May

May

நேபாள விமான விபத்து – 22 பேரின் சடலங்களும் மீட்பு !

நேபாளத்தின் சுற்றுலா நகரான பொக்காரவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு நேற்று முன்தினம் சென்ற விமானம், இமயமலை பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விமானத்தில் ஊழியர்கள் உள்பட 22 பேர் இருந்தனர். அவர்கள் அனைவருமே பலியாகி விட்டனர். நேற்று காலையில் விமானம் விழுந்த பகுதியை நேபாள மீட்பு படையினர் கண்டுபிடித்தனர்.

நேற்றே 21 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. ஒருவரது உடல் மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இன்று காலையில் அவரது உடலும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

இதற்கிடையே விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டது. அதனையும் மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். இனி அதனை ஆய்வு செய்த பின்னரே விபத்துக்கான முழுமையான காரணங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உட்பட ஆறு பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் !

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ளது காரவலி கிராமம்.  இந்த பகுதியை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார்.
அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த அவர்கள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து அறிந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.  உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்ட போது அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட ஐந்து பெண் குழந்தைகளும் அடங்கும்.  அந்த பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  குடும்ப தகராறின்போது அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் வெறுப்படைந்த அவர், பெற்ற தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் – சிரட்டை அலங்கார உற்பத்திகளில் ஈடுபடும் முல்லைத்தீவு பெண் முயற்சியாளர் !

இலங்கையில் இன்னமும் செய்தால் அரச வேலை மட்டுமே செய்வோம் என பலர் அரச வேலைக்காக மட்டுமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையே நீடிக்கின்றது. மேலும் அதிகமானோர் இலங்கையில் வேலை செய்வதற்கான முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் கூட வெளிநாடுகளை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.  இலங்கை போன்ற நாடுகளில் பல பெண்கள் பெரும்பாலும் தங்களுடைய வாழ்க்கையை திருமணத்துடன் முடக்கி கொள்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக செயற்பட்டு கொண்டிருக்கிறார் முல்லைத்தீவின் உடையார்கட்டு பகுதியில் சிரட்டை கைத்தொழில் தொடர்பான அலங்கார பொருட்களை உற்பத்தி செய்துவரும் நிதர்சனா என்ற பெண்மனி.

கந்தசாமி கிரிதரன் என்ற முகநூல் கணக்கில் பதிவிடப்பட்டிருந்த ஒரு பதிவில் குறித்த சிரட்டை அலங்கார பொருட்கள் உற்பத்தி பற்றிய விடயங்களை காணக்கிடைத்ததன் அடிப்படையில் தேசம் இணையதளத்திலிருந்து குறித்த தொழில்முயற்சியாளரை தொடர்பு கொண்டிருந்த போது அவர் ,

No photo description available.

தானும் தன்னுடைய கணவருமாக இணைந்து குறித்த தொழில்முயற்சியை மேற்கொள்வதாகவும் – குறித்த தொழிலை செய்வது மனதுக்கு நிறைவானது எனவும் குறித்த முயற்சியாளர் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த உற்பத்திகளை நேரடியாக சென்று பெற்றுக்கொள்ள முடிவதுடன் உங்களுக்கு ஏற்றாற் போல அலங்காரங்களிலான உற்பத்திகளையும் பெற்றுக்கொள்ள முடியும். வடமாகாண பகுதிகளுக்கு ஓர்டர் செய்து பெற்றுக்கொள்ளவும் முடிகிறது.

பிறந்தநாளுக்கும் ஏனைய கொண்டாட்டங்களுக்கும்  நாம் ஏதோவொரு பொருட்களையும் – வெளிநாட்டு உற்பத்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பரிசில்களை தெரிவு செய்யாது நமது உள்நாட்டு உற்பத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.

உற்பத்திகளை பெ்றுக்கொள்வதற்கு தொடர்புகளுக்கு –

நிதர்சிகா 0768915974

கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனா். தொடக்கப்பள்ளியில் நடந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா்.

இந்த தொடா் துப்பாக்கி சூடு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு சட்டமாகிவிட்டால், கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது என்று ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டிற்குள் டொலரை வர வழிவிடுங்கள்! உல்லாசப் பயணிகளுக்கு வழிவிடுங்கள்! – த.ஜெயபாலன்

நாட்டின் மொத்த உற்பத்தியில் 12வீதத்தை அதாவது 10 பில்லியன் டொலர்களை நாட்டிற்குள் கொண்டுவரும் உலாசப் பயணிகளுக்கு வழிவிடுங்கள். நாட்டின் பொருளாதாரம் நெருக்கடி நிலையைச் சந்திக்கிறது என்று போராடுபவர்கள் நாட்டின் பொருளாதார விருத்தியை முடக்குவது தீர்வு அல்ல.

இன்று எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பது அவற்றை கொள்வனவு செய்வதற்கான அந்நியச் செலவாணி இல்லாமையே. அதனால் நாட்டிற்குள் டொலரைக் கொண்டுவரக்கூடிய நடவடிக்கைகளை முடக்கிவிட வேண்டும். இக்கருத்துக்கு முற்றிலும் முரணாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்குள் வரும் உல்லாசப் பயணிகள் காலிமுகத்திடலில் மட்டையைப் பிடித்து போராடலாம் என்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நாங்கள் பயப்படும் அளவுக்கு ஆபத்தானது அல்ல. இச்சூழலை சாதகமாக்கவும் வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த வெளிநாட்டவர் தற்போது உலகம் சுற்ற விரும்புகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள நாணய ஒடுக்கும் அல்லது நாணயத்தின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இலங்கையின் உல்லாசப் பயணத்துறைக்கு ஒரு வரப்பிரசாதம். உல்லாசப் பயணிகளை எங்கள் நாட்டுக்கு வந்து, குறைந்த செலவில் எம் நாட்டின் அழகை ரசியுங்கள். எங்கள் கலை கலாச்சாரங்களை அறியுங்கள் என்று உல்லாசப் பயணிகளுக்கு செங்கம்பள வரவேற்பளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு போராடுகிறோம், எரிக்கிறோம், கொழுத்துகிறோம் என்பதெல்லம் கஞ்சி ஊத்தாது.

இரண்டு ஆண்டுகால கோவிட் முடக்கத்தில் உலக பொருளாதாரமே முடங்கிக் கிடந்தது. அந்த முடக்கத்தில் இருந்து மெல்ல எழ ரஷ்யா, உக்ரைன் மீது படைநகர்த்தி சர்வதேச அரசியல் – பொருளாதாரச் சூழலை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. இந்த நெருக்கடி நிலைக்குள் இருந்து மீள்வதற்கு எவ்வித திட்டமிடலும் இல்லாமல் ஜேவிபி இப்போராட்டத்தை மிகத் திட்டமிட்ட முறையில் நடாத்தி வருகின்றது. இந்தப் போராட்டம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக தன்னியல்பானதாக நடைபெற்றதாகச் சொல்லப்பட்டாலும் ஜேவிபிக்கு ஆதரவாகவே போராட்டம் நகர்கின்றது. ஜேவிபின் தவைரைத் தவிர ஏனைய கட்சித் தலைவர்கள் போராட்ட களத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஒரே நாளில் 30 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை திட்டமிட்டு எரிக்கின்ற அளவுக்கு இலங்கையில் தன்னியல்பு தலைமைகள் கிடையாது.

முப்பது ஆண்டுகள் உலகின் மிக நவீன ஆயதங்களை வைத்து போராடிய விடுதலைப் புலிகளால் மே 19ற்குப் பின் ஒரு துப்பாக்கிச் சூட்டைக் கூட நடத்த முடியவில்லை. ஆகையால் நடந்த எரிப்புச் சம்பவங்களுக்குப் பின்னணியில் ஜேவிபி இல் இருந்து பிரிந்த அதிதீவிரவாதப் பிரிவாகச் செயற்பட்டுவரும் முன்னிலை சோசலிசக்கட்சி குமார் குணரட்ணம் மீதே மையம்கொள்கின்றது.

ஆனால் இடதுசாரித்துவம் பேசும் ஜேவிபியோ முன்னிலைவாத சோசலிசக் கட்சியோ இந்தப் பொருளாதார நெருக்கடியில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் பங்களிப்புப் பற்றி வாயே திறக்கவில்லை. சர்வசே நாணய நிதியம் உலக வங்கி பற்றி தொடர்ந்தும் மௌனமாகவே உள்ளனர். இவர்களின் தோழமைக் கட்சியாக அணுகக் கூடிய பிரித்தானியாவில் செயற்படும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாகவும் முன்னிலை சோசலிசக் கட்சி மௌனம் காக்கின்றது.

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பு காலிமுகத்திடல் போராட்டத்திற்கு கொள்கையளவான ஆதரவை வழங்கிய போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அவை அனைத்துமே சர்வதேச நாணய நிதியத்த்தினதும் உலக வங்கியினதும் கொள்கைகளுக்கும் அவர்களுடைய நிபந்தனைகளுக்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. அனைத்து கடன்களையும் இரத்து செய்யுமாறு கோருவதோடு பெரு முதலாளிகளின் சொத்துக்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யக் கோருகின்றது. விவசாயிகளுக்காக மானியங்களை வழங்குவதுடன் மலையக தொழிலாளர்களின் நிலவுரிமையை உறுதி செய்யவும் கோருகின்றது. ஆனால் காலிமுகத்திடல் போராட்டம் இந்த நிபந்தனைகளைப் பற்றி எவ்வித கரிசனையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு பொருளாதார நெருக்கடிக்காகப் போராடும் தன்னை தீவிர இடதுசாரியாக தக்கவைத்துக்கொள்ளும் ஜேவிபி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி எந்தவொரு இடதுசாரி பொருளாதாரக் கோசங்களையும் வைக்கவில்லை. மாறாக அரசியல் கோஷத்தை மட்டுமே வைக்கின்றனர்.

இதன் பின்னணி என்ன? ஜேவிபி, முன்னிலை சோசலிசக் கட்சி தற்போது விலைபோகத் தயாராகி விட்டதா? குமார் குணரட்ணம் முன்னிலை சோசலிசக் கட்சியயை உருவாக்கியதைத் தொடர்ந்து பின் புலம்பெயர்நாடுகளில் இருந்தும் பலர் முன்னிலை சோசலிசக் கட்சியின் – சமவுடமை இயக்கத்தில் தங்களை வெளிப்படையாக இனம்காட்டிக்கொண்டனர். குறிப்பாக பிரான்ஸில் இடதுசாரிப் புயல் இரயாகரன், பிரித்தானியாவில் புதிய திசைகள் மற்றும் பல இடதுசாரி சிந்தனையுடையவர்களும் தங்களை முன்னிலை சோசலிசக்கட்சியுடன் அடையாளம் காட்டினர்.

ஆனால் தமிழ் சொலிடாரிட்டி தவிர்ந்த ஏனை இடதுசாரிக்குழுக்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராகவோ உலக வங்கிக்கு எதிராகவோ கருத்துக்களை மிக அடக்கியே வாசிக்கின்றனர். பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பும் வெற்று அரசியல் கோஷங்களையே வைத்து போராட்டம் நடத்தினர்.

அரசும் புதிய பிரதமர் உட்பட போராட்டகாரர்களும் நாட்டின் நிலைமையை மோசமடையச் செய்துகொண்டுள்ளனர். அரசு ஆணித்தரமான முடிவுகளை எடுக்க வேண்டும். இன்று ஏற்பட்டுள்ள நிலையை இலங்கையின் எதிர்காலத்திற்கு சாதகமாக மாற்ற முடியும். அதற்கு அரசியல் வாதிகளும், பல்கலைக்கழகங்களும் ஒருங்கிணைந்து நீண்டகாலத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

நாட்டை உல்லாசப் பயணிகளுக்கு திறந்துவிடுவதுடன் உல்லாசப் பயணத்துறையை காத்திரமான முறையில் வளர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அரசு நாடுகளுக்கு இடையேயான கடன்கள் உட்பட அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்!
நாணயப் பெறுமதி குறைந்துள்ளதை சாதகமாக்கி ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்!!
சிறிலங்கா பெஸ்ற் மற்றும் மேடின் சிறிலங்கா என்பன நாட்டின் தாரகமந்திரமாக வேண்டும்!!!

ஆண்களை வழுக்கை என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலாகும் – இங்கிலாந்தில் நீதிமன்றம் தீர்ப்பு !

பணியிடத்தில் ஒரு மனிதனை வழுக்கை என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலின் வரம்புக்குள் வரும் என்று இங்கிலாந்தில் உள்ள வேலைவாய்ப்பு தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது.

ஒரு ஆணை ‘வழுக்கை’ என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தல் என்றும், அது பெண்ணின் மார்பகங்களை பற்றி கருத்து தெரிவிப்பதற்கு சமம் என்றும் பிரித்தானிய வேலைவாய்ப்பு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

பெண்களை விட அதிகமான ஆண்களுக்கு முடி உதிர்வதுதான் இந்த முடிவின் அடிப்படையாக அமைந்துள்ளது.

தீர்ப்பாயத்தின் கூற்றுப்படி, ஒரு ஆணின் வழுக்கையைப் பற்றி கருத்து தெரிவிப்பது ஒரு பெண்ணின் மார்பகத்தின் அளவைக் குறிப்பிடுவதற்கு சமம். ஏனென்றால், இது உண்மையிலேயே பாலினத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம், இது பாகுபாட்டைக் குறிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் ஒரு எலக்ட்ரீஷியன் மற்றும் அவர் வேலை பார்க்கும் நிறுவன முதலாளிகளுக்கு இடையேயான வழக்கில் தீர்ப்பாயம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. Tony Finn எனும் அந்த தொழிலாளி இங்கிலாந்தில் மேற்கு யார்க்ஷயரை தளமாகக் கொண்ட British Bung Company-ல் கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் பணிபுரிந்தார் மற்றும் கடந்த ஆண்டு மே மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, 64 வயதான அவர் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் தீர்ப்பாயத்தில் புகார் அளித்திருந்த நிலையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோட்டா கோ ஹோம் – அவிழ்க்கப்படாத ஆனால் அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சுக்கள்!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானகோ ஹோம் கோட்டா என்ற  போராட்டம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த போராட்டம் சுமார் 50 நாட்களை கடந்துள்ளது.

Shoplifting protest in Sri Lanka today | இலங்கையில் இன்று கடையடைப்பு போராட்டம்

கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு பாரியளவில் நிலவியது.

இதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதியின் மிரிஹான பகுதியிலுள்ள வீட்டை கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி மக்கள் சுற்றி வளைத்து போராட்டம் நடத்தியிருந்தனர்.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதல் தேதியில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் காலி முகத்திடலுக்கு வருகைத் தந்து, தமது ஆதரவை வழங்கியிருந்தனர். அன்று முதல் சில வாரங்கள் தொடர்ச்சியாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் வெளியில், கடும் மழை, குளிர் என எதையும் பொருட்படுத்தாது, பகலிரவாக இந்த போராட்டத்தை நடத்தி வந்திருந்திருந்தனர்.

குறிப்பாக ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

கொழும்பு – காலி முகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தன்னெழுச்சி போராட்டமொன்றை இளைஞர்கள் இணைந்து ஆரம்பித்திருந்தனர். குறித்த அதே நாளில் முன்னாள் பிரதமர் மகிந்த பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததததுடன் அப்போதைய பிரதமராக கடமையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகையில் தமது ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடலொன்றை அன்றைய தினம் நடத்தியிருந்தார்.

இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட தரப்பினர், அங்கிருந்து வெளியேறி, பேரணியாக காலி முகத்திடலை நோக்கி வருகைத் தந்தனர்.

இவ்வாறு வருகைத் தந்தவர்கள், காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம பகுதியிலுள்ள கூடாரங்களுக்கு சேதம் விளைவித்து, அமைதி வழியில் போராட்டங்களை நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதையடுத்து, அமைதி வழி போராட்டம் வன்முறையாக மாறியது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வந்த பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அரச எதிர்ப்பு போராட்டக்காரர்களினால் சேதம் விளைவிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது.

அந்த போராட்டத்தில் பலர் காயமடைந்ததுடன், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தை அடுத்து, நாடு தழுவிய ரீதியில் பல்வேறு விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

மேலும் போராட்டத்தின் போது அமரகீர்த்தி அத்துக்கோரல என்பவர் கொலை செய்யப்பட்டதுடன் இந்தக்கலவரங்களின் போது இருநூறுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இவ்வாறாக இடம்பெற்ற கலவரங்கள் அடுத்தடுத்து ராஜபக்சக்களின் ஆட்சியை ஆட்டம் காண வைத்ததது போல செய்திகளும் பகிரப்பட்டன. குறிப்பாக மகிந்த ராஜபக்ஷவின் தலைமறைவு, பஷில் ராஜபக்சவின் பதவி விலகல்,  அவருடைய பிரதமர் பதவி பறிக்கப்பட்டமை, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பொறுப்பேற்றமை என பல மாற்றங்கள் அடுத்தடுத்து இடம்பெற்று விட்டன.

 

இன்னும் இவர்கள் எதிர்பார்த்த கோட்டாபாய ராஜபக்ஷ பதவி விலகவில்லை. ஆனால் போராட்டம் இன்று வலுவிழந்த நிலையிலேயே பயணிப்பதை அறிய முடிகிறது. ஆரம்பத்தில் இருந்த வேகமும் – உற்சாகமும் போராட்டக்காரர்களிடம் இல்லை. எனினும் உண்மையாக காலி முகத்திடலில் மாற்றத்துக்காக கூடிய குறிப்பிட்ட சிலர் மட்டுமே இன்னமும் அங்கு தங்கி போராடிக்கொண்டிருக்கின்றனர்.

50 நாட்களை தொட்டுள்ள இந்த போராட்டம் இன்று வரை தீராத பல சந்தேகங்களையும் – முடிவில்லாத பல வினாக்களையும் இந்த போராட்டம் எழுப்பியுள்ளதையும் மறுக்க முடியாதுள்ளது.

1. இந்த போராட்டத்தை நடாத்துவது யார்..? முக்கியமாக இதனை ஒழுங்கமைப்பது யார்.?

பல நேரங்களில் தொழி்ற்சங்கங்களும் – பல்கலைகழக மாணவர் ஒன்றியங்களும் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்கின்ற போதும் கூட போராட்டத்தை கொண்டு நடாத்த ஒருஅமைப்பு தேவைப்படுகிறது தானே..? அந்த அமைப்பு யார் ..? என்பது இது வரை தெரியவில்லை.

2. இந்த போராட்டம் யாரை எதிர்த்து மேற்கொள்ளப்படுகின்றது..?

இலங்கை வன்முறை: காலிமுகத் திடலில் அரங்கேறிய வன்முறை - படத்தொகுப்பு - BBC News தமிழ்

ஆரம்பம் முதலே பொருளாதார நோக்கமே இந்த போராட்டத்தின் அடிப்படை எனப்பட்டாலும் கூட ராஜபக்சக்களை இலக்கு வைத்து முன்வைக்கப்பட்ட  கோ ஹோம் கோட்டா, கப்புட்டா கா கா என பல ஸ்லோகங்கள் ஏன் முக்கியம் பெற்றன என்பது இன்று வரை தெரியவில்லை. இவர்கள் சொன்னது போல பசிலும் பதவி விலகி விட்டார். மகிந்தவும் பதவி விலகிவிட்டார். அடுத்தது கோட்டா பாய ராஜபக்ச தான் என்கின்றனர்.

உண்மையிலேயே ராஜபக்சக்கள் போய்விட்டால் நாட்டின் பொருளாதாரம் சீராகி விடுமா என்கின்ற கேள்வியும் எழுப்பப்பட வேண்டிய தேவையும் உள்ளது.

அடுத்த பத்து ஆண்டுகள் கோட்டாபாயவின் ஆட்சியும் – தொடர்ந்து நாமல் ராஜபக்சவின் ஆட்சியும் தான் தொடரப்போகிறது என அரசியல்வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்ட நிலையில் அவர்களின் அரசியல் அத்திவாரமே ஆட்டங்கண்டுள்ளதன் பின்னணில் ஏதோ ஒரு அரசியல் இருக்க வேண்டும் என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது. அதனை கண்டறிய வேண்டிய  – வெளிப்படுத்த வேண்டியும் தேவையும் ஒரு பக்கம் இருக்கிறது.

3. இணைய தள ஹேக்கர்களின் வருகையும் – அனுர குமார திஸ நாயக்க வெளிப்படுத்திய ஊழல் அறிக்கையும்.

கோட்டா கோ ஹோம் போராட்டங்கள் வலுவடைந்து கொண்டிருந்த போது கணினி ஹேக்கர்களில் குழுவான  ‘அனானிமஸ்,(anonymous) குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எச்சரிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததது. 14 நாட்களுக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும் புதிய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த காணொளியில் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்ததது. இல்லாவிட்டால் ராஜபக்ஷ  குடும்பத்தின் அனைத்து ரகசியங்களும் வெளியாகும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.

 

இந்த வீடியோ தொடர்பான எச்சரிக்கை வெளியானதை தொடர்ந்து  இலங்கையின் சமூக வலைதளங்களில் இது தொடர்பான வாதங்கள் அதிகமாகியிருந்ததது. இதனை  தொடர்ந்து ஒரு சில நாட்களுக்குள்  ஜே.வி.பி தலைவர் அனுர குமார திஸநாயக்க அவசர அவசரமாக ஒரு ஊடக சந்திப்பை கூட்டி ராஜபக்சக்களதும், சஜித் பிரேமதாச, மைத்திரிபால சிறீசேன குழுவினரதும், ரணில் விக்கிரமசிங்கவினதும் கடந்த கால ஊழல்களை அம்பலப்படுத்தியிருந்தார். ராஜபக்சக்கள் மீதான கோபத்தையும் போராட்டத்தையும் தங்கள் பக்கமாக திருப்பி  ஜே.வி.பி மட்டுமே இலங்கையின் உண்மையான கட்சி என்பது போன்றதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகவே இந்த சம்பவத்தை பார்க்க வேண்டியுள்ளது..

 

அனானிமஸ் குழுவினது ஆதாரங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஊடகங்களுக்கு அனானிமஸ் குழுவினது ஆதாரங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவனவாக தோன்றாத நிலையில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடியதான ஜே.வி.பியின் செய்திகளை காவிக்கொண்டு திரிந்தன. இதே காலத்தில் ஜே.வி.பி சார்பு ஊடகங்களும் – சில கொமினியூஸ்ட் எழுத்தாளர்களும் ஜே.வி.பி யே மீட்க தகுதியானவர்கள் என குறிப்பிட்டு எழுத தொடங்கினர்.

மக்கள் போராட்டம் என கூறப்பட்ட ஒரு போராட்டத்தை ஜே.வி.பி தன் பக்கம் கவர முற்படுகிறதோ என்ற ஐயம் தான் இங்கு அதிகமாக உள்ளது.

 

04. ஏப்ரல் 9 போராட்ட களத்தில் சஜித் தாக்கப்பட்டதும் – அனுர குமாரவுக்கு கிடைத்த வரவேற்பும்.

ராஜபக்சக்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏற்புடையவையே. இதற்கு ராஜபக்சக்கள் தான் பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள். இதில் எந்த மாற்றுக்கருத்துக்களும் இல்லை. ஆனால் ராஜபக்சக்களை கேள்வி கேட்பதில் மட்டுமே முனைப்பு காட்டிய சமூக வலைதளவாசிகளும் சரி – இலங்கையின் ஊடகங்களும் சரி ஏனைய சம்பவங்களையும் – அதன் போக்குகளையும்  சரியாக கவனிக்க தவறிவிட்டன.

மே- 9 ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டம் உச்சமாக வலுவடைந்த போது அரசுக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் அரச ஆதரவு குண்டர்களால் தாக்கப்பட்டனர். தாக்கப்பட்டோரை காலி முகத்திடலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச,  போராட்டக்காரர்கள் என குறிப்பிடப்பட்ட பலரால் துரத்தப்பட்டார். எனினும் அதே நேரம் போராட்ட களத்தை காண வந்த ஜே.வி.பி தலைவர் அனுரகுமார கைத்தாங்களாகவும் – கையசைத்தும் அந்த பரபரப்புக்குள்ளும் வரவேற்கப்பட்டார். இதனை ஊடகங்களும் பெரிய செய்தியாக காட்சிப்படுத்தின.

உண்மையிலேயே இது மக்கள் போராட்டம் எனில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் பிரமுகரை மட்டும் தாக்கி – இன்னுமொரு கட்சி பிரமுகரை வரவேற்பது எந்தளவுக்கு பொருத்தமானது என்பதும் சிந்திக்கப்பட வேண்டியதே..!

இலங்கையில் ஜனாதிபதி வீட்டின் முன் நள்ளிரவில் வெடித்த வன்முறை

5. எரியூட்டப்பட்ட ஆளுந்தரப்பினருடைய வீடுகளும் – சாதாரண மக்களும்.

மே – 9 அளவில் விஸ்வரூபம் எடுத்த போராட்டத்தில் பல அமைச்சர்களுடைய வீடுகளும் – ஆளுந்தரப்பினருடைய வீடுகளும் சாதாரண மக்களால் எரியூட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளின் உண்மைத்தன்மைகள் சீர்ததூக்கி ஆராயப்பட வேண்டும். சுமார் 30க்கும் அதிகமான வீடுகள் எரிக்கப்பட்டன. இங்கு இரண்டு வினாக்கள் கேட்கப்பட வேண்டியுள்ளன.

  • எரியூட்டப்பட்ட எந்த வீட்டிலும் உயிர்சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை. குறிப்பாக ஆட்கள் யாருமே இல்லாத வீடுகள் எரிக்கப்பட்டன. இது எவ்வாறு சாத்தியமானது..?
  • அமைச்சர்களின் வீடுகளை எரிக்குமளவிற்கு சாதாரண மக்கள் செயற்படக்கூடியவர்களா..? தைரியமுடையவர்களா..?

இந்த இரு கேள்விகளுக்குமான பதில் இல்லை. மே – 9 கலவரங்கள் தொடர்பில் இது வரை 1800க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர் மேலும் ஆளுந்தரப்பை சேர்ந்த மகிந்த ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நாமல் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும் இத்தனை வன்முறையான சம்பவங்களை யார் தூண்டினார்கள் என்பது இது வரை தெரியவில்லை. இது தொடர்பான கருத்துக்களும் வெளிவரவில்லை.

6. ரணிலின் வருகையும் – எதிர்க்கட்சிகளின் அமைதியும்.

தொடர்ந்து இரண்டு மாதங்களாக உக்கிரமைந்திருந்த போராட்டம் கோட்டா கோ ஹோம் போராட்டங்கள் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதும் அமைதியை நிலையை எட்டியுள்ளன. அரசுக்கு எந்த விதத்திலும் ஆதரவளிக்க போவதில்லை என காட்டுக்கூச்சல் போட்டுக்கொண்டிருந்த ஜே.வி.பி யாக இருக்கலாம், சஜித் பிரேமதாச தரப்பாக இருக்கலாம், போராட்டக்காரர்களாக இருக்கலாம் அனைவரும் அமைதி காக்க ஆரம்பித்துள்ளனர். இவர்கள் விலக சொன்ன கோட்டாபாய இன்னும் பதவியில் தான் உள்ளார். இந்த எதிரக்கட்சிகளின் சத்தம் ரணில் வருகைக்கு பிறகு என்ன ஆனது என்பதே தெரியவில்லை.

 

9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை: 1348 சந்தேகநபர்கள் கைது

இந்த போராட்ட விடயங்களை கொண்டு போய் சேர்க்கும் ஊடகங்கள் சரியான – உண்மையான பக்கச்சார்பற்ற விடயங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும். பல தமிழ் ஊடகங்கள் போர்க்குற்றவாளிகளான ராஜபக்சக்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்படுவது போலவே செய்திகளை பிரசுரிப்பதை காண முடிந்ததது. ராஜபக்சக்கள் குற்றவாளிகளாகவே இருக்கட்டும். ஆனால் ராஜபக்சக்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதாக நினைத்துக்கொண்டு சஜித் பிரேமதாச குழுவினரையும் – ஜே.வி.பி குழுவினரையும் புனிதப்படுத்தும் முயற்சிகளையே நமது தமிழ் ஊடகங்கள் மேற்கொள்கின்றன.

அமைதியாக ஆரம்பித்த மக்கள் போராட்டம் மே-9 ஏன் வன்முறையை நோக்கி நகர்ந்ததது..? அல்லது மக்கள் வன்முறைக்கு தூண்டப்பட்டார்களா..? மக்களை வன்முறைக்கு தூண்டியது யார்.? அமைதியான போராட்டம் தான் எனில் ஏன் போராட்டத்தில் பங்கு கொண்ட 1500க்கும் மேலான மக்கள் கைதாகினர்.? அவ்களின் விடுதலைக்கு யார் உறுதி..? மக்கள் போராட்டத்தை ஏன் ஜே.வி.பி பக்கம் திருப்ப முயல்கிறார்கள்..? அல்லது ஜே.வி.பி யின் போராட்டத்தை தான் மக்கள் போராட்டம் என அடையாளப்படுத்திக் கொண்ருக்கின்றனவா ஊடகங்கள்.? இந்த போராட்ட காரர்களின் உண்மையான நோக்கம் என்ன..? மே – 9 இரவு எரிக்கப்பட்ட வீடுகளில் ஏன் ஆட்கள் நடமாட்டமே இருக்கவில்லை.? ராஜபக்சக்கள் பதவி விலகினால் நாடு சீராகிவிடுமா..? இந்த  போராட்டம் யாருக்கு எதிரானது..? அப்படியானால் ராஜபக்சக்ளை தெரிவு செய்த69 லட்சம் மக்களும் முட்டாள்களா..? இப்படியாக பல வினாக்கள் .

கொரோனா இடர்பாடு , உக்ரைன் – ரஷ்ய போர், சீனாவில் மீண்டும் நாடு முடக்கம் என பல விடயங்கள் உலகின் பொருளாதாரத்தை ஆட்டுவித்துக்கொண்டு தான் இருக்கின்றன.  அண்மையில் ஐரோப்பிய நாடுகளில் பண வீக்கம் கனிசமாக அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் பொருட்களின் விலை இரு மடங்கால் அதிகரிக்கின்றது . இப்படியாக பொருளாதார பிரச்சினைகள் உலகம் முழுதிலும் அதிகரித்து்ககொண்டுள்ள நிலையில் இதன் தாக்கமே இங்கேயும் உணரப்படுகிறது.

இதற்கான தீர்வுக்காக இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்துமே இணைந்து செயற்பட்டு நாட்டை வளப்படுத்த முன்வருவதே புத்திசாலித்தனமானது. இதை விடுத்து மக்களின் பிரச்சினையை வைத்து அரசியல்வாதிகளும் – அரசியல் கட்சிகளும்  குளிர்காய்வதற்கு இடமளிக்கமுடியாது. இதற்கு ஊடகங்கள் துணை போவதை ஏற்கவும் முடியாது. வெளிப்படையாக இது பெரிய போராட்டம் – பெரிய மக்கள் இயக்கம் என நாங்கள் புலம்பித்தீர்த்தாலும் கூட இந்தப்போராட்டத்தின் அடி வேர்கள் மக்கள் கண்களை இன்னமும் கட்டியுள்ள அரசியல் அறியாமையேயாகும். இலங்கை மக்கள் இன்னமும் அரசியல்மயப்படுத்தப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். இந்த சுயநலவாதிகளின் அரசியல் போதைக்கு பாவம் சாதாரண – ஏதுமறியாத மக்களே இன்னமும் பயன்படுத்தப்படுகின்றனர். கடந்த காலத்தில் சிறுபான்மை இனங்கள் மீது பெரும்பான்மை மக்கள் காட்டிய வன்முறைக்கு எந்த அறியாமை காரணமாக இருந்தததோ இன்று அதே அரசியல் அறியாமையை தென்னிலங்கை எதிர்க்கட்சி அரசியல் தலைமைகள் தங்களுக்கு ஏற்றாற் போல பயன்படுத்துகிறார்கள். மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் மிகக்கட்டாயமான தேவையேயாகும்.

பொறுமையாக இருந்துபார்ப்போம் மக்களின் பிரச்சினைகளை வைத்து இன்னமும் எத்தனை அரசியல் நாடகங்கள் அரங்கேறப்போகின்றன என்று..,

அமெரிக்காவில் 19 பாடசாலை மாணவர்களை சுட்டுக்கொன்ற இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்கள் !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள தொடக்கநிலைப் பள்ளியொன்றில் 18 வயது இளைஞா் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவா்கள், 2 ஆசிரியா்கள் பலியாகினா். துப்பாக்கிச்சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்கிற இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் துப்பாக்கிசூடு நடாத்திய இளைஞர் தொடர்பில் பல விடயங்கள் வெளியாகியுள்ளன.

சால்வடார் ராமோஸ் 3 வயது இருக்கும் போதே அவரது தாயும், தந்தையும் பிரிந்துவிட்ட நிலையில், தாயின் பராமரிப்பில் இருந்துள்ளார். ராமோசின் தாய் போதைப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவருக்கு தாயின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் போனதோடு, ராமோசை தினமும் அவரது தாய் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.

இதனால் தாயிடம் இருந்து பிரிந்து பாட்டியுடன் வசித்து வந்த ராமோசுக்கு பேச்சு குறைபாடு இருந்ததால் பள்ளியில் சக மாணவர்களால் கேலி, கிண்டலுக்கு ஆளாகி வந்தார். இதனால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு 18 வயது நிரம்பியதும், சேகரித்து வைத்த பணத்தில் 2 நவீன துப்பாக்கிகளை வாங்கியுள்ளார்.

அதன் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்துவது குறித்து இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக பல பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். அதை தொடர்ந்து, பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து கொடூர தாக்குதலில் ஈடுபட்ட ராமோஸ் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார்.

இலங்கை அரசியல் வாதிகளை மிஞ்சும் ஒக்ஸ்போர்ட் பட்டதாரி பிரதமர் பொறிஸ் ஜோன்சன்!!!

உலகை ஆட்டிப்படைக்கும் விலைவீக்கம் – இன்பிளேசன் பிரித்தானியாவையும் விட்டுவைக்கவில்லை. இரண்டு வீதமாக இருக்க வேண்டிய விலைவீக்கம் பத்துவீதத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. பெற்றோல் மற்றும் எரிவாயுவின் விலைகள் எகிறிவருகின்றது. பொருளாதாரமட்டத்தில் விளிம்புநிலையில் உள்ள மக்களை காப்பாற்ற அவர்களுக்கு உதவும் படி தொழிற்கட்சி மற்றும் பொது அமைப்புகள் கேட்ட போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கொன்சவேடிவ் அரசு கடுமையாக மறுத்துவந்தது. இந்தப் பின்னணியில் பிரித்தானியாவின் எரிபொருள் நிறுவனங்கள் வரலாறு காணாத லாபத்தை ஈட்டின. அந்த லாபத்திற்கு கூட்டுத்தாபன வரியை அறவிடும்படி தொழிற்கட்சியும் ஏனைய அமைப்புகளும் சில மாதங்களாகவே கோரி வந்தன. கூட்டுத்தாபன வரியை எரிபொருள் நிறுவனங்கள் மீது விதித்தால் அவர்கள் மாற்று சக்திகளில் முதலீடுவது பாதிக்கும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட மாற்று சக்திகளில் முதலீட்டுக்கு தூண்ட வேண்டும் என்றெல்லாம் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான நிதியமைச்சர் ரிஷி சூனாக்கும் தெரிவித்து வந்தனர்.

ஆனால் இரவோடு இரவாக இவர்களுக்கு ஞானோதயம் பிறந்துவிட்டது. இன்று பொருளாதார நிலையில் கீழ்மட்டத்தில் உள்ள மக்களுக்கு மிகப்பெரும் உதவித் திட்டத்தை அறிவித்துள்ளனர். வறுமைக்கோட்டில் உள்ள ஒரு குடும்பம் வருடத்திற்கு 1200 பவுண்களை பெறும் அளவுக்கு உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுடைய சொந்தக் கட்சியினரே சோசலிசத்திற்கு இறைச்சியை வீசியெறிவதாக நையாண்டி பண்ணியுள்ளனர். பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் இந்த உதவித்திட்டம் இலங்கை அரசியல் வாதிகளின் சம்பள உயர்வு விரிக்குறைப்பையும் விஞ்சியுள்ளது.

உண்மையில் இந்த உதவி மக்களுக்குக் கிடைக்க வழி செய்தவர் சூ கிரே. இவர் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ‘லொக்டவுன் பார்ட்டி’களை விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தவர். இந்த அறிக்கை நேற்று மே 25இல் வெளியிடப்பட்டது. அதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவருடைய சகபாடிகளும் மேற்கொண்ட 20 வரையான பார்ட்டிகள் அம்பலத்துக்கு வந்தது மட்டுமல்ல பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் பொய் சொன்னதும் அம்பலமாகிவிட்டது. இந்த நெருக்கடி நிலையைச் சமாளித்து மக்களையும் ஊடகங்களையும் திசை திருப்ப, பொறிஸ் அரசு மாபெரும் பல்டி அடித்து எரிபொருள் நிறுவனங்கள் மீது 10 பில்லியன் பவுண்கள் வரை வரி விதித்து அதனை மக்களுக்குப் பகிர முன்வந்துள்ளது. இப்போது பொறிஸ் ஜோன்சன் குடுமியில்லாமலேயே ஆட்டுகின்றார். இங்கு பொறிஸ் ஜோன்சனை பல்டி அடிக்க வைத்த சூ கிரேயுக்கு மிகுந்த பாராட்டுக்களை மக்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் தொழிற்கட்சியின் தலைவராக இருந்த ஜெரிமி கோபின் தன்னுடைய கடைசி தேர்தலில் வைத்த திட்டங்களை தற்போது பொறிஸ் ஜோன்சன் ஒவ்வொன்றாக நிறைவேற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். கடைசியாக தன்னுடைய ஊத்தைகளை மறைத்து பேசுபொருளை திசைதிருப்ப எட்டு மில்லியன் மக்கள் வரை பயனடையக்கூடிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் போட்ட கூத்தை வைத்து பாதிக்கப்பட்ட மக்கள் நன்மைபெறும் வகையில் சூ கிரேயின் அறிக்கை தகுந்த நேரத்தில் வெளி வந்திருக்கிறது. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் உக்ரைன் யுத்தத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதன் முக்கிய நோக்கமும் தன்னுடைய ஊத்தைகளை மூடி மறைக்கவே.

அண்மையில் லண்டன் ஸ்கூல் ஒப் மனேஜ்மன்ற் எடியுகேஸன் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பேராசிரியர் ஒருவர் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம் தான் பொறிஸ் ஜோன்சனையும் உருவாக்கியது என்று நக்கலும் நளினமும் கலந்து தெரிவித்ததுடன் லண்டன் ஸ்கூல் ஒப் மனேஜ்மன்ற் எடியுகேஸன் அதனிலும் பார்க்க தரமான பட்டதாரிகளை உருவாக்குவதாகத் தெரிவித்து இருந்தார்.

அண்மைய விலை வீக்கம் காரணமாக இரு பிள்ளைகளையுடைய கணவன் மனைவியை கொண்ட குடும்பத்தின் செலவீனம் 400 பவுண்களால் அதிகரித்துள்ளது. அதன்படி ஆண்டுக்கு 4,800 பவுண்கள் மேலதிக செலவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு அதில் 25வீதத்தையே தர நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டது. இந்த சூ கிரேயின் அறிக்கை வந்திருக்காவிட்டால் மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி இருப்பார்கள்.

மாலைதீவில் அடைக்கலம் கோரிய மகிந்த..?

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பொதுமக்களின் தீவிர போராட்டம் காரணமாக கடந்த 9-ந்திகதி பதவி விலகினார். அத்துடன் நாடு முழுவதும் வன்முறை மூண்டதால் அவரது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் ராஜபக்ச, தனக்கும், தனது குடுமபத்தினருக்கும் மாலைத்தீவில் அடைக்கலம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.

ஆனால் மாலைத்தீவிடம் மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை என மாலைத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் மறுத்து உள்ளார். கொழும்புவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது போன்ற தவறான செய்திகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை சீர்குலைக்க சதி நடப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இது முற்றிலும் தவறான செய்தி. இந்த புனைக்கதைகளை வெளியிடும் சக்திகள் மாலைத்தீவுகளில் இருப்பது கவலையாக உள்ளது’ என்று கூறினார்.

இலங்கை பயணத்தின்போது மகிந்த ராஜபக்சேவை சந்திக்கவில்லை என்று கூறிய நஷீத், இந்த பொருளாதார நெருக்கடிக்கு மாலைத்தீவால் எவ்வாறு உதவ முடியும்? என்பது குறித்து ஆலோசிக்கவே இலங்கை வந்ததாகவும் தெரிவித்தார்.