27

27

வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த 47 அகதி முகாம்களில் 42 முகாம்கள் மூடப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 2இலட்சத்து 80 ஆயிரம் மக்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த 47 இடைத்தங்கள் முகாம்களில் 42 முகாம்கள் மூடப்பட்டுவிட்டதாக மீள்குடியமர்வு நடவடிக்கைகளுக்கான பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். இம்முகாம்களில் தங்கியிருந்த மக்களில் இன்னும் 27 ஆயிரம் பேரே எஞ்சியுள்ள ஐந்து முகாம்களிலும் தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எஞ்சியுள்ளவர்களும் இவ்வருட இறுதிக்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுவிடுவர் எனவும், அதன் பின்பு வவுனியாவில் அகதி முகாம்கள் எவையும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்.தென்மராட்சியிலுள்ள அல்லாரை முகாமில் வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த மக்கள் இன்னமும் தங்கியுள்ளனர் எனபதும் தற்போது வடமராட்சிக்கிழக்கு மக்கள் படிப்படியாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

கேரதீவு- சங்குப்பிட்டி பாதை அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது.

கேரதீவு சங்குப்பிட்டி பாதையின் திருத்த வேலைகள் நிறைவு பெற்று வரும் நிலையில் எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் இப்பாதை திறக்கப்பட்டுவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரதீவு – சங்குப்பிட்டி இடையிலான 4 கிலோ மீற்றர் வரைலான பழுதடைந்த பாதையும், அப்பகுதியில் அமைந்திருந்த பாலமும் திருத்தப்பட்டு நிறைவு பெறும் நிலையிலுள்ளது.

இப்பாதை ஆனையிறவு ஊடான பாதைக்குப் மாற்றுப் பாதையாக விளங்குகின்றது. மன்னார் மற்றும் பூனகரி பிரதேச மக்களுக்கு யாழ்ப்பாணத்திற்கான குறுகிய தூர பாதையாகவும் இது விளங்ககுன்றது. கேரதீவு சங்குப்பிட்டி ஆகியவற்றின் பாதைகளை சுமார் 50 மீற்றர் வரையிலான கடல் நீர் பிரிக்கின்றது. அதற்கான நகரும் பாதை ஒன்று முன்னர் பயன்பாட்டில் இருந்தமையும், ஆனையிறவுப்பாதை போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் வன்னிக்கும் யாழ்.குடாநாட்டிற்குமான பிரதான பாதையாக இப்பாதை பயன்படுத்தப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.கல்வியங்காடு குளத்தில் ஆயுதங்கள் தேடப்படுகின்றன!

யாழ்.கல்வியங்காடு பகுதியில் ஆயுதங்கள் புதைத்து வைத்திருப்பதான தகவலையடுத்து அப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கல்வியங்காடு சந்திரசேகரர் ஆலய வீதியிலுள்ள குளம் ஒன்றிற்குள் ஆயுதங்கள் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக படையினரால் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தெரிவித்த தகவலையடுத்தே இந்நடவடிக்கை படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட குளம் அமைந்துள்ள பகுதியில் படையினர் குவிக்கப்பட்டு ஆயுதம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் குளத்தின் நீர் படையினரால் பத்து நீரிறைக்கும் இயந்திரங்களைக் கொண்டு இறைக்கப்பட்டு வருகின்றது. இன்றும் இந்நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொக்கிளாய் கிராம மக்கள் 26 வருடங்களின் பின்னர் மீள்குடியமர அனுமதி!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்கிளாய் மக்கள் 26 வருடங்களின் பின் அவர்களின் கிராமத்தில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். இக்கிராமத்திலிருந்து 1984ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு இடங்களிலும் வசித்து வந்தனர்.

கொக்கிளாய் கிராமத்தில் மக்கள் மீள்குடியேற தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இப்பகுதிகளில் மீள்குடியேற 34 குடும்பங்கள் மட்டும் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள இக்குடும்பங்கள் இன்று திங்கள் கிழமை முல்லைத்தீவிற்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அழைத்து வரப்படுகின்றவர்கள் பாடசாலையொன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு பின் அவர்களது காணிகளில் தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலர் பிரிவிக்குட்பட்ட விசுவமடு கிழக்கு கிராமஅலுவலர் பிரிவில் எதிர்வரும் 29ம் திகதி மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்புலன்ஸ் வாகனம் மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் காயம்.

நோயாளியை ஏற்றிச்சென்ற அம்புலன்ஸ் வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதியதில் வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் காயமடைந்தார். மந்திகை வைத்தியசாலையிலிருந்து சென்ற அம்புலன்ஸ் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

யாழ்.கோப்பாய் பகுதியில் நேற்று ஞாயிறு மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. வடமராட்சிக் கிழக்கு மருதங்கேணி வைத்தியசாலைக்குச் சொந்தமான இந்த அம்புலன்ஸ் வாகனம் மந்திகை வைத்தியசாலை நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கோப்பாய் பகுதியிலுள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

யாழ்.குடாநாட்டு வீதிகளிலும், யாழ். ஏ-9 பாதையிலும் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றமையும், இவ்வீதிகளில் வாகனங்களின் நெரிசல் அதிகரித்துக் காணப்படுவதே இதற்குக் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஆறு பேருக்கெதிராக வழக்குத் தாக்கல்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மாஅதிபர் மேல்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த விடுதலைப்புலி உறுப்பினர்களால் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுத் தொடர்பில் பதிலளிக்கும் போதே இவ்வாறு சட்டமாஅதிபர் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குறித்த ஆறு விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர்களுக் கெதிராக கொழும்பு மற்றும் மேல் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரூ.12 இலட்சம் பெறுமதியான கருத்தடை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

dr.jpgஇந்தியா விலிருந்து திருட்டுத்தனமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 12 இலட்சம் ரூபா பெறுமதியான கருத்தடை மாத்திரைகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையர் ஒருவரே இந்தியாவின் சென்னையிலிருந்து இம்மாத்திரைகளைக் கடத்தி வந்துள்ளதுடன் குழந்தைகளுக்கான உணவு சவர்க்காரம் மற்றும் சொக்கலேட்டுக்களுக்குள் மறைத்து வைத்தே இதனை கொண்டு வந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.

அன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த யி. வி. 573 விமானத்தில் பயணித்துள்ள அவர் சுங்க அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு இதனை வெளியே கொண்டு வருவதற்காக பெரும் பிரயத்தனம் மேற்கொண்ட போதும் அது பலிக்கவில்லை. சுங்க அதிகாரிகளானலால் சில்வா, நந்தன ஜயதிலக ஆகியோர் லாவகமாக குறிப்பிட்ட கருத்தடை மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர். இலங்கையில் பதிவு செய்யப்படாத 3860 மாத்திரைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்கவின் வழிகாட்டலில் பிரதிச் சுங்கப் பணிப்பாளர் ஹேமால் கஸ்தூரி ஆராய்ச்சி மேற்படி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சந்தேக நபருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள்

main.jpgஅமெரிக்க வர்த்தகத் தலைவர்களிடம் ஜனாதிபதி ஐ.நா. பொதுச்சபை அமர்வில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமெரிக்காவின் முன்னணி வர்த்தகத் தலைவர்களை சந்தித்ததுடன் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்குரிய வாய்ப்புகள் மேலெழுந்திருப்பது குறித்து எடுத்துரைத்திருக்கிறார்.

வான்வெளி பாதுகாப்பு, விருந்தோம்புதல், உல்லாசப்பயணத்துறை உட்பட கைத்தொழில்துறையின் பல்வேறு பட்ட பிரிவுகளைச் சார்ந்த நிறைவேற்று அதிகாரிகள் நியூயோர்க் நகரின் ஹெல்னிம் லே ஹோட்டலில் இடம்பெற்ற மதியபோசன நிகழ்வில் கலந்து கொண்டனர். கொக்காகோலா கம்பனி, போயிங் கம்பனி, கூகிள், ஹில்ரன் ஹோட்டல்கள் ரிசோர்ட்ஸ், ஸ்ரள்யூட் ஹோட்டல்கள் ரிசோர்ட்ஸ் உட்பட சுமார் 100 வர்த்தகத்துறை தலைவர்கள், ஆய்வாளர்கள், வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அமெரிக்க வர்த்தகத் தலைவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி ராஜபக்ஷ, முதலீட்டு வாய்ப்புத் தொடர்பாக இலங்கை மீது புதிதாக கவனத்தைச் செலுத்துமாறு இச்சந்திப்பின் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

பிபிஸர் போன்ற கம்பனிகள் இலங்கை போன்ற மேலெழுந்துவரும் சந்தைகளில் முதலீடு செய்ய விரும்புவதாக பிபிஸர் கம்பனியின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இந்த வர்த்தகத்துறையினர் கலந்து கொள்ளும் மதியபோசன நிகழ்வானது கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகள், அரச அதிகாரிகள், இலங்கை வர்த்தகத் தலைவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப் பாரிய வழியை ஏற்படுத்தித் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் தனிநாடா? ரவி கருணாநாயக்கவின் சந்தேகம்

sri-lankan-parliament.jpgஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சென்றதற்காக பிரதியமைச்சர் அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். அவ்வாறெனில் யாழ்ப்பாணம் ஒரு தனிநாடாவென ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட ஒழுங்குப் பிரச்சினையொன்றின்போதே ரவி கருணாநாயக்க இவ்வாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது; ஒரு அமைச்சர் வெளிநாடுசெல்லும்போதுதான் அவரின் அமைச்சுப் பொறுப்புக்குப் பிரதியமைச்சர் நியமிக்கப்படுவதும் அவர் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்பதும் வழமை. ஆனால், பாரம்பரியக் கைத்தொழில்கள்,சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சென்றதற்காக அவரின் அமைச்சுப் பொறுப்பைப் பிரதியமைச்சர் சத்தியப் பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்டுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அமெரிக்கா செல்லவுள்ளதாலே இப்பதவிப் பிரமாணம் எனக் கூறப்பட்டது. ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமெரிக்கா செல்லவில்லை. யாழ்ப்பாணம் தான் சென்றார். அவ்வாறானால் யாழ்ப்பாணம் ஒரு தனிநாடா? அரசாங்கம் யாழ்ப்பாணத்தைத் தனிநாடாக ஏற்றுக்கொண்டுவிட்டதா? என்பது தொடர்பில் சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும்.

அத்துடன், இன்று ஒரு அமைச்சுக்கு இரு அமைச்சர்கள் உள்ளனர். இதில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரா அல்லது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பிரதியமைச்சர் அமைச்சரா என்பதையும் கூற வேண்டும் என்றார்.இதற்குப் பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ. இது தொடர்பில் தனக்கு எந்தவித அறிவிப்புகளும் வரவில்லை என்று கூறினார்

திருகோணமலை சிறைச்சாலையில் நேற்று “தீ”

திருகோணமலை சிறைச்சாலையில் நேற்று காலை கைதிகள் கோபமுற்ற நிலையில் தங்களது படுக்கை விரிப்புக்களை தீயிட்டு எரித்ததன் விளைவாக அங்கு விரைவாக தீப்பற்ற தொடங்கியது.

திருகோணமலை சிறைச்சாலை யில் நேற்று அதிகாலை சிறைச் சாலை அதிகாரிகளால் கைதிகளை சோதனையிட்ட பொழுது அங்கு கைதிகளிடமிருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசி மற்றும் பணமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை கண்டித்து கோபமுற்ற நிலையில் கைதிகள் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் அப் பகுதி கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீ அணைப்பு படையினர் சென்று தீயை அணைத்துள்ளனர். இத் தீ ஏனைய இடங்களுக்கு பரவாமல் உடைமைகள் உயிர் சேதங்கள் ஏற்படாதவாறு காப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றன.