இரணைமடு தண்ணியும் தர ஏலாது, மகாவலித் தண்ணியையும் விடேலாது, அப்ப யாழ் மக்களுக்கு சயனைட்டா கொடுக்கிறது !
சூழலியல் ஆய்வாளர் மு தமிழ்செல்வனுடன் கலந்துரையாடல்
இரணைமடு தண்ணியும் தர ஏலாது, மகாவலித் தண்ணியையும் விடேலாது, அப்ப யாழ் மக்களுக்கு சயனைட்டா கொடுக்கிறது !
சூழலியல் ஆய்வாளர் மு தமிழ்செல்வனுடன் கலந்துரையாடல்
லைக்கா உடன்பாட்டில் இருப்பது என்ன ? லைக்கா – தமிழ் அரசியல் கட்சிகளின் டீலின் பின்னால் ஆதவன் தொலைக்காட்சி இயக்குநர் !
தமிழ் தரப்பில் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பே லைக்காவின் வலையில் முதலில் வீழ்ந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்த டீலைப் போடுவதற்குப் பொறுப்பாக இருந்தவர் முன்னாள் புளொட் உறுப்பினராகவும் தற்போது ஆதவன் தொலைக்காட்சியின் இயக்குநராகவும் உள்ள நடராஜா குருபரன் என முன்னாள் புளொட் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றன. நடராஜா குருபரன் 2006இல் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்தாக ஒரு கதையுண்டு. அதனைத் தொடர்ந்து அரசியல் தஞ்சம்பெற்று புலம்பெயர்ந்து தற்போது பிரித்தானியாவில் வாழ்கின்றார்.
ஆதவன் தொலைக்காட்சி லைக்கா ஊடகக் குழமத்தின் ஒரு அங்கம். அதன் இயக்குநராக இருக்கும் நடராஜா குருபரன் முன்னாள் புளொட் உறுப்பினரும் ஊடகவியலாளரும் ஆகையால் புளொட் உறுப்பினர்களையும் அவர்களுடாக அவர்கள் அங்கம் வகித்த ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைபினர்களையும் இந்த டீலக்குள் கொண்டுவர முயற்சிகள் எடுத்ததாகவும் அவரே லைக்காவின் பிரதிநிதியாகச் செயற்பட்டதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கதைகள் ஜனவரி முற்பகுதியில் நடைபெற்ற ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநாட்டிலும் கிளறப்பட்டிருந்தது.
லைக்கா நிறுவனம் தமிழ் அரசியல் தலைவர்களை, கட்சிகளை வாங்க முற்பட்டது ஒன்றும் இரகசியமல்ல. அவர்கள் தமிழ் அரசியல் கட்சிகளை ஏன் வாங்க முயன்றார்கள் என்பதும் ஒரளவு ஊகிக்கக் கூடியதே. லைக்காவால் வாங்கப்பட்ட கட்சியில் ஒலிவாங்கியில் ஐக்கிய ஜனநாயகக் குரலின் தலைவர் நடிகர் ரஞ்சன் ராமநாயக்க தென்பகுதியில் போட்டியிட்டமை அனைவரும் அறிந்ததே.
லைக்கா நிறுவனம் தமிழ் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் வாங்கத் திட்டமிட்டிருந்ததை தேசம்நெற் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. தற்போது லைக்கா நிறுவனம் அல்லது அதன் பினாமி அமைப்பு ஒன்றுடன் சில அரசியல் தலைவர்கள் ஒரு உடன்பாட்டைச் செய்துகொண்டுள்ளனர் எனவும் தெரிவருகின்றது. அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்ட பின்னரேயே அதன் அரசியல் தலைவவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டு ஒரு கோடியைப் பெற்றுக்கொண்டவர்கள் பட்டியலில் ரெலோ செல்வம் அடைக்கலநாதன், குருசாமி சுரேன், கோவிந்தன் கருணாகரன், ஈபிஆர்எல்எப் சுரெஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அடங்குவதாக் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றன.
இந்த லைக்கா டீலை புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஏற்றுக்கொள்ள மறுத்த போதும் நடராஜா குருபரன் மற்றவர்களைத் தொடர்புபடுத்தி விடக் கேட்டதை அடுத்து கூட்டணியின் ஏனையவர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
அரசியல் கைதிகள் விடுதலையை உறுதிப்படுத்தியதுடன் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு 25 லட்சம் நிதியையும் லைக்கா வழங்கியது. லைக்காவுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இருந்த உறவைப் பயன்படுத்தி இது சாத்தியமாக்கப்பட்டது. இதில் ரெலோ முக்கிய பங்கெடுத்திருந்தது. ரெலோவின் குருசாமி சுரேனும் லைக்காவின் துணைத் தலைவர் சிவசாமி பிரேம்குமாரும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள், செல்வம் அடைக்கலநாதன் லண்டன் வருகின்ற போது லைக்காவில் சந்திப்பது வழமையென, அவருக்கு நெருக்கமானவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர். இருந்தலும் இந்த டீலை வெளியே இருந்து வருவது போன்ற ஏற்பாட்டில் நடராஜா குருபரன் டீல்மேக்கராக மற்றவர்களை சம்மதிக்க வைக்க அனுப்பட்டதாகத் தெரியவருகின்றது.
இந்த டீலை புளொட் தலைவர் முன்னாள் பா உ தர்மலிங்கம் சித்தார்த்தனும், ரெலோ எம் கெ சிவாஜிலிங்கமும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் இருவரும் லைக்காவின் உடன்பாட்டில் கையெழுத்திடவும் இல்லை. ஒரு கோடியைப் பெறவுமில்லை. இதுவொரு அரசியல் தற்கொலைக்கு ஒப்பான செயல் என புளொட் சித்தார்த்தன் குறிப்பிட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது.
இந்த ஒரு கோடி முன்னாள் ஈபிஆர்எல்எப் பா உ துரைரணட்னத்திற்கும் தேர்தலில் போட்டியிட்ட ரவிராஜின் துணைவி சசிகலாவுக்கும் வழங்கப்பட்டதாக இவர்களுடன் நெருங்கிச் செயற்படும் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் இதுதொடர்பில் தமது நிலைப்பாடுகளை வெளியிட்டால் அதனை தேசம்நெற் நிச்சயமாக வெளியிடும். மேலும் லைக்கா உடன்பாட்டை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிட வேண்டும். அதன் உள்ளடக்கத்தை அறிகின்ற சகல உரிமையும் தமிழ் மக்களுக்கு உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் செல்வம் அடைக்கலநாதன் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்.
அரசாங்கம் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் – ஊடகவியலாளர்கள் வேண்டுகோள் !
இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு 24 சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்கவேண்டும் இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளன. ஜனாதிபதிக்கான கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் அரசியல் அமைப்பினாலும் ஐசிசிபிஆரினாலும் பாதுகாக்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமைகளை உறுதி செய்யுமாறு உங்களை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வது மற்றும் பத்திரிகையாளர்களிற்கு எதிரான கடந்த கால குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வது ஆகியவை குறித்த தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதிகளை நாங்கள் வரவேற்கின்றோம். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்கவேண்டும். அல்லது இந்த சம்பவம் குறித்து பொறுப்புக்கூறலிற்காக உடனடி பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும். என கோரப்பட்டுள்ளது
இலங்தை தமிழ் அகதிகள் மற்றும் மீனவர் பிரச்சினை தொடர்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துரையாடல் !
இலங்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பெருந்தோட்டம் சமூக உட்கட்டமைப்புத் துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று கட்சியின் தமிழ் நாட்டிலுள்ள மாநிலக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் புதிதாக அமைந்துள்ள அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்து தெரிவித்ததோடு, தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்குச் செல்லும் போது முன்னெழுகின்ற பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. அத்தோடு, இலங்கை தோட்ட தொழிலாளர்களின் வாழ்விட, வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் முன்வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என்றும் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மாகாணத் தேர்தல்கள் நடத்துவது தொடர்பிலும், தமிழ்மொழிக்கு சம அந்தஸ்து வழங்குவது குறித்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழர் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளில் உறுதியாக கவனம் செலுத்துவதாகவும், மக்கள் தங்கள் மீது அதன் காரணமாகவே நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
செல்ஃபி: smart ஆக ஏமாற்றுகிறார் சாணக்கியன் – பேசப்படாத மீனவர் பிரச்சினை யாழ் மீனவர்கள் வேதனை !
சென்னையில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் தின விழா இறுதி நாளில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுடன் செல்பி எடுத்துள்ளார். குறித்த செல்ஃபியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன் நிற்கும் பா. உ செல்வம் அடைக்கலநாதன், பா.உ சாணக்கியன், முன்னாள் பா.உ சுமந்திரன் ஆகியோர் சிரித்த படி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இன்னமும் தமிழக அரசு முறையான வாழ்விட வசதிகளையோ அல்லது அடிப்படை வசதிகளையோ செய்து கொடுத்திருக்கவில்லை. மேலும் மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இலங்கை வடக்கு தமிழ் மீனவர்கள் விடயத்தில் இன்னமும் பாராமுகமாக செயற்பட்டு வருவதுடன் தி.மு.க அரசு தமிழக மீனவர்களை – இலங்கை தமிழ் மீனவர்களுடன் மோதுபடும் நிலையையும் உருவாக்கிவருகிறது.
இவ்வாறான நிலையில், பா.உ இரா.சாணக்கியன், பா.உ செல்வம் அடைக்கலநாதன் தமிழக முதல்வருடன் சிரித்த படி செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். தனது பேஸ்புக் பதிவில் வழமை போல் தான் Smart ஆக இருப்பதாக காட்டிக்கொள்ள பா.உ இரா. சாணக்கியன் தமிழக முதல்வர் தானாகவே தன்னுடைய தொலைபேசியை வாங்கி செல்ஃபி எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். எனினும் நேரலை வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பலரும் இரா.சாணக்கியன் தானே தொலைபேசியை தமிழக முதல்வரிடம் கொடுத்து செல்ஃபி எடுக்க காத்திருக்கும் காணொளியை பதிவிட்டு இரா.சாணக்கியன் Smart ஆக ஏமாற்றுகிறார் என்கின்றனர்.
இந்நிலையில், இலங்கை மீனவர்களது பிரச்சினைகள் குறித்து பேசாமல் முதலமைச்சருடன் சிரித்துக்கொண்டு வெறுமனே செல்ஃபி எடுத்தமை வருத்தம் அளிப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் திரு.ரட்ணகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த யாழ்ப்பாணம் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர், தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் தான் இந்த குழு சென்றதாக அறியமுடிகிறது. அதிலும் சிலருக்கு அழைப்பு விடுத்தும், சிலருக்கு அழைப்பு விடுக்காமலும் அந்த நிகழ்வுக்கு சென்றிருந்தனர். அங்கு சென்று கடற்றொழில் அமைச்சர் கூட மீனவர் பிரச்சினை குறித்து பேசியதாக ஊடகங்களில் செய்திகள் எவையும் வெளிவரவில்லை. நிகழ்ச்சிக்கு வெளியே வந்து அங்குள்ள ஊடகங்களுக்கு என்றாலும் எமது மீனவர்களது வளங்கள் அழிப்பது குறித்து சொல்லுங்கள். எங்களது மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை சொல்லுங்கள். அதை சொல்லிவிட்டு வாருங்கள் என்றார் திரு.ரட்ணகுமார்.