14

14

அரச வைத்தியசாலையில் மருத்துவ ஊழியர்களின் தவறினால் பிரசவ நேரத்தில் தரையில் வீழ்ந்து இறந்த சிசு !

சுகாதாரப் பிரிவின் கவனக்குறைவால் நாட்டில் அண்மைக்காலமாக பல மரணங்கள் பதிவாகி வரும் நிலையில் மற்றுமொரு மரணமும் பதிவாகியுள்ளது. மருத்துவ ஊழியர்களின் தவறினால் பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில் வீழ்ந்த சிசு ஒன்று, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) உயிரிழந்துள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லஞ்சிய என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய் ஒருவர்; பிரசவத்துக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

பிரசவ நேரத்தில், மருத்துவ ஊழியர்களால் குழந்தையைப் பிடிக்க முடியாமல் தரையில் வீழ்ந்துவிட்டதாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரேதப் பரிசோதனையில் குழந்தை கீழே வீழ்ந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தையின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பெலரஸில் இருந்து போலந்திற்கு சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்களுடன் பல நாடுகளின் பிரஜைகள் கைது !

பெலரஸில் இருந்து போலந்திற்கு சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்களுடன் பல நாடுகளின் பிரஜைகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கை குடிமக்கள் உட்பட 160 பேர் வார இறுதியில் போலந்திற்குள் செல்ல முயன்றன என போலந்து ஊடகம் தெரிவித்துள்ளது.

நான்கு சிரிய மற்றும் மூன்று பங்களாதேஷ் குடிமக்களை போலந்திற்கு கொண்டுசெல்வதற்கு உதவ முயற்சித்த மூன்று உக்ரேனிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஏற்கனவே 500க்கும் மேற்பட்டோர் சட்டவிரோத எல்லைக் கடப்பு நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான அடையாளங்களோ மேலதிக விபரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.