November

November

“இங்கிலாந்து-சீனா உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டது.” – ரிஷி சுனக்

ஹாங்காங், உய்குர் இன முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை உள்ளிட்ட விவகாரங்களில் சீனா மற்றும் இங்கிலாந்து இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த சூழலில் சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற இங்கிலாந்தை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளரை போலீசார் அடித்து, உதைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இங்கிலாந்தின் பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற ரிஷி சுனக் முதல் முறையாக தனது வெளியுறவு கொள்கை குறித்து நேற்று உரையாற்றினார். அப்போது சீனாவுடான இங்கிலாந்தின் உறவு குறித்து அவர் கூறும்போது,

“முன்னாள் பிரதம மந்திரி டேவிட் கேமரூனால் ஏற்படுத்தப்பட்ட இங்கிலாந்து-சீனா உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டது. வணிகம் தானாகவே இரு நாடுகளுக்கிடையே சமூக, அரசியல் சீர்திருத்தத்துக்கு வழிவகுக்கும். எங்கள் மதிப்புகள், நலன்களுக்கு சீனா ஒரு சவாலை முன்வைத்திருக்கிறது. உலகளாவிய பொருளாதார உறுதித்தன்மை, பருவநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் சீனாவின் முக்கியத்துவத்தை நாம் வெறுமனே புறக்கணிக்க முடியாது. ஆனால், இது இன்னும் பெரிய சர்வாதிகாரத்தை நோக்கி நகரும்போது இன்னும் தீவிரமாக வளரும். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பல நாடுகள் இதை புரிந்துகொண்டிருக்கின்றன. சீனா உள்நாட்டு மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு முதல் அச்சுறுத்தல்” என கூறினார். 

நாட்டை விட்டு வெளியேற விருப்பமாக உள்ள 60வீதமான இலங்கை மக்கள் – நாடளாவிய ரீதியில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் தகவல் !

இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்த நாடளாவிய ரீதியில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 60 வீதமான இலங்கையர்கள் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால், வேறு நாட்டிற்கு குடிபெயர்வதை நோக்காகக் கொண்டுள்ளனர்.

அவர்களில், பெரும்பான்மையான இலங்கையர்கள் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, முக்கியமாக ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கு இடம்பெயர விரும்புகின்றனர்.

நாட்டின் கடன் தொடர்பாக, பெரும்பாலான இலங்கையர்கள் குறிப்பாக 37 வீதமானோர், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீனா இலங்கைக்கு உதவும் என்று நம்புகின்றனர்.

24 வீதமானோர், இந்தியா இலங்கைக்கு உதவும் என்றும் 14வீதமானோர் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஜப்பான் உதவும் என்று நம்புகின்றனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை அரசாங்கம் அணுகுவதை பெரும்பான்மையான 61வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுக்காணும் விடயத்தில் 57 வீத இலங்கை மக்கள் மத்தியில், மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கு நன்மதிப்பு உள்ளது.

இதனையடுத்து நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்கவின் மீது 45 வீத மக்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, 43 வீத பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறார்.

“சர்வதேச நாணய நிதியத்தின் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும்.”  – இந்திரஜித் குமாரசுவாமி

“சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது வைத்தியரை நாடுவதை போன்றது.அதனூடாக பெற்றுக் கொடுக்கப்படும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும்.”  என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்,

நிதி நல்லிணக்கத்தைப் பேணுவது இன்றியமையாதது என்றும், அதற்காக அரசியலமைப்பு ஏற்பாடுகள் போன்ற சட்ட காரணிகளால் நிதி முகாமைத்துவம் ஆதரிக்கப்பட வேண்டும். இலங்கை மத்திய வங்கியை அபிவிருத்தி வங்கியாகக் கருதாது அதன் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியம் ஆதரவளித்தாலும் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், இலங்கையில் செயற்படுத்தப்பட்ட மானியத் திட்டத்திற்கு அதிகப் பணம் செலவழித்ததன் காரணமாக வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை மேலும் அதிகரித்தது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்தது என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபைகள் கலைக்க ஜனாதிபதி ரணில் திட்டம்..? – ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு !

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த பதில், அர்த்தத்தை சிதைக்கும் விதத்தில் பல ஊடகங்களில் செய்திகளாக வெளியாகியுள்ளன என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் 2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாகாண சபைகளில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்கத் தயார் எனத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுதவிர மாகாண சபைகள் கலைப்பு தொடர்பாக ஜனாதிபதி எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிறைவேற்றுத் தீர்மானங்களை அமுல்படுத்துவதில் அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் சரியான ஒருங்கிணைப்பைப் பேணுவதற்கான களமாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் செயற்படும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடாகும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம், வளர்ச்சிப் பணிகள் முறையாக நடைபெறுவதுடன், நிதி வீண்விரயம் மற்றும் தாமதங்கள் தவிர்க்கப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீங்கள் தோட்டத்தொழிலாளர்களை கவனிக்காவிட்டால் தோட்டங்களில் வேலை செய்ய யாரும் இல்லாத நிலை ஏற்படும் – தலதா அத்துகோரள

தோட்ட தொழிலாளர்களை ஊக்குவிக்காவிட்டால், எதிர்காலத்தில் தோட்டங்களில் வேலை செய்ய யாரும் இல்லாத நிலை ஏற்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (நவ 30) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கைத்தொழில் அமைச்சு, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

தேயிலை உற்பத்தி குறைவடைந்து, தொழிற்சாலைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இரசாயன உரத்துக்கான தடையை உடனடியாக அமுல்படுத்தியவர்களே இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  இரசாயன உரத்தை தடை செய்த பின்னர், பசளை உரத்தை அங்கு தேடிக்கொள்ள முடியுமா என ஆராய்ச்சி செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார்கள்.

இதன் காரணமாக  வருடத்துக்கு 350 மில்லியன் கிலோ கறுப்பு தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு வந்தபோதும் கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி வரை விற்பனை செய்யப்பட்ட தேயிலை அளவு 209 கிலோ வரை குறைந்துள்ளது. அத்துடன் 2021, 2022 வருடங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், 2021இல் 34 மில்லியன் கிலோவாகவும், இந்த வருடம் ஒக்டோபர் வரை 46 மில்லியன் கிலோ வரை குறைவடைந்துள்ளது.

உரம் இல்லாமையே இதற்கு பிரதான காரணமாகும். அதனால் தேயிலை ஏற்றுமதியும் குறைவடைந்துள்ளது. எனவே, இந்திய கடன் உதவியால் பெற்றுக்கொள்ளப்படும் இரசாயன உரத்தை விநியோகிக்கும்போது சிறுதோட்ட உரிமையாளருக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசாங்கத்தின் வரி அதிகரிப்பால் தொழிற்சாலைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தின்போது 14 வீத வரி 30 வீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

உற்பத்தி செலவும் பாரியளவில் அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக, மின்சார கட்டண அதிகரிப்பு, போக்குவரத்து கட்டணம் அதேபோன்று தொழிலாளர்களுக்கான கூலி என செலவு அதிகரித்துள்ளது. இதனால் கறுப்பு தேயிலை 1 கிலோ உற்பத்தி செய்ய 300 ரூபா  செலவாவதுடன், வரி அதிகரிப்பினால் தொழிற்சாலைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நாட்டுக்கு டொலரை கொண்டுவரும் தொழிற்சாலைகளுக்கு நிவாரணம்  வழங்கிவிட்டு வரி அறிவிடுவதில் நியாயம் இருக்கின்றது. அவ்வாறு எந்த நிவாரணமும் வழங்காமல் வரி அதிகரித்திருப்பதால் தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் நிலையே ஏற்பட்டிருக்கின்றது.

அதேநேரம் தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலமே தேயிலை தோட்டங்களை பாதுகாக்க முடியும்.

உரம் இல்லாமையால் அதிகமான தேயிலை தோட்டங்கள் காடாகி இருக்கின்றன. இவ்வாறான தோட்டங்களை தொழிலாளர்களுக்கு வழங்கி, நியாயமான தொகையை கொழுந்துக்கு வழங்கவேண்டும்.

அத்துடன் இந்தியாவிலிருந்து வந்து தோட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தவர்கள் தற்போது வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு, தோட்டங்களில் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்க வேண்டும் என தெரிவித்தோம்.

ஆனால், தற்போதுள்ள செலவுக்கு 1000 ரூபா போதாது. 2 ஆயிரம் ரூபா வரை வழங்கவேண்டும். என்றாலும், கம்பனிகளுக்கும் அந்தளவு வழங்க முடியாத பிரச்சினை இருக்கின்றது.

இருந்தபோதும் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் தோட்டங்களில் வேலை செய்ய யாரும் இருக்காத நிலையே ஏற்படும் என்றார்.

இரண்டு மகள்மாரையும் ஒரு மகனையும் பல வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை !

ஹோமாகம, திபாங்கொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தனது இரண்டு மகள்மாரையும் ஒரு மகனையும் பல வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.

இவரின் மனைவி பத்து வருடங்களுக்கு முன்னர் பிள்ளைகளை விட்டுச் சென்றதால் 13 வயது மகன், 16 வயது இளைய மகள் மற்றும் 24 வயது மூத்த மகள் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், சந்தேக நபரான தந்தையால் பல வருடங்காளல் இரு மகள்மாரும் 13 வயது மகனும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரால் 16 வயது மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்படி, பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று வீட்டுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மூவரிடமும் விசாரணை நடத்தியதில், சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டதனையடுத்து தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 “தமிழ் இனம் தோற்று விட்டதாக யாருமே கருதக் கூடாது.” – நாடாளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

“தமிழ் இனம் தோற்று விட்டதாக யாருமே கருதக் கூடாது.” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக மாவட்ட அபிவிருத்தி சபையை பரிசீலிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று நாடாளுமன்றில் தெரிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை தீர்க்கும் வகையில், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக, மாகாணங்களின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன.

அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதுவே அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைச் சாத்தியமான வழிமுறையாகவும் இருக்கின்றது.

இவ்வாறான சூழலில் 80 களின் ஆரம்பத்திலேயே தமிழ் மக்களினால் ஏகோபித்த குரலில் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை தொடர்பாக பிரஸ்தாபிப்பதற்கு நாம் தயாராக இல்லை.

2009 ஆம் ஆண்டு இந்த நாட்டில் நிறைவடைந்த யுத்தம் என்பது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் சிலரால் முன்னெடுக்கப்பட்ட தவறான வழிமுறைக்கு கிடைத்த தோல்வியாகவே அனைவரும் கருத வேண்டுமே தவிர, தமிழ் மக்கள் தோல்வியுற்ற சம்பவமாக அதனை யாரும் கருதக்கூடாடது.

தமிழ் மக்கள் மத்தியிலும், சிங்கள மக்கள் மத்தியிலும் இருக்கின்ற சில இனவாத சக்திகள், தங்களின் அரசியல் நலன்களுக்காக, தமிழ் மக்கள் தோல்வியடைந்து விட்டார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவே பிரச்சினைகள் இன்னும் தீராமல் இருப்பதற்கு காரணமாக இருக்கின்றது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்
எவ்வாறெனினும், தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாட்டினை தற்போதைய ஜனாதிபதி தெளிவாக புரிந்து வைத்திருக்கின்மை, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரின் செயற்பாடுகளில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது” எனவும் தெரிவித்துள்ளார்.

ஓமான் மனித கடத்தல் விவகாரம் – ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இலங்கை புலனாய்வுத்துறை !

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானில் வசிக்கும் 77 பேரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் செயலாளர் இ.குஷான், ஓமானில் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளதாகவும் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர் 2022 டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் மார்ச் மாதம் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், போதிய ஆதாரம் இல்லாததால் விசாரணை கைவிடப்பட்டது.

“கஞ்சா பயிர் செய்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கினால் நாட்டில் சந்திக்கு சந்தி கஞ்சா விற்பனை நிலையங்கள் தோற்றம் பெறும்.” – முன்னாள் சுகாதார்துறை அமைச்சர் சன்ன ஜயசுமன

“கஞ்சா பயிர் செய்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கினால் நாட்டில் சந்திக்கு சந்தி கஞ்சா விற்பனை நிலையங்கள் தோற்றம் பெறும்.” முன்னாள் சுகாதார்துறை அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் இகலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் கஞ்சா பயிர்செய்கையை சட்டபூர்வமாக்க வரவு-செலவுத் திட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.கஞ்சா நேரடியாக மருத்துவ சிகிச்கைக்காக பயன்படுத்தப்பட மாட்டாது. ஆயர்வேத மருத்துவ தேவைக்கு பூச்சியமளவில் தான் பயன்படுத்தப்படுகிறது.

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கும் முயற்சியின் பின்னணியில் உலகளாவிய மட்டத்தில் முன்னிலை வகிக்கும் பிரதான நிலை புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. நான் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த போது இந்த நிறுவனங்கள் இவ்விடயம் தொடர்பில் என்னிடம் பேச்சுவார்தையில் ஈடுப்பட்டார்கள்,ஆனால் அவர்களின் நோக்கத்திற்கு இடமளிக்கவில்லை.

மருத்துவ பயன்பாட்டுக்கான கஞசா பாவனை என்று குறிப்பிடப்படுவதற்கு பின்னணியில் இந்த முன்னிலை நிறுவனங்கள் தான் உள்ளன. 1895 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சிகரெட் உற்பத்தி ஒப்பீட்டளவில் தான் முன்னேற்றமடைந்துள்ளது. சிகரெட் பாவனைக்கு மாற்றீடு ஒன்றை இந்த நிறுவனங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன. அதற்காகவே கஞ்சா பாவனையை தெரிவு செய்துள்ளார்கள்.

இந்த நிறுவனங்களின் தேவைக்கேற்ப கஞ்சாவை பயிரிட நேரிடும். முதல் மற்றும் இரண்டாம் தொகையை மாத்திரம் இந்த நிறுவனங்கள் பொறுப்பேற்கும் மிகுதியை பொறுப்பேற்காத நிலையில் நாட்டில் சந்திக்கு சந்தி கஞ்சா விற்பனை நிலையங்கள் தோற்றம் பெறும் இக்கட்டான நிலை ஏற்படும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் லெபனான் 2019 ஆம் ஆண்டு கஞ்சா பயிர்செய்கையை சட்டபூர்வமாக்கியது. லெபனான் பொருளாதாரத்தில் தற்போது முன்னேற்றமடைந்துள்ளதா..? என்பது பற்றி ஆராய வேண்டும். தாய்லாந்து நாட்டில் கஞ்சா பயிர்செய்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆனால் தாய்லாந்து நாட்டின் சுகாதார மருத்துவ சங்கம் இந்த அனுமதிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை அறியவில்லையா?

ஆயர்வேத மருத்துவ ஏற்றுமதிக்காக மாத்திரம் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதி வழங்கப்படும் என குறிப்பிடப்பிடுவது சாத்தியமற்றது.  சட்ட அங்கிகாரம் வழங்காத நிலையில் இளைஞர் யுவதிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். ஆகவே ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள இளைஞர்களை மீட்டெடுப்பதை விடுத்து புகையிலை நிறுவனங்களின் நோக்கிற்கு அகப்பட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

“வடக்கிலுள்ள இந்து மதக்கடவுளரை தெற்கில் உள்ள மக்களும் வழிபடுகின்றனர்.”- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (29) உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர்,

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும். இந்துக்கள் மட்டுமன்றி பௌத்த விகாரைகளிலும் இந்துமதத்தின் பல தெய்வங்களை வழிபடுகின்றார்கள்.

உதாரணமாக யாழ்ப்பாணத்தில் சிவ வழிபாடு பொதுவானது. தெற்கில் விஸ்ணு கடவுளை வழிபடுகின்றனர். ஏராளமான இந்து தெய்வங்களை தெற்கில் வழிபடுகின்றனர். விஸ்ணு, கந்தன், பத்தினி உள்ளிட்ட பல தெய்வங்களை வழிபடுகின்றனர். இந்தியாவில் உள்ள இந்து மதத்தைவிட இலங்கையில் உள்ள இந்து மதத்தின் தனித்துவம் குறித்து ஒரு அறிக்கையை தொகுக்குமாறு அமைச்சரைக் கேட்டுக்கொள்கின்றேன்.

ஏனைய கட்சிகள் இதற்கு உதவ முடியும். வட இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசத்தையும் நீங்கள் காணலாம். இது நாம் செய்ய வேண்டிய ஒன்று. அதேபோல், இலங்கை வரலாற்று ஆய்வு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க வேண்டும். நாம் வரலாற்றை மறந்துவிடுகிறோம். எனவே, வரலாறு குறித்த அறிவையும், ஆராய்ச்சியையும் முன்னெடுப்பதற்காக இந்த நிறுவனம் செயற்பட வேண்டும். மகாவம்சத்துடன் நாம் அறிந்த வரலாற்றில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மகாவம்சத்தில் உள்ள திகதிகளை மாற்ற முடியாது. மகாவம்சத்திலும் ஒரு தரப்பினரின் கருத்துக்களே இருக்கின்றன. வெளியே வேறுகருத்துக்களும் இருக்கின்றன. இவற்றை கருத்திற்கொண்டு இலங்கை வரலாற்று ஆய்வு நிறுவனமொன்றை ஏற்படுத்த வேண்டும்.” என கூறியுள்ளார்.