களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 09 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 10
தேசம்: நாங்கள் இன்னும் 83 கட்டத்திற்கு வரவில்லை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உருவாக்கம் பற்றி முதல் கதைத்திருக்கிறோம். 83 க்கு முன்னான சில விடயங்களை கதைச்சிட்டு நாங்கள் அடுத்த கட்டத்துக்கு போவம்.
தேசம்: 83ம் ஆ ண்டிற்கு முன்னான அந்தக் காலகட்டத்தில் இயக்கங்கள் இந்தியாவில் பயிற்சிகள் ஏதும் எடுத்தனவா?
அசோக்: பயிற்சிகள் இயக்கங்கள் செய்தாக நான் அறியவில்லை. 83 யுலைக் கலவரத்திக்கு பிற்பாடு இந்தியா கொடுத்த பயிற்சி பற்றித்தான் எனக்கு தெரியும். 76 ஆண்டு பாலஸ்தீனத்திற்கு போய் இருக்காங்க. போன முதல் குருப்பில் லங்காராணி அருளர், சங்கர் ராஜூ, கனெக்ஸ் என்று ஒருவர், முன்று பேர் போய் பயிற்சி எடுத்திருக்காங்க.
அதற்குப் பிறகு உமா மகேஸ்வரனும், விச்சு என்ற தோழரும் பயிற்சிக்கு போனவங்க.
தேசம்: வேறு இயக்கங்களும் பயிற்சி எடுத்தனவா?
அசோக்: விடுதலைப்புலிகளில் உமா மகேஸ்வரன் இருந்த காலத்தில்தான் இந்தப் பயிற்சிக்கு போய் இருப்பார் என நினைக்கிறன். அதை ஒழுங்குபடுத்தினது ஈரோஸ் ரத்னசபாபதி என்று சொல்லப்படுது.
தேசம்: லண்டனில் இருந்து ஒழுங்கு செய்யப்பட்டது…
அசோக்: ஓம்
தேசம்: அதுல பிரபாகரனும் போறாரோ
அசோக்: பிரபாகரன் போகல
தேசம்: குறிப்பிட்ட காரணங்கள் இருக்கா பிரபாகரன் போகாமல் இருந்ததற்கு…
அசோக்: அது தெரியல்ல.
தேசம்: பாண்டி பஜார் சம்பவம் அது ஞாபகம் இருக்கா உங்களுக்கு…
அசோக்: அது பிற்காலத்தில். முரண்பாடுகள் கூர்மையடைந்து பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் பிரிந்த பின்பு நடந்த சம்பவம் அது…
தேசம்: ரெண்டு பேருக்கும் இலங்கையில் பாதுகாப்பு இல்லை தேடப்படுகிறார்கள் என்று அங்க போயினம். அங்க எதேச்சையாக சந்திக்கேக்க இந்தப் பிரச்சனை நடக்குது. அப்படித்தானே.
அசோக்: நான் அறிந்தது என்னவென்றால் 82ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது என நினைக்கிறேன். உமா மகேஸ்வரனும், கண்ணனும் சாப்பிடுவதற்காக பாண்டி பஜார் போய் இருக்காங்க.
அப்போது பிரபாகரனும், ராகவனும் வந்திருக்காங்க. ஆளுக்கு ஆள் நேரே சந்தித்துக் கொண்டதும், உடனே பிரபாகரனும், ராகவனும் உமா மகேஸ்வரனையும், யோதிஸ்வரன் கண்ணனையும் சுட்டிருக்காங்க. உமா மகேஸ்வரன் தப்பி விட்டார். கண்ணனுக்கு காலில் காயம் என நினைக்கிறன். தப்ப முடியவில்லை.
பொலிஸ் வந்து பிரபாகரனையும், ராகவனையும், கண்ணனையும் அரெஸ்ட் பண்ணி விட்டது. பிறகு உமா மகேஸ்வரனும் கைது செய்யப்படுகிறார்.
தேசம்: எண்பதுகளுக்குப் பிறகு விடுதலைப்புலிகளும் புளொட்டும் பிரிந்த காலப்பகுதி இருக்குதானே. இதுல பிரிந்து வந்தவர்கள் இடையே ஒரு தத்துவார்த்த வேறுபாடு அல்லது அரசியல் கொள்கை ரீதியான வேறுபாடுகளைக் காணக்கூடியதாக இருந்ததா?
அசோக்: சம்பந்தப்பட்ட நபர்களுடன் பிற்காலத்தில் கதைக்கும் போது சில விஷயங்களை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. விடுதலைப் புலிகளில் இருந்து உடைந்ததற்கு கணேசய்யர் இவங்களெல்லாம் சொன்ன காரணம் என்ன என்று கேட்டால், ஜனநாயகத் தன்மை இல்லை, தன்னிச்சையான போக்கு, ஜனநாயக மத்தியத்துவம் இல்லை, மத்திய குழுவுக்கு கட்டுப்படுவதில்லை என்று.
புலிகளிலிருந்து பிரிந்து, புளொட்டின் ஆரம்ப உருவாக்கத்தின் போதும் இதே பிரச்சனை வருகிறது. இது பற்றி முன்னமே கதைத்திருக்கிறேம்.
இதனால்தான் கணேசய்யர், நாகராஜ், சாந்தன் போன்றவர்கள் வெளியேறுகிறார்கள் உமா மகேஸ்வரனுக்கும், பிரபாகரனுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. ஆனா அவை எல்லாம் தனிப்பட்ட பிரச்சனை களாகத்தான் இருக்கு.. அரசியல் தத்துவாரத்த முரண்பாடுகள் எதுவுமே இருந்ததாக தெரியவில்லை.
தேசம்: உண்மையிலேயே பார்க்கப்போனால் உமாமகேஸ்வரனோ, சந்ததியாரோ, சுந்தரமோ புலிகளோடயே இருந்திருக்கலாம் என்ற சூழல்தான் இருந்தது என்று சொல்ல வாறீங்களா?
அசோக்: உண்மையில் இவர்களின் முரண்பாட்டிக்கு எந்த அரசியல் கோட்பாட்டு மற்றும் நடைமுறைபிரச்சனைகள் எதுவும் இல்லைத்தானே. தனி நபர் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டிருந்தால் இவர்கள் எல்லோரும் ஒன்றாய் புலிகளாய் இருந்திருப்பாங்க. புலிகளின் உருவாக்கம், பின்பு புளொட்டின் உருவாக்கம் இவற்றில் எங்குமே அரசியல் சித்தாந்த கோட்பாடுகள் ஆளுமை செலுத்தியதாக தெரியவில்லை.
தேசம்: தனிநபர் முரண்பாடுதான் அதுல இருந்திருக்கு…
அசோக்: வெளியேறின ஆட்கள் கணேச அய்யரோ, சாந்தனோ, நாகராஜ் மாஸ்டரோ ஜனநாயகத் தன்மை இல்லை, தன்னிச்சையான போக்கு, ஜனநாயக மத்தியத்துவம் இல்லை, மத்திய குழுவுக்கு கட்டுப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களை வைத்துத்தானே வெளியேறி இருக்கிறார்கள். புலிகளிடமும் வைக்கிறார்கள். இங்கேயும் வைத்திருக்கிறார்கள்.
தேசம்: ஏன் இவர்களுக்கு அவைகளை வெளியில போட இயலாமல் போனது.
அசோக்: நான் நினைக்கிறேன் ஆயுதபலம் அவங்க கிட்ட தான் இருந்திருக்கு. முதல் பிரபாகரனிடம் ஆயுதபலம் இருந்தது. இங்க சுந்தரம், உமாமகேஸ்வரன் ஆட்களிடம் ஆயுதபலம் இருந்தது.
தேசம்: அவர்கள் வெளியேறி இடதுசாரி கருத்தியல் கொண்ட அமைப்பொன்றை ஏன் உருவாக்க முடியல்ல.
அசோக்: அவர்களிடம் வளர்ச்சி கொண்ட இடதுசாரி கருத்தியல்கள், சிந்தனைகள் இருப்பதற்கான சந்தர்ப்பம் இல்லை. முதலாளித்துவ ஜனநாயக பண்புகளின் எதிர்பார்ப்புக்களே அவர்களிடம் இருந்தன.
அவைகளை குறைந்த பட்சமாவது கொண்டிருக்க வேண்டும் என விரும்பி இருக்கின்றார்கள்.
தேசம்: ஏன் அவர்கள் பிற்காலத்துல ஈபிஆர்எல்எஃப் போய் சேர முடியாமல் போனது?
அசோக்: நாகராஜ் மாஸ்டர் ஒதுங்கிவிட்டார். கணேசய்யர் என். எல். எஃப். டி உருவாக்கத்தில் மத்திய குழுவில் இருந்திருக்கின்றார். அவரிட்ட ஓரளவு இடதுசாரி சிந்தனை இருந்திருக்கு, என். எல். எப். டி இடதுசாரிக் கோட்பாடுச்சார்புகளை ஓரளவு கொண்டிருந்தது.
தேசம்: அடுத்தடுத்த தோல்விகளால் ஒரு சலிப்புத் தன்மையை ஏற்படுத்தி இருக்கும். 80ற்குப் பிறகு நீங்கள் புளொட்டுக்குள்ள உள்வாங்கப்படும் போது புளொட்டின் மத்தியகுழுவின் அமைப்பு வடிவம் எப்படி இருந்தது.
அசோக்: மட்டக்களப்பு சிறை உடைப்புக்குபிற்பாடுதான் ஒரு பூரணமான மத்திய குழு அமைக்கப்படுகிறது.
தேசம்: என்னென்ன காரணங்களுக்காக முக்கியமான உறுப்பினர்கள் எல்லாரும் கைது செய்யப்படுகிறார்கள்..
அசோக்: மாணிக்கதாசன் கைது செய்யப்பட்டது நூலக எரிப்புக்கு முதல்நாள் நாச்சிமார் கோவிலடியில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பொலிசாரை சுட்ட பிரச்சனையால் என நினைக்கிறேன்.
தேசம்: அந்தத் தாக்குதல் எல்லாம் திட்டமிடப்பட்டதா கமிட்டி முடிவெடுக்கப்பட்ட தாக்குதலா?
அசோக்: எல்லாம் தன்னிச்சையான தாக்குதல்கள்தான். புலிகளைப் பொறுத்தவரை குறைந்தபட்சமாவது ஒரு ராணுவ கட்டமைப்பு இருந்தது. அராஜக, பாசிச கூறுகள் இருந்தாலும், ஒரு கட்டுப்பாடும், கட்டளையை ஏற்கும் தன்மையும் இருந்தது. மற்ற இயக்கங்கள் இடம் அது இருக்கேல. தன்னிச்சையான போக்குகள் நிறைய இருந்தது. இயக்கங்கள் அழிந்ததற்கும் அது காரணம். காலப்போக்கில் மத்திய குழு உருவாக்கப்பட்டாலும் கூட, யாழ்ப்பாணத்தில் நடந்த தன்னிச்சையான போக்குகள் ஏராளம். எந்த முடிவும் எடுக்காமல் தான் நடந்தது. அது வந்து நிலப்பிரபுத்துவ கூறுகள் இருக்குதானே. தன்னிச்சையான இயல்புகளை உருவாக்கும். குழு வாதம், தன்னைச் சுற்றி ஒரு பிம்பத்தை ஏற்படுத்துதல். இவர்கள் எப்பவும் ஒரு ஜனநாயக மத்தியத்துக்குள்ள வரமாட்டடார்கள். இடதுசாரி இயக்க ஜனநாயக மத்தியஸ்தம் என்பது, ஒரு அரசியல் கலாச்சார பண்பாட்டுக் கூடாக வாறது. அது பல்வேறு அரசியல் கற்றல்களுக்கு ஊடாக, முற்போக்கு சமூக பழக்க வழக்கங்களுக்கு ஊடாக வரவேண்டும்.
தேசம்: அந்தக் காலகட்டத்தில் 83 ஜூலைக்கு முன் இயக்க முரண்பாடுகளினால் பல படுகொலைகள் நடந்திருக்கின்றன. அதில் முதலாவது இயக்க சகோதர படுகொலை என்பது சுந்தரத்தினுடையது. அது ஏன் நடந்தது? எப்படி நடந்தது?
அசோக்: சுந்தரம் ஆட்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து வெளியேறும் போது அது புலிகளுக்கு பெரிய தாக்கமாகத் தான் இருந்தது. சுந்தரம் திறமையான இராணுவத்திறன் கொண்ட ஆள். அரசியல் ரீதியாகவும் ஓரளவு வளர்ச்சியுள்ள ஆள். புதிய பாதை பத்திரிகை ஊடாக அந்த நேரம், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக, மாவட்ட சபைக்கு எதிராக எல்லாம் கடுமையான விமர்சனங்களை, எதிர்வினைகளை முன்வைக்கிறார். புதிய பாதையில் கூடுதலாக அமிர்தலிங்கம் தொடர்பான பல விமர்சனங்கள் வருது.
தேசம்: அமிர்தலிங்கமும் வட்டுக்கோட்டை தொகுதி தான் சுந்தரமும் வட்டுக்கோட்டை தொகுதி…
அசோக்: அந்த நேரம் பிரபாகரன் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு, அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு, ஒரு செல்லத் தம்பிதானே…! ஒரு செல்ல பிள்ளை தானே. புலிகளிடமிருந்து வெளியேறி அமைப்பை உருவாக்குவது பிரபாகரனைப் பொறுத்தவரையில் மரண தண்டனைக்குரிய குற்றம். புளொட்டின் உருவாக்கம் அவருக்கு உடன்பாடாக இருந்திருக்காது. கடும் எரிச்சலை கொடுத்திருக்கும். அந்த காலகட்டத்தில் புளொட் மக்கள் மத்தியில் இயங்கத்தொடங்கி விட்டது. இதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கும்.
தேசம்: புதியபாதை சுந்தரம் மட்டுமில்ல, சந்ததியாரும் சுழிபுரம் தான். வட்டுக்கோட்டைத் தீர்மானம் எங்கு உருவாக்கப்பட்டதோ அந்த பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள்…
அசோக்: பிரதான எதிரியாக உமாமகேஸ்வரன் இருந்தாலும், தமிழர் விடுதலைக்கூட்டணிக்கும், பிரபாகரனுக்கும் அப்போ சுந்தரத்தினுடைய அரசியல் கருத்துக்கள் பிரச்சனையாக இருந்திருக்கும். அத்தோடு ஆனைக் கோட்டை பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டு ஆயுதங்கள் எடுக்கப்பட்டது, அது சுந்தரத்தின் தலைமையில் நடந்தெல்லாம் பிரபாகரனுக்கு கடும் தன்மானப் பிரச்சனையாக, கடும் கோபத்தை கொடுத்திருக்கும். பிரபாகரனுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்திருக்கும். ஆனா இதில் நாங்க கவனிக்க வேண்டும். சுந்தரத்தின் அரசியல் என்பது, இடதுசாரி கோட்பாடுளை, நடைமுறைகளை கொண்ட அரசியல் அல்ல. சுந்தரத்திடம் பிரபாகரனைப்போல் சுத்த இராணுவ கண்ணோட்டம் இல்லாவிட்டாலும், கூட அவரிடமும் இராணுவ வாதம்தான் இருந்தது.
தேசம்: எப்படி அந்தப்படுகொலை நடந்தது?
அசோக்: சித்திரா அச்சகத்தில் ஒரு கிறிஸ்மஸ் காட் அடிக்கப்பட்டது. அதன் தலைப்பு ஜேசு தேடப்படுகிறார். இயேசு கிறிஸ்துவை ஒரு புரட்சியாளராக காட்டி, என்னென்ன காரணங்களுக்காக ஜேசு தேடப்படுகிறார் என்று கிறிஸ்மஸ் காட் அடிக்க ஓடர் கொடுத்து, அதுதொடர்பாக தான் சுந்தரம் அங்கு போய் இருக்கிறார். சுந்தரம் போய்க் கொண்டிருந்த காலத்தில் நுஃமானின் பலஸ்தீனக் கவிதைகளும் என்ற புத்தகமும் அங்கு அடிக்கப்பட்டு கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நுஃமான் பொலிசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என்று நினைக்கிறேன்.
இந்த நேரத்தில் உமைகுமரன் அந்த அச்சகத்துக்கு போய் வந்ததாகவும், அவருக்கு ஊடாகத்தான் புலிகள் உளவு பார்க்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதுதான் பிறகு உமைகுமாரன், இறைகுமாரன் கொலைக்கு காரணமாக இருந்தது. இந்தக் காரணம் தான் சொல்லப்பட்டது.
தேசம்: சுந்தரத்தின் இந்த படுகொலை நியாயப்படுத்தி அந்த நேரத்தில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன…
அசோக்: ஓம். கொலைகளை நியாயப்படுத்தி துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. ‘துரோகத்தின் பரிசு’ என்ற தலைப்பில் அது வெளியிடப்பட்டது.
தேசம்: அதன் பின்னணியில் என்ன நடந்தது?
அசோக்: நித்தியானந்தன் சேர்தான் அதை எழுதினவர். அவர் பிற்காலத்தில் அதை மறுத்தவர். புலிகளின் அரசியல் தத்துவார்த்த பின் புலமாக நித்தியானந்தன் சேர் போன்றவர்கள்தான் அந் நேரத்தில் முக்கியமான ஆட்களாக இருந்தவர்கள்… புலிகளின் பத்திரிகைக்கு ஆசிரியராக நித்தியானந்தன் சேர்தான் இருந்தவர். துரோகத்தின் பரிசு என்ற துண்டுப்பிரசுரத்தை எழுதியவர் நித்தியானந்தன் சேர்தான் என்று சொல்லப்படுது. அவர் மறுத்து இருந்தார். ஆனால் புலிகளுக்குள் இருந்த ஆட்கள் சொல்லி இருக்கிறார்கள் அவர்தான் எழுதினார் என்று. நாங்க புளொட்டில் இருந்த போது, இயக்கத்தின் தலைமையின் தவறுகளுக்கு எதிராக போரடி வந்திருக்கிறம். ஏனைய சகதோழமை இயக்கங்களோடு உரையாடவும், உறவைப் பேணவும் முயன்றிருக்கிறோம். ஆனா நித்தியானந்தன் சேர், புலிகளின் பத்திரிகை ஆசிரியராக இருந்த காலங்களில், ஏனைய அமைப்புக்கள் தொடர்பாய் மிக மோசமான கருத்துகளை எழுதினார். ஈபிஆர் எல் எப் தொடர்பாக செவ்வணக்கம், செந்தோழர் போன்ற அர்த்தம் கொண்ட இந்த செறிவான வார்த்தைகளை மிகவும் கொச்சைப்படுத்தி சேர் எழுதி வந்தார். ஈபிஆர் எல்எப் தோழர்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்வாங்க.
தேசம்: கொலை நடந்த பிறகு அதற்கு எதிரான கருத்து மோதல் புலிகள் அமைப்புக்குள்ள ஏதும் உருவாகியதா?
அசோக்: அது உருவாகவில்லை. ஏனென்றால் கொலை நியாயப்படுத்தப்பட்ட கொலைதானே. அத்தோடு தனக்கு எதிரானவர்கள் எல்லோரும் துரோகிகள், அழிக்கப்பட வேண்டும் என்ற ஒரே பாசிச நிலை கொண்ட சிந்தனைதானே பிரபாகரனுடையது.
தேசம்: புலிகளுடன் இருந்தவர்கள் பெரும்பாலும் அதை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்…
அசோக்: நிச்சயமாக. அந்தக் காலத்தில் இந்த கொலைகளை கண்டித்து ஒரு உட்கட்சிப் போராட்டம் ஒன்று நடத்தியிருந்தால், அந்தத் தாக்கம் மற்ற இயக்கங்களின் மீதான கொலைகளுக்கு, தனி நபர் பயங்கரவாதங்களுக்கு முடிவாக இருந்திருக்கும்.
தேசம்: அந்தக்காலம் ராகவன் ஆக்டிவாக இருந்தவரா…
அசோக்: கொலை நடக்கும்போதும் ராகவன் இருந்தவர். ஆனால், இவங்க எந்த அளவுக்கு ஆளுமையோடு இருந்தார்கள் என்று தெரியாது. இவர்களின் கதையை பிரபாகரன் கேட்கக் கூடிய அளவுக்கு இருந்தாரா தெரியல்ல. பிரபாகரனோடு இவர் இருந்த காலங்களில் புலிகளுக்குள் நிறைய படுகொலைகள் நடந்துள்ளன. வெளியிலும் நடந்துள்ளன. உதாரணமாக துரையப்பா, சுந்தரம் படுகொலையெல்லாம் இவர் இருந்த காலத்திலானே நடந்தது. இதற்கு முன்னமே நிறைய கொலைகள் உள்ளும், வெளிலும் நடந்தன. அந்த படுகொலைகளுக்கு எதிராக, பிரபாகரனின் தன்னிச்சையான போக்குகள் தொடர்பாகத்தானே ஐயர் போன்றவர்கள் முரண்பட்டு வெளியேறினார்கள். அப்பொதெல்லாம் பிரபாகரனுக்கு ஆதரவாகத்தானே ராகவன் இருந்திருக்கின்றார். வெளியேற வில்லையே.
எங்கட தோழர் ஒருவரின் அப்பா. பெயர் தம்பாப்பிள்ளை. யூஎன்பி கட்சியைச் சேர்ந்தவர். ராகவனின் ஊரான புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்தவர். அவர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். ராகவன் புலியில் இருந்த நேரத்திலதான் இந்த படுகொலை நடந்தது. ராகவன் காரணம் சொல்வாரா? இப்படி எத்தனையோ கொலைகள் இவரின்ற காலத்தில நடந்திருக்கு. நான் எப்பவும் புலிகளின் மேல் மட்டங்களில் இருந்தவங்களை நம்புவதில்லை. அவர்களின்ர உளவியல் கட்டமைப்பு அனைத்தையும் ஆதிக்கம் செலுத்தும் மேலாதிக்க தன்மை கொண்டதாக இருப்பதையே கண்டிருக்கிறன். அப்படித்தான் ராகவனையும் நான் பார்க்கிறன். அவர் புலிகளை எதிர்க்கின்ற இன்னொரு புலி. எங்க பலருக்கு இது இன்னும் புரியல்ல.
பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டுப்பிரச்சனையில் கூட, பிரபாகரனோடு சேர்ந்து இவரும் சுடுகின்றார். ஆனா, இந்த வரலாறு மறைக்கப்பட்டுவிட்டது. புஸ்பராஜா தோழர் எழுதியுள்ள ‘ஈழப்போராட்டத்தின் எனது சாட்சியம்’ என்ற புத்தகத்தில் இச் சம்பவம் பற்றி விபரமாக எழுதியள்ளார். பிரபாகரன் பொலிசில் கொடுத்த வாக்குமுலமெல்லாம் புஸ்பராஜா தோழரின்ற இந்த புத்தகத்தில இருக்கு. வரலாறுகளின் உண்மைகள் மறைக்கப்பட்டு, தங்களுக்கு ஏற்ற வரலாறுகளை இன்றைய புலிகளும், பழைய புலிகளும் கட்டமைக்கிறாங்க. மற்றவங்களை குற்றவாளிக் கூண்டில ஏத்துறாங்க. உண்மையில் ஐயர் ‘இனியொரு’ இணையத்தளத்தில் ‘ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்’ எழுதத்தொடங்கிய போது, நிறைய விடயங்களை விரிவாக எழுத எண்ணி இருந்தாங்க. ஆனால் ராகவன் போன்ற சிலர் அவருக்கு நெருக்கடி கொடுத்ததால், அவர் அந்த எண்ணத்தை கைவிட்டிட்டார் . நிறைய விடயங்ளை எழுதாமல் விட்டுட்டார்.
தேசம்: அந்தக் காலகட்டத்தில் பிரபாகரன் அதிகாரதிற்கு, கொலைகளுக்கு இவர்கள் உடந்தையாகத்தான் இருந்திருக்கிறார்கள்.
அசோக்: ராகவனுடன் ஒரு உரையாடல் செய்ய வெளிக்கிட்டால் பல்வேறு விடயங்களை கதைக்க முடியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்குதானே. சில வேளைகளில் ராகவனுக்கு அவை நியாயங்களாக இருந்திருக்கலாம். என்னுடைய நோக்கில் புலிகளின் ஒவ்வொரு உடைவிலும் ராகவன் பிரபாகரனுக்கு பக்கபலமாக தான் இருந்திருக்கிறார். அதற்கான காரணங்கள் அவங்ககிட்ட இருக்கலாம். ஆனால் அது தொடர்பான உரையாடல் ஒன்று கட்டாயம் அவசியம். புலிகளின் காலத்தில், அவர் இருந்த நேரத்தில் ஜனநாயக மத்தியத்துவம் என்ற கருத்துக்கு எதிராகத்தான் பிரபாகரன், ராகவன், மாத்தையா ஆட்கள் எப்பவும் இருந்திருக்கிறார்கள்.
தேசம்: அப்ப எதற்காக புலிகளை விட்டு வெளியேறுகிறார்?
அசோக்: அது ஒரு சுவாரசியமான கதை. சென்னையிலோ, மதுரையிலோதான் இந்த சம்பவம் நடந்தது. இடம் சரியாக தெரியவில்லை. பிரபாகரனின் காரை ராகவன் எடுத்துச் சென்ற போது, ரபீக் பொலிசோடு ஏதோ பிரச்சனையால், இவர் முரண்பட்டு சண்டை பிடித்துள்ளார். இதை பிரபாகரனிடம் இவர் சொல்லவில்லை. பிறகு மறுநாள், பிரபாகரன் அந்தக் காரில் போகும் போது, பொலிஸ் பிடித்து விட்டது. அப்போதுதான் பிரபாகரனுக்கு தெரிஞ்சி இருக்கு பிரச்சனை. பிரபாகரனுக்கு பயங்கர கோபம். இது முரண்பாடாகி விரிசல் அடைஞ்சிட்டு என நினைக்கிறன். ராகவன்தான் உண்மை சொல்லவேண்டும். ஆனா, அவர் வாழ்க்கையில உண்மையானவராக இல்லை. கடந்த காலங்களில் அரசியல் வாழ்விலும், சொந்த வாழ்விலும் தவறுகள் செய்யாத உத்தமர்கள் இல்லைத்தானே நாங்கள். சில நேரங்களில் என்னை நினைக்கும்போது எனக்கே என் மீது கோபம், வெறுப்பு வரும். விமர்சனம் வரும். அது ராகவனிடம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. நான் நம்பல்ல அவர் உண்மை பேசுவார் என்று.
தேசம்: சுந்தரம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையா இறைகுமரன் உமைகுமரன் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் மைத்துனர்கள் என …
அசோக்: ஓம். மச்சான் மச்சான்
தேசம்: அதற்கு புளொட் நீண்ட காலமாக உரிமை கோரவில்லை ?
அசோக்: மத்திய குழுவில் இந்தப் பிரச்சனை கதைக்கப்பட்டது ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஏனென்றால் அவர்கள் முழுப்பேரும் சந்ததியாரால் கொண்டுவரப்பட்ட ஆட்கள்.
தேசம்: இறைகுமாரன் உமைகுமாரனை கொலை செய்தவர்கள் சந்ததியாரால் கொண்டுவரப்பட்ட ஆட்கள்…
அசோக்: முக்கியமானவர்கள் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள், சந்ததியாரால் புளொட்டினுள் கொண்டுவரப்பட்ட ஆட்கள். அதில் ஒருவர் அளவெட்டி. அவர்கள் சுந்தரத்தின் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்காங்க. மிக நெருக்கமானவர்கள், இளமையிலிருந்து சுந்தரத்துடன் நெருக்கமாக இருந்தவர்கள். சுந்தரம் படுகொலை செய்யப்பட்டது தனிப்பட்ட வகையில் அவங்களுக்கு பயங்கரத் தாக்கத்தை கொடுத்திருக்கு. உண்மையில் புளொட்டுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. சந்ததியார் மீது குற்றம்சாட்டப்பட்டது ஏனென்றால், சந்தியார் தானே இவங்களை கொண்டு வந்தவர்.
சந்ததியாருக்கும், இறைகுமாரனுக்கும் முதலே முரண்பாடு தமிழ் இளைஞர் பேரவையில் இருந்ததாக சொல்லுகிறார்கள். அந்த முரண்பாட்டை வைத்து முடிவுக்கு வாறாங்கள், சந்ததியார் தான் துணை போயிருப்பார் என்று சொல்லி. ஆனால் சந்ததியார் அதில் சம்பந்தப்படவில்லை.
தேசம்: அந்தப் படுகொலை செய்தவர்கள் புளொட்டில் உறுப்பினர்களாக இருந்தவையா?
அசோக்: முழுக்க முழுக்க புளொட்டின் உறுப்பினர்கள்தான்.
தேசம்: அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையா?
அசோக்: நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனா கடுமையா ன விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
தேசம்: இதிலிருந்து ஒரு விடயம் விளங்குது, புளொட்டில் தவறுகள் நிகழுமம் போது, அதை கண்டிப்பதற்கும் விமர்சிப்பதற்குமான ஒரு பகுதி இருந்திருக்கு.
அசோக்: தண்டனை அவர்களுக்கு வழங்கப்படாவிட்டாலும் கூட, கடும் விமர்சனங்கள் எழுந்தது.
தேசம்: இந்த காலகட்டத்தில் புளொட்டில் யார் அதிகாரத்தில் இருந்தது.
அசோக்: இதைப் பார்க்க வேண்டுமென்றால் மத்திய குழு எப்படி உருவாக்கப்பட்டது என்று பார்க்கவேண்டும். ஜெயில் உடைப்பு நடக்குது தானே.
தேசம்: 83 கலவரத்திற்கு பிறகுதான் உடைப்பு நடக்குது.
அசோக்: அதுவரைக்கும் மத்தியகுழு உருவாக்கப்படவில்லை. அதுக்கு முதல் மாவட்ட அமைப்பாளர்கள் தான் இருந்தவர்கள். இதைப்பற்றி முன்னர் கதைத்திருக்கிறம். சந்ததியார், உமா மகேஸ்வரன், ராஜன், யோதீஸ்வரன் என்று தற்காலிகமான மத்திய குழுவாகத்தான் இருந்தது. 83 செப்டம்பர் மட்டக்களப்பு சிறை உடைப்புக்கு பிறகு தான், மத்திய குழு தமிழ்நாட்டில உருவாக்கப்படுது. இந்த மத்திய குழு 83 கடைசியில் உருவாக்கப்பட்டது. பிறகு 84 ன் ஆரம்பத்தில், மத்திய குழுவுக்கு நானும், கிருபாகரன் செல்வனும் பிரேரிக்கப்பட்டு நான் மாத்திரம் உள்வாங்கப்படுகிறேன்.
தேசம்: செல்வன் ஏன் உள்வாங்கப்படவில்லை?
அசோக்: அவரின் தெரிவுக்கு பார்த்தன் ஆட்சேபனை தெரிவித்தாக தோழர்கள் ரகுமான் ஜான், குமரன், கேசவன் சொல்லி அறிந்தேன்.
தேசம்: நீங்கள் பிரேரிக்கப்பட்டு மத்திய குழுவில் சேர்க்கப்பட்டீர்கள். முதல் உருவான மத்திய குழு எப்படி தெரிவு செய்யப்பட்டது.?
அசோக்: மத்தியகுழுவுக்கு முன், புளொட்டின் அதிஉயர் பீடமாக கட்டுப்பாட்டு குழு உருவாக்கப்பட்டது. அதில் உமா மகேஸ்வரன், சந்ததியார், ரகுமான் ஜான், கண்ணன், சலீம் ஆகியோர் இருந்தனர். இந்த ஐந்து பேர் கொண்ட கட்டுப்பாட்டுக்குழுவில் இரண்டு பேர் முஸ்லிம் தோழர்கள்.
தேசம்: இவர்களை யார் தெரிவு செய்தது?
அசோக் : உமா மகேஸ்வரனும், சந்ததியாரும்.
இந்த கட்டுப்பாட்டுக்குழுதான், மத்தியகுழுவுக்கு ஆட்களை தெரிவு செய்தது. இதில ஆச்சரியம் என்னவென்றால், கண்ணாடிச் சந்திரன் 83ம் ஆண்டில்தான் புளொட்டிக்கு வருகிறார். அவரும் மத்தியகுழுவுக்கு தெரிவு செய்யப்படுகிறார்.
தேசம்: அது எப்படி?
அசோக்: கண்ணாடிச்சந்திரன் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ரகுமான் ஜானோடு ஒன்றாக படித்தவர். ஜானின் நண்பர்.
தேசம்: அப்ப அதிகாரம் மிக்கவராக ரகுமான் ஜானும் இருந்திருக்கின்றார்?
அசோக்: காலப்போக்கில் அதிகார போட்டி உருவாகி முரண்பாடுகள் வந்ததே தவிர, ஆரம்பத்தில் எல்லோரும் உமா மகேஸ்வரன் விசுவாசிகளாகத்தான் இருந்தவங்க. அதிகாரம் கொண்டவங்களாத்தான் இருந்தவங்க. நான் உமா மகேஸ்வரனை தோழர் என்றுதான் அழைப்பேன். கண்ணாடிச் சந்திரன் பெரிய ஐயா என்றுதான் சொல்வார். அத்தனை விசுவாசம்..
தேசம்: மத்திய குழுவில் இருந்தவர்கள் விபரம் சொல்லமுடியுமா?
அசோக்: காலப்போக்கில் இருந்தவர்கள் விபரம் இதுதான். சந்ததியார், உமா மகேஸ்வரன், ராஜன், ரகுமான் ஜான், கண்ணாடிச் சந்திரன், பார்த்தன், கண்ணன், சலீம், சரோஜினிதேவி, வாசுதேவா, கேசவன், சத்திய மூர்த்தி, ஆனந்தி, குமரன், ராமதாஸ், முரளி, ஈஸ்வரன், ஆதவன், கந்தசாமி, மாணிக்கதாசன்,
சேகர், பாபு, செந்தில், மாறன், சீசர்.
தேசம்: இரண்டு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அசோக்: ஓம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்
தேசம்: அதில ஒராள் ராணுவத்தளபதியா
அசோக்: ராணுவ தளபதி இல்ல. இந்திய கடற்படையில் இருந்தவர். மற்றவர் தோழர் சீசர் . பாவலரேறு பெருஞ்சித்திரனாரோடு தனித்தமிழ் இயக்கத்தில் இருந்தவர். இவர்தான் புளொட்டின் நிறைய பாடல்களை எழுதியவர்.
படங்கள்:
இடது: பாண்டிபசார் துப்பாக்கிச்சூடு தொடர்பில் பிரபாகரனும் ராகவனும் கைது செய்யப்பட்ட போது.
வலது: பிரபாகரன் ரை கோர்ட் சூட் அணிந்து இளவயதில் எடுத்துக்கொண்ட படம்