27

27

சிம்பாப்வேவின் புதிய ஜனாதிபதியாக எம்மர்சன் மங்கக்வா !

ஆப்பிரிக்க நாடான சிம்பாப்வேவில் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அதிபர் தேர்தல் கடந்த 23, 24-ந் திகதிகளில் நடந்தது. இதில் ஜனாதிபதி  எம்மர்சன் மங்கக்வா, எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சமிசா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

 

தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் ஜனாதிபதி  எம்மர்சன் மங்கக்வா 52.6 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசா 44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலம் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார். ஆனால் தேர்தல் முடிவை எதிர்க்கட்சி ஏற்க மறுத்து உள்ளது.

 

இதுகுறித்து எதிர்க்கட்சி செய்தி தொடர்பாளர் கூறும்போது, சரியான சரி பார்ப்பு இல்லாமல் அவசர மாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றார். தேர்தல் 23-ந்திகதி ஒரு நாள் மட்டுமே நடத்தப்பட இருந்தது. ஆனால் வாக்கு சீட்டு அச்சடிப்பதில் ஏற்பட்ட தாமதம், சிக்கல்கள் காரணமாக 24-ந்திகதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மேலும் ஜனாதிபதி தேர்தல் முடிவு நாளை வெளியிடப் படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒரு நாள் முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ராபர்ட் முகாபே அரசு, இராணுவ புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. அதன்பின் இடைக் கால அதிபராக எம்மர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேர்தலில் எம்மர்சன் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இதனால் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதை எம்மர்சன் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினார். தற்போது 2-வது முறையாக எம்மர்சனின் வெற்றியை எதிர்க்கட்சி ஏற்காததால் போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளது.

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற போது முக்கிய பதவியிலிருந்த சந்தோஷ் ஜா !

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக இராஜதந்திர சேவையில் உள்ள சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார். 2020ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலமும் கொழும்பில் உயர்ஸ்தானிகராக இருக்கும் கோபால் பாக்லே அவுஸ்திரேலியாவில் இந்தியாவின் இராஜதந்திர பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

2020ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமனம் பெற்ற சந்தோஷ் ஜா, 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார்.

மேலும், 2017 – 2019 ஆண்டுகளில்  வொஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதுவராக கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், 2015 – 2017 வரையிலான ஆண்டுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சின் கொள்கை திட்டமிடல் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இந்த காலப்பகுதியில், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய ஈடுபாடுகளுக்கும் சவால்களுக்கும் பதிலளிக்கும் திறன் கொண்ட இராஜதந்திர பிரிவை உருவாக்க பங்களிப்பு செய்திருந்தார்.

குறிப்பாக, முக்கிய இந்திய வெளியுறவுக் கொள்கை முன்முயற்சிகளை உருவாக்குவதிலும், பல மூலோபாய உரையாடல் மன்றங்களை நிறுவுவதிலும் நெருக்கமாக செயற்பட்டவராகவே இராஜதந்திரி சந்தோஷ் ஜா காணப்படுகிறார்.

அதே போன்று பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மையப்படுத்தி உலகளவில் புகழ்பெற்ற ரெய்சினா கலந்துரையாடல்களிலும் முக்கிய பங்கை வகித்துள்ளார். அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களையும் கையாண்டுள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற 2007 தொடக்கம் 2010 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயத்தில் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அதனை தொடர்ந்து, அமெரிக்க – இந்திய அணு ஆயுத பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினராகவும் பொறுப்புக்களை ஏற்றிருந்தார். இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக, இலங்கையில் இறுதிப்போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மற்றும் கட்டுமான துறைகளை மேம்படுத்தும் இந்திய திட்டங்களிலும் முக்கிய பங்கை வகித்திருந்தார்.

எனவே, இலங்கையின் உள்ளக அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பரந்துபட்ட அனுபவத்தை கொண்ட மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜாவை கொழும்பில் அடுத்த உயர்ஸ்தானிகராக கடமைகளை பொறுப்பேற்க டெல்லி அனுப்புகிறது.

இலங்கையை மையப்படுத்திய சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து இந்தியாவின் மூலோபாய கவலைகள் அதிகமாக காணப்படுகின்ற சூழலில் இந்த நியமனம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.