புதிய வடிவில் வரும் வர்த்தக-தொழில் நுட்பப் போர்
Teresa Ribera என்பவர் ஐரோப்பிய கமிஷனின் உப தலைவர். இவர் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி முதலீடுகள் வருமென்கிறார்.அதேவேளை தமது நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டுமென்கிறார். அவர் மறைமுகமாகக் குறிப்பிடுவது பணவீக்கத்தை என்பது புரிகிறது. நேட்டோ மாநாட்டில் எடுத்த முடிவின் பிரகாரம், நாட்டின் மொத்த உள்ளூர் உற்பத்தியின் (GDP) 5% வீதத்தை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கினால் பெரும் முதலீட்டாளர்கள் எப்படி வருவார்கள்? பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவும் நாட்டில் முதலீடு (FDI) வருவது சாத்தியமா?. ஆனாலும் அசாதாரண அரசியல் சூழலிலும் முதலீடு செய்ய சீனா மட்டுமே முன் வரும்.
இதனை அமெரிக்கா அனுமதிக்குமா?.தனது நாடு நோக்கி முதலீடுகளும் தொழிற்சாலைகளும் வர வேண்டுமென தீவிரமாகச் செயற்படும் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தோடு இந்த விவகாரத்தில் மறைமுகமான மோதல் போக்கினையே மேற்கொள்வார். ரஷ்யாவினால் ஆபத்து வருமென்கிற அச்சுறுதலை விடுக்கும் டிரம்ப், பட்டினுடனும் உரையாடிக் கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் எதிரியுனும் நண்பர்களுடனும் ஒருவகையான இரட்டை இராஐதந்திரத்தினை டிரம்ப் மேற்கொள்கிறார். ‘கிழக்கை புட்டீன் வைத்துக் கொள்ளட்டும். மீதமுள்ள பகுதிகளின் கனிமவளங்களை நான் கையேற்கிறேன்’ என்பதுதான் டிரம்பின் டீல்.
செயற்கையான வகையில் உலக ஆதிக்கத்தை காட்ட முற்பட்டால் வரிப்போர், மத்திய கிழக்குப் போர் மற்றும் உக்ரேயின் போர் தரும் படிப்பினைகளை மீளாய்வு செய்ய வேண்டிய தேவை டிரம்பிற்கு ஏற்படும். அந்த எதிர்வினையால் வந்த மாற்றங்கள் அனைத்தும் துல்லியமாகப் புலப்படுகிறது. தென்சீனக் கடலிலும் மத்திய கிழக்கிலும் டிரம்ப் மேற்கொண்ட புவிசார் இராஜதந்திரங்கள் அனைத்தும் தற்காலிகத் தோல்வியைத் தழுவியுள்ளன. தைவானுடன் போரில் ஈடுபடவில்லை சீனா. அமெரிக்கா முன்னெடுத்த இஸ்ரேல்-ஈரான் proxy war இலும் ரஷ்யாவும் சீனாவும் மாட்டுப்படவில்லை. ஆதலால் மீண்டும் வர்த்தகப் போரிற்கான ஆயுத்தங்களை அமெரிக்கா மேற்கொள்ளுமென எதிர்பார்க்கலாம்.
– இதயச்சந்திரன்