06

06

பிரான்சில் 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் – போப் பிரான்சிஸ் விசனம் !

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தேவாலயங்கள் நிற்காததற்கு அவமானப்படுவதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் கத்தோலிக்க மதகுருமார்களால் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சமீபத்தில் வெளியான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜீன் மார்க் சாவ் தலைமையில் இரண்டு ஆண்டுகளாகத் தனியார் விசாரணைக் குழு நடத்திய ஆய்வு முடிவில், “ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில், உலகெங்கிலும் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருவதைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது. பிரான்ஸில் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக, இந்தப் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருகின்றன.

பிரான்ஸில் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த 3,000 பாதிரியார்களும், பிற ஊழியர்களும் இந்தப் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளனர். 1950ஆம் ஆண்டு முதல் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள்  பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக போப் பிரான்சிஸ் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறியதாவது, “பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். தேவாலயத்தின் இயலாமைக்காகவும், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தேவாலயங்கள் நிற்காததற்கும், நீண்டகாலமாக, பாதிக்கப்பட்டவர்களைக் கவலையில் வைத்திருந்ததற்காகவும் நான் அவமானம் கொள்கிறேன். இது அவமானத்துக்கான தருணம்” என்று தெரிவித்துள்ளார்.

“ரூபாய் மதிப்பு சரிவுக்கும் கொரோனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – ராஜித சேனாரத்ன

கொரோனா தொற்றினாலேயே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளமை தவறு. இந்த ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தின் விளைவாகும் என பாராளுமன்ற உறுப்பினரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ரூபாய் மதிப்பு சரிவுக்கும் கொரோனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை ரூபாய் ரூ .180.10 இலிருந்து ரூ .201.52 ஆக குறைந்துள்ளதுடன், இது 12% வீழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் ரூபாய் 8% பங்காளதேசம் 0.44%, நேபாளம் 2.48%, இந்தியா 2.23% மற்றும் ஆப்கானிஸ்தான் 3.33% ஆக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தவறான நிர்வாகத்தினால் இலங்கையின் ரூபாவானது வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா வைரஸால் அல்ல.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் மேற்கோள் காட்டப்பட்ட மனித உரிமைகளை மீறும் நாடுகளில் இலங்கை 45 வது இடத்தில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்

ஆப்கானிஸ்தானில் அடிப்படை வசதிகள் இல்லாது 14 மில்லியன் மக்கள் பாதிப்பு !

ஆப்கானிஸ்தானில் 5 வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் தீவிர ஊட்டசத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையில் சர்வதேச அமைப்புகள் உடனடியாக தலையிடாவிட்டால் ஒரு மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கும் அபாய சூழல் உள்ளது என்றும் ஐ.நா. அமைப்புகள் எச்சரித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஜனநாயக ஆட்சி வீழ்ந்தது. அமெரிக்கப் படைகளுடனும், ஆப்கானிஸ்தான் அரசுடனும் 20 ஆண்டுகாலமாக சண்டையிட்டு வந்த தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து அங்கு இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் உலக நாடுகள் ஆப்கனுடனான உறவைத் துண்டித்தன. இதனால், அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆப்கானில் சுமார் 14 மில்லியன் மக்கள் தண்ணீர், உணவு, அடிப்படை மருத்துவ சேவை, போதிய ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியனவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் யுனிசெப் அமைப்பின் ஆப்கானிஸ்தானுக்கான பிரதிநிதி ஹெர்வெ லுடோவிக் டே லிஸ் இரண்டு நாள் பயணமாக ஹெராட் நகருக்குச் சென்றார். அவருடன் உலக உணவுத் திட்டத்தின் ஆப்கனுக்கான பிரந்திநிதி மேரி எல்லென் மெக்கோர்ட்டியும் சென்றார்.

அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் 95% வீடுகளில் போதிய உணவு இல்லை. குழந்தைகளுக்காக பெற்றோர், பெரியவர்கள் சில வேளை உணவுகளை தியாகம் செய்கின்றனர்.

இது குறித்து மேரி எல்லென் மெக்கோர்ட்டி கூறும்போது, “குழந்தைகளுக்காக பெற்றோரும், பெரியவர்களும் பட்டினி கிடக்கும் சூழலைப் பார்க்கும்போடு கவலையாக இருக்கிறது. இதில் உடனடியாக தலையிடாவிட்டால் ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாடு மிக மோசமான பிரச்சினையாக உருவெடுக்கும். சர்வதேச சமூகம் உடனடியாக ஆப்கானிஸ்தானுக்கு தாராளமாக நிதிகளை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை சரி செய்யமுடியாத அளவுக்குச் சென்றுவிடும்” என்று கூறியுள்ளார்.

ஆசிரியர்களின் சம்பளப்பிரச்சினையை தீர்க்க சிகரெட்டின் விலையை அதிகரியுங்கள். – ஐக்கிய மக்கள் சக்தி

சிகரெட் ஒன்றின் விலையை 20 ரூபாவால் அதிகரித்து, அதன் மூலம் பெறப்படும் வருமானத்தை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒதுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர் ,

2019 முதல் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்படவில்லை என்றும், சிகரெட்டின் விலையை 20 ரூபாவால் அதிகரித்தால், திறைசேரிக்கு வருடாந்தம் மேலதிக வருமானமாக 50 பில்லியன் ரூபாய் கிடைக்கும். மேற்படி அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டு இருந்தால், அரசாங்கத்திற்கு 2021 மற்றும் 2022 க்கு இடையில் 100 பில்லியன் ரூபாவை வசூலித்து இருக்க முடியும்.

ஆசிரியரின் சம்பள ஒழுங்கின்மையை தீர்க்க 55 பில்லியன் ரூபாய் போதுமானதாகும். மேலும், புகையிலையால் நாளாந்தம் 50 க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். அத்துடன் வருடாந்தம் 22,000 பேர் இறப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த முடிவை எடுப்பதில் ஏனைய துறைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதி செய்ய வேண்டியிருப்பதால் பிரச்சினையை விரைவாக தீர்க்க முடியாது. வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளதுடன், சிகரெட்டின் விலையை உயர்த்துவதற்கான பரிந்துரைக்காக பாராட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

“நானும் எனது மனைவியும் அப்பாவிகள் எந்த தவறையும் செய்யவில்லை.” – பன்டோரா பேப்பர் தொடர்பில் நிரூபமா ராஜபக்ஷவின் கணவர்!

பன்டோரா பேப்பரில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்குறித்து விசாரணை செய்வதற்கு சுயாதீன விசாரணையாளரை நியமிக்கவேண்டும் என திருக்குமார் நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்தக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

கடல்கடந்து பல வங்கிக்கணக்குகளை சொத்துக்களை வைத்துள்ள விவகாரத்தில் எனது பெயரும் எனது மனைவியும் பெயரும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.பன்டோரா பேப்பர் என தெரிவிக்கப்படும் ஆவணத்தில் இது குறித்துதெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெயர் வெளியான நபர்கள் அனைவரும் தவறிழைத்துள்ளனர் என்ற பொதுவான கருத்து காணப்படுகின்றது.

இம்ரான்கான் உட்பட பல உலக தலைவர்கள் பண்டோரா பேப்பரில் பெயர் வெளியானவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர். நானும் எனது மனைவியும் அப்பாவிகள் எந்த தவறையும் செய்யவில்லை என நான் உங்களிற்கு உறுதியளிக்கின்றேன்.

இவ்வாறான சூழ்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்கு சுயாதீன விசாரணையாளரை தாமதமின்றி நியமிக்குமாறும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்,இதன் மூலம் எங்களின் பெயர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க முடியும். நானும் எனது மனைவியும் கடும் மனவேதiயை எதிர்கொண்டுள்ளதால் நான் உங்களிடம் இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன்.

எங்களைகுற்றவாளிகள் என கருதியுள்ளனர். இந்த தருணத்தில் நான் இந்த பணிவான வேண்டுகோளை முன்வைக்கின்றேன். என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நிரூபமா ராஜபக்ஸ எனது சகோதரி. ஆனாலும் அரசியல் வேறு – உறவு வேறாம்.” – அமைச்சர் நாமல்

பண்டோரா ஆவணங்களில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர்கள் குறித்து விசாரணை நடத்த இலஞ்ச, ஊழல் பற்றிய ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தநிலையில் , எந்த சொந்தமாக இருந்தாலும் உறவுமுறையும் அரசியலும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பல உலக தலைவர்களின் இரகசியங்களை வெளிக்கொண்டுவந்துள்ள, பண்டோரா ஆவணங்களில் நிரூபமா ராஜபக்ஸவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும், நிரூபமா ராஜபக்ஸ எனது சகோதரியாக உள்ளார். எனினும் அரசியல் ரீதியாக அவர் எம்முடன் இல்லை. அவர் கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் தலைவர் சிறிசேனவுடன் இருந்தார். அதனால் உறவு வேறு அரசியல் வேறு. அதே நேரத்தில் அவர் நடேசனை மணந்துள்ளார். திருமணத்தால் கிடைப்பவை தொடர்பில் நம்மால் என்ன செய்ய முடியும்.

1990 – 1998 வரை இவர்கள் பணம் சம்பாதித்து வியாபாரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அரசாங்கத்தில் யார் இருந்தார்கள் என்பதை ரணசிங்க பிரேமதாச மற்றும் சந்திரிகா மெடம் ஆகியோரிடம் கேட்க வேண்டும் என்றும் நாமல் குறிப்பிட்டார்.

யாழில் இதுவரை காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் யாழ். நகர நீர் குழாய் அமைப்பு மற்றும் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளை இன்று (06) முற்பகல் ஆரம்பித்து வைத்தார்.

நயினாதீவில் இடம்பெற்ற நிகழ்வில் அலரி மாளிகையில் இருந்து நேரடியாக கலந்து கொண்ட கௌரவ பிரதமர், மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப் பணிகள் மற்றும் யாழ் நகர நீர் வழங்கலுக்கான நீர் குழாய் அமைக்கும் நடவடிக்கை என்பவற்றை ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் ஊடாக 186 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு பாதுகாப்பான குழாய் நீரை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதுடன் மத்திய அரசாங்கத்தின் நிதி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் இத்திட்டங்கள் செயற்படுத்தப்படும்.

தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊடாக உயர் தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்துடன் கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்திட்டம் மற்றும் யாழ் நகர நீர் வழங்கல் திட்டத்தின் பாதுகாப்பான நீர் குழாய்களை பொருத்துவதன் மூலம் சுமார் மூன்று இலட்சம் மக்கள் நன்மையடைவதுடன் அத்திட்டங்களை 2023ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புதிய வேலைத்திட்டத்தின் மூலம் யாழ் நகரம் மற்றும் அதனை அண்மித்து வாழும் சுமார் பன்னிரெண்டு இலட்சம் மக்களுக்கு குழாய் மூலமான பாதுகாப்பான நீரை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்பது விசேட அம்சமாகும். மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு பகுதிகளுக்கான நீர் விநியோகம் முறைப்படுத்தப்படுவதுடன் இதன்மூலம் சுமார் 5000 குடும்பங்கள் நேரடியாக நன்மையடைவர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் கென்ச்சி யொகுஹாமா அவர்கள் சூம் தொழில்நுட்பம் ஊடாக இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு இத்திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

நயினாதீவு விகாராதிபதி வணக்கத்திற்குரிய நவந்தகல பபுமகித்திதிஸ்ஸ தேரர், நயினாதீவு அம்மன் ஆலய பிரதான குருக்கள் சாமதேவ குருக்கள் உள்ளிட்ட சமய தலைவர்கள் மற்றும் யாழ். மக்கள் காணொளி தொழில்நுட்பம் ஊடாக அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு இத்திட்டம் ஊடாக கிடைக்கும் நன்மை குறித்து தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

வடக்கு மாகாணத்தில் தற்போது காணப்படும் 9.6 சதவீதமான பாதுகாப்பான நீர் குழாய் அமைப்பை 2025ஆம் ஆண்டளவில் 56.9 சதவீதமாக உயர்த்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை திட்டமிட்டுள்ளது.
நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்கள்,

‘எவரையும் தோற்கடிப்பது அன்றி யுத்தத்தை நிறைவு செய்வதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அன்றைய எதிர்பார்ப்பாக காணப்பட்டது. எவ்வளவு செலவானாலும் யுத்தத்தினால் இழந்த தேவைகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு கௌரவ பிரதமர் அவர்கள் எமக்கு தொடர்ந்து அறிவுறுத்தினார். அதிகம் செலவாகும் என அமைச்சரவையில் குறிப்பிட்ட போது எவ்வளவு செலவானாலும் இந்த நீர் வழங்கல் திட்டத்தை நாம் அமைக்க வேண்டும் என கௌரவ பிரதமர் அவர்கள் கூறினார். இவை அனைத்தும் வடக்கு மக்களுக்காகவே ஆகும். இந்த பாய்ந்தோடும் நீருடன் கௌரவ பிரதமரின் இதயத்தின் கருணையும், நல்லிணக்கமும் பாய்ந்தோடுகிறது என கூற வேண்டும்.

நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணாயக்கார, கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்து, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் திரு.நிசாந்த ரணதுங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் அலரி மாளிகையில் இருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழாவில் கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஊடகங்களில் ஆபாசப்பேச்சுக்கு தடை – அமைச்சரவை அனுமதி !

ஆபாசப் பேச்சுகளை தடை செய்வதற்கான சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தகவல் தொழிநுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2020 செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


இற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

இலங்கையில் சேமலாப நிதியைப் பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுய வேலைவாய்ப்புகள் – தேசிய முதியோர் செயலகம் அறிவிப்பு !

ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதியைப் பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் கே.ஜி.லன்ரோல் தெரிவித்துள்ளார்.

முதியோரின் வாழ்வுக்காக பணம் திரட்டும் நோக்கில் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் சமூக சேவை அதிகாரியின் தலையீட்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிதாக சுய தொழில் தொடங்கவுள்ள சிரேஷ்ட பிரஜைகளுக்கு 30ஆயிரம் ரூபா தொகை வழங்கப்படுவதுடன் சுய தொழிலுக்குத் தேவையான அறிவு மற்றும் பயிற்சி என்பன தனியார் அல்லது குழுக்களால் வழங்கப்படவுள்ளதாகவும் பொன்சாய் கலையில் ஏற்கனவே பயிற்சி ஆரம்பிக்கப்பட் டுள்ளதாகவும் கொவிட் தொற்றால் அது தடைப்பட்டுள்ளதாகவும் தேசிய முதியோர் செயலக பணிப்பாளர் கூறினார்.

தேசிய பொருளாதாரத்தில் முதியோரை ஈடுபடுத்துவதே இதன் நோக்கம் என அவர் மேலும் கூறினார்.

பண்டோரா ஆவணங்களில் குற்றம் சாட்டப்பட்ட நிருபமா ராஜபக்ஷ குறித்து விசாரணை – ஜனாதிபதி உத்தரவு !

பண்டோரா ஆவணங்களில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர்கள் குறித்து விசாரணை நடத்த இலஞ்ச, ஊழல் பற்றிய ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உடனடியாக விசாரணை நடத்தி, ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவின் தலைவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டார்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை உறுதிப்படுத்தினார்.

பண்டோரா பேப்பர்ஸில் பெயரிடப்பட்டுள்ள ஆவணத்தில் தற்போதைய இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் இல்லை என்றும் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

மேலும் குறித்த ஆவணம் இலங்கை தொழிலதிபர் மற்றும் அவரது மனைவியுடன் மட்டுமே தொடர்புடையது என்றும் அவர் கூறினார்.

முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவரான திருக்குமார் நடேசன்  ஆகியோர் அதில் பெயரிடப்பட்டுள்ளனர்.

நிருபமா ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.