03

03

அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு இலவச பேருந்து உதவிகள் !

அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு இலவச பேருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன,

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு நாட்டில் எங்கிருந்தும் இலவசமாக பஸ்களை வழங்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றி பேருந்துகளை முற்றுகையிடவும் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இம்மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் பிரசாரத்துக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

பண மோசடிகளுக்கும் ராஜபக்ஷ குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.”- நாமல் ராஜபக்ஷ

ஒஸ்பென் மெடிக்கல் மற்றும் அவுஸ்ரேலியாவில் நடந்ததாக தெரிவிக்கப்படும் சந்தேகத்திற்குரிய பணமோசடி குறித்து தமது குடும்பத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் நிர்மாணப்பணியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிப் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை சர்வதேச ஊடகமான ஏபிசி நியூஸ் செய்தி நிறுவனமானது அம்பலப்படுத்தியுள்ளது.

குறித்த வைத்தியசாலைக்கு உபகரணங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கும் 18.8 மில்லியன் டொலர் திட்டத்திற்கு ஒஸ்பென் மெடிக்கல் நிறுவனம் அவுஸ்ரேலிய அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளது.

இலங்கையில் ஒஸ்பென் மெடிக்கலின் முதல் 2.1 மில்லியன் டொலர் பரிவர்த்தனையானது பிரித்தானிய விர்ஜின் தீவுகளின் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான சேபர் விஷன் ஹோல்டிங்ஸ் இடையில் இடம்பெற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் நிமல் பெரேராவுக்குச் சொந்தமான இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளதாக ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்பு வைத்திருந்த நிமல் பெரேரா என்ற இடைத்தரகருக்கு இந்த நிறுவனம் இரகசியமாக சொந்தமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டில், பண தூய்தாக்கல் குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்சவை கைது செய்ய அது வழிவகுத்ததாகவும் ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் குறித்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான பரிவர்த்தனையில் எவ்வித சம்பந்தமும் கிடையாது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இன்னும் தான் நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் இதில் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க போப் பிரான்சிஸ் கோரிக்கை !

உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நடைபெறுவது கொடூரமான மற்றும் புத்தியில்லாத போர் என்றும் போப் பிரான்சிஸ் பலமுறை  கண்டித்துள்ளார்.

இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறியதாவது:-

“உக்ரைன் போர் தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க நான் மாஸ்கோ செல்ல தயாராக இருக்கிறேன். இதற்காக 20 நாட்களுக்கு முன்பாக தகவல் அனுப்பினேன். எங்களுக்கு இன்னும் பதில் வரவில்லை. இருப்பினும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். புதின் இந்த நேரத்தில் சந்திப்பை நடத்த விரும்பவில்லை என தெரிகிறது.

நான் இப்போதைக்கு கீவ் செல்லவில்லை. நான் போக வேண்டிய இடம் கீவ் இல்லை. நான் முதலில் மாஸ்கோ தான் செல்ல வேண்டும். புதினை சந்திக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையில் 2021ல் முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்த தற்கொலைகள் – பின்னணி என்ன..?

கடந்த ஆண்டுகளை விட 2021 இல் தற்கொலை செய்து கொண்டுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டில் 2632 ஆண்கள் மற்றும் 647 பெண்கள் என மொத்தமாக 3279 தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் அண்மைய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தற்கொலைகளில் பெரும்பாலானவை குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்டவையாகும். 2021ஆம் ஆண்டில் குடும்பத் தகராறு காரணமாக 614 பேரும், நாட்பட்ட நோய்களால் 430 தற்கொலைகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன் 2021 ஆம் ஆண்டில் பொருளாதாரப் பிரச்சினைகளால் 174 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவற்றில் 154 ஆண்களும் 18 பெண்களும் உள்ளடங்குவர்.

2020 இல் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 3074 ஆக இருந்தது. 2019 இல் 3135 ஆகவும் 2018 இல் 3281 ஆகவும் காணப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நாட்டில் மொத்தமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 3263 என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

2016ல் 3025 ஆகவும் 2015 இல் 3,054 ஆகவும் 2014 இல் அந்த எண்ணிக்கை 3144 ஆகவும் இருந்தது.

2021 இல் 3279 தற்கொலைகளில் 2290 பேர் தூக்கிட்டும், பூச்சிக்கொல்லி அல்லது களை கொல்லி பயன்படுத்தியதால் 600 பேரும் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான தற்கொலைகள் திருமணமானவர்களால் செய்யப்படுகின்றன. மேலும் 2021 ஆம் ஆண்டில் 2,391 தம்பதியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2021 இல் தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் தொழில் வாய்ப்பற்றவர்கள் ஆவர். அவ்வாறு வேலைவாய்ப்பற்ற 1136 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் விவசாயத் துறையில் பணியாற்றும் 472 பேரும், உற்பத்திப் பணியில் ஈடுபட்டுள்ள 205 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஆபாச படம் பார்த்த இங்கிலாந்து ஆளும்கட்சி எம்.பி – நேர்ந்த கதி !

இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. நீல் பாரிஷ். விவசாயியான இவர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக பதவி வகித்து வந்தார்.

அண்மையில் இவர் பாராளுமன்ற கீழவையின் கூட்டத்தொடரின் போது தனது செல்போனில் 2 முறை ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நீல் பாரிஷ் தனது சக பெண் எம்.பி.க்கு அருகில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததை அந்த பெண் எம்.பி. ஊடகத்திடம் தெரியப்படுத்தியதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, ஆளும் கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில் பாராளுமன்ற நிலைக்குழு ஆணையரிடம் கூட்டத்தொடரின்போது தான் ஆபாச படம் பார்த்ததை நீல் பாரிஷ் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து நீல் பாரிசை கட்சியில் இருந்து நீக்குவதாக கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்தது. தன்மீதான விசாரணை முடியும் வரை எம்.பி. பதவியில் தொடர்வேன் என நீல் பாரிஷ் கூறினார். ஆனால் திடீர் திருப்பமாக நேற்று முன்தினம் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,

“இறுதியில், எனது குடும்பம், தொகுதி மக்கள் ஆகியோர் என்னால் கோபமடைந்திருப்பதையும் காயமடைந்திருப்பதையும் காண முடிந்தது. பதவியில் தொடரத் தகுதியற்றவன் என்பதையும் உணர்ந்தேன்” என்றார்.

65 வயதான நீல் பாரிஷ் பாராளுமன்றத்தில் தான் ஆபாச படம் பார்த்தது குறித்து விளக்குகையில், “ஒரு இணையதளத்தில் டிராக்டர்கள் குறித்து தேடிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக தடை செய்யப்பட்ட ஆபாச படத்தை பார்க்க நேர்ந்தது. அதை பார்க்க கூடாதுதான். ஆனால் அந்த நேரத்தில் நான் சற்று தடுமாறி, சிறிது நேரம் அதை பார்த்தேன்” என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “ஆனால் எனது குற்றம், மிகப் பெரிய குற்றம் என்னவென்றால், மற்றொரு சந்தர்ப்பத்தில் நான் 2-வது முறையாக அதை பார்த்தேன். அதை வேண்டுமென்றே செய்தேன். அறையின் ஓரத்தில் வாக்களிக்கக் காத்து கொண்டிந்தபோது மீண்டும் ஆபாச படத்தை பார்த்தேன்” என்றார்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் “அந்த தருணத்தில் உங்களுக்கு என்ன தோன்றியது?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நீல் பாரிஷ் , “அது ஒரு பைத்தியக்கார தருணம். அந்த தருணத்தில் என்னை நான் பித்து பிடித்தவனாய் உணர்ந்தேன். சுற்றியிருப்பவர்கள் என்னை கவனிப்பார்கள் என்ற எண்ணம் கூட எனக்கு இல்லை. நான் செய்ததை நியாயப்படுத்த போவதில்லை. நான் செய்தது முற்றிலும், முற்றிலும் தவறு. நான் என் உணர்வுகளை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

இலங்கைக்கு மேலும் 300 மில்லியன் யுவான் வழங்கும் சீனா !

இலங்கைக்கு மேலும் 300 மில்லியன் யுவான் பெறுமதியான உதவியை வழங்க சீனா தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மருந்துகள், உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

மொத்தமாக 500 மில்லியன் யுவான்களை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

வீட்டில் சேமிக்கப்பட்ட மேலதிக பெற்றோல் நிரப்பிய கேன்கள் – சிறுமி பலி !

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் சாமிப் படத்துக்கு விளக்கேற்றிய தீக்குச்சியை எறிந்த போது அறையில் வைத்திருந்த பெற்றோறால் மீது அது பட்டுத் திடீரென தீப்பற்றியதில் 17 வயது மாணவி உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கல்வி பயிலும்  என்னும் 17 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாங்கிச் சேமிக்கப்பட்ட பெற்றோல் நிரப்பிய கேன்கள் சாமி அறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் வழக்கம் போல் அந்த மாணவி சாமி அறையில் விளக்கேற்றி விட்டு தீக்குச்சியை கீழே வீசியுள்ளார். அதிலிருந்து பறந்த தீப்பொறி பெற்றோல் மீது பட்டு வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு !

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் இரண்டையும் சபாநாயகரிடம் ஐக்கிய மக்கள் சக்தி கையளித்துள்ளது.

இன்று குறித்த பிரேரணையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்ததாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

“நாட்டை அழித்த திருடர்கள் யார்.?.”- ராஜபக்ஷக்கள் தொடங்கி சஜித்பிரேமதாச உள்ளிட்டோரின் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தியது ஜே.வி.பி !

கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (03) அம்பலப்படுத்தினார்.

'நாட்டை அழித்த திருடர்கள் - மொத்தமாக வௌிப்படுத்திய அனுர!

´நாட்டை அழித்த திருடர்கள் – மொத்தமாக வௌிப்படுத்தல்´ எனும் தொனிப்பொருளில் ஊழல் எதிர்ப்புக் குரல் இன்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடாத்திய விசேட கருத்தரங்கில் கலந்துக் கொண்டு அவர் இதனை தெரிவித்தார். இதன்போது பல குற்றச்சாட்டுக்களை  அவர்கள் பகிரங்கப்படுத்தினர்.

 

 

 

 

  • இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கொன்று இடம்பெற்றது. ஜாலிய வழக்கின் இறுதித் தீர்ப்பு அமெரிக்காவில் இந்த மே மாதம் வரவிருந்தது. இது குறித்த ஒட்டுமொத்த அறிக்கை உள்ளது. அமெரிக்க தூதரகத்தை வாங்க அரசாங்கம் 6.2 மில்லியன் ஒதுக்குகிறது. அதில் 3.3 மில்லியனை அடித்துள்ளனர் . அதாவது 55% அடித்துள்ளனர். அப்படி கொமிஷன் வாங்கியதை அவர் அமெரிக்க நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். ஜாலிய விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவின் உறவின சகோதரராவார்.
  • பண்டோரா ஆவணங்கள் மூலம் சுமார் 160 மில்லியன் டொலர் திரு நடேசன் மற்றும் நிருபமா குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்பது நமக்கு தெரியும். திரு நடேசனின் பெயரில் பசிலுக்கு நிறைய சொத்துக்கள் உள்ளதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தோம்.

https://www.facebook.com/watch/?v=701103227606054

  • 2014 கிங் நில்வலா கொடுக்கல் வாங்கலுக்கு சீன நிறுவனமொன்றுக்கு பணத்தை வழங்குவதற்கு நீர்ப்பாசன அமைச்சு அவசரம் காட்டியது. குறித்த சீன நிறுவனம் ரூத் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் கணக்கில் அவ்வப்போது 5 மில்லியன் டொலர்களை மாற்றியுள்ளது. அந்த நிறுவனம் திரு நடேசனுக்கு சொந்தமானது. அப்போது நீர்ப்பாசன அமைச்சராக இருந்தவர் நிமல் சிறிபால டி சில்வா. அந்த நிறுவனம் இலங்கையில் உள்ள கொள்ளுப்பிட்டியில் உள்ள வங்கிக்கு பணம் அனுப்புகிறது.
  • பிரான்ஸ் ஏர்பஸ் நிறுவனம் அதிகளவில் ஏர்பஸ்களை வாங்குவதற்கு சில நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்தமை சர்வதேச விசாரணையில் தெரியவந்துள்ளது. நாங்களும் இந்த ஏர்பஸ்ஸை எடுத்துக்கொண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம்.
  • சமலின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற எயார் லங்காவின் நிர்வாக சபை கூட்டத்தில் இந்த எயார்பஸ்ஸை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது. ஏனென்றால் அவருடைய மகன் அந்த சபையின் உறுப்பினராவார். இதன் மொத்த கொள்முதல் $2.2 பில்லியன் ஆகும்.
  • இந்த கொள்முதலில், நான்கு விமானங்களுக்கு ஒவ்வொன்றிற்கும் $300,000 கப்பம் வழங்க உடன்பாடு எட்டப்பட்டது. மொத்தமாக 16.18 மில்லியன் டொலர்கள். இந்த 16 மில்லியன் டொலர்களும் கிடைக்கவில்லை. ஏனெனில் அரசாங்கம் கவிழ்ந்தது. 2 மில்லியன் டொலர்கள் முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போதைய எயார் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியின் கணக்கிற்கு 2 மில்லியன் டொலர்கள் சென்றுள்ளது. குறித்த தொகை அவுஸ்திரேலியாவில் உள்ள கணக்கிற்கு மாற்றப்படுகிறது. அந்த கணக்கில் இருந்து இலங்கையில் உள்ள மூன்று கணக்குகளுக்கு குறிப்பிட்ட தொகை வருகிறது. அதில் ஒன்று நிமல் பெரேராவின் கணக்கு. அமெரிக்காவில் சிஐஏ முகவராக இருந்த சுபேரு கைது செய்யப்பட்டார்.
  • அவர் எப்படி $12 மில்லியன் சம்பாதித்தார் என்பதை அவரால் விளக்க முடியவில்லை. தற்போது 12 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவரது கணக்குகளை பரிசோதிக்கும் போது, ​​மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அஜித் நிவார்ட் கப்ரால் அவருக்கு 6.5 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. சரியென்றால் கப்ராலும் சிறைக்கு செல்ல வேண்டும். எனவே, இன்று சர்வதேச அரங்கில் எங்காவது ஒரு விடயம் அம்பலமாகுமாக இருந்தால் அதில் இலங்கையை சேர்ந்த உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் தொடர்பிலும் அம்பலமாகின்றமை குறிப்பிடத்தக்கது.
  • 2015 முதல் 2019 வரையான காலத்தில் தேசிய மத்திய கலாச்சார நிதியத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் கலாசார அமைச்சரின் செலவு அறிக்கை முக்கியமானது. 146 செலவு அறிக்கைள். நிதியம் மற்றும் நிதியத்தின் உறுப்பினர்களின் எந்த அனுமதியும் இன்றி நிதியத்தின் பணம் செலவிடப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவின் நேரடியான உத்தரவின் கீழேயே இந்த செலவுகளை செய்தாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.செலவு செய்து முடிந்த பின்னர் 2019.11.15ஆம் திகதி, அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் அவசர பணிப்பாளர் குழு நியமிக்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க, ஜோன் அமரதுங்க, மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, அகில விராஜ் , மனோ கணேசன், பேர்னாட் பிரியந்த இவர்கள் பணிப்பாளர்கள் குழுவில் இருந்தனர். பணிப்பாளர் குழுவின் தலைவர் என்ற முறையில் ரணில் விக்ரமசிங்க இதில் கையெழுத்திடவில்லை. பிரதமரின் செயலாளர் ஏக்கநாயக்க கையெழுத்திட்டுள்ளார். அகில விராஜ் உட்பட மேலும் சிலர் கையெழுத்திடவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. விசாரணை அறிக்கை எமக்கு நேற்று கிடைத்தது. அதனை சரியாக தொகுத்துக் கொள்ள முடியவில்லை. மத்திய கலாச்சார நிதியத்தின் சுமார் மூன்று பில்லியன் ரூபா நிதி முறைகேடு தொடர்பாக கோப்பே இது என சுட்டிக்காட்டியுள்ளார்.