“தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு கிடைத்து இந்த நாட்டிலே சமத்துவமான நிலைமை பேணப்படுகின்ற போது இந்த நாட்டில் இருந்து வெளியேறிய வெளியேற்றப்பட்டு புலம்பெயர் தேசத்திலே வாழும் இலட்சக் கணக்கான மக்கள் நிச்சயமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே முதலீடுகளைச் செய்து இந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முன்வருவார்கள்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
பாராளுமன்ற விவாதத்தின் போதான உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு நாட்டின் தலைவர் அல்லது இந்த நாட்டை நிருவகிக்கின்ற ஏனைய அமைச்சர்கள், நிருவாகத்தில் இருக்கின்ற நிபுனத்துவம் வாய்ந்த நிபுனர்கள் ஒழுங்கான திட்டமிடலை மேற்கொள்ளவில்லை என்பதனையே நிதி அமைச்சரின் உரையானது எடுத்துக் கூறுகின்றது.
இன்றைய நாட்டின் மோசமான நிலைமைக்கு முதற்படியாக இருப்பது இந்த நாட்டை ஆட்சி செய்த முறையற்ற ஆட்சியாளர்களின் கொள்கைகளே. குறிப்பாக 2019ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வருகின்ற போதிருந்த அந்நிய செலாவணி கையிறுப்பாக இருந்த 7.6 பில்லியனை தற்போது 5 பில்லியனுக்கும் குறைவாக்கியிருக்கின்றது. இதனை நிதி அமைச்சர் சுட்டிக் காட்டியிருந்தார். இது ஒரு முறையற்ற நடமுறையினையே காட்டுகின்றது. இலங்கையராக இருக்கின்ற நாங்கள் வெட்கித் தலைகுனியக் கூடிய விதத்தில் இந்த நாட்டில் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது மிக மனவேதனையான விடயம்.
அண்மையிலே இருக்கின்ற இந்தியாவில் தமிழ்நாடு முதலமைச்சர், நீரினால் சூழப்பட்ட இந்த இலங்கைத் தீவு இன்று பொருளாதார நெருக்கடியினால் கண்ணீரிலே மூழ்கிக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்து எமது நாட்டிற்கு உதவி செய்ய முன்வந்திருக்கின்றார். அவர் எமது மக்களுக்காக பெருமனதோடும், மனித நேயத்தோடும் உதவி செய்ய முன்வந்தமைக்கு நாங்கள் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த நாட்டின் நிலைமை எந்தளவிற்கு மோசமாகச் சென்றிருக்கின்றது என்பதை ஒவ்வொரு இலங்கையரும் சிந்திக்க வேண்டும்.
இந்த நாடு மிக மோசமான நிலைக்குச் சென்றதற்குக் காரணமாகப் பல விடயங்களைச் சுட்டிக் காட்டலாம். சிறந்த முகாமைத்துவமின்மை, ஊழல் நிறைந்த அரசியலாட்சி, செல்வந்தர்கள் நன்மை பெறக் கூடிய வகையிலே வரி வீதத்தினை 8 வீதமாகக் குறைத்தமை போன்றனவும் இந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாகப் பின்நோக்கிச் செல்வதற்குக் காணரமாக இருந்திருக்கின்றன. இதனையெல்லாம் தற்போதைய ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் சிந்தித்துப் பார்க்கின்றார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. இவ்வாறெல்லாம் தவறுகளைச் செய்து விட்டு தற்போது நாங்கள் பல தவறுகளைச் செய்திருக்கின்றோம் என்று நாட்டின் தலைவரும் அமைச்சரும் சொன்னார்களானால் அனைத்தும் சரியாகிவிடுமா?
குறிப்பாக இங்கு விவசாயம் தொடர்பான விடயம் பேசப்படுகின் போது நாங்கள் பல விடயங்களைச் சுட்டிக் காட்டியிருந்தோம். விவசாயத்தில் கை வைக்காதீர்கள் நீங்கள் தேல்வியையே தழுவுவீர்கள் என நாங்கள் அடிக்கடி கூறியிருந்தோம். ஆனால் இன்று மிக மோசமாக இந்த விவசாயம் பாதிக்கப்பட்டு உள்நாட்டு உற்பத்தியே இல்லாத நிலையில் இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் நானும் ஒரு விவசாயி என்ற ரீதியில் அந்த விவசாயிகள் சார்பாக சில கருத்துக்களை முன்வைக்கலாம் என்று நினைக்கின்றேன். சிறந்த ஒரு பொருளாதாரக் கொள்கை இல்லாததாலேயே இந்த நாடு இத்தனை பின்நோக்கி இருக்கின்றது என்பதை இந்த நாட்டின் தலைவர் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதோடு தொடர்புபட்டு மார்தட்டும் அமைச்சர்களும், கட்சியினரும் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். முதற்படியாக விவசாயிகளிலே கை வைத்தீர்கள், வருமான வரி வீPதத்தைக் குறைத்தீர்கள்.
தற்போது நாட்டின் தலைவர் சொல்லுகின்றார் தாங்கள் செய்தவை பிழையான காரியம் என்று. உண்மையிலேயே மக்கள் பிழையான ஒரு தலைவரைத் தெரிவு செய்திருக்கின்றார்கள் என்பதை அவர் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
இன்று நாலாபக்கமும் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எதற்காக இந்தப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை இந்த உயரிய சபையில் இருக்கின்ற ஒவ்வொரு பாராளுன்ற உறுப்பினரும் சிந்திக்க வேண்டும். இதற்கான தீர்வினைத் தற்போது பாராம் எடுத்திருக்கின்ற எந்த அமைச்சரும் முன்வைக்கவில்லை. உங்களுக்கான அமைச்சுப் பதவிகளையும், அரசியலையும் முன்நிறுத்தி செயற்படாமல் நாட்டு மக்களின் நன்மை கருதி உங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
இன்று வானைத் தொடுமளவிற்கு விலைவாசி அதிகரித்திருக்கின்றது. நாட்டு மக்கள் வாழ முடியாத சூழ்நிலையிலேயே இன்று வீதிக்கு இறங்கியிருக்கின்றார்கள். இதனைப் பற்றி யாரும் சிந்திப்பதாக இல்லை. இன்று விவசாய உள்ளுர் உற்பத்திகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. உரமானியத்தை நிறுத்தினீர்கள். இதன்மூலம் உர இறக்குமதிகளை மேற்கொண்டு பதுக்கலில் வைத்திருந்த முதலாளிமார்களையே நீஙகள் உயர்த்தியிருக்கின்றீர்கள். யூரியாவை அதிக விலைக்கு விற்கச் செய்தீர்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? இந்த விலை உயர்வால் வாளம் பெறுபவர்கள் யார்? என்பதையும் நீங்கள் சிந்திக்க வேண்டும். எனவே சம்மந்தப்பட்ட அமைச்சர் இதில் உடனடியாகத் தலையீடு செய்து விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அது மாத்திரமல்லாமல் களை நாசினிகள் கூட விலை உயர்த்தி விற்கப்படுகின்றது.
குறிப்பாக இந்த நாட்டை ஆண்டுகொண்டிருக்கின்ற அரச தலைவர்கள் நாட்டின் மீது அக்கறை கொண்டு மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையிலே செயற்பட வேண்டும். இன்று எங்கள் உள்ளுர் உற்பத்திகள் பாதிக்கப்பட்டு அரிசி தொடக்கம் ஏனைய உணவுப் பொருட்களை வெளிநடுகளில் இருந்து இறக்குமதி செய்பவர்களாக இருக்கின்றோம்.
இந்த நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற அரச தலைவர் நாட்டு மக்களின் எதிர்காலம், நாட்டின் வளர்ச்சி என்பவற்றைக் கைவிட்டு ஏதோவொரு திசையில் சென்று கொண்டிருக்கின்றார். அவ்வாறில்லாமல் அவர் மக்கள் சொல்லுகின்ற விடயங்களுக்குச் செவிசாய்து நல்லதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்காலத்தில் நாடு மேலும் மோசமான நிலைமைகளைச் சந்திக்கும்.
இந்த நாடு சுதந்திரமடையும் போது ஆசியாவிலே மூன்றாவது நிலையில் இருந்தது. ஆனால் தற்போது ஆசியாவிலே பொருளாதாரத்திலே கடைநிலையில் இருக்கின்றது. இத்தனை இயற்கை வளம் கொண்ட இந்த நாடு பொரளாதாரத்திலே ஏன் இத்தனை பின்டைவுகளைச் சந்திக்க வேண்டும்.
இந்தா நாட்டை ஆண்ட தலைவர்கள் இனவாதம், மதவாம் என்கின்ற அடிப்படையில் செயற்பட்டதன் காரணமாக நீண்ட காலங்களாக இந்த நாட்டிலே இன ரீதியான பிரச்சினையை மையப்படுத்தி பொருளாதார ரீதியாக மிகவும் பின்னடைவை அடைந்திருக்கின்றது. அந்த அடிப்படையில் இந்த நாட்டிலே உண்மையான சமாதானமொன்றை ஏற்படுத்த முதலீட்டாளர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையிலேயே தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு கிடைத்து இந்த நாட்டிலே சமத்துவமான நிலைமை பேணப்படுகின்ற போது இந்த நாட்டில் இருந்து வெளியேறிய வெளியேற்றப்பட்டு புலம்பெயர் தேசத்திலே வாழும் இலட்சக் கணக்கான மக்கள் நிச்சயமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே முதலீடுகளைச் செய்து இந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முன்வருவார்கள் என்று தெரிவித்தார்.