காசாவின் நிலைமை குறித்து இலங்கை கவலை ! கண்டிக்க வேண்டும் என்கிறார் எம்.பி ரவூப் ஹக்கீம் !
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், மேலும் மோசமடைய வழிவகுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டது. பிராந்தியத்தில் விரைவில் நிலையான அமைதி நிலைநாட்டப்படும் என்று இலங்கை நம்புவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நீண்ட காலமாக பாலஸ்தீன மக்களுக்காகக் குரல்கொடுத்து வருகின்ற போராளி. அவர் பாலஸ்தீன மக்கள் மீது தனக்குள்ள கரிசனையை வெளியிட்டு வருபவர். ஆனால் அண்மைக்காலமாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு இஸ்ரேலுக்கு இலங்கையர்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளன. அதனால் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இதுதொடர்பில் அடக்கித் தான் வாசிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது.
காசாவில் இஸ்ரேல் இந்த வாரம் வான் மற்றும் தரைவழி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கிய பின்னர் கடந்த இரண்டு நாட்களில் 700 க்கும் மேற்பட்டவர்களை இஸ்ரேல் கொலை செய்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தும், பலஸ்தீன தேசிய கொடியை கழுத்தில் அணிந்தபடி இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்றைய தினம் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இதன்போது எம்.பி ரவூப் ஹக்கீம், இஸ்ரேலின் மிலேச்சத்தனமான இனப்படுகொலை, தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் நாசகாரச் செயல்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகக் கண்டிக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல், இன்று காஸாவில் எவ்வாறு இனப்படுகொலைகளைச் செய்கின்றதோ அதனையே எண்பதுக்களில் ஜே ஆர் ஜெயவர்த்தனவுக்கும் கற்பித்தது. நூறு தமிழர்களைக் கொன்றால் அதில் ஒரு புலியும் இருக்கும் என்றது தான் அவர்களின் தாக்குதல் தந்திரம். இதனையே இவர்கள் ஜேவிபி யை அழிக்கவும் பயன்படுத்தினர். காஸாவில் பிறப்பவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என வர்ணிக்கும் தற்போது ஆட்சியில் உள்ள தீவிர வலதுசாரிகள், அதற்காக குழந்தைகளையும் பெண்களையும் குறிவைத்து தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். காஸாவில் நடைபெறுவது ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலை. அது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் முழுமையான ஆசீர்வாதத்துடன் நடைபெறுகிறது.