October

October

“அரசை விமர்சித்தால் கன்னத்தில் அறைவிழும்.” – ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் !

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்களை இலக்குவைத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்தும் சொற்போர் தொடுத்தால், பங்காளிகளின் கன்னத்தில் அறைவதற்குக்கூட நாம் தயார்.” என எச்சரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

அரசுக்குள் இருந்துகொண்டு சுகபோகங்களை அனுபவித்து விமர்சனங்களை முன்வைப்பதைவிட, வெளியில் சென்று முதுகெலும்புடன் விமர்சனங்களை முன்வைப்பதே மேல்.

எங்கள் கட்சித் தலைவர்களை விமர்சனங்களால் தொடர்ந்தும் தாக்கினால், பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினகளாகிய நாம் பங்காளிகளின் கன்னத்தில் அறையக்கூட தயாராகவே இருக்கின்றோம் – என்றார்.

“மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் வனப்பாதுகாப்பு துறையினரின் நடவடிக்கைகளை ஏற்கமுடியாது.” – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் எல்லைக் கற்களை போட்டு தன்னகப்படுத்துவதற்கு முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதியில் பெரிய புல்லுமலை தொடக்கம் கொடுவாமடு, படுவான்கரை வரை உள்ள மக்களுக்கு சொந்தமான நிலப்பகுதிகள் வனத்துறை பாதுகாப்பு திணைக்களத்தினூடாக எல்லைக் கற்களை போடும் வேலை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே, இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறான அத்துமீறல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்திலும் நாங்கள் தலையிட்டு வனத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவற்றை தடுத்து வந்திருக்கின்றோம்.

தற்போதும் மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் எல்லைக் கற்களை போட்டு தன்னகபடுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றன.

நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து இவ் வேலைத்திட்டங்களை தடுத்து நிறுத்துவதுடன் மக்கள் வாழ்ந்த இடங்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

இன்று வனத்துறை பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக எல்லைக் கற்கள் இடப்படும் பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகளும் மற்றும் வாழ்வாதார காணிகளும் காணப்படுகின்றது.

இவர்கள் இங்கு பல வருட காலமாக வாழ்ந்ததற்கான ஆவணங்கள் வைத்திருப்பதுடன் பல வருட காலமாக விவசாய நடவடிக்கைகள் மேற்கொண்டதற்கான ஆதாரங்களும் குடியிருப்புகள் காணப்பட்டமைக்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன.

ஒரு சிலரிடம் ஆவணங்கள் இல்லாமைக்கான காரணம் கடந்த யுத்தகாலத்தில் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் இவற்றை கருத்திற்கொண்டு தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களம் செயற்படவேண்டும்.

எதிர்வரும் காலங்களில் நாங்கள் வனத்துறை பாதுகாப்பு திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு மக்களின் வாழ்வாதார காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.

வாள்வெட்டு குழுவினருக்கு வடக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள எச்சரிக்கை !

எவரும் தமக்குத் தேவையான வகையில் தன்னிச்சையாக செயல்பட முடியாது. வடக்கில் வாள் வெட்டு கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் என அண்மையில் வட மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்ற ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

“வடக்கில் வாள் வெட்டு கலாசாரம் கடந்த பல வருடங்களாக தொடர்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அது பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது. பொலிசார் மற்றும் இராணுவத்தினர் தலையிட்டும் அதனை முற்றாக தீர்க்க முடியாமல் உள்ளது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அது தொடர்பில் நீங்கள் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?” என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், நாட்டில் ஒரே சட்டமே நடைமுறையிலுள்ளது. மாகாணத்திற்கு மாகாணம் அல்லது நகரத்துக்கு நகரம் அது வேறுபட முடியாது.

எவரும் தமக்குத் தேவையான வகையில் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அந்தவகையில் அவ்வாறானவர்கள் தமது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.

அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட வேண்டும். தொடர்ந்தும் அவர்கள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களானால் தொடர்ச்சியான சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றார்.

“ஆளுங்கட்சியிலிருந்து மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பேன்.” – பிள்ளையான் 

அரசியல் போராட்டங்களை மட்டும் முன்னெடுக்காது மக்களின் சார்பில் இருந்து ஆளுங்கட்சியிலிருந்து மக்களுக்கு தீர்வை நான் பெற்றுக் கொடுப்பேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் ஏறாவூர்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற கால்நடை வளர்ப்போர் சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இவ்வாறு கருத்துதெரிவித்தார்.
மேலும் பேசிய அவர்,
கடந்த காலத்தை போல் விவசாயிகளும் பண்ணையாளர்களும் இன முறுகல் இடம்பெற வாய்ப்பில்லை ஏனென்றால் அபிவிருத்திதிட்ட காலங்களில் எந்த விவசாயிகளும் ஊடுறுவகூடாது என கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகளிடம் பாற் பண்ணையாளர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுமாறும் அடிக்கடி களவிஜயம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளேன்.விவசாயிகள் கடந்த கால பிரச்சினைகளை பற்றி கூறியுள்ளனர் அதிகாரிகளிடம் எனது ஆலோசனைகளை வழங்கியுள்ளேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லைப் பிரச்சினைக்காக மட்டும் குரல் கொடுக்காது அரசியல்காக மட்டுமன்றி மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும். அரசியல் போராட்டங்களை மட்டும் முன்னெடுக்காது மக்களின் சார்பில் இருந்து ஆளுங்கட்சியிலிருந்து மக்களுக்கு தீர்வை நான் பெற்றுக் கொடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்ற உத்தரவு !

காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி இரண்டு படகுகளில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைத்திருந்தனர்.

இதுதொடர்பான வழக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த மீனவர்களை இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடற்படை முகாமில் உள்ள தமிழக மீனவர்கள் 23 பேரையும், யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றக் கோரி, யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிவான், கைது செய்யப்பட்ட அனைவரையும் யாழ்ப்பாணம் சிறையில் வைக்க உத்தரவிட்டனர்.

மிகப்பெரிய அரசியலாகிப்போன காணாமல்போனோர் விவகாரம் – ஜனாதிபதி தீர்வு தருவார் என அமைச்சர் மீண்டும் டக்ளஸ் பேச்சு !

காணாமற்போனோர் விவகாரதத்திற்கு தீர்வை காணும் வகையில் கலந்துரையாடலை நடத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உறவுகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதிக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது ஜனாதிபதியினால் மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோரின் விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுவந்த நிலையில், உறவுகளை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில் கடந்த சில மாதஙகளுக்கு முன்னர் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்திய அசாதாரண நிலைமையினால் குறித்த சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், நேற்றைய சந்திப்பில், காணாமல் போனோரின் உறவினர்களின் விவகாரத்தினை தீர்த்து வைக்கும் வகையிலான கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

உறவுகள் காணாமல் போனதினால் ஏற்பட்டுள்ள வாழ்வாதார பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து அவற்றினை தீர்ப்பதற்கும், தேவையான தீர்வை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ, உறுதியளித்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

 

ஒவ்வொரு தடவையும் காணாமலாக்கப்பட்டோர்களின் உறவினர்களின் போராட்டம் உக்கிரமடையும் போதெல்லாம் அரசு தரப்பிலிருந்து இது போல் ஒரு தமிழ்பிரதிநிதி இதுபோலவே ஒரு அறிக்கையை வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வருடத்தில் முன்பொரு முறையும் இரண்டு கிழமைகளுக்குள் காணாமலாக்கப்பட்டோருக்கான தீர்வை வழங்குவோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமையும் நினைவில் கொள்ளத்தக்கது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வருட ஐ.நா தொடரிலும் காணாமல் போனவர்களுக்கு மரணசான்றிதழ் கொடுக்கவுள்ளதாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.

வல்வெட்டித்துறையில் பொலிஸார் சுற்றிவளைப்பு – வாள்வெட்டுடன் தொடர்புடைய 13பேர் கைது !

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 5வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின், 6 சரை கஞ்சா மற்றும் ஒரு கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தக் கைது நடவடிக்கை இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.

பழைய வீடொன்றில் வன்முறைக் கும்பல் ஒன்று வன்முறைக்கு தயாராகி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் காவல்துறையினர் கூறினர். சந்தேக நபர்கள் 13 பேரும் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியில் ஞானசாரதேரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன்..? 

கொடுங்கோல் ஆட்சியைத் தக்க வைக்கவே ஒரே நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியில் ஞானசாரருக்கு பதவி என ஒரே நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியில்ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“இனவாதம் பேசி, மதவாதத்தைக் கையில் எடுத்து, மக்களைப் பிளவுபடுத்தி, மோதல்களை ஏற்படுத்தியே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. தற்போது எல்லா வழிகளிலும் தோல்வி கண்டுள்ளது. எனவே, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அன்று கையாண்ட யுக்திகளை கையாள முயற்சிக்கின்றார்.

ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் இந்த அரசைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்தனர். ஞானசார தேரர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். ஊடகவியலாளர் என்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தினார். நீதிமன்றத்தை அவமதித்தார். இனங்களை இலக்கு வைத்து பிரசாரம் முன்னெடுத்தார். இப்படியான ஒருவர் தலைமையில் ஒரே நாடு, ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணி ஏன் அமைக்கப்பட வேண்டும்? இதன் நோக்கம் தெளிவாகின்றது என்றார்.

குவைத்தில் 40 வயதான காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்த 24 வயது இலங்கை இளைஞன் !

குவைத்தில் தன்னை விட 16 வயது அதிகமான காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இலங்கையர் ஒருவர் பொலிசில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்ட பெண்ணும் இலங்கையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 24 வயதான இளைஞனுக்கும், அவரின் 40 வயதான காதலிக்கும் இடையே தனிப்பட்ட தகராறு ஏற்பட்ட நிலையில் Fahaheel பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி வீட்டில் வைத்து அப்பெண்ணை கழுத்தை நெரித்து இளைஞன் கொலை செய்திருக்கிறார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளிநாட்டில் 40 வயது காதலியை கொலை செய்த 24 வயது இலங்கை இளைஞன்! திடுக்கிடும்  தகவல் - ஐபிசி தமிழ்

இதையடுத்து இந்த கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் அளித்த வாக்குமூலத்தில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பெரிய தகராறின் விளைவாக காதலியை கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்பு கொண்டுள்ளார்.

காதலியை கொன்ற பின்னர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் பொலிசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

உயிரிழந்த பெண்ணின் உடல் தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டது மற்றும் குறித்த இளைஞன் மீது திட்டமிட்ட கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது

விடைபெறுகிறார் அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் !

கொவிட் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கும் தடுப்பூசி திட்டத்துக்கும் அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.
பதவி விலகும் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸுக்கு நேற்று (28) ஜனாதிபதி செயலகத்தில் பிரியாவிடை வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இரு தரப்பு உறவுகளை முன்னேற்றுவதற்கான முயற்சிகளுக்கு தூதுவர் டெப்லிட்ஸுக்கு நன்றி தெரிவித்த அவர், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தனது பதவிக் காலத்தில் தனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு தூதுவர் டெப்லிட்ஸ் நன்றி தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் மார்ட்டின் கெல்லி மற்றும் அரசியல்/பொருளாதார கவுன்சிலர் சூசன் வால்கே ஆகியோரும் இச்சந்திப்பின் போது உடனிருந்தனர்.