16

16

“மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துங்கள்.” – மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை !

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“கொரோனா தொற்று நோய் முடிவடையும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பை துரிதப்படுத்துவது பற்றி நாங்கள் விவாதித்தோம்.

அதன்படி, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம். அதற்காக கட்சியின் அனைத்து பிரிவுகளையும் வலுப்படுத்தும் திட்டம் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது. பொருட்களின் விலைகள் மிகவும் உயர்ந்துள்ளன. மக்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். மக்களின் பிரச்சினைகள், வறுமை நிலை வேகமாக அதிரித்துள்ளது. இவற்றுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும். உடனடியாக தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என நான் நம்பமாட்டேன். உரிய திட்டமிடல் மூலம்தான் இவற்றுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என்றார்.

“தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை.” – வெளிவிவகார அமைச்சர்

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தினருடன் பேச்சு நடத்த தயாரென அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாக சர்வதேசத்திற்கு தெரிவித்திருந்த நிலையில், தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என தற்போது அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப் போவதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அண்மையில் உறுதியளித்திருந்தார்.

எனினும் இலங்கையில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என்று வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரவை போன்ற தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் இருக்காது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறிய போது ,

நல்லிணக்க செயன்முறையின் ஒரு பகுதியாக அரச சார்பற்ற அமைப்புக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் உறுப்பினர்களுடன் கலந்துரையாட தயாராக இருக்கின்றோம்.

குறித்த மாநாட்டில் இருந்து நாடு திரும்பியதும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திப்பார் என்று வெிளவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 31ஆம் திகதி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். கிளாஸ்கோ நகரில் சூழல் பாதுகாப்பு சார்ந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் லண்டன் செல்லவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின்போது பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

“ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது..” – அரசுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி !

பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை நகரில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன்,  நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் மற்றும் கட்சி  செயற்பாட்டாளர்களும், மக்களும் பங்கேற்றிருந்தனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும், வரவு – செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன்,  விவசாயிகளுக்கான உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோஷம் எழுப்பட்டது.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை. தொழில் சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை மாறவேண்டும், நிர்வாகங்களின் அடாவடி முடிவுக்கு வரவேண்டும் எனவும் போராட்டத்தில்போது குரல் எழுப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது ,

ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைவரையும் ராஜபக்ச அரசாங்கம் நடுவீதிக்கு கொண்டுவந்துவிட்டது.  ஏற்கனவே பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களே தற்போதைய விலை உயர்விலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்காக எவரும் குரல் எழுப்புவதில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணியே குரல் எழுப்புகின்றது. இன்று தலவாக்கலையில் நடைபெறும் போராட்டம் மலையகம் எங்கும் முன்னெடுக்கப்படும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக்கூறி ஏமாற்றியுள்ளனர். இன்று தோட்டங்கள் கம்பனிகளிடம் அடகுவைக்கப்பட்டுள்ளன.  இந்த அரசாங்கத்தால் முடியாது. முடியாதவர்கள் வீட்டுக்கு செல்வதே நல்லது.” -என்றார்.

வெறும் கடதாசிகளை அச்சிடும் இலங்கைமத்தியவங்கி – ஒரே நாளில் அச்சிடப்பட்ட 20 பில்லியன் ரூபா !

இலங்கை மத்திய வங்கி நேற்று மட்டும் 20 பில்லியன் ரூபாவை அச்சிட்டிருப்பதாக மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து இன்று சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.

பணநோட்டுக் கடதாசிகளை அச்சிடும் வெறும் இயந்திரமாக மட்டும் மத்திய வங்கி மாறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாத்திரம் 19.63 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டிருப்பதோடு ஜனவரி மாதம் தொடக்கம் நேற்றுவரை இந்த அரசாங்கத்தினால் 138768 கோடி ரூபாவுக்கு நோட்டுகள் அச்சிடப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை, மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற நாள் முதல் இன்றுவரை 17804 கோடி ரூபா நோட்டுகள் அச்சிடப்பட்டிருப்பதாக ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள ரஷ்ய யுத்தக்கப்பல் !

ரஷ்யாவிற்கு சொந்தமான யுத்த கப்பல் ஒன்றும், அந்த நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடனேயே, நாட்டிற்குள் இந்த யுத்த கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கப்பல்சார் சேவைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.

குறித்த கப்பல்கள் சேவைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர், நாளை மறுதினம் (18) நாட்டை விட்டு செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது

“இலவச கல்வியின் உரிமைகளை உறுதிப்படுத்தவே ஆசிரியர் போராட்டம்.” – ஐக்கிய ஆசிரியர் சங்கம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு சம்பள முரண்பாடுகள் மாத்திரம் காரணமல்ல என ஐக்கிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வித் துறையிலுள்ள பல பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கின என அச்சங்கத்தின் பொது செயலாளரான சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை என்பது 24 வருடகால பிரச்சனை என்றும் அவர் தெரிவித்தார். பொது மக்கள் தங்கள் போராட்டத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்.

இலவச கல்வியின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், கல்வி முறையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தவும் போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்பதால் எந்தப்பயனும் இல்லை – எரிசக்தி அமைச்சர்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உதவக்கூடிய நிலையில் திறைசேரி இல்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் குறுகிய காலத்தில் எரிபொருள் விலை அதிகரிக்காது என அமைச்சர் உதய கம்மன்பில நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 15 ரூபாய் இழப்பும், ஒரு லிட்டர் டீசலுக்கு 16 ரூபாய் இழப்பும் ஏற்படும் நிலையிலேயே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதிகரிப்பை கோரியதாக கூறினார்.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நிதி அமைச்சரிடம் உதவி கோரப்பட்ட நிலையில் திறைசேரியின் நிலை குறித்து நிதி அமைச்சர் தெளிவுபடுத்தியதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

இந்நிலையில் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் விலை அதிகரிப்பதற்கான முடிவை எட்ட சில மாதங்கள் ஆகும் என்றும் அமைச்சர் கம்மன்பில மேலும் கூறினார்.

நான்காவது முறையாக மகுடம் தரித்த சென்னை சூப்பர் கிங்ஸ் – ஐ.பி.எல் முக்கியமான விருதுகள் விபரம் !

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயச்சுழற்சியில்  வென்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை  தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 192 ஓட்டங்கள் குவித்தது. கெய்க்வாட் 32 ஓட்டங்கள்  , உத்தப்பா 31 ஓட்டங்கள்  எடுத்து ஆட்டமிழந்தனர். பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட டூ பிளெசிஸ் 86 ஓட்டங்கள்  குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். மொயீன் அலி 37 ஓட்டங்களுடன்  ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர். வெங்கடேஷ் அய்யர் 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ரானா ஓட்டமெதுவுமின்றி ஆட்டமிழந்தார். சுனில் நரேன் 2 ஓட்டங்களில் வெளியேறினார். ஓரளவு தாக்குப்பிடித்த ஷுப்மான் கில் 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். இறுதியில், கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
சென்னை அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட், ஹேசில்வுட், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்றுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த ஐ.பி.எல் போட்டிகளின் விருது விபரங்கள்.
இந்த லீக் ஆட்டங்களில் அதிக ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்படும். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராக் கெயிக்வாட் 16 போட்டிகளில் ஒரு சதம், 4 அரைசதங்களுடன் 635 ஓட்டங்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.
635 ரன்களுடன் ருதுராஜ் கெயிக்வாட் ஆரஞ்சு தொப்பி - 32 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ஷல் படேலுக்கு பர்பிள் தொப்பி
15 போட்டிகளில் 32 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஹர்ஷல் படேல் பர்பிள் தொப்பியை கைப்பற்றினார்.
மேலும் விருது பெற்றவர்கள்:
ஆட்ட நாயகன் விருது  சென்னை அணியின் பாப் டுபிளெசிசுக்கு வழங்கப்பட்டது.
எமர்ஜிங் பிளேயர் – ருதுராஜ் கெய்க்வாட்
கேம் சேஞ்சர் விருது – ஹர்ஷல் படேல்
சூப்பர் ஸ்டிரைக்கர் விருது – ஹெட்மையர்
அதிக சிக்சருக்கான விருது – கே.எல்.ராகுல்
பவர் பிளேயர் விருது – வெங்கடேஷ் அய்யர்
வளர்ந்து வரும் வீரர்( எமர்ஜிங் பிளேயர்) – ருதுராஜ் கெயிக்வாட் (சிஎஸ்கே)
பேர் பிளே விருது – ராஜஸ்தான் ராயல்ஸ்
சிறந்த கேட்ச் விருது – ரவி பிஷ்னோய்

முல்லைத்தீவில் தாயின் மூன்றாவது கணவரால் முதல் கணவர்களின் பிள்ளைகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் !

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றில் தாயின் மூன்றாவது கணவரால் இரண்டு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்,

வட்டுவாகல் கிராமத்தில் தாயின் மூன்றாவது கணவரால் மகள்கள் தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளமை தொடர்பில் கிராமத்தவர்களால் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொலிசார் தாயினையும் தாயின் மூன்றாவது கணவரையும் கைது செய்துள்ளார்கள்.

ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு பிறந்த இரண்டு பதின்ம அகவை சிறுமிகள் தாயின் மூன்றாவது கணவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிவந்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தாயின் கணவரையும் சிறுமிகளின் தாயினையும் கைதுசெய்த முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளுக்கு உட்படுத்தியபோது “தனது பிள்ளைகள் மூன்றாவது கணவரால் தொடர்ச்சியாக துஸ்பிரயோக்திற்கு உள்ளாகி வருகின்றமை தாய்க்கு தெரிந்தும் அதற்கு உடந்தையாக இருந்ததாக தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களை கடந்த 13ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானியாவில் பயங்கரவாதத்தாக்குதல் – கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் !

பிரித்தானியாவில் கொன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 69 வயதுடைய சேர் டேவிட் அமேஸ் என்பவரே குறித்த நாடாளுமன்ற உறுப்பினரே உயிரிழந்தவராவார்.

இன்று வெள்ளிக்கிழமை பகல் எசெக்ஸ் தென்மேற்குப் பகுதியிலுள்ள தேவாலயமொன்றில் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயத்திற்கு உள்ளாகிய அவர் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 25 வயதான ஒருவரை கைது செய்துள்ளதாகவும் கத்தி ஒன்றை மீட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதமர் பொறிஸ் ஜோன்ஸன் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். அரசியலில் “கனிவான” ஒருவரை இழந்ததற்கு “எங்கள் இதயங்கள் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளன” என்று அவர் தெரிவித்தார்.

சேர் டேவிட் அமேஸ்,திருமணம் முடித்து ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையாவார்.

கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் சேர். டேவிட் அமேஸின் கொலை, பயங்கரவாத சம்பவம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதில், ‘இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய சாத்தியமான உந்துதல்’ இருப்பதாக பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. கொலைச் சந்தேகத்தின் பேரில் 25 வயதான பிரித்தானியர் ஒருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இக்கொலை சம்பவம் தொடர்பில் வேறு யாரையும் தேடவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் லண்டன் பகுதியில் உள்ள இரண்டு முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.