சபா நாவலன்

சபா நாவலன்

கருணா அம்மானின் சர்ச்சைக் கருத்து: மனு இரத்து

கருணா அம்மான் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பில், அவரைக் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்றி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கருணா, ‘ஆனையிறவில் ஓர் இரவில் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையிலான இராணுவச் சிப்பாய்களைக் கொன்றோம்’ என்று ஒரு வாக்குமூலத்தை தன்வாயாலேயே வழங்கியிருந்தார்.

தென்னிலங்கையில் இந்த கருத்து பரபரப்பையும் சிங்கள மக்களிடையே கண்டனத்தையும் ஏற்படுத்தியது.
கருணாவைக் கைது செய்யவேண்டும் என்று எதிர்ப்புக் குரல்கள் வலுத்தன. தேரர்களும் கருணாவின் கருத்துக் கண்டனம் தெரிவித்ததுடன் அவரைக் கைதுசெய்யும் படியாக வலியுறுத்தினர். இந்த நிலையில் கருணா தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பில், அவரைக் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் விசாரணைகள் இன்றி மனு இரத்துச் செய்யப்பட்டது.

கொற்றனின் கோட்டைக்குள்… : சபா நாவலன்

IDP_Camp_Barbed_Wireகுருதியுறைந்து போகாத ஒரு குக்கிராமம். பிணக்குவியல்களும் மணற்குவியல்களுமாமகக் காட்சிதரும் கடற்கரைப் பகுதி. நாளை பொழுது புலர்ந்தால் இன்னும் ஆயிரமாயிரம் பிணக்குவியல்களின் மேல் புலிகளை அழித்துவிட்டதாகப் பெருமைகொள்ளக் காத்திருக்கும் சிறீலங்கா அரசின் கோரத்தாண்டவம். ஏழு சதுர கிலோ மீற்ரர் புதுக்குடியிருப்புக் கரையோரப் பகுதிக்குள் முடக்கப்பட்டுவிட்ட இன்னமும் கொல்லப்படாத மனிதர்களின் தொகை கூட யாருக்கும் தெரியாது. தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக  எத்தனை பிணங்களின் மேலும் புலிகள் அழிக்கப்படலாம் என்று பெருமைப் பட்டுக்கொள்ளும் மகிந்த குடும்ப அரசாங்கம். கண்மூடித்தனமான கொலைவெறிக்கு  அப்பாவித்தனமாக ஆதரவளிக்கும்  சிங்கள மக்கள். “இவர்கள் புலிகளோடு பத்து வருடங்களாக வாழ்ந்தவர்கள். முட்கம்பி முகாம்களை விட்டு வெளிவிட்டால் ஆபத்து” என்று பிரித்தானியத் தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கும்  இராணுவ அதிகாரி. இவற்றையெல்லாம் கண்டும் கேட்டும் கையாலாகது திகைத்து நிற்கும் இன்னொரு கூட்டம்.

கொல்லப்படுதலை நிறுத்த நாம் யார்க்கும் பலமில்லை. அழுவதற்குக் கூடக் கண்ணீரில்லை. ஆனால் செத்துப் போகாமல் தப்பிவரும் அப்பாவிகளின் எதிர்காலமென்ன என்றாவது சிந்திக்க மறுக்கிறோம். இழப்பதற்க்கு உயிரைத் தவிர இல்லாமல் போன சமூகத்தின் எதிர்காலம் கூட மரணத்துள் வாழ்தலோ என சிறீலங்காவில் வளரும் பாசிசம் சந்தேகம் கொள்ளவைக்கிறது.

மனிதர்கள் கருத்துக்களால் பிழவுபட பாசிசம் கோரமாய் தனது விஷ வேர்களை ஊன்றி விருட்சமாய் வளர்கிறது.

1. பேரினவாத அரசாங்கம் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் உயிரையோ, அடிப்படை உரிமைகளையோ மதிப்பதில்லை. இதற்கெதிராகப் போராட்டம் நடத்துவது புலிகள். ஆக, புலிகள் தான் மக்களின் காப்பாளர்கள் என்கிறது மிகப்பெரும் பகுதியான தமிழ் பேசும் மக்கள் பகுதி.

2. புலிகள் தான் தமிழ் பேசும் மக்களை “முன்னேற்றமடைய விடாமல்” குண்டுகளையும் துப்பாக்கிகளையும்  தூக்கிக்கொண்டலைகிறார்கள். இதற்கெதிராக அரசாங்கம் போராடுகிறது. ஆக இலங்கை அரசின் ஆதாரவாளர்களாக வரித்துக்கொண்டு புலிகளை அழித்தலே பிரதானமான செயற்பாடாகக்கொண்டு இலங்கை அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் மிகச்சிறிய கூட்டம்.

இதில் முதலாவது பகுதியினரான பெருந்திரளான புலம் பெயர் தமிழர்களும் அவர்களின் உணர்வு பூர்வமான எழுச்சிகளையும், பங்களிப்பையும் தமது சொந்த அபிலாசைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் நபர்களும் அடங்குவர். இலங்கை முழுவதிலுமுள்ள தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும், குறிப்பாக வடபகுதி மக்கள் மத்தியிலும் இவ்வாறான புலிகளுக்கான மறுதலையான ஆதரவு உள்ளது என்ற கசப்பான உண்மையை யாரும் மறுக்க முடியாது. 

உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய வாழ்க்கைச் சுமையின் தாக்கத்திற்கு மத்தியிலும் கொட்டும் மழையிலும், கொடிய பனியிலும், தொலை தூரங்களிலிருந்துகூட அரசிற்கெதிராகப் புலி ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளில் பங்குகொள்ளும் பெருந்திரளான மக்களின் உணர்வுகளை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. இவர்களின் பெரும் பகுதியானவர்களிடம் புலிகள் தொடர்பாக விமர்சனப் பார்வை இருந்த போதிலும், அரசிற்கெதிராகப் புலிகளைத் தவிர எந்த மாற்று சக்தியும் இல்லாத நிலையிலேயே புலிகளின் தமது சொந்த உறவுகளுக்காக  எதிர்ப்பிடங்களில் பங்கு கொள்கிறார்கள்.

இவ்வாறான புலிகளுக்கெதிரான மாற்று வழி கருத்தியல் ரீதியாக உருவாவதை மழுங்கடிப்பதில் பிரதான பாத்திரம் வகித்தவர்கள் இரண்டாவது பகுதியினரான அரச சார்பு குழுக்களே. அடிப்படையில், புலிகளை விமர்சித்தல் என்பது, இனப் படுகொலையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அரசை ஆதரித்தல் என்ற கருத்தை உருவாக்கியதில் பிரதான பாத்திரத்தை வகித்தவர்களும் இந்த அரச ஆதரவுக் குழுக்களே.

இவ்வாறு புலி ஆதரவு என்பது அரச பாசிசத்தையும், அரச ஆதரவு என்பது புலிகளின் பாசிசத்தையும் வளர்த்தெடுத்த போக்கில் உருவான இன்னொரு போக்கும் இந்த இரு பகுதியினரின் கருத்தியலில் வளர்ச்சியின்றி முடங்கிப் போனது. அந்த மூன்றாவது அணுகுமுறை என்பது ஐந்து வருடங்களுக்கும் மேலாக அரச ஆதரவுக்குழுக்களின் அபாயகரமான போக்கை எச்சரித்திருந்தது.

3. இலங்கை அரசிற்கெதிரான போராட்டமென்பது, சில சமூக விரோதிகளால் முன்னெடுக்கப்பட்ட குற்றச்செயல்களல்ல, மாறாக இலங்கை அரசின் தொடர்ச்சியான தேசிய இன அடக்குமுறைகெதிரான எழுற்சியேயாகும். இவ்வடக்குமுறையின் இன்னொரு உச்ச வடிவம் தான் இன்றைய இன அழிப்பும் கூட. இந்த இனச் சுத்திகரிப்பிற்கெதிரான போராட்டத்தை புலிகள் தம்மைச்சுற்றிய பாசிசமாக வளர்த்தெடுத்து சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். ஆக, இலங்கை அரசிற்கெதிராகப் போராடுவதற்கான உரிமையை கோரிப் புலிகளை நோக்கிய போராட்டத்தையும், பிரதான எதிரியான இலங்கை அரசிடம் சரணடையாத விட்டுக்கொடுப்பிற்கு அப்பாலான போராட்டம் அவசியம் என்பதை வலியுறுத்தியது இந்த மூன்றாவது கருத்தியல்.

கெரில்லாப் போராட்ட அமைப்புக்களை நிர்மூலமாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, உலகெங்கிலும் முன்னதாகப் பலதடவைகள் பிரயோகிக்கப்பட அதே தந்திரோபாயத்தை இலங்கை அரசும் தமிழ்பேசும் மக்கள் மீதும் பிரயோகிக்கும் இன்றைய வன்னிச் சூழலானது, இந்த மூன்றாவது போக்கைக் கொண்டோரையும் ஒன்றில் முதலாவது போக்கிற்கு ஆதரவு நிலை கொண்டதாகவோ அல்லது இரண்டாவது போக்கின் சார்புனிலை கொண்டதாகவோ மாற்றியுள்ளது.

போராட்டங்களை அழித்தல்…

கிரேக்கத்தில் நடந்த சோவியத் சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியை அழித்தொழிக்க பிரித்தானிய அமரிக்க அரசுக்கள் பயன் படுத்திய அதே தந்திரோபாயத்தையே இலங்கை அரசும் மிக வலுவான இனவாத இராணுவத்தின் துணைகொண்டு தமிழ் மக்கள் மீது பிரயோகிகின்றது. 1946 முதல் 1946 – 1948 காலப்பகுதில் கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவம் பெரிய நிலப்பரப்பினைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. சுமார் ஒரு ரில்லியன் பவுண்ட்கள் வரை செலவுசெய்தும் போராட்ட அமைப்பை அழித்தொழிக்க முடியாமல் பின்வாங்கிய பிரித்தானிய அரசிற்குப் பின்னதாக, கம்யூனிஸ்ட்டுக்களை அழிக்க அமரிக்கா முன்வந்தது.

போராளிகளால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் நீர் வினியோகத்தைக் கட்டுப்படுத்துமாறு ஆணையிட்ட அமரிக்க உளவுப்படையான  சி.ஐ.ஏ, அப்பகுதியிலுள்ள மக்கள்  மீது  தேசிய இராணுவமான அரச படைகள் தாக்குதல் நடத்தவும் உறுதுணையாக அமைந்தது.

சோவித் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் போராளிகளின் இராணுவம் நிலைகொண்டிருந்த கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டன. மக்களைப் பட்டினி போட்டுக் கொன்று குவித்தது அரச படைகள். இதன் விளைவாக போராளிகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பியோடிய மக்களை சுட்டிக்காட்டி போராளிகளுக்கெதிராக கிரேக்க அரசு உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டது. போராளிகள் தனிமைப்பட்டுத்தப்பட்டு அழிக்கப்பபடும் நிலையில் வெளியேறும் மக்கள் மீது வன்முறை பிரயோகிக்க ஆரம்பித்தனர்.  இவ்வாறு  போராளிகளுக்கும் மக்களுக்குமிடையே முரண்பாடு வளர்ச்சியடைய, இதுவரை போராட்டத்திற்கு ஆதரவளித்த பெரும்பாலான விவசாயிகள் அதற்கு எதிரானவர்களாக மாற, அரச படைகள் வெற்றிகொண்டன. போராட்டம் அழிக்கப்பட்டது.

இந்த வெற்றியினூடாக இரண்டு பிரதான விடயங்களைச் சாதித்துவிட்டதாக பின்னதாக சி.ஐ.ஏ அதிகாரிகள் ஆவணமொன்றில் குறிப்பிடுகின்றனர்.
1. சோவியத் ஆதிக்கத்திற்கெதிரான வெற்றி.
2. மக்களுக்குப் போராட்டத்தின் மீதான நிரந்தரப் பயவுணர்வும் வெறுப்பும்.

மகிந்த அரசின் நிக்ழ்ச்சி நிரல்…

இவ்வாறு நீண்டதாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலானது, பல நாடுகளில் போராட்டங்களும் புரட்சியும்  அழிவின் மறுவடிவம் என்ற சிந்தனைப் போக்கினை மக்கள் மத்தியில் விதைத்துள்ளது.

இங்கு குறிப்பிடத்தக்க இன்னொரு விடயம், சோவியத் கமியூனிஸ்ட் கட்சியின் போராட்டமானது மக்கள் சார்ந்த மக்களில் தங்கியிருக்கும் மக்களின் கண்காணிப்பிலான போராட்டமாகவன்றி, இராணுவ நோக்கிலான போராட்டமாக அமைந்திருந்ததே அரச படைகளின் அழிப்பிற்கு உட்படக்கூடியதான நிலைக்கு மாற்றப்பட்டதன் அடிப்படைக் காரணமாகும்.

போராட்டங்களையும் புரட்சிகளையும் அழித்து தாம் விரும்பிய அதிகாரத்தை நிறுவிக்கொள்ள உலகெங்கும் ஏகாதிபத்தியங்கள் கையாண்ட அதே வகைமுறையைத் தான் பேரினவாத மகிந்த குடும்பமும், அனைத்து ஏகாதிபத்திய வல்லசுகளின் மௌனமான அங்கீகாரத்துடன் கையாள்கின்றது.

அழிந்துபோகும் போராட்ட நியாயம்…

புலிகளின் போராட்டம் என்பது தவறான அடித்தளத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டது என்பதை போராட்டம் ஆரம்பித்த காலம்முதலே பல ஜனநாயகவாதிகளும், இடதுசாரிகளும் சுட்டிக்காட்டத் தவறியதில்லை. புலிகளின் தவறு என்பது போராட்டத்திற்கான நியாயத்தையே மழுங்கடிக்குமளவிற்குப் பாசிசமாக வளர்ந்து இன்று அரச குண்டுகளினதும் துப்பாக்கிகளினதும் வீச்சுக்குள் மக்களை நிறுத்தி தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுகின்ற மனித அவலமாக விசுவரூபமெடுத்துள்ளது என்பதை யாரும் மறுக்கவில்லை.

மகிந்த குடும்ப பாசிசமானது, தனது சொந்த தேசத்தின் மக்களை கிரேகத்திலும் கொரியாவிலும் அமரிக்க அரசு திட்டமிட்டது போலவே கிராமங்களுக்குள் முடக்கி, அவர்கள் மீது கொலைவெறியாட்டம் நடத்துகிறது. இதனால் புலிகளைத் தனிமைப்படுத்து, ஏற்கனவே மக்கள் மீது எந்தப் பற்றுமறுமற்ற புலிகளை மக்களுக்கெதிரான தாக்குதலில் ஈடுபடும்படியான புறச் சூழலை ஏற்படுத்தியது. புலிகளின் பிரதேசங்களிலிருந்து வெளியேறிய மக்களை சுட்டிக்காட்டி தேசிய விடுதலைப் போராட்டம் என்பது மக்கள் விரும்பாத புலிகள் என்ற குழுவின் போராட்டம் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.

1. இலங்கையில் தேசிய இனப்பிரச்சனை என்பது இல்லாதவொன்றென்றும், புலிகள் மட்டுமே மக்களின் பிரச்சனை என்பதை நிறுவ முற்படுகிறது.
2. புலிகளைக் காரணமாக முன்வைத்துத்  தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியிலிருந்து மட்டுமல்ல, சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும் முன்னெழக்க்கூடிய அனைத்துப் போராட்டங்களையும் அழித்தொழிப்பது.
3. போராட்டங்கள் மீதான மக்களின் வெறுப்புணர்வை சமூகத்தின் நினைவு மட்டத்தில் வளர்த்தெடுப்பது.
4. புலிகளை முன்வைத்து ஜனநாயக சக்திகள் உட்பட அரச எதிர்ப்பாளர்களையும் தவிர்க்கமுடியாமல் அரசின் பாசிச எல்லைக்குள் உள்ளாக்குதல்.

இனவழிப்பு நடவடிக்கையே…!

உலகெங்கிலும் போராட்டங்களை நிர்மூலமாக்கவும், அதன் மீதான வெறுப்புணர்வை உருவாக்கவும் கையாளப்பட்ட அதே தந்திரோபாயத்தைத்தான் இலன்கையரசும் பிரயோகிக்கின்றது என்பது ஒருபுறமும் மறுபுறத்தில் இலங்கையரசானது ஏனைய அனைத்து ஒடுக்குமுறைகளினதும் உச்ச வடிவமாக அமைகிறது என்பது அதன் இனப்படுகொலையூடாக நிரூபிக்கிறது.

தான் விரும்பும் ஒன்றை அடைவதற்காக ஒரு நாட்டின் சட்டரீதியான அரசு நிராயுத பாணீகளான ஒரு குறித்த மக்கள் பிரிவினர் மீது இன்னொரு மக்கள் பிரிவினரின் நலனை அடிப்படையாக முன்வைத்து நடாத்துகின்ற கொலைகளும், சூறையாடல்களும் அழிவுகளும் இனப்படுகொலை என்பதை வரையறுக்கப் போதுமான முன்நிபந்தனையாகும்.

புலிகளை அழித்தல் என்ற அரசின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள, தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அம்மக்களின் அழிவைப் பொருட்படுத்தாது, அவர்களைச் சாரிசாரியாகக் கொன்றொழித்தும், அந்தக் கொலைக்களத்திலிருந்து தப்பியோடியவர்களை மிருகங்கள் போல முட்கம்பிச் சிறைகளில் அடைத்தும் பெரும்பான்மைச் சிங்களமக்களின் ஆதரவோடு நடாத்தும் இந்த அரசியலை இனவழிப்பு நடவடிக்கையே!

இன்னொரு தடவை தமிழ் மக்கள் தமது கடற்பிரதேசத்தில் மீன்பிடிக்கவோ, தனது நிலத்தில் விவசாயம் செய்யவோ, ஏன் வாழவோ உரிமை கேட்கும் போதெல்லம் தான் விரும்பியதை அடைவதற்காக இதே அரசாங்கம்  ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்துத் தமிழ் மக்கள் மீது அவர்கள் தமிழர்கள் என்பதற்காக படுகொலை நடத்தும் தார்மீக உரிமையை இலங்கை அரசு இன்றைய இனப்படுகொலைகளூடாக அறிவித்திருகிறது.

போராட்டத்தின் அவசியம்…

1970 களிலிருந்து தொடர்ச்சியாக ஆட்சிக்குவந்த இனவாத அரசுகளுக்கெதிராக பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களின் போராட்டமானது 1980 களின் பின்னர் தேசிய இன அடக்குமுறையின்  உச்சனிலை கண்டு ஆயுதப்போராட்டமாக பரிணாமமடைந்தது.

இன்று இந்தத் தேசிய இன அடக்குமுறை என்பது சிங்கள அரச பாசிசத்தின் அங்கீகாரத்தோடு இனப்படுகொலை என்ற நிலைக்கு வந்தடைந்துள்ளது. இந்த அரசியற் பின்புலத்தில் சிறீலங்கா அரச பாசிசத்திற்கெதிரானதும், இனப்படுகொலைக் கெதிரானதுமான  தமிழ் பேசும் மக்களது போராட்டத்தின் தேவை முநிறுத்தப்பட வேண்டும். அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் இணைந்து அரசிற்கெதிரான இப் போராட்டத்தை வளர்தெடுக்க வேண்டும். போராட்டத்தின் மீதான பயவுணர்வையும் வெறுப்புணர்வையும் மக்கள்மத்தியில் விதைத்து சரணடைவைக் கோரும் சிறிலங்கா அரச பாசிசத்தையும் அதன் ஆதாரமாக அமையும் அனைத்து சக்திகளையும் முன்னைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு அம்பலப்படுத்தவேண்டும். பல உணர்வுபூர்வமான தேசபக்த சக்திகளை உள்ளடக்கிய புலிகளின் ஆதரவுத் தளமானது சரியான போராட்டத்தை நோக்கி வென்றெடுக்கப்ப்பட வேண்டும்.

அரச பாசிசம்…

லசங்க விக்கிரமதுங்க என்ற ஊடகவியலாளன்  அரசை நோக்கிக் கேள்வியெழுப்பிய ஒரே காரணத்திற்காக தெருக்கோடியில் வைத்துக் கொல்லப்பட்டார். சர்வதேச ஊடகங்களிலும் அறியப்பட்ட, மிகப்பலமான தொடர்புகளைக் கொண்ட ஒரு ஊடகவியலாளன் நடுத்தெருவில் வைத்து அரச காடையர்களால் தேசபக்தியின் பேரால், போரின் பேரால் கொல்லப்பட்ட சில நாட்களில் மகிந்த குடும்பத்தின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய  ராஜபக்ஷ அவர் கொல்லப்பட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று சர்வதேச ஊடகங்களுக்க்ச் செவ்வி வழங்குகிறார். 70 இற்கும் மேலான ஊடகவியலாளர்கள் அதிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அன்னிய தேசங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பல ஊடகங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தனது அனைத்து எதிரிகளையும் துவம்சம் செய்துகொண்டிருக்கிறது. அப்பாவிச் சிங்கள  மக்கள் தேசபக்தி உருவாக்கிய பாசிசத்தில் கட்டுண்டு போயுள்ளனர்.

தமிழர்களுக்கெதிரான உணர்வு தலைவிரித்தாடுவதாக அண்மையில் இங்கிலாந்துக்கு வருகை தந்திருந்த சிங்கள ஊடகவிலாளர் துயர்பட்டுக்கொண்டார். பேரூந்துகளில் சிங்கள  நடத்துனர்கள் கூட தமிழர்களிடம் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு மிரட்டப்படுகின்றனர்.

தொலைதூரக் குக்கிராமங்களில் கூட சிங்கள தேசம் என்ற உணர்வும், மூன்று தேச சிங்கள உணர்வும் மகிந்த அரசை பௌத்த சிங்களத்தின் காவலனாகக் காண்பிக்கிறது. மகிந்த சிந்தனைய என்ற தேர்தல் வாக்குமூலம் இதைத்தான் முன்மொழிந்தது. ஆக, தெற்காசியாவின் கொல்லைப்புறத்தில்  ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன், இந்தியாவின் நேரடிப்பங்களிப்புடன், அவற்றின் வியாபார அரசியல் நலன்களுக்காக ஒரு கோரமான பாசிச அரசு உருவாகிவருகிறது.

பிரமித்துப் போன ஊடகவியலாளன்…

இவற்றிற்கெல்லம் மத்தியில், தேசிய இன ஒடுக்குமுறைகெதிராக ஆயுதப்போராட்டத்தை கோரி அரசியலுக்கு வந்தவர்களும், புலிகளிடம் போராடுவதற்கான உரிமையைக் கோரி ஜனநாயம் பேசியவர்களுமன தமிழர்கள் பலர், ஒவ்வொரு காரணங்களுக்காக சிறீலங்கா அரசின் ஆதரவு சக்திகளாக தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அரசின் நிகழ்ச்சியொன்றைப் பிரதானப்படுத்தவில்லை என்ற புறக்கணிக்கத்தக்க காரணத்திற்காகக் கூட தெருவில் வைத்துத் தாக்கப்பட்ட ஊடகவியலாளன் வாழும் ஒரு இருண்ட தேசத்திற்கு “மக்கள்” ஊடகவியலாளன் அரச வரவேற்புடன் அரசின் கோட்டைக்குள், இனப்படுகொலையின் சூத்திரதாரிகளுள் மிக முக்கியமான ஒருவரான பசில் ராஜபக்ஷவைச் சந்தித்துவிட்டு வந்து அரசின் திறமையில் மலைத்துப் போய் தேசம்னெற் ஆசிரியரான கொன்ஸ்டன்டைன் எழுதிய கட்டுரைகண்டு அதிர்ச்சியடைந்தவர்களுள் நானும் ஒருவன்.  அவரின் அரசியல் பற்றி இதுவரை நான் அறிந்திராவிட்டாலும், மனிதாபிமான உணர்வும், குறைந்தபட்சம் கொல்லப்பட்ட சக ஊடகவிலாளர்கள் மீதான அனுதாப உணர்வும், இனப்படுகொலைகளுகெதிரான கோபமும் கொண்டிருப்பார் என்றே எண்ணியிருந்தேன்.

கொன்ஸ்ரன்ரைன் கட்டுரையில் பெருமிதம் கொள்ளும் திறந்த வெளிச் சிறைச்சாலைகளுள் வலம் வந்த அதே நேரத்தில் பவானி பெர்னாண்டோ என்ற இலங்கை வக்கீல் இந்தச் சிறைகளில் மக்கள் மந்தைகளாக நடாத்ததப்படுவதை சர்வதேச ஊடகமொன்றிற்கு விலாவாரியாகத் தெரிவித்துக் கொண்டிருந்தார். எல்லாம் போகட்டும் “ஆவணங்களே இல்லாமல்” ஏன் ஊடகவியலாளர்கள் திறந்தவெளிச் சிறை முகாம்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றாவது ஒரு கேள்வியை கனவான் பசிலின் காதுக்குள் போட்டுவைத்திருக்கலாமே.

அரசிற்குப் பிரமித்துப் போய் நீங்கள் வரைந்த கட்டுரையைப் படிக்கும் சாதாரண புலம் பெயர் தமிழனை இது பிரமிப்பில் ஆழ்த்திவிடாது. புலிகளுக்கு எதிர் என்பதெல்லாம் அரச ஆதரவு என்று புலிகளும், தமிழ் அரச ஆதரவாளர்களும் சேர்ந்து வளர்த்தெடுத்த சூத்திரத்தை வலுப்படுத்தும், இது புலிகளின் பாசிசத்தையே வளர்த்தெடுக்கும்.

மக்கள் ஒருவிடயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். எமது பிரதான எதிரி சிறீலங்கா அரசு என்பதில் அவர்களுக்குக் குழப்பம் இருந்ததில்லை. ஆனால் புலிகளுக்கு எதிரான மாற்று அரசியல் அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் வரை தவிர்க்க முடியாமல் அவர்கள் புலிகளையே ஆதரிப்பார்கள். ஆக, இன்றைக்கு சிறிலங்கா பாசிச அரசிற்கெதிரான போராட்டமே எமக்கு முன்னாலுள்ள பிரதான தேவை. இதற்கான அரசியலை முன்வைப்பதனூடாகவே ஜனநாயகத்தை வெற்றிகொள்ள முடியும்.!

Related Posts:

http://inioru.com/?p=2300
http://inioru.com/?p=2225

கிளிநொச்சியும் மக்கள் விரோதிகளும் : சபா நாவலன்

SL_Army_in_Killinochieபிரித்தானியர்கள் இலங்கைத் தீவைத் தமது சிங்கள-தமிழ் பிரதிநிதிகளிடம் கையளித்த நாளிலிருந்து அவர்களாலேயே உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்ட பேரின வாதம் மகிந்த ராஜபக்ஷ என்ற பௌத்த சிங்கள அடிப்படை வாதியின் கரங்களில் தலைவிரித்தாடுகின்றது. “இலங்கை ஒரு சிங்கள-பௌத்த நாடு, இங்கே ஏனைய இனங்களும் சமாதானமாக வாழ முடியும்” – இதுதான் மகிந்த சிந்தனையவின் சாராம்சம். “சிங்கள-பௌத்த பெறுமானங்களைப் பயங்கர வாதிகளிடமிருந்து பாதுகாப்பதே எமது கடமை” – இது தான் மகிந்தவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி. 80 களுக்குப் பின்னதாக உருவான எந்த தேசிய விடுதலை இயக்கங்களுமே “வன்முறை மீது காதல் கொண்ட” மனநோயாளிகளால் கட்டமைக்கப்படவில்லை. இலட்சக்கணக்கான மக்களின் அர்ப்பணங்களும், தியாகங்களும், போராட்டங்களும், தமிழ்ப் பேசும் மக்களும் மனிதர்களுக்கான உரிமையுடன் வாழ்வதற்கான போராட்டமேயன்றி அர்த்தமின்றிச் செத்துப் போவதற்கான சடங்குகளல்ல! அரை நூற்றாண்டு காலமாக, சரி பிழை, நியாயம் அநியாயம், நேர்வழி குறுக்குவழி, என்பவற்றிற்கெல்லாம் அப்பால், இலங்கையின் பெரும்பான்மை இனத்திற்கிருக்கும் அரசியல், சமூகப் பொருளாதார உரிமைகளுடன் தமிழ் பேசும் மக்களும் வாழ்வத்ற்காக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தின் பாசிச வடிவம் தான் தமிழீழ விடுதலைப் புலிகள்! தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகப் போராடும் எந்த அமைப்பும், தனிமனிதனும், ஜனநாயகவாதியும், தேசிய வாதியும், மார்க்சியவாதியும், இந்தப் புலிகள் வரலாற்றின் பக்கங்களிலிருந்து துடைத்தெறியப் படுவதைப் பற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை. ஆனால் புலிகளின் அழிவிலிருந்து உதிக்கும் பெருந்தேசியப் பாசிசத்தையும், தமிழ் பேசும் மக்கட் கூட்டம் ஜனநாயகத்தின் பேரால் சிதைத்துச் சின்னாபினப்படுத்தப் படுவதையும் “மகிந்த புரத்தின்” சிம்மhசனத்திலிருந்து நியாயம் கற்பிப்பதையும் புலியெதிர்ப்பு அரசியல் வியாபாரிகள் எந்தக் கூச்சமுமில்லாம் நிறைவேற்றி முடிக்கிறார்கள். இலங்கை இனப்பிரச்னைக்கான வேர்கள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பது ஆயிரம் தடவைகள் அலசப்பட்டுச் சலித்துப் போன விடயங்கள்.

1. மொழிரீதியான வேறுபாடுகளை இலங்கையில் ஆரிய-திராவிட முரண்பாடாகவும் பின்னர் தமிழ் – சிங்கள முரண்பாடாகவும் மாற்றி, வேறுபட்ட தேசிய இனங்கள் உருவாவதற்கான சூழலைத் தோற்றுவித்து, இத்தேசிய இனங்களை தமது அரசியல், வியாபார நலன்களுக்காக மோதவிட்டு வேடிக்கை பார்த்தது பிரித்தானிய ஏகதிபத்தியம்.

2. தமிழ்ப் பேசும் உயர்தர வர்க்கத்தை வளர்த்தெடுத்துஇ சிங்கள மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சூழலை உருவாக்கியதும் இதே பிரித்தானிய ஆதிக்கம்.

3. சிங்களம் பேசும் மக்கள் மத்தியில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பான அச்ச உணர்வைத் தோற்றுவித்த இந்த அடிப்படைகள், பிரித்தானிய காலனியாதிக்கத்தின் பின்னரும் தொடர்ந்தது மட்டுமன்றி தமது வாழ்வாதரப் பிரச்சனைகளுக்கு தமிழ் பேசும் மக்களே அடிப்படைக் காரணம் என்ற உணர்வும் உருவாக வழிவகுத்தது.

4. தமிழ் பேசும் மக்களின் தலைமைத்துவத்தை எதிர் கொள்ளும் சிங்களத் தலைவர்களே சிங்கள மக்களை வெற்றி கொள்ளும் கதாநாயகர்களாக உருவாக, சிங்கள மக்கள மத்தியில் அமைப்பு மயப்பட்ட பேரினவாதம் உருவானது.

5. ஆக, இந்த அமைப்பு மயப்ப்பட்ட பேரின வாதம் சிங்களத் தலைவர்களின் வாக்கு வங்கியாகத் திகழ, சிங்கள மக்கள் மத்தியிலான அரசியற் கட்சிகள் பேரின வாதத்தையே தமது கட்சித் திட்டங்களின் அங்கங்களாக்கிக் கொண்டன.

6. இப்பேரின வாத அடக்கு முறையை உணரத் தொடங்கிய தமிழ் பேசும் சிறுபான்மையினர், சிங்களத் தலைமைகளுக்கெதிராக அமைபியல் ரீதியாக ஒன்றுபடவாரம்பித்தனர்.

7. தமிழ் அரசியற் கட்சிகளின் வாக்கு வங்கியாக தமிழ்த் தேசியவாதக் கருத்துக்கள் வளரவாரம்பிக்க, தமிழ் மக்கள மத்தியிலான அரசியற்கட்சிகள், தமிழ்த் தேசிய வெறியையே தமது கட்சித் திட்டங்களின் அங்கங்களாக்கிக் கொண்டன.

8. இதனால் இரு தேசிய இனங்களின் வளர்ச்சியும், அவற்றிடையேயன அமைப்பு மயப்பட்ட பிளவும் பெருந்தேசிய ஒடுக்குமுறையை அதிகப்படுத்த, இவ்வொடுக்குமுறைக்கு முகம் கொடுக்கமுடியாத அரசியற் கட்சிகளை தமிழ்பேசும் மக்கள் நிராகரிக்கவாரம்பித்த சூழலில், “பேச்சுவார்த்தை அரசியல்” என்பது “ஆயுத அரசியல்” என்ற தளத்திற்கு மாறியது. இங்குதான் புலிகள் உள்ளிட்ட தேசிய விடுதலைக்கான ஆயுதக் குழுக்கள் உருவாகின.

பெருந்தேசிய அடக்குமுறையானது அரசியல், பொருளாதர, சமூக அடக்குமுறையாக எல்லாத்துறைகளிலும் வியாபித்தது. தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகள் இராணுவ பலம் கொண்டு நசுக்கப்பட்டது. தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக தெருக்களில் அனாதைகள் போல் கொலை செய்யப்பட்டு வீசியெறியப்பட்டு நூற்றாண்டுகள் கடந்துவிடவில்லை. ஒருபுறத்தில் இரத்தம் தோய்ந்த கொலைக்கரங்களும், மறுபுறத்தில் பௌத்த போதனைகளும் இலங்கையின் தேசிய அரசியலாக மாறிய நிலையில் தான் பெரும்பாலான தமிழ்பேசும் மக்களின் மானசீக ஆதரவுடன், ஆயுதக்குழுக்கள் வேர்விட்டு வளரவாரம்பித்தன.

உரிமைக்காகப் போராடும் ஒரே நோக்கோடு புத்தகங்களுக்குப் பதிலாகத் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு தெருவுக்குவந்த பல இளைஞர்களை உயிரோடு தகனம் செய்த பாதகர்கள்தான் புலிகள் என்பது வேறு விடயம்.

எந்தெந்தக் காரணங்களுக்காக பேச்சுவார்த்தை அரசியல் என்பது ஆயுத அரசியலாக மாறியதோ அதே காரணங்கள் இன்னும் வலுவாக இருக்க, புலிகளின் அழிவில் தமிழ் பேசும் மக்கள் பாதுகாக்கப்படுவதாக ஆனந்தக்கூத்தாடும் அரசியல் வியாபாரிகள் மகிந்த அரசின் இன அழிப்பிற்கு ஆதாரவுப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர்.

இலங்கையின் தேசிய இனச் சிக்கலில் அப்பாவி மக்களின் அழிவின்மேல் அரசியல் இலாபம் காணும் மக்கள் விரோத சக்திகள் தம்மை வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொள்கின்றனர். இவர்கள் பல வகைப்படினும் பிரதானமாக நான்கு வகைக்குள் அடக்கிவிட முடியும்.

1. புலிகளும் அதன் ஆதரவு சக்திகளும்.

2. புலி எதிர்ப்பாளர்களும் அரச ஆதரவு சக்திகளும்.

3. இந்திய அரசு

4. மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள்.

5. இலங்கை அரச பயங்கரவாதமும் பாசிசமும்.

மக்கள் மீது நம்பிக்கையற்ற இவர்கள், மக்களின் அழிவிலிருந்து தான் தமது அரசியலையே கட்டமைக்கிறார்கள்.

1. புலிகளும் அவர்களின் ஆதரவு சக்திகளும்.

இவர்கள் எப்போதுமே மக்களைப் பற்றிச் சிந்தித்ததில்லை. தேசிய விடுதலைப் போராளிகள் என்ற முகமூடியை அணிந்திருக்கும் இவர்கள், தேசிய விடுதலைக்கான அனைத்து ஆதரவுத் தளத்தையும் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தியவர்கள். 1983 ஜூலை இன அழிப்பு நடந்தேறிய காலகட்டத்தில் தமிழகம் ஸ்தம்பித்துப் போனது. மொத்தத் தமிழகமுமே ஒரேகுரலில் பேரின வாதத்திற்காகக் குரலெழுப்பிற்று. இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்காமல் வாக்குத் திரட்ட முடியாத நிலைக்குத் தமிழக அரசியற் கட்சிகள் தள்ளப்பட்டன. சிங்கள மக்கள் மத்தியிலிருந்த முற்போக்காளர்கள் உயிரையும் விலையாக வைத்து உரக்கக் குரல் கொடுத்தனர். உலகெங்கும் பரந்திருக்கும் ஜனநாயக சக்திகள் பேரின வாதிகளின் இன அழிப்பிற்கெதிராகக் குரலெழுப்பினர். முஸ்லீம் மக்களும், மலையகத் தமிழர்களும் தேசிய இன அடக்குமுறைக்கெதிரான தமது பங்களிப்பை வழங்க முன்வந்தனர்.

யாழ்ப்பாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லீம் மக்களை இரவோடிரவக அனாதைகளாக விரட்டியடித்த விடுதலைப் புலிகள்இ கிழக்கில் தமது பாணியிலான குரூரமான படுகொலைகளை முஸ்லீம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு தமிழ் பேசும் முஸ்லீம் மக்களைத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கெதிராகத் திசைதிருப்பினர். நூற்றுக் கணக்கான சிங்கள மக்களைக் கொன்று குவித்தனர். தஞ்சம் கொடுத்த தமிழ் நாட்டு மக்களுக்கெதிராகவே தமது இராணுவ தர்பாரை நடாத்திக்காட்டினர். தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலை என்ற ஒரே கோஷ்த்தின் கீழ் அமைப்பாகிக் கொண்ட எல்லா விடுதலை இயக்கங்களையும் ஆயுத பலம் கொண்டு அழித்தொழித்தனர். நூற்றுக்கணக்கான தமிழ் இழைஞ்ர்களை குழுக்கள் குழுக்களாகக் கொன்றொழித்தனர்.

தேசிய இன அடக்கு முறைக்கெதிரான அனைத்து ஆதரவு சக்திகளையும் அன்னியப்படுத்தி, ஒரு நியாயமான போராட்டத்தைச் சிதைத்துச் சீரழித்தனர். இவர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் போராட்டத்திற்கான நியாயம், சிங்கள மக்கள் மத்தியிலும் பிரச்சாராத்திற்குட்படுத்த இயலாதவொன்றாகிப் போனது. இறுதியில், தேசிய இன அடக்கு முறைக்கெதிரான ஒரே குரலாகத் தம்மை முன்நிறுத்திக் கொண்ட புலிகள், பாசிஸ்டுக்களாக வளர்ந்து அழிந்து போயினர். அழிவின் விழிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழீழ விடுத்லைப் புலிகள், இந்த நிலையிலும் கூட தம்மைச் சுயவிமரிசனத்திற்கு உட்படுத்தத் தயாராகவில்லை. குறைந்த பட்சம் தந்திரோபாய அடிப்படையில் கூட இவ்வாறான சுயவிமர்சனத்தை முன்வைக்கத் தயாராகவில்லை. 2008ம் ஆண்டு மாவீரர் உரையில், இந்திய எதிர்ப்பாளராகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன், இந்தியாவிடம் அரசியல் பிச்சை கேட்ட நிலையில் தனது சொந்த மக்களிடம் தான் தலைமைதாங்கி நடாத்திமுடித்த கோரக் கொலைகளுக்குக் கூட மன்னிபுக் கேட்கத் தயாராயிருக்கவில்லை. தன்னால் அன்னியப்படுத்தப்பட்ட, சொந்த மண்ணிலிருந்து புலிகளால் அகதிகளாக விரட்டப்பட்ட, தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆதரவு சக்திகளிடம் தன்னை, குறைந்த பட்சம் தந்திரோபாய அடிப்படையிலாவது சுய விமர்சனத்திற்குட்படுத்தி, மறுபடி அவர்களை அணிதிரட்டத் தயாராகவில்லை. ஆயுதங்களையும், அதிகாரத்தையும் எந்த அளவிற்குப் புலிகள் நம்புகிறார்கள் என்பதையும், மக்கள் மீதான நம்பிக்கையற்ற, மக்கள் விரோதிகள் என்பதையும் புலிகள் மறுபடி மறுபடி வலியுறுத்துவதாகவே இது அமைகிறது.

2. புலி எதிர்ப்பாளர்களும் அரச ஆதரவு சக்திகளும்.

புலிகளின் இருப்பின் அடிப்படையே, தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்புணர்வானது ஆயுதப்போராட்டம் என்ற தளத்திற்கு மாற்றப்பட்டதற்கான காரணமே பேரின வாத்த்தின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை மட்டும் தான். புலிகளின் இருப்பிற்கான காரணத்தை இல்லாதொழிக்க வேண்டுமாயின், மக்கள் மத்தியில் போரற்ற நிலையை உருவாக்க வேண்டுமாயின், பேரினவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும். பேரின வாதத்திற்கெதிரான, அது உருவாக்கி வளர்ந்து கொண்டிருக்கும் அரச பாசிசத்திற்கெதிரான அழுத்தங்கள் பிரயோகிக்கப் படவேண்டும். இதற்கெதிரான போராட்டங்கள், எல்லாச் சமூகச் செயற்ப்பாடுகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஆனல் பெரும்பாலான தமிழ் பேசும் புலியெதிர்ப்பாளர்கள் இந்தப் பேரின வாதத்தையும் அரச பாசிசத்தையும் உரமிட்டு வளர்த்தெடுக்கிறர்கள். இதனூடாக, மறைமுகமாக புலிகளின் இருப்பை ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்துகிறார்கள். இவர்கள் வளர்த்தெடுப்பது அரச பாசிசத்தை மட்டுமல்ல, புலிகளின் பாசிசத்தையும் தான். மக்கள் சார்பில் மக்களுக்காக இவர்கள் ஒருபோதும் கருத்தாடியது கிடையாது. மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுமாரி பொழிந்து சிறீலங்கா விமானங்கள், கொலைத் தாண்டவம் நடாத்திய போதும், குழந்தைகள் முதியவர்கள் என்று எந்த வேறுபாடுமின்றி தமிழ் பேசும் ஒரே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டுத் தெருக்களில் வீசப்பட போதும், ஏன் புலியழிப்பின் பேரால் இலங்கையில் வளரும் பாசிசத்திற்கெதிராகக் குரல் கொடுத்த சிங்கள மக்கள் மத்தியிலிருந்த அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள் போன்றோர் கடத்தப்படுக் கொலை செய்யப்பட்ட போதும், மகிந்த அரசிற்கு ஆதரவளிக்கும் அரச கைக்கூலிகளான இந்தப் புலியெதிர்ப்பாளர்கள் மக்கள் பக்கம் சாராத மக்கள் விரோதிகளே.

இவர்கள் செய்து முடித்த கைங்கரியங்கள் வாழும் உரிமைக்காகாகப் போராடிய ஒரு மக்கள் கூட்டத்தின் போராட்டத்தை மிக நீண்டகாலத்திற்குப் பின் தள்ளியுள்ளது.

1. புலியெதிர்ப்பென்பது பேரின வாத அரசின் அடக்குமுறையை ஆதரித்தல் என்ற பொதுவான கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியவர்கள் இவர்களே.

2. பேரினவாத அரசிற்கு ஆதரவு வழங்கி அதன் பாசிசத்தை வளர்க்கத் துணை போகிறவர்களும் இவர்களே.

3. புலிகள் தவிர அரசிற்கெதிரான எழும் எந்த எதிர்ப்புக் குரலையும் அரச ஆதரவுக் குரல் என்று அடையாளப்படுத்தி, அரசிற்கெதிரான மாற்று அரசியற் சக்தி உருவாவதை சிந்தனைத் தளத்தில் சிதைத்தவர்களும், இதனூடாக அரச பாசிசத்தையும், புலிகளின் பாசிசத்தையும் வளர்க்கத் துணை போனவர்கள் இவர்களே.

4. அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பெருந்தேசிய அடக்குமுறைக் கெதிராக சிங்கள மக்கள் மத்தியிலுள்ள, இடது சாரிகள், முற்போக்காளர்கள் போன்றோரிடையிருந்து வரும் எதிர்ப்பை தமிழ் ம்க்கள் சார்பில் நசுக்கியவர்களும் இவர்களே.

5. அரசின் அடக்கு முறைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் இந்தக் கூட்டம், அரசியற்தீர்வுக்கான அனைத்து வழிகளையும் நிராகரித்து போரையும் மக்களின் அழிவையும் முன்நிறுத்தியவர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் 80 களில் தீவிர தேசிய வாதம்பேசிய இவர்களில் பெரும் பகுதியினர், தாம் சார்ந்த அமைப்புகளில் வலது சாரிப் போக்கை முன்நிறுத்தியவர்கள். இடது சாரிப் போக்குடையவர்களை அன்னியப்படுத்தி தீவிர தேசியவாதப் போக்கு மேலோங்க வழிசெய்தவர்கள். இன்று இலங்கை அரசின் பாசிசக் கொடுமைகளுக்கெதிராகப் பேச முற்பட்டால் தேசியவாதம் பேசுகிறோம் என்று தெருச்சண்டைக்கு அழைக்கிறார்கள். புலிகள் புலி – எதிர்ப்பாளர்களிடையேன இந்த முரண்பாடென்பது, அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் மேல் மத்தியதர வர்க்க அணிகளிடையேயான செயற்தள மட்டத்திலான உள் முரண்பாடேயன்றி சமூக உணர்வி அடிப்படையில் எழுந்த போராட்டமல்ல. இவ்வாறான புலியெதிர்ப்பை முன்வைத்து இலங்கையில் செயற்படும் முன்னாள் தேசிய விடுத்லை இயக்கங்களோ அல்லது அவற்றோடு ஒட்டிக்கொள்ளும் புகலிட ஆதரவாளர்களோ, அரசின் நேரடிக்கைக் கூலிகளோ அபாயகரமானவர்கள். மக்களின் விரோதிகள்.

3. இந்திய அரசு.

இந்தியாவில் தலித் அமைப்புகள் நடாத்திய போராட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் தோல்வியையே சந்தித்திருக்கின்றன. இலங்கையில் இதே போராட்டங்கள் குறித்த வெற்றியைச் சம்பாதித்திருக்கின்றன. சண்முகதாசன் தலைமையிலான மாவோ சார்புக் கம்யூனிஸ்ட் கட்சி நடாத்திய போராட்டங்களின் வெற்றியும், சூர்ய மல் இயக்கத்தின் எதிர்ப்புப் போராட்டங்களும், ஏனைய இடது சாரி இயக்கங்களின் வளர்ச்சியும் இலங்கைக்கு தெற்காசியாவிலேயெ ஒரு இடது சாரிப் பாரம்பரியத்தைத் தோற்றுவித்திருந்தது. கம்யூனிசத்தின் பேரால் ஆட்சியைக் கைப்பற்றும் எல்லைவரை ஜே.வீ.பீ தனது போராட்டத்தை நகர்த்த முடிந்தது. இவற்றின் தொடர்ச்சியாகவே தேசிய இன ஒடுக்கு முறைகெதிரான போராட்டங்களில் இடது சாரித் தன்மையுள்ள வேலைத்திட்டங்களுடன் ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற அமைப்புக்கள் குறித்த வெற்றியுடன் மக்கள் மத்தியில் காலூன்ற முடிந்தது. என்.எல்.எப்.ரி போன்ற அமைப்புக்கள் இடது சாரிக் கோஷங்களுடன் வெளிவர முடிந்தது. 80களில் ஆரோக்கியமான மார்க்சியக் கருத்தாடல்கள் தமிழ் பகுதிகள் வியாபித்தது. சிங்கள முற்போக்கு சக்திகள் தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களுடன் தம்மை அடையாளப்படுத்த முன்வந்தனர். எல்லோர் மத்தியிலும் நம்பிக்கை துளிர்விட்டது.

இந்த சூழ்நிலையில் தான் இந்திய அரசு தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கி, அவ்வமைப்புக்களை அவர்கள் சார்ந்திருந்த மக்களை விட பலமானதாக வளர்த்தெடுத்தது. தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை விட அவர்களின் பிரதிநிதிகளாகக் கருதப்பட்டோர் பலமானவர்களாயினர். தேசிய விடுதலை இயக்கங்கள் வேறு இராணுவக் குழுக்களாக மாறி இந்த இராணுவ பலப் பரீட்சையின் உச்ச பகுதியாக புலிகள் ஏனைய இயக்கங்களை நிர்மூலமாக்கினர். இவ்வாறு இராணுவ ரீதியாக இயக்கங்களை வளர்த்துவிட்ட இந்திய தான் விரும்பியவற்றை வெற்றிகரமாகச் சாதித்துக்கொண்டது.

1. இலங்கையில் தேசிய விடுதலைப் போராட்டங்களூடாக உருவாகக் கூடியதாகவிருந்த அனைத்து இடதுசாரி இயக்கங்களையும் பண்புரிதியாக மாற்றியதுடன் இந்திய முற்போக்கு சக்திகளுடனனான அவர்களின் இணைவையும் சாத்தியமற்றதாக்கியது.

2. தமிழகத்திலிருக்ககூடிய அனைத்துப் பிரிவினை சக்திகளுடனான இணைவையும் சாத்தியமற்றதாக்கிற்று.

3. இலங்கையில் யுத்த சூழல் ஒன்றை ஏற்படுத்தி அதனூடாக இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்துதல்.

80 களின் சர்வதேச அரசியல் நிலையும் உலக அரசியற் தளத்தில் இந்தியாவின் பங்கு தொடர்பான போக்கும் தமிழ் அமைப்புக்களின் தலைவிதியை நிர்ணயிப்பதில் பிரதான பங்கு வகித்ததெனலாம். இன்று நிலமை முற்றாக மாறிவிட்டது. 80 களின் வல்லரசுப் பனிப்போர் இல்லை. இலங்கையின் இராணுவ கேந்திர முக்கியத்துவம் அருகிப்போய்விட்டது. உலகமயமாகிவிட்ட பொருளாதாரம் இந்தியாவில் பெரும் பண முதலைகளையும், வியாபாரத்தில் வெற்றிகண்ட மேல் மத்தியதர வர்க்கத்தையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியாயில் புதிதாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் அதிகார வர்க்கமும் ஆட்சியதிகாரமும் தமது மூலதனத்தினதும், முதலீடுகளினதும் எல்லையை இந்தியாவிற்கப்பாலும் விரிவு படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவினுள்ளேயே அதன் சிறப்புப் பொருளாதார வலையங்களுக்கெதிரான போராட்டங்கள் வலுவடைகிறது. டாடாவின் நானோ கார் உற்பத்திக்காக அழிக்கப்பட்ட அப்பாவிகளைக் கண்ட இந்திய விழிப்படைந்து வருகிறது.

போரின் மரணத்துள் வாழும் இலங்கை மக்களின் பிரதேசங்களை இந்தியா தனது வியாபார நலனுக்காகப் எதிர்ப்பில்லாமலே பாவித்துக்கொள்ளலாம். போர் ஓய்ந்துவிட முன்னமே இந்தியப் பெரு முதலாளிகளின் முதலீட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றன.

இலங்கையின் அதிகார வர்க்கமும் “வியாபாரத்திற்கான அமைதியை” எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. ஆக, போரைவிட அப்பாவி மக்களின் அழிவிலாயினும் தனது முதலாளிகளின் முதலீடுகளுக்காக முந்திக்கொள்ளும் இந்திய அரசானது, புலியழிப்பின் பெயரால் இலங்கை அரசிற்கு எல்லா இராணுவ உதவிகளையும் வழங்கத் தயாராகவுள்ளது. தவிர, தெற்காசியாவிற்கான சந்தைப் போட்டியில் இந்தியாவைக் குறிவைக்கும் மேற்கு ஏகாதிபத்தியங்கள், இந்தியா மீதான அழுத்தங்களை அதன் அண்டை நாடுகளூடாகப் பிரயோகிக்கும் இன்றைய அரசியற் சூழலில், இலங்கையைப் பகைத்துக் கொள்ள விரும்பாத இந்தியா, ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

4. மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள்.

காஸாப் பகுதிகளில் மேற்கு ஊடகங்களின் கணக்குப்படி, குழந்தைகள் முதியோருட்பட 500 இற்கு மேற்பட்ட அப்பாவிகள், இஸ்ரேலிய அரசின் குண்டு மழைக்குப் பலியாகிவிட்டனர். மனித இரத்தம் பாயும் பலஸ்தீன அப்பாவி மக்களைப் பற்றிக் கிஞ்சித்தும் வருத்தமடையாமல் இஸ்ரேலின் கொலைகளை வெளிப்படையாகவே ஆதரிக்கும் அமரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷும், மேற்கும் ஐக்கிய நாடுகள் சபையும் தான் இன்றைய ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமான முகங்கள். திரை மறைவில் நடாத்திமுடித்த அரச பயங்கர வாதத்தை வெளிப்படையாகவே நிறைவேற்ற உலகத்தை மறு ஒழுங்கமைப்புச் செய்து கொள்கிறார்கள்.

மேற்கின் பொருளாதார நேருக்கடிக்குப் பின்னதாக எதிர்பார்க்கப்படும் போராட்டங்களுகெதிரான அரச பயங்கரவாதத்திற்கு உலகத்தைத் தயார்படுத்தும் ஒத்திகைகளே இவைகள். உலகின் ஒவ்வொரு மூலைக்குள்ளும் மூக்கை நுழைத்து தனது சுரண்டலை வலுப்படுத்துக் கொள்ளத் தயாராகும் ஏகாதிபத்தியங்கள் தென்னாசியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவின் உள்ளேயும் அதனைச் சூழவுள்ள நாடுகளிலேயும் தனது ஆதரவுத் தளத்தை விரிவாகும் அமரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய அணி, இலங்கை அரசைக் கையாளவும் அதனை முழுமையாக இந்திய சார்புனிலைக்கு தள்ளிவிடாமல் பாதுகாக்கவும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாதிருக்கின்றன. இந்தியாவோடு போட்டி போடுக்கொண்டு இலங்கை அரசிற்கு இராணுவ உதவி வழங்க தனது தெற்காசிய நேச அணிகளைத் தயார்நிலையில் வைத்திருக்கின்றன.

5. இலங்கை அரச பயங்கரவாதமும் பாசிசமும்.

ராஜபக்ஷ குடும்பம்இ அது ஆட்சி நடத்தும் இலங்கையைப் பொறுத்தவரை தான் எதை விரும்புகிறது அது அனைத்தையும் செய்து முடிக்கலாம். பயங்கர வாதிகளுக்கெதிரான போரை வெற்றி கொள்ளும் கதாநாயகர்களாகவே இவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். தொலைதூரக் கிராமங்களில் வேலையிலாத் திண்டாட்டத்தை நிவர்த்திசெய்ய “தேசபக்தியுள்ள” இராணுவத்திற்குப் படைகள் திரட்டப்படுகின்றன. இலங்கையின் பிரதான தொழில்களில் இராணுவமும் ஒன்றாகிவிட்டதைச் சுட்டிக்காட்டும் நீரா விக்ரமசிங்க போன்ற ஆய்வாளர்கள், போரற்ற சூழல் இலங்கையில் ஏற்படுமா என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்துகின்றனர். மேற்குறித்த நான்கு மக்கள் விரோத சக்திகளும், போரை உரமூட்டி வளர்த்தெடுக்க, இலங்கை மக்களின் வாழ் நிலை என்பது போரோடு பிணைக்கப்பட்டுவிட்டது. ஒரு புறத்தில் பௌத்த சிங்களப் பெறுமானங்களைப் பாதுகாக்க போர் நடாத்துவதாக அப்பாவி மக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மகிந்த குடும்ப அரசு, மறுபுறத்தில் கிராமங்களை போரோடு பிணைத்து வருகிறது. ஏற்கனவே சிங்கள மக்கள் மத்தியில் வேர்விட்டிருக்கும் பௌத்த சிங்களப் பேரினவாதமானது, அவர்களின் நாளாந்த வாழ்க்கையோடு பிணைக்கப்பட்டு பாசிசமாக வளர்ந்துள்ளது. இலங்கையின் தமிழ் பேசும் ஊட்கவியளாளர்களில் பெரும்பாலானோர், நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டோ கொல்லப்பட்டோ விட்டனர். அரசிற்கெதிரான சக்திகள் சிதைக்கப்பட்டோ, அரசால் உள்வாங்கப்பட்டோ சீரழிக்கப்பட்டுவிட்டனர். தமிழ் பேசும் புலியெதிர்ப்பாளர்கள், புலியெதிர்ப்புக் குழுக்கள், புலிகள், சிங்கள பெருந்தேசிய வாதிகள், இந்திய அரசு, ஏகாதிபத்தியங்கள், போன்ற எல்லா மக்கள் விரோத சக்திகளும் இலங்கை அரசின் பாசிசத்தை தமது சொந்த வியாபார நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள, தமிழ் பேசும் மக்கள் மீதான திட்டமிட்ட இன அழிப்பு நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

மக்களின் மறுதலையான ஆதரவையும் கூட இழந்து போன புலிகள், மக்களிலிருந்து அன்னியப்பட்டு நிரந்தர பாசிச இராணுவப் படையாக மாற்றமடைந்து, குறுகிய பிரதேசங்களில் முடக்கப்பட்டு அழிந்து போகிறார்கள். இவர்களின் அழிவின் எச்சங்களிலிருந்து அரச பாசிசம் வளர்ந்து இலங்கை மக்களைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது. தெற்காசியாவிலேயே அரச பயங்கர வாதத்தின் இன்னொரு ஆய்வுகூடம் தான் இலங்கை. கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதற்காக சமூக உணர்வுள்ள யாரும் துயர்கொள்ள மாட்டார்கள். ஆனால் அழிவின் நெருப்பிற்குத் தீக்கிரையாகும் அப்பாவி இலங்கை மக்களுக்காகக் குரல் கொடுக்க இனியொரு போராட்டம் தேவையாகிறது.