25

25

இலங்கை மக்கள் அரசியல் விழிப்படைந்து விட்டார்களா? அல்லது ஏனைய நாடுகளில் மக்கள் முட்டாள்களாகி விட்டார்களா?

(அமெரிக்காவில் நேற்று படுகொலை செய்யப்பட்ட 19 முன்பள்ளி மாணவர்களில் நால்வர்)

இலங்கையில் பெற்றோலும் எரிவாயுவும் இல்லை என்று கியூவில் நிற்க ஆரம்பித்ததும் ‘கோட்டா கோஓ ஹோம்’ என்று போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவிலும் சர்வதேச நாடுகளிலும் கூடிக் கோஷம் எழுப்பினர். ஆனால் பொருளாதார நெருக்கடிக்கான காரணம் எங்கோ இருக்க அவரவர் தங்கள் முரண்பட்ட அரசியல் இலக்குகளுக்காக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் போராட்டத்தை நெய்யூற்றி வளர்த்துவிட, அது இலங்கையின் 30 பாராளுமன்ற உறுப்பினர்களது வீடுகளைப் பதம்பார்த்தது. பத்து வரையானோர் கொல்லப்பட்டனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் அரை நிர்வாணமாக்கப்பட்டனர். அப்படியானால் இலங்கை மக்கள் அரசியல் தெளிவு பெற்றுவிட்டார்கள்? அரசியல் விழிப்படைந்துவிட்டார்களா?

மறுபக்கம் அமெரிக்கா உலகம் முழக்க ஆயதங்களை விதைத்து, யுத்தங்களை உற்பத்தி செய்து அதன் மூலம் கொள்ளை லாபமீட்டுகின்றது. கோவிட் காலத்தில் கூட அமெரிக்கர்கள் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதைப் பற்றி கவலைப்படாமல் துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் வாங்கிக் குவித்தனர். அவ்வளவுக்கு துப்பாக்கிகள் மீது காதல் கொண்ட சமூகம். இரு வாரங்களுக்கு ஒருமுறை பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்துவதை வானவேடிக்கை செய்தியாக அறிந்து பழக்கப்படுத்தி விட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் 250 வரையான துப்பாக்கித் தாக்குதல்கள் பாடசாலைகளில் இடம்பெற்றுள்ளது.

நேற்று மே 24 ரெக்ஸஸ் மாநிலத்தில் 18 வயது இளைஞன் சிறார்கள் கற்கும் பாடசாலை வகுப்பினுள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் பத்து பதினொரு வயதான 19 மாணவர்களும் இரு ஆசிரியர்களும் கொல்லப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை கொண்டு வருவதற்கு ரிப்பப்பிளிக்கன் – குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பது மட்டுமல்ல ஆசிரியர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்றும் கோருகின்றனர். இப்பின்னணியில் கவனர் கிரேக் அப்போட் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்க பெற்ரோ ஓ ரொர்க், கவனருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர், மாநிலத் தலைவர்கள் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராகக் எதுவும் செய்யவில்லை என்று சத்தமிட்டார். அதற்குப் பதிலாக சத்தமிட்ட அப்பகுதியின் மேயர் டொன் மக்லவ்லின் “நீ ஒரு வருத்தம் பிடித்தவன் பெட்டை நாய்க்குப் பிறந்தவன்” என்று சத்தமிட்டதுடன் அவனைப் பிடித்து வெளியேற்றும்படியும் உத்தரவிட்டார். இத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டும் அதற்கு முதல் வாரம் பத்துப்பேர் இனவெறியனொருவனால் கொல்லப்பட்டும் யாரும் யாருடைய வீட்டையும் எரிக்கவும் இல்லை. யாரும் யாரையும் அரை நிர்வாணமாக்கவும் இல்லை.

இங்கு பிரித்தானியாவில் கோவிட் காலத்தின் ஒரு மூன்றுமாத காலாண்டில் பெற்ற 200 பில்லியன் பவுண் கடனில் பத்துவீதம் 20 பில்லியன் பவுண் பிரித்தானிய பிரதமர் பொறிஸ்ஜோன்சனின் சகபாடிகளுக்கு லஞ்சமாக, ஊழலாக, மோசடியாக வழங்கப்பட்டது. தினம் தினம் நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் கோவிட் காரணமாக பிரித்தானிய மக்கள் உயிரிழந்துகொண்டிருக்கையில் மரணப்படுக்கையில் உள்ளவரை இரத்த உறவுகள் கூட அருகிருந்து வழியனுப்பி வைக்க முடியாமல், நாட்டை முடக்கி வைத்திருந்தார் பிரதமர் பொறிஸ்ஜோன்சன். ஆனால் அந்த முடக்கத்தின் போது மகாராணியின் கணவர் பிலிப்பின் மரணத்தின் போது கூட ஒன்றல்ல இரண்டல்ல இருபது வரையான லொக்டவுன் பட்டிகளை பிரதமரின் உத்தியோகபூர்வமான வாஸஸ் தலமான 10 டவுனிங் ஸரீற்றில் பொறிஸ் ஜோன்சன் கொண்டாடி கூத்தடித்துள்ளார். இதனை எழுதும் போது கூட பிரித்தானியாவில் சராசரியாக 200 பேர்வரை கோவிட் காரணமாக இறந்துகொண்டுள்ளனர். ஆனால் பிரித்தானியாவில் கொன்சவேடிவ் கட்சியினர் இன்னமும் கோர்ட்டும் சூட்டும் போட்டு தினாவெட்டாகத் தான் திரிகிறார்கள். யாரும் யாருடைய வீட்டையும் எரிக்கவும் இல்லை. யாரும் யாரையும் நிர்வாணமாக்கவும் இல்லை.

பிலிப்பைன்ஸில் மிக மூர்க்கத்தனமாக லஞ்சம், ஊழல், போதைவஸ்து பாவனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிரபலமான ஜனாதிபதி ரொட்றிகோ டுரர்ரே இம்மாதம் முற்பகுதியில் இடம்பெற்ற தேர்தலில் லஞ்சம், ஊழலுக்கு பெயர்பெற்ற தம்பதிகளின் மகனிடம் பதவியைக் கையளிக்க வேண்டியதாயிற்று. இத்தேர்தலில் லஞம், ஊழல், மோசடிக்கு பெயர் போன பேர்டினன்ட் – இமெல்டா மார்க்கோஸ் தம்பதிகளின் புதல்வன் பொங்பொங் மார்க்கோஸ் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையினதும் சர்வதேசத்தினதும் சூழல் இலங்கை மக்கள் அரசியல் விழிப்படைந்து விட்டார்களா? அல்லது ஏனைய நாடுகளில் மக்கள் முட்டாள்களாகி விட்டார்களா? என்ற குழப்பத்தையே தருகின்றது.

உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காது தொடர்ந்தும் கடன் வாங்குவதிலேயே குறியாயிருக்கும் இலங்கை அரசாங்கம் – உலக வங்கியின் நிபந்தனை என்ன..?

இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. முக்கியமாக எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை திணறுகிறது. இந்த நிலையில்,  உலக வங்கியிடம் இலங்கை  மீண்டும் நிதியுதவி கேட்டிருந்த நிலையில், .
இந்த நிலையில் நிதியுதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கைக்கு ஒரு கடன் திட்டம் அல்லது புதிய கடன் உறுதிப்பாடுகளை முன்னெடுக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளதாக பல தவறான தகவல் வெளியாகியுள்ளன.
“இலங்கை மக்கள் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பரந்த அடிப்படையிலான வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்குவோம். அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
போதுமான பெரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை.
சில அத்தியாவசிய மருந்துகள், வருமானமற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு தற்காலிக பணப்பரிமாற்றம் உதவி, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களின் பிள்ளைகளின் பாடசாலை தேவைகள், உணவு, விவசாயிகள் மற்றும் சிறு வணிகங்களுக்கு ஆதரவாக போன்ற விஷயங்களில் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வளங்களை நாங்கள் தற்போது மீண்டும் உருவாக்குகிறோம் என்று தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறும்போது, “வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை அடுத்த 6 முதல் 7 மாதங்களுக்குள் நிறைவு செய்ய முடியும் என்று நம்பிக்கை உள்ளது.
 அந்நிய செலாவணியை செலவழிப்பதை விட அந்நிய செலாவணியை ஈட்டும் நாடாக இலங்கையை மாற்றுவதே தற்போதைய நெருக்கடிக்கு நீண்ட கால தீர்வாகும்.
இதன்படி இலங்கையின் அந்நிய செலாவணி ஈட்டும் திறனை நடுத்தர மற்றும் நீண்ட கால அளவில் மேம்படுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இலங்கையின் தற்போதைய நெருக்கடி தொடரும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதில் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளது என்றார்.
……………………………………………………………………………………………………………………………………………………
இவை ஒரு பக்கமாக இருந்தாலும் கூட வெளிநாட்டுக்கடன்களில் மட்டுமே தங்கியிருக்க இலங்கையின் அரசியல் தலைமைகள் முற்படுவது மிகுந்த வேதனையளிள்க கூடிய விடயமாக உள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து இலங்கை மக்களை சதேசிய உற்பத்திகளுக்கு பழக்கப்படுத்தி – மீண்டும் விவசாய தன்னிறைவு உடைய நாடாக – உற்பத்திகளை மேற்கொள்ள கூடிய ஒரு நாடாக இலங்கையை மாற்ற ஏற்றாற் போன்றதான அரசியல் – பொருளாதார கொள்கைகளை உருவாக்கும் வரை இந்த நிலை நீடித்துக்கொண்டேயிருக்கும்!

““கோடா-கோ-ஹோம்” என்ற கோஷத்தை நாம் பத்தாண்டுகளுக்கு முன்னமே எழுப்பியவர்கள்.”- மனோகணேசன்

இந்நாட்டில் வாழும் மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும் போராடும் சிங்கள இளைஞர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்மூலமே உண்மையான புதிய இலங்கையை கட்டி எழுப்ப முடியும். குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் உழைக்கும் மக்கள் சிறு தோட்ட நில உடைமையாளர்களாக மாற வேண்டும். வீடு கட்டி வாழ காணியும், உழைத்து வாழ விளை நிலமும் பெற்று அவர்களை வாழ வைக்க விரும்பும் எமது நோக்கங்களை முன்னிலை சோஷலிச கட்சி ஆதரிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்த முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவினரிடம், கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் திகாம்பரம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் இல்லத்தில், கூட்டணியினரை முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவின் சார்பில் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் புபுது ஜாகொட, சஞ்சீவ பண்டார ஆகியோர் சந்தித்தனர்.

முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவினருக்கு, மலையக அபிலாஷை ஆவணங்களை கையளித்த கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இந்நாட்டு மலையக தமிழரின் ஜனத்தொகை சுமார் பதினைந்து இலட்சம். இதில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் இன்னமும் தோட்ட சிறைகளுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களாக தோட்ட குடியிருப்புகளில் வாழ்கிறார்கள். இந்த தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை அரச பொது நிருவாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து, தேசிய நீரோட்டத்தில் உள்வாங்க வேண்டும்.

இதன் மூலம், நாட்டின் ஏனைய கிராமிய பிரதேசங்களில் நடைபெறுவதற்கு சமானமாக, தோட்ட பிரதேசங்களிலும் கிராம சேவகர் வலயங்கள், பிரதேச செயலக வலயங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வேண்டும். தோட்ட நிறுவனங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள தொழிலாளர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, கிராமிய, பிரதேச, மாவட்ட மட்டங்களில் பரவலாக்கப்பட்ட அரச நிறுவனங்களின், நிருவாக மற்றும் நலவுரிமை சேவைகளை பெருகின்ற முழுமையான குடிமக்களாக தோட்டங்களில் உழைக்கும் மக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

அதேவேளை இந்த தோட்ட சிறைகளுக்குள் வாழும் மலையக மக்களை உள்ளடக்கிய மலையக தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷகளை புரிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

இன்று நாட்டில் காலிமுக திடல் முதல், முழு நாட்டுக்குள்ளும் ஆங்காங்கே சிங்கள மக்கள் போராடுகிறார்கள். இந்த போராட்டக்காரர்கள் மத்தியில், முன்னிலை சோஷலிச கட்சிக்கு ஒரளவு செல்வாக்கு உண்டு என எமக்கு தெரியும். ஆகவே எமது இந்த கருத்துகளை அங்கே கொண்டு செல்லுங்கள்.

காலிமுக திடலில் போராடும் வேறு பல அணியினரும், எம்முடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் இன்று சொல்லலும் “கோடா-கோ-ஹோம்” என்ற கோஷத்தை நாம் பத்தாண்டுகளுக்கு முன்னமே எழுப்பியவர்கள். நாம் ஒடுக்கப்பட்ட இனத்தை பிரதிநிதித்துவம் செய்கிறோம். போராடும் சிங்கள குழுக்களிடம் இக்கருத்துகளை நாம் கூறியுள்ளோம். இந்நாட்டில் வாழும் மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும் போராடும் சிங்கள இளைஞர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்மூலமே உண்மையான புதிய இலங்கையை கட்டி எழுப்ப முடியும்.” என தெரிவித்துள்ளார்.

இரண்டாவது ஆண்டாகவும் ஒரு போட்டியிலும் விளையாடாத சச்சினின் மகன் – சச்சின் வழங்கியுள்ள பதில் !

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், இடக்கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜூன் டெண்டுல்கர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். இரண்டாவது ஆண்டாக அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் ஐபிஎல்லில் அர்ஜூன் ஆட்டத்தைப் பார்க்க ஆர்வமுடன் இருந்தீர்களா? என சச்சினிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சச்சின் பதிலளித்து கூறியதாவது:
இது வித்தியாசமான ஒரு கேள்வி. நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்ல. இந்த சீசனில் மும்பை அணிக்குரிய லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டது. அர்ஜூனுடன் என்னுடைய உரையாடல் எப்போதும் இப்படித் தான் இருக்கும்.
உன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பாதை சவாலானது. மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. உனக்கு கிரிக்கெட் மீது ஈடுபாடு இருந்ததால் கிரிக்கெட் விளையாட தொடங்கினாய். அந்த ஆர்வம் இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் வரை நீ தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அப்படிச் செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும் என சொல்வேன்.
ஆடும் லெவனில் அவரை சேர்ப்பது அணி நிர்வாகத்தின் முடிவு. அணித்தேர்வில் நான் ஒரு போதும் தலையிடுவது கிடையாது என தெரிவித்தார்.

70 மில்லியன் ரூபா முறைகேடு – நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர் !

இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி முறைப்பாட்டினை அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரக்பி விளையாட்டின் ஊக்குவிப்புக்காக என குறிப்பிட்டு ´கிரிஷ்´ என்ற நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டு நாமல் ராஜபக்சவுக்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோட்டாபாய பதவியேற்ற பின் எகிறிய கடன் தொகை – இலங்கையில் ஒரு தனிநபர் கடன் எவ்வளவு ..?

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் மொத்தக் கடன் 525,200 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கியின் 2021ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடன் அதிகரிப்பு காரணமாக 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனிநபர் கடன் சுமை 882,150 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் தொடக்க பள்ளியில் துப்பாக்கி சூடு – 19 சிறுவர்கள் பலி !

அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் துப்பாக்கி சூடு நடக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்க வரலாற்றில் பள்ளியில் மோசமான துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டெக்சாஸ் மாகாணம் உவால்டே நகரில் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இப்பள்ளியில் வாலிபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் திடீரென்று அங்கிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் மாணவர்கள் அலறியடித்தபடி ஓடினார்கள். துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

அதேபோல் ஆசிரியர்கள் சிலரும் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசார் பள்ளியை சுற்றிவளைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் பள்ளிக்குள் நுழைந்து வாலிபரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது போலீசார் துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலியானார்.

வாலிபர் நடத்திய கொடூர துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு ஆசிரியர் உள்பட 2 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்த மாணவர்கள் பலரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி முன்பு பெற்றோர்கள் குவிந்தனர். உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. பள்ளிக்குள் இருந்த மாணவர்களை போலீசார் வெளியே அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் அப்பகுதியை சேர்ந்த சால்வடார் ராமோஸ் என்பது தெரியவந்தது. 18 வயதான இவர் தனது பாட்டியை வீட்டில் வைத்து கொலை செய்துவிட்டு பின்னர் தொடக்கப்பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரின் மற்ற விபரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் பற்றி தெரியவில்லை. பலியான மாணவர்கள் 5 முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“இன்னமும் பிரதமராக பதவியேற்க நான் தயாராகவே இருக்கிறேன்.”- சஜித் பிரேமதாச

பிரதமராக பதவியேற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எவ்வாறாயினும், அதிகாரத்திற்காக ஒருபோதும் கொள்கைகளை காட்டிக்கொடுக்க மாட்டேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்க முடியாது என்று கூறவில்லை. இன்னும் பிரதமராக பதவியேற்க நான் தயாராக இருக்கிறேன். எங்களுடைய அமைச்சரவையை நியமிக்கவும் நான் எதிர்பார்க்கிறேன் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டிய பல குறைபாடுள் உள்ளன – சுசில் பிரேமஜயந்த

கல்வித்துறையில் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டிய பல குறைபாடுகளை தாம் கண்டறிந்துள்ளதாக, கல்வி அமைச்சரான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் . மேலும் சில பிரச்சினைகளுக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண முடியும். டிசம்பர் மாதத்திற்குள் நாடு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். நாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம், அந்தந்த பிரிவுகள் தங்கள் நிபுணத்துவப் பகுதியில் கவனம் செலுத்த முடியும்.

பாடசாலை பாடத்திட்டங்களை உரிய நேரத்தில் உள்ளடக்குதல், பரீட்சைகளை உரிய நேரத்தில் நடாத்துதல், பரீட்சை பெறுபேறுகளை தாமதமின்றி வெளியிடுதல், பாடசாலைப் பாடப்புத்தகங்களை வழங்குதல் கால இடைவெளியில் பல்கலைக்கழக பிரவேசத்தை உறுதிப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் கல்வித்துறையை வழமைக்கு கொண்டு வருவதற்கு தான் உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தாள் தட்டுப்பாடு காரணமாக பாடப்புத்தகங்களை அச்சிடுவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் இன்றும் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வித்துறையில் உள்ள சில முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற முடியும். நாட்டின் தற்போதைய நிலையை மனதில் கொண்டு நீண்ட கால பிரச்சினைகளுக்கு பின்னர் தீர்வு காண முடியும்.

தனது அமைச்சின் செயலாளராக அனுபவம் வாய்ந்த நபர் ஒருவர் இருப்பதாகவும், ஏனைய அதிகாரிகளின் ஆதரவுடன் தனது குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை அடைவதில் நம்பிக்கை இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடவுச்சீட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க மறுக்கும் மகிந்த !

நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும் மகிந்த ராஜபக்சவும் பொலிஸ் உயர் அதிகாரி தேசபந்து தென்னக்கோனும் தங்கள் கடவுச்சீட்டுகளை இன்னமும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதல் குறித்த விசாரணைகள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேயின் முன்னிலையில் இடம்பெற்றவேளை மேலதிக சொலிசிட்டர் ஜெனெரல் அயேசா ஜினசேன இதனை தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச உட்பட பலர் தங்கள் கடவுச்சீட்டுகளை இன்னமும் ஒப்படைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தனது வீடு தாக்கப்பட்டவேளை தனது கடவுச்சீட்டு அழிக்கப்பட்டுவிட்டது என ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.