18

18

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – பிரித்தானியா

இலங்கையில் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் உட்பட அனைத்து நிலைமைகளையும் உன்னிப்பாக அவதானித்துவருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் உட்பட இலங்கையின் பொருளாதார நிலைமையை உன்னிப்பாக அவதானித்துவருகின்றோம் என தெரிவித்துள்ள பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு இலங்கையின் கடன்நிலை தொடர்ந்தும் தாங்கிக்கொள்ள முடியாத விடயம் என சர்வதேச நாணயநிதியம் மதிப்பிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடனை பேண்தகுநிலைக்கு மாற்றுவதற்கு அவசியமான சீர்திருத்தங்கள் நிதி உதவிகள் குறித்து சர்வதேசநாணயநிதியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி திடீரென உருவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“புலிகள் எம்மை வெட்டுகின்றனர்” என கூச்சலிட்ட மக்கள் – ஏழு பேர் கைது !

விடுதலைப் புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்து, அம்பாறை- நவகிரியாவ காட்டிலிருந்து கூச்சலிட்டவாறு ஒடி வந்து கிராமவாசிகளை பயமுறுத்திய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பக்கிஎல்ல பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர்.“புலிகள் எம்மை வெட்டுகின்றனர்” என கூக்குரலிட்டவாறு சிலர் ஒடி வருவதை அவதானித்த மின் வேலியைப் பாதுகாக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு தரப்பினரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பக்கிஎல்ல பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அத்துடன் 119 என்ற அவசர பிரிவினருக்கும் அறிவித்துள்ளனர்.

இதற்கமைய, அம்பாறை மற்றும் அரன்தலாவ பொலிஸ் விசேட பிரிவினர், இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து அப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது சந்தேகநபர்கள் வருகைத் தந்த மோட்டார் சைக்கிள், 3 சைக்கிள்கள் மற்றும் ஓட்டோவொன்று என்பன அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேகநபர்கள் 7 பேரும் திவுலான காட்டுப் பகுதியில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மீண்டும் முடங்கும் சீனா – அச்சத்தில் உலக நாடுகள் !

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஒரு பகுதியில் கொரோனா கண்டறியப்பட்டால், அந்நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
பூஜ்ய கொரோனா கொள்கையை கடை பிடிக்கும் சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஷாங்காய் நகரில் வைரஸ் பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் ஊரடங்கு முழுமையாக நீக்கப்படவில்லை.
அதேபோல் தலைநகர் பிஜிங்கில் சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்தது. இதையடுத்து பிஜிங்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்நகரில் தினமும் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க பிஜிங்கில் மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளது.
பிஜிங்கின் பிரபல சந்தை, மெட்ரோ ரெயில் பணி நடைபெறும் இடம், பஸ் நிலையம், சரக்கு போக்குவரத்து நிறுவனம் ஆகியவற்றில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த இடங்கள் மூடப்பட்டன.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “கொரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டுமே பஸ், ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
பிஜிங்கின் 190 பஸ் வழித்தடங்கள், 54 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றனர்.
பிஜிங்கில் உள்ள 16 மாவட்டங்களில் 12 மாவட்டத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது.
பாங்ஷான் மாவட்டத்தில் பஸ், மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பாங்ஷான் மாவட்டத்தில் 13 லட்சம் பேர் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் அங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பிஜிங்கில் உள்ள பிரபல பிஜிங் பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

“நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் இந்த ஆமதுருக்கள் தான். அவர்களை விரட்டுங்கள்.”- நாடாளுமன்றில் சிங்களத்தில் மனோகணேசன் !

இந்த ஆமதுருக்கள் அரசியலில் வேண்டாம். கைகூப்பி கோருகிறேன். இவர்கள்தான் இத்தனைக்கும் காரணம்.”

“சும்மா இந்த வன்முறைகளை பற்றி, இந்த பக்கமும், அந்த பக்கமும் மாறி, மாறி குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அனைத்துக்கும் மூல காரணம் இந்த ஆமதுருகள்தான். இவர்களை பன்சலைக்கு அனுப்புங்கள். அரசியலில் இவர்கள் வேண்டாம்.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு எம்பியுமான மனோ கணேசன் இன்று பாராளுமன்ற சபையில் சிங்கள மொழியில் ஆவேசமாக தெரிவித்தார்.

ஆளும் கட்சி எம்பிகளின் மீது கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நடந்த விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மனோ எம்.பி மேலும் கூறியதாவது,

எங்கள் குருக்கள், இமாம்கள், பாதிரிகள் ஆகியோரும் தத்தம் மத ஸ்தலங்களுக்கு போக வேண்டும். நாடு உருப்படும்.

இன்றைய தினங்களில், 2009 ஆண்டில் தமிழ் மக்கள், நூறு, ஆயிர, இலட்சக்கணக்கில், கொல்லப்பட்டார்கள். கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்களில் கொல்லப்பட்டார்கள். Indiscriminate shelling and aerial bombing”

இன்று ஆளும் அணி அமைச்சர்களின் வீடு, சொத்துகளை எரித்து கொலை செய்த இந்த வன்முறை, அமரகீர்த்தி என்ற அப்பாவி எம்பியை அடித்தே கொலை செய்த வன்முறைகள், இந்த யுத்தம் மற்றும் 1983, 1977, 1958 இனக்கலவரங்களிலேயே ஆரம்பித்தது.

இந்த தீவைப்பு தமிழர்களாகிய எங்களுக்கு புதிதல்ல. 1983 எங்கள் ஹவ்லக் வீதி வீட்டை கொளுத்தினார்கள். எங்கள் புறக்கோட்டை வியாபார நிலையத்தை கொளுத்தினார்கள்.  ஒரு கம்பீரமான சினிமா கலைஞரான என் தந்தை அதன் பின் மனமுடைந்து சில காலம் வாழ்ந்து இறந்து போனார்.

இதோ இந்த ஆசனத்தில்தான் என் நண்பன் ரவிராஜ் அமர்ந்திருந்தான். இன்றுள்ள டிஎன்ஏ எம்பிக்கள் புதியவர்கள். அவர்களுக்கு அவரை தெரியாது. ஆனால் எனக்கு நன்கு தெரியும். கொழும்பில் வாழ்ந்த நாம் இருவரும் 2001ம் ஆண்டில் இருந்தே நல்ல நண்பர்கள். சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சினையை சிங்களத்தில் சொல்ல முயன்றதற்காக ரவிராஜ் கொல்லப்பட்டார்.

அன்று நானும், ரவியும் சேர்ந்து பலவந்த கடத்தல், சட்ட விரோத படுகொலைகள், வெள்ளை வேன் கலாச்சாரத்துக்கு எதிராக போராடினோம். என்னையும், ராகமை, களுத்துறை, தெமட்டகொடை ஆகிய மூன்று இடங்களில் கொல்ல முயன்றார்கள். இந்த வன்முறை ஆட்டம்தான் இன்றும் தொடர்கிறது.

முதல் அரசியல் கொலையை, 1959ல் பண்டாரநாயக்காவை கொலை செய்து, ஒரு பெளத்த ஆமதுரு ஆரம்பித்து வைத்தார்.  அதன்பின் பெளத்த மதத்தை அரசியலில் கலக்க விட்டு, இந்நாட்டை அழித்து விட்டீர்கள். இந்த ஆமதுருக்கள் அரசியலில் வேண்டாம். கைகூப்பி கோருகிறேன். இவர்கள்தான் இத்தனைக்கும் காரணம்.

நாம் ஆமதுருமார்களை பன்சலைக்கும், குருக்கள்மார்களை கோவிலுக்கும், இமாம்களை பள்ளிவாயல்களுக்கும், பாதிரிகளை தேவாலயங்களுக்கும் போக சொல்வோம். இவர்கள் இங்கே வேண்டாம். அரசியலில் வேண்டாம். இந்த சபையில் ஒரு ஆமதுரு மந்திரி இன்று இருக்கிறார். அவரே இங்கு வந்த கடைசி மந்திரியாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

இந்நாட்டின் இன்றைய சீரழிவுக்கு இவர்கள்தான் காரணம். எவருக்கும் இவர்களது அறிவுரை வேண்டுமென்றால், அவர்களது மத ஸ்தலங்களுக்கு போய் கேட்கலாம். இங்கே வேண்டாம்.

கடந்த தேர்தலின் போது ஒரு கேலிகூத்து நடந்தது. களனி விகாரை ஆமதுரு சொன்னார். களனி கங்கை ஆறு இரண்டாக பிளந்ததாம். ‘டோம்’ என சத்தம் வந்ததாம். பாதாளத்தில் இருந்து நாகராஜன் வந்தாராம். ‘நாட்டை காக்க ஒரு மன்னன் வருகிறான்’ என ஒரு அசரீரி கேட்டதாம். என்ன ஒரு கேலிக்கூத்து இது! இப்படி வெட்கமில்லாமல் சொன்ன அந்த ஆமதுரு இன்று களனி பல்கலைக்கழக உப வேந்தராம். வெட்கம்..!

சும்மா இந்த வன்முறைகளை பற்றி, இந்த பக்கமும், அந்த பக்கமும் மாறி, மாறி குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அனைத்துக்கும் மூல காரணம் இந்த ஆமதுருகள்தான். இவர்களை பன்சலைக்கு அனுப்பங்கள். எங்கள் குருக்கள், இமாம்கள், மாதிரிகளஆகியோரும் தத்தம் மத ஸ்தலங்களுக்கு போக வேண்டும். நாடு உருப்படும்.” என கூறினார்.

குறுகியகால தலைமறைவுக்கு பின் நாடாளுமன்றம் வந்த மகிந்த ராஜபக்ச !

இலங்கையின்  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்து   நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்து கொண்டிருந்தார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து  ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில்  நேற்றைய தினம் மீ்ண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. எனினும் நேற்றைய தினம் அவர் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டிருக்கவில்லை.

இந்தநிலையில் இன்று மகிந்த நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததுடன், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல் – உண்மை இல்லை என்கிறார் சரத் பொன்சேகா !

“தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தவுள்ளனர் எனவும் தகவல் பகிரப்பட்டு வருகின்றது. இதில் எவ்வித உண்மையும் கிடையாது.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் மேலும் கூறியதாவது:-

“மக்கள் பாதுகாப்பு கருதியே முன்னர் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அரசின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. மே – 9 ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நாமும் கவலை அடைகின்றோம். ஆனால், அலரிமாளிகையில் இருந்துதான் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே, ஏனைய கட்சிகள்மீது பழிசுமத்திவிட்டு, தப்புவதற்கு ஆளுந்தரப்பு முற்படக்கூடாது. எமது கட்சிக்காரர்கள் தவறிழைத்தால்கூட தண்டனை வழங்கப்படவேண்டும்.

ஆனால், அலரிமாளிகையில் இருந்து வன்முறை தூண்டப்பட்டதால்தான் மக்கள் கொதிப்படைந்தனர் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பற்றியும் கருத்து வெளியிடப்பட்டது. அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களில் ஒருவர், உங்கள் உங்கள் அணியில் பிரதமராகவும் இருக்கிறார். இதற்கிடையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தவுள்ளனர் எனவும் தகவல் பகிரப்பட்டு வருகின்றது. இதில் எவ்வித உண்மையும் கிடையாது.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தைக் கைவிடக்கூடாது. தொடர்ந்து போராட வேண்டும். அது இந்நாட்டில் விடுதலைக்கு வழிவகுக்கும்” – என்றார்.

யாழில் முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி !

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு  யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது.

ஐக்கியத்திற்கான முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு  நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு வீதியால் பயணித்தோருக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கி வைத்தார்கள்.

இந்த உலகில் யார் பாராதிருந்தாலும் யார் எதிர்த்தாலும் நாங்கள் நிமிர்ந்தெழுவோம் போராடுவோம் விழுதெறிவோம். – முள்ளிவாய்க்கால் பிரகடனம்!

2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில்  ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின்  13 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்   இன்று   முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் இங்கு வெளியிடப்பட்ட  முள்ளிவாய்க்கால்  பிரகடனத்தின் தெரிவிக்கப்பட்ட விடயங்கள்,

ஈழத் தமிழர்களின் வரலாற்றில் துயர்மிகு நாட்களில் ஒன்றாகிய முள்ளிவாய்க்கால் னப்படுகொலை நினைவு நாளான மே 18ல் மீண்டும் ஒரு தடவை நாம் கூடியுள்ளோம். இந்த நாள் எங்கள் தேசத்தின் மீது தொடர்ந்து வந்த சிங்கள அரசுகள் நிகழ்த்தி வருகின்ற இனவழிப்பின் பாரதூரத் தன்மையையும், அச்ச மூட்டும் அதன் பரிமாணத்தையும், அவற்றால் எங்களுக்கு ஏற்பட்ட தாங்கொணா இழப்புகளையும் நினைவு கூர்வதற்கான ஒரு நாள் மட்டுமல்ல.

எத்தனை துயரங்கள் வந்தாலும் அழுத்தங்கள் தரப்பட்டாலும் நாங்கள் தோற்றுப் போக மாட்டோம். முள்ளிவாய்க்கால் எமது எழுச்சியின் முடிவல்ல எனப் பிரகடனம் செய்கின்ற ஒரு நாளுமாகும்.

இந்த நாளில் முள்ளிவாய்க்கால் மண்ணிலே வீழ்ந்திட்ட பல இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்து விதையாகிப்போன மற்றும் தங்கள் எதிர்காலத்தை -வாழ்க்கையை எங்களுக்காக தியாகம் செய்து இன்று துன்பத்தில் வாடுகின்ற எங்கள் செல்வங்களையும் நினைந்து நாங்கள் கண்ணீர் சிந்துகின்றோம்.

முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்தும் அதனை ஒட்டிய நாட்களிலும் தாயகமெங்கும் பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்ட எங்கள் உறவுகளையும் நாங்கள் இந்த நேரத்தில் நினைவு கூருகின்றோம்.

உலகின் மனசாட்சி எங்கள் துயரங்களைத் தொடர்ந்தும் பாராமுகமாய் உள்ளது. எங்களுக்கு நடந்ததை இனப்படுகொலை என்றோ, அல்லது இன்றும் எங்களுக்கு நடந்து வருவதை இனவழிப்பு என்றோ பெயரிட உலகின் அதிகார சக்திகள் மறுத்து வருவதையும் இந்த நேரத்தில் நாங்கள் கவலையுடன் கவனித்தே நிற்கின்றோம்.

சிங்கள மக்களின் மனவுலகு விசித்திரமானது. அது மகாவம்ச ஐதீகத்தினடிப்படையில் பௌத்த- சிங்கள மேலாதிக்க மனப்பாங்காகப் பின்னப்பட்டுள்ளது. இத்தீவு முழுவதும் தமக்கென வாக்களிக்கப்பட்ட பூமி என்ற மகாவம்ச சொல்லாடலை உளமார நம்பும் சிங்கள தேசம் அதனையே தனது இயக்கு சக்தியாகக் கொண்டுள்ளது. 1948ல் ஆங்கிலேயர் வெளியேறிய போது அதிட்டவசமாக முழுத் தீவையும் ஆள்வதற்குத் தமக்குக் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பௌத்த-சிங்கள பேரினவாதம் ஏனைய இனங்களை இனவழிப்புச் செய்ய ஆரம்பித்தது.

இனவழிப்பை நோக்காகக் கொண்டு சிறீலங்கா அரசியல் யாப்பு உட்பட அரசின் சகல கட்டுமானங்களும் ஆரம்பம் முதலே கட்டியெழுப்பப்பட்டன. பௌத்த – சிங்கள மேம்போக்கான மனப்பாங்கால் அவர்களிடையே உண்மையில் ஏற்பட்டுள்ள பயத்தை பேரினவாதமாக வளர்த்தெடுத்த சிங்கள அரசியல்வாதிகள் தமது தேர்தல் வெற்றிகளுக்கானதும் ஊழல்களுக்கானதுமான கவசமாக வெற்றிகரமாகப் பாவித்து வருகின்றார்கள். சிங்கள மக்களின் பேரினவாத அபிலாசைகளை பூர்த்தி செய்பவர்களே.

தேரதல்கள் மூலம் அரசியல் தலைமைப் பீடங்களுக்கு வர முடியும் என்பதை சிங்கள மக்கள்தான் தமது வாக்களிக்கும் முறை மூலம் தமது அரசியல்வாதிகளுக்கு வெளிக்காட்டி வருகின்றனர். அதுவே மறுதலையாக அந்த அரசியல்வாதிகள் அதே மக்களைச் சுரண்டுவதற்கான பாதுகாப்பாகவும் மாறியுள்ளது.

சிங்கள மக்களின் இந்த மனப்பாங்கு சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீதும்  ஏனைய இனங்கள் மீதும் தொடர்ச்சியாக நிகழ்த்துகின்ற இனவழிப்பை மனிதாபிமானப் பிரச்சினையாகத்தன்னும் கருத முடியாத மன இறுக்கத்தை அவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. சிங்கள மக்களின் இந்த மனப்பாங்கை பயன்படுத்துவதன் மூலம் தமது ஊழல்களையும், சுரண்டல்களையும் பெரும்பான்மை மக்களிடையே பேசு பொருளாகாமல் தவிர்க்க முடியும் என்ற பாடத்தையும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பௌத்த மத நிறுவனங்களும் அறிந்து கொண்டுள்ளனர்.

ஆனால் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னான காலம் என்பது தனியே அரசின் ஏனைய இனங்கள் மீதான இனவழிப்பு என்பதுடன் மட்டுப்பட்டிருக்கவில்லை. ஆரம்பம் முதலே அரசின் உள்ளடக்கம் ஊழல் என்பதையும் பொறுப்புக் கூறாத்தன்மையையும் தன்னகத்தே கொண்டிருந்தது. சகல அரச இயந்திரங்களும் இனவழிப்பை நோக்காகக் கொண்டிருந்ததால் மக்களுக்கான பேண்தகு பொருளாதார அபிவிருத்தி இலக்குகள் இலகுவில் தவிர்க்கப்பட்டன அல்லது புறந்தள்ளப்பட்டன.ஏனைய இனங்கள் நன்மை பெற்றுவிடக்கூடாது என்பதற்காகப் பொருளாதார இலக்குகள் மாற்றியமைக்கப்பட்டன.

பெருமளவு நிதியும் மனித வளமும் ஏனைய இனங்களின் அடையாளங்களை அழிப்தற்காக இருப்புகளைச் சிதைப்பதற்காக செலவு செய்யப்பட்டன. இதே வேளை பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் அரசியல் கோட்பாடாக கவசமாக ஒற்றையாட்சி முறைமை மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்தப்பட்டது. மலையகத் தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டமை பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தாமை சிங்கள அரசுக்கு ஏனைய தேசங்களின் இருப்பின் மீதும் ஆதிக்கத்தைச் செலுத்தலாம்  என்ற துணிவைத் தந்தது.

மாறாக தமிழ் மக்கள் இனவழிப்புக்கு எதிராக எதிர்ப்பை வெளிக்காட்டியபோது – உரிமைகளைக் கோரிய போது சிங்கள அரசு வன்முறையை பதிலாகக் கையிலெடுத்தது. அரசின் அடக்குமுறைகள் அழித்தொழிப்புகளுக்குப் பாதுகாப்பாகத் தமிழர்களின் எதிர்ப்பு வடிவங்களும் காலத்துக்குக் காலம் பரிமாண வளர்ச்சியடைந்தது. அத்தகைய வளர்ச்சிக்கு ஏற்ப அரசின் வன்முறைக் கொடூரங்களும் மிகையாக அதிகரிக்கத் தொடங்கியது. இதன் உச்சக்கட்டமாக 2009ல் முள்ளிவாய்க்காலில் ஒரு பாரிய இனப்படுகொலை தமிழ் மக்கள் மீது ராஜபக்ச தலைமைதாங்கிய சிங்கள அரசால் நடத்தி முடிக்கப்பட்டது.சிறீலங்கா அரசின் அந்த வெற்றி பௌத்த-சிங்கள மேலாதிக்க வெற்றியாக மடைமாற்றம் செய்யப்பட்டது.நாட்டில் வெற்றிவாதம் திட்டமிடப்பட்ட வகையில் கட்டமைக்கப்பட்டது.ஏனைய இனங்கள் மற்றும் மீதான மேலாண்மையையும்  தீவு முழுவதும் தமக்கென வாக்களிக்கப்பட்டது என்ற பேரினவாதச் சித்தாந்தங்களையும் மேலும் வலியுறுத்துவதன் மூலம் எந்த இனத்திற்கும் உரிய தனித்துவமான உரிமைகளை மறுதலிக்கும் வகையில் பௌத்த- சிங்கள பேரினவாத்தை மேலும் இறுக்கமடையச் செய்வதற்கு இந்த போர் வெற்றிவாதம் பயன்படுத்தப்பட்டது. பௌத்த-சிங்கள மேலாதிக்கம் அதன் வழி வந்த தீவு முழுவதும் தமக்கு வாக்களிக்கப்பட்ட பூமி என்ற கற்பிதம் அதனால் ஏற்பட்ட பேரினவாத அபிலாசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை ராஜபக்ச அரசு கட்டியெழுப்பிய போர் வெற்றிவாதம் சிங்கள மக்களுக்கு வழங்கியது. அதேவேளை அந்த வெற்றியின் நாயகர்களாக ராஜபக்ச குடும்பம் தங்களை நிலை நிறுத்தும் வாய்பையும் தவறவிடவில்லை.70 ஆண்டு கால பேரினவாத அரசியலின் விளைவை தற்போது பொருளாதாரச் சீர்குலைவாக நாடு அனுபவிக்கின்றது. இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பேரழிவின் தாக்கங்கள் அனைத்து மக்களையும் தேசம் இனம் என்ற வேறுபாடு இன்றி பாதித்துள்ளது. ஏழைகள் மட்டுமன்றி நடுத்தர வர்க்கத்தினர் மேற்தட்டு வர்க்கத்தினர் முதலாளிகள் தொழிலாளிகள் என அனைவரையும் பாதித்துள்ளது. உண்மையை ஆராய்ந்தறிய வரலாறு தந்துள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ராஜபக்ச ஆட்சியை மட்டும் காரணமாக்கி ஏனைய அரசாங்கங்களையும் எப்போதும்  அழிவுகளின்பங்காளிகளாக இருக்கின்ற அதிகார வர்க்கத்தையும் இவற்றுக்கெல்லாம் மௌனமாக ஆதரவளித்த தங்களையும் இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்து தம்மிடையே புரையோடிப்போயுள்ள பௌத்த-சிங்கள பேரினவாத மனநிலையையும் அதன் நவீன வெளிப்பாடான வெற்றிவாதத்தையும் பொருளாதார பேரழிவுக்கான குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யும் போக்கையே இன்று போராடுபவர்களிடையேயும் எம்மால் பார்க்க முடிகின்றது.ஊழலுக்கும் அதிகார துஸ்பிரயோகங்களுக்கும் பொறுப்புக் கூற அழைப்பு விடுக்கும் போராட்டக்காரர்களால்இன்றுவரை தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு மட்டுமல்ல இறுதி நேரத்தில் முள்ளிவாய்க்காலில் செய்யப்பட்ட இனவழிப்புக்காகத் தன்னும் பொறுப்புக் கூற வேண்டும் என இன்றுவரை கூற முடியவில்லை.

இந்த மே 18ல் தொடர்ந்து வந்த சிறீலங்கா அரசாங்கங்கள் தமிழ் மக்களின் தேசியத்தின் மீதான இனவழிப்புநடவடிக்கைகளையும் ஒட்டு மொத்தமாக சிங்கள அரசுகள் செய்த பாரிய படுகொலைகளையும்  ஈற்றில் 2009ல் முள்ளிவாய்க்காலில் உச்சத்தை எட்டிய இனப்படுகொலையையும் நினைவு கூரும் நாம் சிங்கள மக்களுக்கு கூற விளைவது ஒன்றை மட்டுமே! இன்றைய உங்களின் நிலைக்கு நீங்கள் வினா ஏதுமின்றி தொடர்ந்தும் ஒற்றையை மையப்படுத்திய பௌத்த-சிங்களபேரினவாத அபிலாசைகளின்பாற்பட்டு சிங்கள அரசாங்கங்களுக்கு அளித்து வந்த ஆதரவின் விளைவையே இன்று நாடுஅனுபவிக்கின்றது.இந் நாளில் எங்களின் ஆத்மார்த்த கோரிக்கைகளை மீண்டும் ஒரு தடைவ வலியுறுத்த விரும்புகின்றோம்.

1. நினைவுகூர்தலுக்கான உரிமையும் ஓர் அடிப்படை உரிமை. அது ஈழத்தமிழர்களின் பண்பாட்டு உரிமையும் கூட. ஈழத்தமிழர்களின் அந்த உரிமையை சிறிலங்கா அரசு ஒரு போதும் தடுக்க முடியாது.2. தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணையை மீள வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் வடக்கு-கிழக்கில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சிங்கள-பௌத்த மயமாக்கப்படும் தமிழர் தாயகம் உட்பட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு செயற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.3. ஈழத்தமிழர்களின் பூர்வீக தாயகமாக வடக்கு – கிழக்கை அங்கீகரித்தல் வேண்டும்.4. பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைக்கான ஒரு பொறிமுறையே ஒற்றையாட்சி முறைமை என்பதை ஏற்றுக் கொண்டு சிறிலங்காவின் ஒற்றையாட்சியை அகற்றித் தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் வேண்டும்.5. தமிழர்கள் ஒரு தேசமாக தங்களை அடையாளப்படுத்தத் தேவையான அனைத்து இயல்புகளையும் பண்புகளையும் கொண்டவர்கள் என்பதையும் அதன்வழி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமையும் ஒரு போதும் பராதீனப்படுத்தவியலாத இறைமையும் உள்ளது என்பதும் ஏற்கப்பட வேண்டும்.மே 18 தனியே எமக்கான துயரத்தின் நினைவு கூரல் நாள் மட்டுமல்ல்

 

இந்தத் தீவின் அரசால் மக்கள் ஆதரவுடன் ஒரு இனம் இனப்படுகொலை செய்யப்பட்டது. இன்று வரை இனவழிப்புக்கு உள்ளாகின்றது என்பதை உலகுக்கும் குறிப்பாக இத்தீவின் சக தேசமான சிங்கள மக்களுக்கும் சொல்வதற்கான ஒரு நாளுமாகும். இந்த நாள் “தமிழர்கள் நாம் வீழ்ந்துவிடவில்லை வீழ்ந்தாலும் மறுபடியும் எழுவோம்” என்று வீழ்ந்துபட்ட எம் உறவுகளுக்கு வாக்குறுதி அளிக்கும் ஒரு நாளுமாகும். இந்த உலகில் யார் பாராதிருந்தாலும் யார் எதிர்த்தாலும் நாங்கள் நிமிர்ந்தெழுவோம் போராடுவோம் விழுதெறிவோம்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜனநாயக ரீதியில் வீட்டுக்குப் போ என கூறினால் நாங்கள் வீட்டுக்குப் போகத் தயார் – சஜித் பிரேமதாச

கொள்கைகளை காட்டிக்கொடுக்காது ஒரே நிலையில் இருந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு மானம், மரியாதை இருப்பதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உள்ள 225 பேரும் வெட்கமற்றவர்கள் என 22 மில்லியன் மக்கள் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொள்கைகளுக்கு துரோகம் செய்யாமல் சரியான நிலையில் இருந்து சுயமரியாதையை பேணுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் ஆசனங்கள் தனக்கு பெரிதல்ல என தெரிவித்த சஜித், ஜனநாயக ரீதியில் வீட்டுக்குப் போ என கூறினால் நாங்கள் வீட்டுக்குப் போகத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி – குறுக்கிட்ட ஆளுந்தரப்பு எம்.பி !

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நினைவுகூரும் வகையில் இன்று நாடாளுமன்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், இன்று தமது நாடாளுமன்ற உரையின்போது, இந்த அஞ்சலி நிகழ்வுக்கான அனுமதியை, சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரிடம் கோரிய நிலையில் அஞ்சலி நிகழ்வு நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வு நிறைவடைந்த பின்னர், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பினர், முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக இந்த ஒரு நிமிட அஞ்சலி செலுத்தியதாக குறிப்பிட்டார்.

எனவே இந்த நிகழ்வை நாடாளுமன்ற பதிவு புத்தகத்தில் இருந்து நீக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர், குறித்த ஒரு நிமிட நிகழ்வு தொடர்பில் சபாநாயகருக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் அவர் இது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்வார் என்றும் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து வினோநோகராதலிங்கம் தமது உரையை தொடர்ந்தார்.