28

28

உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் போட்டி – வன்னியிலிருந்து 7 வீர வீராங்கனைகள் !

ஸ்ரீலங்கா மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஊடாக இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் போட்டிக்கான தெரிவுப்போட்டியில் பங்கேற்பற்காக வவுனியா மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 7 வீர வீராங்கனைகள் இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.

வவுனியா, முல்லைத்தீவினைச் சேர்ந்த 7 வீர வீராங்கனைகள் இந்தியாவிற்கு பயணம்

நேற்று ஆரம்பமான போட்டிகள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் வெற்றி பெறும் வீர வீராங்கனைகள் உலக மிக்ஸ் பொக்சிங் சங்கத்தினூடாக 3 மாத பயிற்சியை பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர்.

ஆண்களை வழுக்கை என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலாகும் – இங்கிலாந்தில் நீதிமன்றம் தீர்ப்பு !

பணியிடத்தில் ஒரு மனிதனை வழுக்கை என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலின் வரம்புக்குள் வரும் என்று இங்கிலாந்தில் உள்ள வேலைவாய்ப்பு தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது.

ஒரு ஆணை ‘வழுக்கை’ என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தல் என்றும், அது பெண்ணின் மார்பகங்களை பற்றி கருத்து தெரிவிப்பதற்கு சமம் என்றும் பிரித்தானிய வேலைவாய்ப்பு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

பெண்களை விட அதிகமான ஆண்களுக்கு முடி உதிர்வதுதான் இந்த முடிவின் அடிப்படையாக அமைந்துள்ளது.

தீர்ப்பாயத்தின் கூற்றுப்படி, ஒரு ஆணின் வழுக்கையைப் பற்றி கருத்து தெரிவிப்பது ஒரு பெண்ணின் மார்பகத்தின் அளவைக் குறிப்பிடுவதற்கு சமம். ஏனென்றால், இது உண்மையிலேயே பாலினத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம், இது பாகுபாட்டைக் குறிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் ஒரு எலக்ட்ரீஷியன் மற்றும் அவர் வேலை பார்க்கும் நிறுவன முதலாளிகளுக்கு இடையேயான வழக்கில் தீர்ப்பாயம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. Tony Finn எனும் அந்த தொழிலாளி இங்கிலாந்தில் மேற்கு யார்க்ஷயரை தளமாகக் கொண்ட British Bung Company-ல் கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் பணிபுரிந்தார் மற்றும் கடந்த ஆண்டு மே மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, 64 வயதான அவர் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் தீர்ப்பாயத்தில் புகார் அளித்திருந்த நிலையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கம் திட்டம்..?

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விமான நிலையத்தின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இதுகுறித்த எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லை.

சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் – குற்றவாளி தற்கொலை !

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (26) வழமை போன்று மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் கடமையாற்றும் 57 வயதான நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கடமை நிமிர்த்தம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றிற்கு சென்று மின்மானியை பரீட்சித்துள்ளார்.

பின்னர் அந்த வீட்டில் தாயுடன் நின்ற 9 வயது மதிக்கத்தக்க சிறுவனை அருகில் உள்ள வீட்டின் மின் மானியை பார்வையிட துணைக்கு அழைத்து சென்றுள்ளதுடன் அங்கு சிறுவனுடன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

இவ்வாறு குறித்த மின்வாசிப்பாளர் சென்ற பின்னர் சிறுவன் தனக்கு நடந்த அனைத்து விடயங்களையும் தனது பெற்றோரிடம் குறிப்பிட்டுள்ளார். இதனால் குறித்த மின்சார சபை ஊழியர் அன்றைய தினம் தனக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனை அறிந்து குறித்த மின்வாசிப்பாளர் மறுநாளான நேற்று (27) அதிகாலை அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை அடுத்து மனைவி உள்ளிட்ட உறவினர் தூக்கில் தொங்கியவரை மீட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் தூக்கில் தொங்கியவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டன.

பின்னர் உயிரிழந்தவர் உடல் கூற்று விசாரணையின் படி கழுத்து பகுதி சுருக்கினால் இறுகியதால் மூச்சு திணறி இறப்பு சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் திருமணமாகியுள்ளதுடன் இரு பிள்ளைகளளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குவியும் மக்கள் – கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக நாளாந்தம் 2500 டோக்கன்கள் !

நாட்டின் தற்போதைய நிலவும் நெருக்கடி நிலை காரணமாக கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான நாளாந்த சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டு சேவை மற்றும் அதற்கு நிகரான 2500 டோக்கன்கள் நேற்று (27) வழங்கப்பட்டன. கடவுச்சீட்டு பெறுவதற்காக சிலர் வெளியில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டு பெறுவதற்கு தினமும் சுமார் 2500 பேர் வரவழைக்கப்படுகின்றனர். சனக்கூட்டம் காரணமாக திணைக்கள வளாகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் வெளியில் தங்கியிருந்த மக்களுக்கும் திணைக்களத்தின் பாதுகாப்புக்காகச் செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வேலையிழக்கும் 1.2 மில்லியன் கட்டுமானத் தொழிலாளர்கள் !

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 75% தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 300,000 தொழிலாளர்கள் கட்டுமானப் பணிக்கு மறைமுகமாகப் பங்களிக்கின்றனர். இருப்பினும் அடுத்த மாதத்துக்குள் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள 1.2 மில்லியன் மக்கள் வேலையின்மையை எதிர்கொள்வர் என தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் எம்.டி. போல் குறிப்பிட்டார்.

தற்போது 90% ஆன கட்டுமானப் பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

800,000 முதல் 900,000 வரையிலான பணியாளர்கள் கட்டுமானத் துறையின் மூலம் நாட்டுக்கு நேரடியாக பங்களிப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பல கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் வேலையை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பதவி விலகுகிறாரா ஜனாதிபதி கோத்தாபாய..?- ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ள தகவல் !

நான்  ஒருபோதும் பதவி விலகப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுடனான விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து தன்னால் மாத்திரம் இலங்கையைக் காப்பாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் திறன் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உண்டு எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்காரணமாகவே அவரைப் புதிய பிரதமராக நியமித்துள்ளதுடன் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுப் பொறுப்புக்களையும் அவரிடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, திறமை மிக்கவர்களை அமைச்சரவைக்கு உள்வாங்கி வருவதாகவும், அடுத்த வாரத்துக்குள் அமைச்சரவை நியமனம் முழுமை பெறும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

‘அமைச்சரவை நியமனம் முழுமை பெற்றவுடன் ஜனாதிபதி பதவியிலிருந்து நான் விலகுவேன் என்று சில ஊடகச் செய்திகளைப் பார்த்தேன். எனினும், நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன். எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி – பிரதமர் – அமைச்சரவை ஓரணியில் செயற்பட்டால்தான் நாட்டுப் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகாண முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

காணாமல்போன 9 வயது சிறுமி சடலமாக மீட்பு !

பண்டாரகம – அட்டலுகம பகுதியில் வைத்துக் காணாமல்போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து சடலம் பிரதேச மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CCTV கமராக்கள் பொருத்தப்பட்டும் அவை செயலிழந்துள்ள வீடொன்றில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் இருந்தே குறித்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பாணந்துறை அட்டுலுகமஅல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில்  கல்வி கற்கும் பாத்திமா ஆயிஷா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவில் உள்ள கடைக்கு சென்றிருந்த நிலையில் காணவில்லை என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் பிரதேச மக்கள் சிறுமியை தேடியுள்ளதோடு, பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கோட்டா கோ ஹோம் – அவிழ்க்கப்படாத ஆனால் அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சுக்கள்!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானகோ ஹோம் கோட்டா என்ற  போராட்டம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த போராட்டம் சுமார் 50 நாட்களை கடந்துள்ளது.

Shoplifting protest in Sri Lanka today | இலங்கையில் இன்று கடையடைப்பு போராட்டம்

கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு பாரியளவில் நிலவியது.

இதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதியின் மிரிஹான பகுதியிலுள்ள வீட்டை கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி மக்கள் சுற்றி வளைத்து போராட்டம் நடத்தியிருந்தனர்.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதல் தேதியில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் காலி முகத்திடலுக்கு வருகைத் தந்து, தமது ஆதரவை வழங்கியிருந்தனர். அன்று முதல் சில வாரங்கள் தொடர்ச்சியாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் வெளியில், கடும் மழை, குளிர் என எதையும் பொருட்படுத்தாது, பகலிரவாக இந்த போராட்டத்தை நடத்தி வந்திருந்திருந்தனர்.

குறிப்பாக ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

கொழும்பு – காலி முகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தன்னெழுச்சி போராட்டமொன்றை இளைஞர்கள் இணைந்து ஆரம்பித்திருந்தனர். குறித்த அதே நாளில் முன்னாள் பிரதமர் மகிந்த பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததததுடன் அப்போதைய பிரதமராக கடமையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகையில் தமது ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடலொன்றை அன்றைய தினம் நடத்தியிருந்தார்.

இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட தரப்பினர், அங்கிருந்து வெளியேறி, பேரணியாக காலி முகத்திடலை நோக்கி வருகைத் தந்தனர்.

இவ்வாறு வருகைத் தந்தவர்கள், காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம பகுதியிலுள்ள கூடாரங்களுக்கு சேதம் விளைவித்து, அமைதி வழியில் போராட்டங்களை நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதையடுத்து, அமைதி வழி போராட்டம் வன்முறையாக மாறியது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வந்த பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அரச எதிர்ப்பு போராட்டக்காரர்களினால் சேதம் விளைவிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது.

அந்த போராட்டத்தில் பலர் காயமடைந்ததுடன், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தை அடுத்து, நாடு தழுவிய ரீதியில் பல்வேறு விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

மேலும் போராட்டத்தின் போது அமரகீர்த்தி அத்துக்கோரல என்பவர் கொலை செய்யப்பட்டதுடன் இந்தக்கலவரங்களின் போது இருநூறுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இவ்வாறாக இடம்பெற்ற கலவரங்கள் அடுத்தடுத்து ராஜபக்சக்களின் ஆட்சியை ஆட்டம் காண வைத்ததது போல செய்திகளும் பகிரப்பட்டன. குறிப்பாக மகிந்த ராஜபக்ஷவின் தலைமறைவு, பஷில் ராஜபக்சவின் பதவி விலகல்,  அவருடைய பிரதமர் பதவி பறிக்கப்பட்டமை, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பொறுப்பேற்றமை என பல மாற்றங்கள் அடுத்தடுத்து இடம்பெற்று விட்டன.

 

இன்னும் இவர்கள் எதிர்பார்த்த கோட்டாபாய ராஜபக்ஷ பதவி விலகவில்லை. ஆனால் போராட்டம் இன்று வலுவிழந்த நிலையிலேயே பயணிப்பதை அறிய முடிகிறது. ஆரம்பத்தில் இருந்த வேகமும் – உற்சாகமும் போராட்டக்காரர்களிடம் இல்லை. எனினும் உண்மையாக காலி முகத்திடலில் மாற்றத்துக்காக கூடிய குறிப்பிட்ட சிலர் மட்டுமே இன்னமும் அங்கு தங்கி போராடிக்கொண்டிருக்கின்றனர்.

50 நாட்களை தொட்டுள்ள இந்த போராட்டம் இன்று வரை தீராத பல சந்தேகங்களையும் – முடிவில்லாத பல வினாக்களையும் இந்த போராட்டம் எழுப்பியுள்ளதையும் மறுக்க முடியாதுள்ளது.

1. இந்த போராட்டத்தை நடாத்துவது யார்..? முக்கியமாக இதனை ஒழுங்கமைப்பது யார்.?

பல நேரங்களில் தொழி்ற்சங்கங்களும் – பல்கலைகழக மாணவர் ஒன்றியங்களும் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்கின்ற போதும் கூட போராட்டத்தை கொண்டு நடாத்த ஒருஅமைப்பு தேவைப்படுகிறது தானே..? அந்த அமைப்பு யார் ..? என்பது இது வரை தெரியவில்லை.

2. இந்த போராட்டம் யாரை எதிர்த்து மேற்கொள்ளப்படுகின்றது..?

இலங்கை வன்முறை: காலிமுகத் திடலில் அரங்கேறிய வன்முறை - படத்தொகுப்பு - BBC News தமிழ்

ஆரம்பம் முதலே பொருளாதார நோக்கமே இந்த போராட்டத்தின் அடிப்படை எனப்பட்டாலும் கூட ராஜபக்சக்களை இலக்கு வைத்து முன்வைக்கப்பட்ட  கோ ஹோம் கோட்டா, கப்புட்டா கா கா என பல ஸ்லோகங்கள் ஏன் முக்கியம் பெற்றன என்பது இன்று வரை தெரியவில்லை. இவர்கள் சொன்னது போல பசிலும் பதவி விலகி விட்டார். மகிந்தவும் பதவி விலகிவிட்டார். அடுத்தது கோட்டா பாய ராஜபக்ச தான் என்கின்றனர்.

உண்மையிலேயே ராஜபக்சக்கள் போய்விட்டால் நாட்டின் பொருளாதாரம் சீராகி விடுமா என்கின்ற கேள்வியும் எழுப்பப்பட வேண்டிய தேவையும் உள்ளது.

அடுத்த பத்து ஆண்டுகள் கோட்டாபாயவின் ஆட்சியும் – தொடர்ந்து நாமல் ராஜபக்சவின் ஆட்சியும் தான் தொடரப்போகிறது என அரசியல்வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்ட நிலையில் அவர்களின் அரசியல் அத்திவாரமே ஆட்டங்கண்டுள்ளதன் பின்னணில் ஏதோ ஒரு அரசியல் இருக்க வேண்டும் என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது. அதனை கண்டறிய வேண்டிய  – வெளிப்படுத்த வேண்டியும் தேவையும் ஒரு பக்கம் இருக்கிறது.

3. இணைய தள ஹேக்கர்களின் வருகையும் – அனுர குமார திஸ நாயக்க வெளிப்படுத்திய ஊழல் அறிக்கையும்.

கோட்டா கோ ஹோம் போராட்டங்கள் வலுவடைந்து கொண்டிருந்த போது கணினி ஹேக்கர்களில் குழுவான  ‘அனானிமஸ்,(anonymous) குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எச்சரிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததது. 14 நாட்களுக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும் புதிய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த காணொளியில் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்ததது. இல்லாவிட்டால் ராஜபக்ஷ  குடும்பத்தின் அனைத்து ரகசியங்களும் வெளியாகும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.

 

இந்த வீடியோ தொடர்பான எச்சரிக்கை வெளியானதை தொடர்ந்து  இலங்கையின் சமூக வலைதளங்களில் இது தொடர்பான வாதங்கள் அதிகமாகியிருந்ததது. இதனை  தொடர்ந்து ஒரு சில நாட்களுக்குள்  ஜே.வி.பி தலைவர் அனுர குமார திஸநாயக்க அவசர அவசரமாக ஒரு ஊடக சந்திப்பை கூட்டி ராஜபக்சக்களதும், சஜித் பிரேமதாச, மைத்திரிபால சிறீசேன குழுவினரதும், ரணில் விக்கிரமசிங்கவினதும் கடந்த கால ஊழல்களை அம்பலப்படுத்தியிருந்தார். ராஜபக்சக்கள் மீதான கோபத்தையும் போராட்டத்தையும் தங்கள் பக்கமாக திருப்பி  ஜே.வி.பி மட்டுமே இலங்கையின் உண்மையான கட்சி என்பது போன்றதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகவே இந்த சம்பவத்தை பார்க்க வேண்டியுள்ளது..

 

அனானிமஸ் குழுவினது ஆதாரங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஊடகங்களுக்கு அனானிமஸ் குழுவினது ஆதாரங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவனவாக தோன்றாத நிலையில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடியதான ஜே.வி.பியின் செய்திகளை காவிக்கொண்டு திரிந்தன. இதே காலத்தில் ஜே.வி.பி சார்பு ஊடகங்களும் – சில கொமினியூஸ்ட் எழுத்தாளர்களும் ஜே.வி.பி யே மீட்க தகுதியானவர்கள் என குறிப்பிட்டு எழுத தொடங்கினர்.

மக்கள் போராட்டம் என கூறப்பட்ட ஒரு போராட்டத்தை ஜே.வி.பி தன் பக்கம் கவர முற்படுகிறதோ என்ற ஐயம் தான் இங்கு அதிகமாக உள்ளது.

 

04. ஏப்ரல் 9 போராட்ட களத்தில் சஜித் தாக்கப்பட்டதும் – அனுர குமாரவுக்கு கிடைத்த வரவேற்பும்.

ராஜபக்சக்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏற்புடையவையே. இதற்கு ராஜபக்சக்கள் தான் பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள். இதில் எந்த மாற்றுக்கருத்துக்களும் இல்லை. ஆனால் ராஜபக்சக்களை கேள்வி கேட்பதில் மட்டுமே முனைப்பு காட்டிய சமூக வலைதளவாசிகளும் சரி – இலங்கையின் ஊடகங்களும் சரி ஏனைய சம்பவங்களையும் – அதன் போக்குகளையும்  சரியாக கவனிக்க தவறிவிட்டன.

மே- 9 ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டம் உச்சமாக வலுவடைந்த போது அரசுக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் அரச ஆதரவு குண்டர்களால் தாக்கப்பட்டனர். தாக்கப்பட்டோரை காலி முகத்திடலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச,  போராட்டக்காரர்கள் என குறிப்பிடப்பட்ட பலரால் துரத்தப்பட்டார். எனினும் அதே நேரம் போராட்ட களத்தை காண வந்த ஜே.வி.பி தலைவர் அனுரகுமார கைத்தாங்களாகவும் – கையசைத்தும் அந்த பரபரப்புக்குள்ளும் வரவேற்கப்பட்டார். இதனை ஊடகங்களும் பெரிய செய்தியாக காட்சிப்படுத்தின.

உண்மையிலேயே இது மக்கள் போராட்டம் எனில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் பிரமுகரை மட்டும் தாக்கி – இன்னுமொரு கட்சி பிரமுகரை வரவேற்பது எந்தளவுக்கு பொருத்தமானது என்பதும் சிந்திக்கப்பட வேண்டியதே..!

இலங்கையில் ஜனாதிபதி வீட்டின் முன் நள்ளிரவில் வெடித்த வன்முறை

5. எரியூட்டப்பட்ட ஆளுந்தரப்பினருடைய வீடுகளும் – சாதாரண மக்களும்.

மே – 9 அளவில் விஸ்வரூபம் எடுத்த போராட்டத்தில் பல அமைச்சர்களுடைய வீடுகளும் – ஆளுந்தரப்பினருடைய வீடுகளும் சாதாரண மக்களால் எரியூட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளின் உண்மைத்தன்மைகள் சீர்ததூக்கி ஆராயப்பட வேண்டும். சுமார் 30க்கும் அதிகமான வீடுகள் எரிக்கப்பட்டன. இங்கு இரண்டு வினாக்கள் கேட்கப்பட வேண்டியுள்ளன.

  • எரியூட்டப்பட்ட எந்த வீட்டிலும் உயிர்சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை. குறிப்பாக ஆட்கள் யாருமே இல்லாத வீடுகள் எரிக்கப்பட்டன. இது எவ்வாறு சாத்தியமானது..?
  • அமைச்சர்களின் வீடுகளை எரிக்குமளவிற்கு சாதாரண மக்கள் செயற்படக்கூடியவர்களா..? தைரியமுடையவர்களா..?

இந்த இரு கேள்விகளுக்குமான பதில் இல்லை. மே – 9 கலவரங்கள் தொடர்பில் இது வரை 1800க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர் மேலும் ஆளுந்தரப்பை சேர்ந்த மகிந்த ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நாமல் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும் இத்தனை வன்முறையான சம்பவங்களை யார் தூண்டினார்கள் என்பது இது வரை தெரியவில்லை. இது தொடர்பான கருத்துக்களும் வெளிவரவில்லை.

6. ரணிலின் வருகையும் – எதிர்க்கட்சிகளின் அமைதியும்.

தொடர்ந்து இரண்டு மாதங்களாக உக்கிரமைந்திருந்த போராட்டம் கோட்டா கோ ஹோம் போராட்டங்கள் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதும் அமைதியை நிலையை எட்டியுள்ளன. அரசுக்கு எந்த விதத்திலும் ஆதரவளிக்க போவதில்லை என காட்டுக்கூச்சல் போட்டுக்கொண்டிருந்த ஜே.வி.பி யாக இருக்கலாம், சஜித் பிரேமதாச தரப்பாக இருக்கலாம், போராட்டக்காரர்களாக இருக்கலாம் அனைவரும் அமைதி காக்க ஆரம்பித்துள்ளனர். இவர்கள் விலக சொன்ன கோட்டாபாய இன்னும் பதவியில் தான் உள்ளார். இந்த எதிரக்கட்சிகளின் சத்தம் ரணில் வருகைக்கு பிறகு என்ன ஆனது என்பதே தெரியவில்லை.

 

9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை: 1348 சந்தேகநபர்கள் கைது

இந்த போராட்ட விடயங்களை கொண்டு போய் சேர்க்கும் ஊடகங்கள் சரியான – உண்மையான பக்கச்சார்பற்ற விடயங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும். பல தமிழ் ஊடகங்கள் போர்க்குற்றவாளிகளான ராஜபக்சக்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்படுவது போலவே செய்திகளை பிரசுரிப்பதை காண முடிந்ததது. ராஜபக்சக்கள் குற்றவாளிகளாகவே இருக்கட்டும். ஆனால் ராஜபக்சக்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதாக நினைத்துக்கொண்டு சஜித் பிரேமதாச குழுவினரையும் – ஜே.வி.பி குழுவினரையும் புனிதப்படுத்தும் முயற்சிகளையே நமது தமிழ் ஊடகங்கள் மேற்கொள்கின்றன.

அமைதியாக ஆரம்பித்த மக்கள் போராட்டம் மே-9 ஏன் வன்முறையை நோக்கி நகர்ந்ததது..? அல்லது மக்கள் வன்முறைக்கு தூண்டப்பட்டார்களா..? மக்களை வன்முறைக்கு தூண்டியது யார்.? அமைதியான போராட்டம் தான் எனில் ஏன் போராட்டத்தில் பங்கு கொண்ட 1500க்கும் மேலான மக்கள் கைதாகினர்.? அவ்களின் விடுதலைக்கு யார் உறுதி..? மக்கள் போராட்டத்தை ஏன் ஜே.வி.பி பக்கம் திருப்ப முயல்கிறார்கள்..? அல்லது ஜே.வி.பி யின் போராட்டத்தை தான் மக்கள் போராட்டம் என அடையாளப்படுத்திக் கொண்ருக்கின்றனவா ஊடகங்கள்.? இந்த போராட்ட காரர்களின் உண்மையான நோக்கம் என்ன..? மே – 9 இரவு எரிக்கப்பட்ட வீடுகளில் ஏன் ஆட்கள் நடமாட்டமே இருக்கவில்லை.? ராஜபக்சக்கள் பதவி விலகினால் நாடு சீராகிவிடுமா..? இந்த  போராட்டம் யாருக்கு எதிரானது..? அப்படியானால் ராஜபக்சக்ளை தெரிவு செய்த69 லட்சம் மக்களும் முட்டாள்களா..? இப்படியாக பல வினாக்கள் .

கொரோனா இடர்பாடு , உக்ரைன் – ரஷ்ய போர், சீனாவில் மீண்டும் நாடு முடக்கம் என பல விடயங்கள் உலகின் பொருளாதாரத்தை ஆட்டுவித்துக்கொண்டு தான் இருக்கின்றன.  அண்மையில் ஐரோப்பிய நாடுகளில் பண வீக்கம் கனிசமாக அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் பொருட்களின் விலை இரு மடங்கால் அதிகரிக்கின்றது . இப்படியாக பொருளாதார பிரச்சினைகள் உலகம் முழுதிலும் அதிகரித்து்ககொண்டுள்ள நிலையில் இதன் தாக்கமே இங்கேயும் உணரப்படுகிறது.

இதற்கான தீர்வுக்காக இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்துமே இணைந்து செயற்பட்டு நாட்டை வளப்படுத்த முன்வருவதே புத்திசாலித்தனமானது. இதை விடுத்து மக்களின் பிரச்சினையை வைத்து அரசியல்வாதிகளும் – அரசியல் கட்சிகளும்  குளிர்காய்வதற்கு இடமளிக்கமுடியாது. இதற்கு ஊடகங்கள் துணை போவதை ஏற்கவும் முடியாது. வெளிப்படையாக இது பெரிய போராட்டம் – பெரிய மக்கள் இயக்கம் என நாங்கள் புலம்பித்தீர்த்தாலும் கூட இந்தப்போராட்டத்தின் அடி வேர்கள் மக்கள் கண்களை இன்னமும் கட்டியுள்ள அரசியல் அறியாமையேயாகும். இலங்கை மக்கள் இன்னமும் அரசியல்மயப்படுத்தப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். இந்த சுயநலவாதிகளின் அரசியல் போதைக்கு பாவம் சாதாரண – ஏதுமறியாத மக்களே இன்னமும் பயன்படுத்தப்படுகின்றனர். கடந்த காலத்தில் சிறுபான்மை இனங்கள் மீது பெரும்பான்மை மக்கள் காட்டிய வன்முறைக்கு எந்த அறியாமை காரணமாக இருந்தததோ இன்று அதே அரசியல் அறியாமையை தென்னிலங்கை எதிர்க்கட்சி அரசியல் தலைமைகள் தங்களுக்கு ஏற்றாற் போல பயன்படுத்துகிறார்கள். மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் மிகக்கட்டாயமான தேவையேயாகும்.

பொறுமையாக இருந்துபார்ப்போம் மக்களின் பிரச்சினைகளை வைத்து இன்னமும் எத்தனை அரசியல் நாடகங்கள் அரங்கேறப்போகின்றன என்று..,

அமெரிக்காவில் 19 பாடசாலை மாணவர்களை சுட்டுக்கொன்ற இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்கள் !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள தொடக்கநிலைப் பள்ளியொன்றில் 18 வயது இளைஞா் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவா்கள், 2 ஆசிரியா்கள் பலியாகினா். துப்பாக்கிச்சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்கிற இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் துப்பாக்கிசூடு நடாத்திய இளைஞர் தொடர்பில் பல விடயங்கள் வெளியாகியுள்ளன.

சால்வடார் ராமோஸ் 3 வயது இருக்கும் போதே அவரது தாயும், தந்தையும் பிரிந்துவிட்ட நிலையில், தாயின் பராமரிப்பில் இருந்துள்ளார். ராமோசின் தாய் போதைப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவருக்கு தாயின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் போனதோடு, ராமோசை தினமும் அவரது தாய் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.

இதனால் தாயிடம் இருந்து பிரிந்து பாட்டியுடன் வசித்து வந்த ராமோசுக்கு பேச்சு குறைபாடு இருந்ததால் பள்ளியில் சக மாணவர்களால் கேலி, கிண்டலுக்கு ஆளாகி வந்தார். இதனால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு 18 வயது நிரம்பியதும், சேகரித்து வைத்த பணத்தில் 2 நவீன துப்பாக்கிகளை வாங்கியுள்ளார்.

அதன் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்துவது குறித்து இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக பல பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். அதை தொடர்ந்து, பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து கொடூர தாக்குதலில் ஈடுபட்ட ராமோஸ் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார்.