இலங்தை தமிழ் அகதிகள் மற்றும் மீனவர் பிரச்சினை தொடர்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துரையாடல் !
இலங்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பெருந்தோட்டம் சமூக உட்கட்டமைப்புத் துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று கட்சியின் தமிழ் நாட்டிலுள்ள மாநிலக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் புதிதாக அமைந்துள்ள அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்து தெரிவித்ததோடு, தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்குச் செல்லும் போது முன்னெழுகின்ற பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. அத்தோடு, இலங்கை தோட்ட தொழிலாளர்களின் வாழ்விட, வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் முன்வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என்றும் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மாகாணத் தேர்தல்கள் நடத்துவது தொடர்பிலும், தமிழ்மொழிக்கு சம அந்தஸ்து வழங்குவது குறித்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழர் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளில் உறுதியாக கவனம் செலுத்துவதாகவும், மக்கள் தங்கள் மீது அதன் காரணமாகவே நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.