பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல் நேற்று நாடு திரும்பினார். 2006ல் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஹூல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை அச்சுறுத்தலையடுத்து இலங்கையை விட்டு வெளியேறி இருந்தார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக அமெரிக்காவின் நியோர் Rensselaer Polytechnic Institute இல் தன் தன் கற்பித்தலை மேற்கொண்டு இருந்த பேராசிரியர் செம்ரம்பர் 2 2010ல் மீண்டும் இலங்கை சென்றடைந்துள்ளார். நியூயோர்க்கில் இருந்து இலங்கை செல்வதற்கு முன்னதாக தேசம்நெற் அழைப்பில் லண்டன் வந்திருந்த பேராசிரியர் ஹூல் லண்டனில் இடம்பெற்ற கல்வியியல் சந்திப்புக்களில் கலந்துகொண்டிருந்தார். ஓகஸ்ட் 29 2010ல் இடம்பெற்ற சந்திப்பில் ‘வடக்கு – கிழக்கு (வடகிழக்கு) இல்/க்கான கல்வி’ என்ற தலைப்பில் 45 நிமிட பேருரையை வழங்கினார்.
ஓகஸ்ட் 31 முதல் அவருடைய அமெரிக்க கல்வி நிறுவனத்தின் வேலையில் இருந்து நீங்கும் இவர் தான் பிறந்த தன்னை வளர்த்த மண்ணான யாழ்ப்பாணத்திற்கு தன் சேவையை வழங்க செல்வதாக தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார். சர்வதேச பல்கலைக்கழகங்களில் 17 ஆண்டுகள் பேராசிரியராக பணியை முடித்துக்கொண்டு இலங்கைப் பேரதனைப் பல்கலைக்கழகத்தில் தன் கற்பித்தலைத் தொடர்ந்த போதும் யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் இணைய முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார். மிகவும் முடிய இறுக்கமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் எப்போதும் தனக்கு வெளியே இருந்து வருபவர்களை உள்வாங்க முன்வருவதில்லை. கிணற்றுள் தவளையாகவே இந்நிர்வாகம் செயற்பட்டு வந்தது. பல்கலைக்கழக கணணியில் துறையை நிறுவி செயற்பட வைத்த பேராசிரியர் ஹூல் யாழ் பல்கலைக்கழகத்தில் கணணியியல் துறைக்கு விண்ணப்பித்த போது யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அவரது விண்ணப்பத்தை கவனத்தில் எடுக்கத் தவறியது. தற்போது மேற்படி துறைக்கு அவரை நியமிக்குமாறு நீதிமன்றம் ஆணை பிற்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பேராசிரியர் ஹூல் இன்னும் சில தினங்களில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணமாகின்றார்.
பேராசிரியர் ஹூல் உடன் அவரது துணைவி துஸியந்தி ஹூல் உம் மகன் யோவான் ஹூல் உம் யாழ் செல்கின்றனர். துஸியந்தி ஹூல் உம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்திருந்த போதும் அவரது விண்ணப்பமும் கவனத்தில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் முதல் யோவான் ஹூல் யாழில் தன் இடைநிலைக் கல்வியைத் தொடர உள்ளார். பேராசிரியர் ஹூல் யாழ் திரும்புவதும் தனது கற்பித்தல் கடமையை தொடர முடிந்தால் இது பலருக்கும் முன்னுதாரணமாக அமையும். புலம்பெயர்நாடுகளில் கல்வியியல் செழிப்புடன் உள்ளவர்கள் தங்கள் ஆற்றலை தம் மக்களுடன் பகிந்துகொள்வதற்கு நல்லதொரு சந்தர்ப்பமாக இது அமையும்.
இடதுசாரி சிந்தனையாளரும் கடந்த காலங்களில் தேசம்நெற் கூட்டங்களில் அறியப்பட்டவரும் ஆன சூரியசேகரம் தற்போது இலங்கை சென்று யாழ் மாநகரசபைக்கு ஆலோசகராக கடமையாற்றுகின்றார். கம்டன் கவுன்சிலின் பெரும்தெருக்கள் திணைக்களத்தில் இருந்து ஓய்வுபெற்ற இவர் தனது அனுபவங்களை ஆற்றலை யாழ் மாநகரசபையுடன் பகிர்ந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. மிகவும் அவசியமான ஒரு காலகட்டத்தில் பேராசிரியர் ஹூல் யாழ் வருகிறார் எனத் தெரிவித்த சூரியசேகரம் பேராசிரியர் ஹூல் போன்ற ஆளுமைகள் யாழ் கல்விச் சமூகத்திற்கு அவசியமானது எனத் தெரிவித்தார்.
அறிவுத் தேடலுடன் தம முன்னேற்றத்திற்கான தாகத்துடன் உள்ள தாயக மக்களுக்கு பேராசிரியர் ஹூல் போன்று பல்துறை சார்ந்தவர்களும் தங்கள் சேவையை வழங்க அர்ப்பணிப்புடன் முன்வருவது லண்டனில் இடம்பெற்ற சந்திப்புக்களில் மிகவும் வரவேற்கப்பட்டது. இலங்கை செல்வது தொடர்பில் ஆரம்பத்தில் ஒரு தயக்கம் இருந்தாலும் லண்டனுக்கு வந்ததன் பின் கிடைத்த ஆதரவும் வாழ்த்துக்களும் தன்னை உற்சாகப்படுத்தியதாக லண்டனில் இருந்து விமானம் ஏறுவதற்கு முன் பேராசிரியர் ஹூல் தெரிவித்தார்.
தன்னிடம் பலரும் பல்வேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்ததாகக் கூறிய பேராசிரியர் ஹூல் தனது எல்லைக்குட்பட்ட விடயங்களை மட்டுமே தன்னால் மேற்கொள்ளமுடியும் எனத் தெரிவித்தார்.
யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தருக்கான பதவிக்காலம் இவ்வாண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி இரு கட்டங்களினூடாக தெரிவு செய்யப்படுகின்றது. முதற்கட்டத்தில் பல்கலைக்கழக சபையில் உள்ள உறுப்பினர்களின் வாக்களிப்பின் மூலம் மூவர் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் பெயர்கள் University Grants Commission வழங்கப்படும். அடுத்து பல்கலைக்கழக கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்ட மூவரில் ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்வார்.
2006ல் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ஹூல் தெரிவு செய்யப்பட்ட போதும் அவர் தனது கடமையைச் செய்வதில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுக்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு இழைத்த பல்வேறு அநியாயங்களின் பட்டியலில் கல்விச் சமூகத்தை சீரழித்தது குறிப்பிடக்கூடிய ஒன்று.
தற்போது யாழ் திரும்பும் பேராசிரியர் ஹூல் யாழ் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தருக்கான பதவிக்கு போட்டியிட உள்ளார். அவர் இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட வேண்டியதன் அவசியம் தற்போது பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆயினும் பேராசிரியர் ஹூல் உடைய வெளிப்படையான பேச்சும் நேர்மையான நடவடிக்கைகளும் அவரது தெரிவுக்கு எதிரானதாக அமையலாம் என்ற அச்சமும் கல்வியியலாளர்கள் மத்தியில் உள்ளது.
பேராசிரியர் ஹூல் ஓகஸ்ட்30ல் ரிபிசி வானொலியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு தமிழ் மக்களின் கல்வி நிலை தொடர்பாகவும் குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விநிலை தொடர்பாகவும் உரையாடினார். இக்கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் தவராஜா பேராசிரியர் ஹூல் 2006ல் தனது துணை வேந்தர் பணியை மேற்கொள்ள முடியாது போனது துரதிஸ்டமானது என்றும் அவர் தற்போது யாழ் திரும்பிச் செல்வது பாராட்டுக்கு உரியது என்றும் தெரிவித்தார். பேராசிரியர் ஹூல் உடைய தகமையுடன் இலங்கையில் யாரும் இல்லை எனத் தெரிவித்த எஸ் தவராஜா அவருடைய சேவைக்கான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
பேராசிரியர் ஹூல் கலந்துகொண்ட ஒவ்வொரு சந்திப்பும் அவர் யாழ் செல்ல எடுத்த முடிவை மனதார வாழ்த்துவதாகவும் அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைந்திருந்தது. பேராசிரியர் ஹூல் அங்கு அதிசயம் எதையும் நிகழ்த்த முடியாது என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு இது மாற்றத்திற்கான முதற்படியாக அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:
