August

August

கனடா அனுப்புவதாக கூறி வவுனியாவில் 6 பேரிடம் பணம் பெற்று மோசடி !

கனடா அனுப்புவதாக கூறி வவுனியாவில் 6 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை வவுனியா பொலிசார் இன்று (31) கைது செய்துள்ளனர்.

வவுனியாவின் பட்டக்காடு, திருநாவற்குளம், தவசிகுளம், மல்லாவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 நபர்களிடம் கனடா அனுப்புவதாக கூறி யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பணம் பெற்றுள்ளார்.

ஒருவரிடம் இருந்து 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 6 பேரிடம் பணம் பெற்றுள்ளதுடன், பிறிதொருவரிடம் 3 பவுண் சங்கிலி ஒன்றையும் பெற்றுள்ளார்.

எனினும் கனடா அனுப்பாது மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட நபர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா தலமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரத்நாயக்கா  தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செல்வ சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் பக்தர்களின் 25 பவுண் தங்க நகைகள் திருட்டு !

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் 25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.

 

ஆலய தேர் திருவிழா புதன்கிழமை (30) நடைபெற்றது. அதன் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

அவ்வேளையில், சன கூட்டத்தை பயன்படுத்தி திருடர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தோரின் நகைகளை திருடி உள்ளனர்.

 

நகை திருட்டுக்கள் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. முறைப்பாட்டின் பிரகாரம் சுமார் 25 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர்மலையில் விகாரை கட்டிய தொல்பொருள் திணைக்களம் – முல்லைத்தீவு நீதிமன்றம் வெளியிட்டுள்ள கட்டளை !

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அத்துமீறி விகாரை கட்டப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவானால் வழங்கப்பட்டுள்ளது.

 

நீதிமன்ற கட்டளைகளை மீறி அங்கு கட்டுமானங்கள் இடம்பெறுவதாக குறித்த ஆலயத்தினுடைய பக்தர்களால் ஆதாரங்களுடன் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டிருந்தது.

அதை தொடர்ந்து அங்கு கட்டுமானப்பணிகள் இடம்பெற்றனவா..? என்பது தொடர்பாக ஆராய்வதற்காக நீதிமன்றத்தால் கள விஜயம் செய்யப்பட்டது.

ஏற்கனவே செய்யப்பட்ட கள விஜயத்தை கருத்தில் கொண்டு இன்றைய தினம் குறித்த கட்டளை வழங்கப்பட்டிருந்தது.

 

அதாவது கட்டளையை வழங்கிய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுள்ளன எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை எனவும் கட்டளை வழங்கியுள்ளார்.

 

இதன்போது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஆலய நிர்வாகம் சார்பிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் முன்னிலையாகி இருந்ததோடு ஆலய நிர்வாகம் சார்பாக நிர்வாகிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம் ஏ சுமந்திரன், முன்னாள் மாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

இதேவேளையிலே தொல்லியல் திணைக்களம் சார்பாக தொல்லியல் திணைக்களத்தின் வவுனியா, முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களின் உதவி பணிப்பாளர் மற்றும் தொல்லியல் திணைக்கள சட்டத்தரணிகள் காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.

இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் – 8 மாதங்களில் 5000 முறைப்பாடுகள்!

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக இந்த வருடம் 5000 இக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் காப்புறுதி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 5,456 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் காப்புறுதி அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

அவற்றில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,296 முறைப்பாடுகளும், கடுமையான காயங்கள் தொடர்பாக 163 முறைப்பாடுகளும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 242 முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன.

 

மேலும், சிறுவர்கள் பிச்சை எடுப்பது தொடர்பாக இதுவரை 196 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுதொடர்பான முறைப்பாடுகள் பெரும்பாலும் கொழும்பு மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து பதிவாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் இணையவெளியில் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக 110 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சிறுமிகள் தொடர்பில் 76 முறைப்பாடுகளும், சிறுவர்கள் தொடர்பில் 31 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பான தகவல்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மூன்று கோடி ரூபாய் ஐஸ் போதைப்பொருளுடன் மன்னார் இளைஞன் கைது !

மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் பகுதியில் வைத்து சுமார் 3 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு வரை செவ்வாய்க்கிழமை (29) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.

 

மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் குறித்த போதைப்பொருள் கடத்தி செல்லப்பட்ட நிலையில், விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உயிலங்குளம் பகுதியில் வைத்து குறித்த பஸ் விசேட அதிரடிப்படையினரால் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த நபர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

 

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் போதைப்பொருள் உயிலங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் 3 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியானது என தெரிய வந்துள்ளது.

“திருகோணமலையில் முதலீடு செய்ய இந்தியாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள்.” -. அமைச்சர் பந்துல குணவர்தன வேண்டுகோள் !

“திருகோணமலையில் முதலீடு செய்ய இந்தியாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள்.” என என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

 

நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் அபிவிருத்தி திட்டங்களுக்கான முதலீடுகளை மேற்கொள்வதற்கு சகல நாடுகளுக்கும் வாய்ப்பளிக்கப்படும். அந்த அடிப்படையிலேயே திருகோணமலையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. எனவே இவ்விடயத்தில் இந்தியா, சீனா, அமெரிக்கா என்று பாகுபாட்டுடன் சிந்திப்பது தவறாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்தார் .

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வீழ்ச்சியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்குள் நடைமுறை சாத்தியதமான வழிமுறைகள் எவையும் இல்லை.

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்காவிட்டால் இலங்கையை என்றுமே கட்டியெழுப்ப முடியாது.

 

இவ்வாண்டுக்குள் கடன் மறுசீரமைப்புக்களை நிறைவு செய்தால், அடுத்த வருடத்தில் அபிவிருத்தி திட்டங்களை மீளத் தொடங்குவதற்கான கடனுதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு எந்த நாடுகள் முன்வந்தாலும் அவற்றுக்கு வாய்ப்பளிக்கப்படும்.

 

இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா என்று பாகுபாட்டுடன் சிந்தித்தால் அது தவறாகும். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை நன்கு அவதானிக்க வேண்டும்.இவ்வனைத்து நாடுகளும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதன் ஊடாகவே அசுர வேகத்தில் அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கின்றன.

 

அதன் அடிப்படையிலேயே திருகோணமலையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

திருகோணமலையில் மாத்திரமின்றி இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும், வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதே எமது இலக்காகும். அதற்கு வாய்ப்பளிக்காவிட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது.” என அவர் தெரிவித்துள்ளார்.

“இலங்கை இனிமேலும் ஏனைய நாடுகளுக்கு சுமையாக இருக்கக் கூடாது.” – ஜனாதிபதி ரணில்

“இலங்கை இனிமேலும் ஏனைய நாடுகளுக்கு சுமையாக இருக்கக் கூடாது.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் நிலையான அபிவிருத்தி நோக்குநிலை என்ற தலைப்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிபுணர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

 

இலங்கை இனிமேலும் ஏனைய நாடுகளுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்றும் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் செயற்பட்டமை போன்று, உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி ஒரு நாடாக நாமும் தனித்து முன்னேற முயற்சிக்க வேண்டும்.

 

ஐரோப்பாவின் பொருளாதாரம் இன்றளவிலும் சரிவை எதிர்கொள்கிறது. மறுமுனையில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக அமெரிக்கா இருந்த நிலையை விடவும் தற்போது ஓரளவு முன்னேற்றம் கண்டுவருகிறது. சீனா இன்னும் மீண்டு வரவில்லை. எனவே, உலகப் பொருளாதார முன்னேற்றம் தடைப்பட்டுள்ளதுடன், அதனால் பெரும் பாதிப்புக்களையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

 

அவ்வாறென்றால், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு நாம் எவ்வாறு நிதியைப் பெற்றுக்கொள்வது? மற்றும் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைத் தணிக்கவும் உலகளாவிய நிதிக் கடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நிதி நிவாரணங்களை பெற்றுக்கொள்ளும் முறைமைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அந்த இலக்குகளை அடைவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

 

2030ஆம் ஆண்டுக்குள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும், 2050ஆம் ஆண்டாகும் போது காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை அடைவதற்குத் தேவையான நிகழ்ச்சி நிரலை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கும் அனைத்து நாடுகளின் ஆதரவையும் ஐநா பொதுச்செயலாளர் அண்மையில் கோரியிருந்தார்.

இவை அனைத்திற்கும் தேவையான வளங்களைக் கண்டறியும் திறன் நமக்கு இருக்க வேண்டும். இதற்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இருக்கும் நிதி போதுமானதாக இருக்கும் என்று சிலர் நினைத்தனர். ஆனால் அந்த நாடுகள் அதற்கு முன்வரவில்லை.

 

மேலும், தற்போது அவர்களிடம் அதற்கான வளங்கள் போதுமானதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அது தொடர்பாகவும் கவனம் செலுத்தி, இந்த நிதி மூலங்களைக் கண்டறிவது குறித்தும் சிந்திக்க வேண்டும்.

 

மேலும், இதற்காக, பலதரப்பு அபிவிருத்தி வங்கிகளிடமிருந்து மட்டுமன்றி, தனியார் துறையிலிருந்தும் நிதி நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த வகையில் முதலீடுகளுக்கும் பிணைமுறிகளை வெளியிடுவதற்குமான வாய்ப்புக்களை தனியார் துறைக்கு வழங்க வேண்டியது அவசியமாகும்.

 

2019 இல் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய, மொத்தத் தேசிய உற்பத்தியில் 9 சதவீதத்தை மாத்திரம் வைத்திருப்பதே எமது தேவையாக இருந்தது. ஆனால் தற்போது, இந்தப் பின்னணியிலும், காலநிலை மாற்ற இலக்குகளுக்காக நாம் நிதியை ஒதுக்க வேண்டியுள்ளது.

 

நாம் தொடர்ந்தும் முன்பு இருந்தது போன்று சிறிய பொருளாதாரமாக செயல்பட முடியாது. நாம் நமது பொருளாதாரத்தை விஸ்தரிக்க வேண்டும். இதற்காக புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

 

இதற்குத் தேவையான வெளிநாட்டு முதலீடு மற்றும் மூலதனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அபிவிருத்தி இலக்குகளை அடைய கூட்டாகவும் குழுவாகவும் செயல்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா – எதிர்க்கும் வட அமெரிக்கா இந்துகள் கூட்டணி !

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்து. சாதி பாகுபாட்டை எதிர்த்து மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சமூகங்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த இந்த சட்ட மசோதா உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மசோதா அம்மாநில கவர்னர் கவின் நியூசோமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும், சட்டமாக்கப்படும். மசோதா நிறைவேற்றியதன் மூலம், சாதி பாகுபாடு எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றிய முதல் அமெரிக்க மாநிலம் என்ற பெருமையை கலிபோர்னியா பெற்றுள்ளது. உறுப்பினர் ஆயிஷா வஹாப் அறிமுகப்படுத்திய இந்த மசோதாவிற்கு ஏராளமான சாதி சமத்துவ மக்கள் உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன.

 

எஸ்.பி.403 சட்ட மசோதாவிற்கு ஆதரவு அளித்த அனைத்து உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்த வஹாப், நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பாகுபாட்டில் இருந்து மக்களை பாதுகாக்கிறோம் என்றார். அதேவேளையில் வட அமெரிக்கா இந்துகள் கூட்டணி (CoHNA) கலிபோர்னியா வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் எனக் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆட்களற்ற வீடுகளை இலக்கு வைக்கும் போதைக்கு அடிமையானவர்கள் – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள், அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

அவர்கள் வீடுகளுக்குள் இருந்து பெரும் குரல் எழுப்பி சத்தங்களையும் எழுப்புவதனால் , அவ்வீடுகள் அமைந்துள்ள வீதிகளால் பயணிப்போர் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர்.

 

யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில், ஊசி மூலம் அதிகளவில் போதையை உட்செலுத்துவதாலும், தொடர்ந்து போதையை நுகர்வதால் கிருமி தொற்றுக்கு இலக்காகியும் உயிரிழப்புக்கள் ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளமையால், சந்தேகத்திற்கு உரிய இடங்களில் பொலிஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தை பெற்றெடுத்த 14 வயது சிறுமி – தகவலை மூடி மறைத்த வைத்தியசாலையின் விசேட சிறுவர் சத்திர சிகிச்சை நிபுணர் !

சிறுமி ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவத்தை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரிவிக்காமல் மறைப்பதற்காக கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட சிறுவர் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குழந்தையைப் பெற்றெடுத்த 15 வயதுடைய சிறுமி பண்டாரகம பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

 

சிறுமி 14 வயதில் கர்ப்பமாக இருந்ததால் அவர் பிரசவித்த குழந்தை குறைந்த எடையுடையதாக இருந்ததன் காரணமாக ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக இந்தச் சிறுமி அறுவைச் சிகிச்சை நிபுணரால் கராப்பிட்டிய வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவுக்கு அனுப்பி வைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

 

அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்தச் சிறுமி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், வைத்தியசாலை ஊழியர்கள் இது தொடர்பில் வைத்தியசாலை சட்ட மருத்துவப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர்.

 

இந்நிலையில், குறித்த வைத்தியர், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அவ்வாறான அறிவித்தலை வழங்கக் கூடாது என அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

 

எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.