட அந்த மன்கெட்டன் பகுதியில் இந்த பார்க் 51க்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்கள், முஸ்லிம்களுக் கெதிரான அவமான பேச்சுக்களும், செயல்களும் இடம் பெறுவதையும் பொருட்படுத்தாது அந்த சிறிய பள்ளீவாயிலை 13 மாடி கட்டடமாக்கி அதில் இஸ்லாமிய (பல் மத நற்புறவு) கலாச்சார மண்டபமும் அமைக்க கட்டிட அனுமதி கேட்டு விண்ணப்பித்தார் திரு, திருமதி கான் அவர்கள். இவர்கள் அமொ¢காவில் பல் மத பு¡¢ந்துணர்வை ஏற்படுத்தும் முகமாக சமயங்க்களுக்கிடையிலான புரிந்துணர்வு கலந்துரையாடலுக்கு (inter-faith dialouge) பெயர் பெற்றவர்களாம். இந்த கட்டிட முயற்சிக்கு நிவ் யோர்க் மேயரும் அனுமதி அளித்துவிட்டார். அதைத் தொடர்ந்து பரக் ஓபாமாவும் வெள்ளை மாளிகையின் நோன்பு திறக்கும் வைபவம் ஒன்றில் அங்கே கலாச்சார மண்டபமும், பள்ளிவாயிலும் கொண்ட கட்டிடம் அமைப்பது முஸ்லிம்களின் சமயத்தை பின்பற்றுவதற்கான அவர்களுக்குள்ள மத சுதந்திரத்தினதும், ஜனநாயக உரிமையின் பாற்பட்டது. இந்த அடிப்படை உரிமை அமெரிக்கர் அனவருக்கும் இருக்கும் உரிமைக்கு சமமான உரிமை என்று பெரிய போடு போட்டார். ஒரு சில நாற்களுக்குப் பின் வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜனாதிபதியின் அன்றைய பேச்சு ஒரு தேவை கருதி நிகழ்த்தப்படடதாகவும், இந்த உத்தேச கலாச்சார நிலைய, பள்ளிவாசல் கட்டிட அனுமதி தொடர்பாக அதை எதிர்ப் போரினது நியாங்களும் கருத்தில் எடுக்கப்பட வேண்டியுள்ளது என்ற ஒரு விடயத்தையும் மெல்லவே விட்டுள்ளார்.

இந்த எதிர்பாளர் வரிசையில் பலதரப்பட்டோரும் காணப்படுவது இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம். பொக்ஸ் செய்தி(Fox news) குழுவில் இருக்கும் லவுரா இங்கிராம் (Laura Ingraham) டெய்சி கானுடனான நேர்காணலுக்குப் பின் பின்வருமாறு கருத்து வெளீட்டுள்ளார், ” இது இஸ்லாத்தின் அதிகார போக்கினதும் அதன் விரிவாக்கத்தினதும் ஒரு செயல்பாடு”. கூடவே இந்த இடத் தேர்வானது தற்செயலான விடயமல்ல, இது ஜெருசலத்தில் ஒரு தேவாலயத்தின் மேல் கட்டப்பட்ட அல்-அக்ஸா பள்ளிவாயிலை ஒத்தது” என்றும் கூறியுள்ளார்.

அதே போல் 9/11ல் தன் சகோதரியை பறிகொடுத்த நிவ் யோர்க் சட்டத்தரணி ஒருவர், தாம் திரு, திருமதி கான் அவர்களின் ஜனநாயக உரிமைக்குட்பட்ட செயற்பாட்டில் கருத்து வேற்றுமை படாவிட்டாலும், அவர்கள் தமது உரிமைகு உட்பட்ட விதத்தில் நடந்தாலும், இந்த முயற்சியானது இந்த சந்தர்பத்தில் ஒரு பொருத்தமான நடவடிக்கையாக தன்னால் பார்க்க முடியவில்லை என்றும், அதே நேரம் இந்த கட்டிட நிர்மானத்துக்கான எதிர்ப்பு இஸ்லாமிய சமயத்துக்கான எதிர்பாக ஒருபோதும் அமையவும் கூடாது என்பதில் அவர் கவனமாக உள்ளாதாகவும் கூறுகின்றார்.

அதேநேரம் இந்த பள்ளிவாசல் நிர்மானத்துக்கான அனுமதி மறுப்பு, தீவிரவாதிகளுக்கு தீனி போடுவதாகவே முடியும். முஸ்ளிம்களுக்கு அவர்களின் ஜனநாயக உரிமையை மறுத்துக் கொண்டு முஸ்லிம்கள் தங்களை முழு அமெரிகர்களாக பார்க்க மறுகிறார்கள் என்று கூறுவது ஒன்றுக் கொன்று முரணான அனுகுமுறை. 15 தீவிரவாதிகளுக்காக முழு உலக முஸ்லீம்களையும் குற்றவாளிக் கூண்டில் போடுவது புத்திசலித் தனமாகாது என்ற கோசங்களும் அமெரிக்க அரசியல் வட்டத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

போர் குற்றவாளி ஜோர்ஜ் டப்லிவ் புஸ்(George W. Bush) கூட 9/11ன் பின்னான நாட்களில் வசிங்டன்னில் உள்ள இஸ்லாமிய நிலையத்துக்கு விஜயம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக எந்த அமெரிக்கரும் செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தின் முகம் அல்ல என்றும், இஸ்லாம் என்பது ” சாமாதானத்துக்கான் சமயம்” என்பதே தனது நிலைப்பாடு என்றார். இதையே முன்னை நாள் ராஜாங்க செயலர் கொண்டலீஸா ரைசும்(Condoleezza Rice), அனைத்து படை அதிகாரிகளின் தலைவருமான கொலின் பவுள்(Colin Powell)ழும் வழி மொழிந்தனர். இவர்களின் கூற்று தொடர்பாக கருத்து வெளியிட்ட வெள்ளை மாளிகையின் ஓபாமவின் ஆலோசகர்களில் ஒருவரான பட்டேல்(Patel) என்ற முஸ்லிம் பின்வருமாறு கூறுகின்றார், ” பின் லாடனின் தீவிரவாததை ஆதரிக்கும் ஒரு சிறு குழுவினரின் இஸ்லாம் தொடர்பான கருத்தியலுக்கும், அமைதியை விரும்பும் கோடிக்கணக்கான முஸ்ளிம்களின் இஸ்லாம் தொடர்பான கருத்தியலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புஸ்சும், ஒபாமாவும் மிக சரியாகவே புரிந்து வைத்துள்ளனர்”.

ஆக இஸ்லாத்தின் பெயரால் இரட்டை கோபுரம் தாக்கியழிக்கப் பட்டதை எப்படி எதிர்த்தோமோ, அதே போல் இந்த குர்-ஆன் எரிப்பை இஸ்லாத்தின் பெயரால் எதிர்ப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். ஆனால் அத்துமீறல் நிச்சயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

அதேநேரம் இந்த 13 மாடி கலாச்சார நிலையமும், பள்ளிவாசலும் அந்த வெறுமை நிலத்திற்கு (Ground Zero) அண்மையிதான் அமைய வேண்டும் என்று அடம் பிடிப்பதும் சற்று பிரச்சினைக்குறிய விடயம் போலவே தெரிகிறது. அங்கு உயிரிழந்த 3000 பேரின் உறவுகள் இந்த இடத்தில் உங்கள் பள்ளிவாசலை கட்ட வேண்டாம் என்று கேற்பது நீங்கள் அமெரிகாவில் எங்குமே கட்டவேண்டாம் என்று சொல்லும் செய்தியல்ல. அமெரிக்க முஸ்லிம் மற்றவர் போல தமது வணக்கஸ்தளத்தை எங்கும் கட்டலாம் என்ற உரிமை இங்கு கொஞ்சம் விட்டுக் கொடுக்கப்பட வேண்டும் என்று தான் படுகிறது. ஏனெனில் உலகத்தில் குழப்பத்தை உண்டுபண்ண வேண்டாம் என்கிறது இஸ்லாம். ஆகவே நாம் தானே முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

உலக மயமாக்கல் என்ற போர்வையில் இஸ்லாத்திற்கெதிரான நிலைபாடு மேற்கினாலும், அமெரிக்காவினாலும் எடுக்கப்பட்டாலும், சோஸலிசத்தை தோற்கடித்த மேற்கின் அடுத்த குறி இஸ்லாம் என்றாலும். தங்களையறியாமலேயே இஸ்லாத்துடன் ஒட்டி செல்ல வேண்டிய தேவை மேற்கிற்கு மாத்திரமல்ல உலகத்துக்கும் உண்டு. இதற்கு சான்றாகா பாரிய விற்பனை நிலையங்கள்(Supper markets) தம் கதவை திறந்து அங்கிகரிக்கப்பட்ட உணவை(Halal food) சிபாரிசு செய்கிறது, வங்கிகள்( Banks) வட்டியில்லா இஸ்லாமிய வங்கி முறையை அனுமதித்து தமது பொருளாதார மூலத்தில் மாற்றத்தை செய்துள்ளது. விரைவில் பெண்களின் வேலை/காரியாலய உடுப்பில் (Business suit ) மாற்றம் ஏற்படுவதை மேற்கத்தைய பெண் அறிஞ்சர்கள் வரவேற்க ஆயத்தமாக உள்ளனர் என்ற செய்திகள் எல்லாம் செயற்கையான உலகமயமாக்கலுக்கு( Globalization) எதிராக எழும் இயங்கியலாக இஸ்லாமிய மயப்படுத்தல் (Islamization) இயற்கையாகவே நடந்தேறுவதை காணலாம்.

” யாழ்ப்பாண மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்தவர்கள் புலம்பெயர் தமிழர்களே” யாழில் நியூஹாம் உதவி மேயர் போல் சத்தியநேசன்

Paul_Sathyanesan_Cllrயாழ்ப்பாண மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்தவர்கள் புலம்பெயர் தமிழர்களே என்று பிரித்தானியாவின் நியூஹாம் மாநகர உதவி மேயர் போல் சத்தியநேசன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் இருந்து நாடு சென்றுள்ள இவர் சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்கும் வருகை தந்துள்ளார். இவருக்கு யாழ்.மாநகரசபை 09.09.10 மகத்தான வரவேற்பு வழங்கி விழா எடுத்தது. யாழ்.மாநகரசபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவர் இவ்வாறு கூறினார்.

இவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: ”யாழ்ப்பாணத்தில் செத்த மக்களின் எண்ணிக்கையை வைத்தே வெளிநாடுகளில் தமிழர்கள் விசா பெற்றுக் கொள்கின்றனர். யாழ்ப்பாண மக்களை நடுவீதிக்கு கொண்டு வந்து விட்டவர்கள் புலம் பெயர் சமூகத்தினர்தான்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள் என ஐரோப்பிய நாடுகளில் சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் சீனப் பெண்களை வைத்து விபச்சாரம் நடக்கிறது என்றும் சிங்களப் பெண்கள் விபச்சாரம் செய்கின்றார்கள் என்றும் தமிழ்ப் பெண்களை இராணுவம் கற்பழிக்கின்றது என்றும் ஐரோப்பிய நாடுகளில் சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ”

யாழில் நவமங்கை இல்லத்தின் திறப்பு விழா நிகழ்விலும் கலந்துகொண்ட கவுன்சிலர் போல் சத்தியநேசன் தான் கற்ற பள்ளியான சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி இருந்தார். இலங்கையில் தமிழ் அரசியல் தலைமைகள் சிலரையும் தனது பயணத்தின் போது சந்தித்துள்ளார்.

மனித உரிமைகளை மேம்படுத்த தேசிய வேலைத் திட்டம் – அமைச்சரவை உபகுழு அமைக்க அங்கீகாரம்

mahinda-samarasinghe.jpgமனித உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவுமென தேசிய வேலைத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இது தொடர்பாக வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க விளக்கமளிக்கையில்,

இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது குறித்து 2006ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்தினோம். இதற்கேற்ப 2008ம் ஆண்டில் இது தொடர்பான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்காக நாம் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கூறினோம். அதன்படி ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வகையில் அரசாங்க நிறுவனங்கள், அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்கள் உட்பட பொதுநல முக்கியஸ்தர்களின் கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் திரட்டி, மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச அமைப்புக்களின் தகவல்களையும் கவனத்தில் கொண்டு தான் மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் கான முதலாவது வரைவொன்றை நாம் ஏற்கனவே தயாரித்துள்ளோம்.

நான் மனித உரிமைகள் அமைச்சராக இருக்கும் போது இவ் வரைவு தயாரிக்கப்பட்டது. இதற்குத் தேவையான தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் ஜனாதிபதி வழங்கினார். இந்த வரைவு சட்டமா அதிபரின் பரிசீலனைக்கும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவை அடிப்படையாக வைத்து இறுதி வரைவைத் தயாரிப்பதற்காகவே இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்படவுள்ளது என்றார்.

நல்லிணக்க ஆணைக்குழு; முல்லை, கிளிநொச்சியில் அமர்வுகள்; யாழ், மட்டக்களப்பிலும் நடத்த ஏற்பாடு

நல்லிணக்க ஆணைக்குழுவானது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அதன் பொது அமர்வுகளை நடத்தவுள்ளது. இதன்படி, எதிர்வரும் 17ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை அமர்வுகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒக்டோபர் 9ம் திகதி முதல் 11ம் திகதி வரை யாழ்ப்பாணத்திலும் அமர்வுகளை நடத்த நல்லிணக்க ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலும் நேரடி விஜயங்களை மேற்கொண்டு பொது அமர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. பொது மக்கள் காட்டும் ஆர்வத்தைக் கருத்திற்கொண்டு ஆணைக் குழுவானது தொடர்ந்தும் பொதுமக்களிடம் இருந்து மேலும் சமர்ப்பணங்களை வரவேற்கின்றது.

எவரேனும் நபரொருவர் ஆணைக் குழுவின் முன்னிலையில் சமர்ப்பணங்களைச் செய்ய விரும்பினால் அதனை கொழும்பு 7, ஹோர்ட்டன் பிளேஸ், இல. 24, லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவிக்கலாம்.

புனித நோன்பு பெருநாள் இன்று

friday-of-ramadan-2010.jpgஹிஜ்ரி 1431 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களில் தென்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டதை அடுத்து ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் இன்று (10) வெள்ளிக்கிழமை கொண்டாடுவதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா ஆகியன இணைந்து உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளன.

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு நேற்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெற்றது.

மூதூர், கிண்ணியா, சிலாவத்துறை, புல்மோட்டை போன்ற பிரதேசங்களில் தலைப்பிறை கண்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டதை அடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழுத் தலைவர் மெளலவி ஏ. டபிள்யூ. எம். ரியாழ் (பாரி), அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா தலைவர் மெளலவி எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி ஆகியோர் ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை அறிவித்தனர்.