
சமீபத்தில் கனடாவில் வாழும் தமிழ்த் தேசிய உணர்வாளப் பெண்மணி சிவவதனி பிரபாகரன் என்பவர் தனது மகளான திவ்யாவின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தனது முகநூல் பதிவில் “இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது” என்றும் பதிவிட்டுள்ளார். ஒரு தாயார் தனது மகளின் திருமணத்தையிட்டு பேருவகை கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சமூக வலைத்தளத்திலேயே குடும்பம் நடத்தும் இக்காலத்தில், சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமையும் ஒன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால் திருமதி சிவவதனி பிரபாகரன் தனது சம்ந்தக்குடி பற்றி தெரிவித்த தகவல்களே சமூக வலைத்தள தமிழ்த் தலிபான்களுக்கு சும்மா மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்தமாதிரி ஆகிவிட்டது.
சிவவதனி அம்மா மகள் திவ்யா காதலித்த ஆபிரிக்க நாடான கொங்கோ நாட்டு இளைஞனை திருமணம் செய்து வைத்தமையை பொறுக்காத தமிழ்த் தலிபான்கள் பின்னூட்டலில் வந்து வசை மாரி பொலிகிறார்கள். அடுத்தவர் வீட்டு படுக்கையறையை எட்டிப் பார்க்க கூடாது என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாத பண்பற்ற தமிழ் ஆண்களும் பெண்களும் புதுமணத் தம்பதிகளுக்கு சாபங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள்.
சம்பந்தப்பட்ட குடும்பத்தின் அனுமதியின்றி தம்பதிகளின் திருமணப் படங்களை பல்வேறு சமூக வலைத்தள போலிக் கணக்குகளில் பகிர்ந்து தமது காழ்ப்புணர்வை உமிழ்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் வேற்று நாட்டவர்களை மணம் புரிதல் என்பது புதிதல்ல. இரண்டாவது தலைமுறையை கடந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் இடையே வேறு இனத்தவர்களில் ஆண் மற்றும் பெண் எடுத்தல் சகஜமாக நடந்து தான் வருகிறது. அவ்வாறான திருமணப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன. பெரும்பாலான அத்திருமணங்கள் வெள்ளையினத்தவர்களுடான தமிழ்க் கலியாணங்களாக இருக்கின்றன.
வெள்ளையினத்தவர்களுடனான கலப்புத் திருமணங்களுக்கு வராத விமர்சனங்கள், கறுப்பு நிற ஆபிரிக்க இனத்தவர்களுடான திருமணங்களுக்கு வருகின்றன. இது தமிழர்களின் நிற வெறியை வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் பளுப்பு நிறமுடைய தமிழர்கள் தங்களை ஆபிரிக்கர்களை காட்டிலும் உயர் இனமாக கருதுகின்றனர். அதனாலேயே வெள்ளை நிறத்தவர்களிடையே ஏற்படும் கலப்பு திருமண பந்தங்களை வரவேற்று கொண்டாடுகின்றனர். அதேநேரம் ஆபிரிக்க இனத்தவரையோ அல்லது வெள்ளையினம் சாராத ஏனைய கலப்புத் திருமணங்களை எள்ளி நகையாடுகின்றனர்.
இன அடக்குமுறைக்கு எதிராக விடுதலை வேண்டிப் போராடிய இனமான ஈழத்தமிழர்கள் நிறவெறி, சாதிவெறி, மதவெறி, பிரதேச வாதம் மற்றும் பெண்ணடிமைத் தனம் என்ற பிற்போக்குத் தனங்களில் இன்னமும் உழல்வது வெட்கக்கேடானது. தாயகத்தை காட்டிலும் புலத்தில் வாழும் தமிழர்களிடையே இவ்வாறான பிற்போக்குத் தனங்கள் மிகுதியாக காணப்படுகின்றன.
கருத்துச் சுதந்திரத்தின் வரையறை தெரியாத காட்டுமிராண்டி சமூகமாக ஈழத்தமிழ்ச் சமூகம் புலம்பெயர் நாடுகளில் வாழ்வது தலைகுனிவானது. சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனது மகள் கலப்புத் திருமணம் செய்ததை ஆதரித்தது உண்மையில் வரவேற்க்கத்தக்க செயலாகும். அவர் சொல்ல வந்த செய்தி கணியன் பூங்குன்றனாரின் “ யாதும் ஊரே யாவரும் கேளிர் “ என்பதன்படி தமிழர்கள் சர்வதேசவாதிகள். உலகில் வாழும் அனைவரும் எமது உறவுகளே. அதேநேரம் உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமதே என்பதாகும்.
சிவவதனி அம்மையாரின் தூரநோக்கு சர்வதேசப் பார்வையை புரிந்து கொள்ள திராணியற்ற கூட்டமொன்று சமூக வலைத்தளங்களில் குத்தி முறிகிறது. பாலியல் வக்கிரமான சொற்றாடல்களில் பின்னூட்டல்களை இடுகின்றது. அவ்வாறான பின்னூட்டல்களில் பெரும்பாலானவை ஆபிரிக்க மணமகனின் ஆண்குறியை மையமாக கொண்ட வக்கிர கருத்துக்களாக உள்ளன. பெரும்பாலும் இப் பின்னூட்டல்களை இடுபவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஆண்களாகவே உள்ளனர். அவர்களுக்கு தமது ஆண்மையில் இருக்கின்ற குறைபாடுகள் காரணமாகத் தான் ஆபிரிக்க மணமகன் மீது காழ்ப்புணர்வு கொண்டு பாலியல் வக்கிரமான பின்னூட்டல்களை இடுவதாகத் தான் கருத வேண்டியுள்ளது.
ஒரு பெண் யாரைத் திருமணம் செய்ய வேண்டும். யாருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் தீர்மானிக்க முடியும். பெண்களின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் பாதுகாப்பில் கூடுதல் முன்னுரிமை கொடுக்கும் மேற்கு நாடுகளில் அகதிகளாக வந்து தஞ்சம் பெற்று வாழும் தமிழ் ஆண்களுக்கு மேற்கூறிய விடயங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
பெண்கள் மீதான அத்துமீறல்களில் மற்றும் வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களுக்கு புலம்பெயர் நாடுகளில் எத்தகைய தண்டனைகள் வழங்கப்படும் என்பதும் தெரிந்திருக்கும். அல்லது தெரிந்து வைத்திருக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மட்டுமல்ல தாயகத்திலும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் பல்வேறு சட்டங்கள் மற்றும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளில் ஒழிந்து கொண்டு வெட்டி வீராப்பு மற்றும் அவதூறு பரப்புகிறவர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்படுவார்கள்.
எழுதியவர்: கங்கா ஜெயபாலன், சமூக சேவைப் பணியாளர், கல்வி: Social Work & Education (University of Niederrhein), சர்வதேச உறவுகள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), அரசியல் விஞ்ஞானம் (கொழும்புப் பல்கலைக்கழகம்).
