09

09

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரை பலியெடுத்த கொடூர தீ விபத்து – பல்வேறு கோணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை !

இராகலையில் இடம்பெற்ற தீ விபத்தில் ஐவர் உயிரிழந்த சம்பவம், அனைவரையும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாதமையினால், குறித்த விடயம் தொடர்பாக பொலிஸார் பல்வேறு கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

நுவரெலியா – இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற தீ விபத்தில் ஐந்து வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில், இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு 10 மணியளவிலேயே இந்த கோர தீ விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தினால் தாய், 11 வயது மகள், ஒரு வயது குழந்தை மற்றும் அவர்களின் தாத்தா, பாட்டி ஆகிய ஐவர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

அந்தவகையில், 55 வயதுடைய ஆர்.ராமையா, அவரின் மனைவியான 50 வயதுடைய முத்துலெட்சுமி, 35 வயதடைய இவர்களின் மகள் டிவனியா மற்றும் குறித்த மகளின் பிள்ளைகள் இருவர் என உயிரிழந்த ஐவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்த ஆர்.ராமையாவின் மருமகனான 30 வயதுடைய ரவீந்திரன் என்பவர் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் இல்லாத நிலையில், அவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவத்தில் உயிர் தப்பிய தங்கையா இரவீந்திரன், மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அத்துடன் இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எனினும், ஐந்து உயிர்களை பலியொடுத்த இந்த கோரமான தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“சிங்கம் போல இருந்த பொன்சேகா இன்று நரி போலாகிவிட்டார்.” – அமைச்சர் சீ.பீ ரத்னாயக்க

” ராஜபக்ஷக்களின் ஆதரவு இருந்த போது சிங்கம் போல யுத்தத்தை முடித்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, பாராளுமன்றம் வந்த பிறகு நரி போல செயற்படுகின்றார்.” என அமைச்சர் சீ.பீ ரத்னாயக்க விமர்சித்துள்ளார்.

நுவரெலியா, கொத்மலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் இன்று (09) ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு விமர்சித்தார்.

அமைச்சர் சீ.பீ ரத்னாயக்க மேலும் கூறியவை வருமாறு,

“மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்டார். இவர்களின் ஆதரவு இருந்ததால் அன்று சிங்கம் போல சரத்பொன்சேகா யுத்தத்தை முடித்தார். ஆனால் பாராளுமன்றம் வந்த பிறகு நரிபோல் செயற்படுகின்றார். பாரம்பரிய வைத்திய முறைமையை கொச்சைப்படுத்தும் வகையில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். நாம் பாரம்பரிய வைத்திய முறைமையை மதிக்க வேண்டும்.

அன்று நாம் உர மானியம் வழங்கினோம். ஏன் அவ்வாறு செய்தோம்? விவசாயிகள், விவசாயத்தில் ஈடுபடுவது குறைந்தது. விவசாயிகளின் பிள்ளைகள் தொழிற்சாலைகளுக்கு சென்றனர். இதனால் அரிசியைக்கூட இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, விவசாயத்தை பாதுகாப்பதற்காகவே அந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதேவேளை, பால்மா, சீமெந்து உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும். அடுத்த வாரத்துக்குள் நிலைமை வழமைக்கு திரும்பும்.” என்று தெரிவித்துள்ளார்.

கருக்கலைப்புக்கு எதிரான சட்டம் தொடரும் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு – அதிருப்தியில் சமூக ஆர்வலர்கள் !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்புக்கு எதிரான சட்டம் தொடரும் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்புக்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 6 வாரங்கள் நிரம்பிய பெண்கள் கருக்கலைப்பில் ஈடுபடக் கூடாது என அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தை ஆளும் குடியரசுக் கட்சி கொண்டுவந்த இந்தச் சட்டம் அமெரிக்கா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மனித உரிமை அமைப்புகள், பெண் அமைப்புகள் இச்சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தின. மேலும், இந்தத் தடையைத் திரும்பப் பெற வேண்டும் என்று அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை வியாழக்கிழமையன்று விசாரித்த நீதிபதி ராபர்ட் பிட்மேன், பெண்கள் தங்கள் வாழ்வின் மீதான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது சட்டவிரோதமாகத் தடுக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றம் அனுமதிக்காது என்று கூறி, தடையை நீக்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்குத் தொடர்பான மேல்முறையீடு டெக்சாஸ் மாகாணம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நியூ ஒர்லியன்ஸ் நீதிமன்றம் கருக்கலைப்புக்கு எதிரான தடை தற்காலிகமாகத் தொடரும் எனத் தீர்ப்பளித்துள்ளது.

நியூ ஆர்லியன்ஸ் நீதிமன்றத் தீர்ப்புக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அப்பளத்தை சாப்பிட்டதற்காக 5 வயது மகளின் வாயில் நெருப்பால் சுட்ட தாய் – கிளிநொச்சியில் சம்பவம் !

சமைத்து வைத்த உணவில் இருந்த அப்பளத்தை 5 வயது மகள் தாயாருக்கு தெரியாமல் சாப்பிட்ட காரணத்தினால் குழந்தையின் வாயில் நெருப்பால் சுட்ட தாய் அக்கராயன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அக்கரையான் காவற்துறை பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் விநாயகர் குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் (08) இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தை அவதானித்த சிறுமியில் தாத்தா அக்கராயன் காவற்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று (09) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தை தொழிலுக்குச் சென்ற சமயம் இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, தாயாரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

“சீனா அமைதியான முறையில் தாய்வானுடன் ஒன்றிணைய விரும்புகிறது.” – சீன ஜனாதிபதி

தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

தாய்வான் – சீனா இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில் இரு நாடுகளும் மீண்டும் ஒன்றிணைவதற்கான முயற்சியில் சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங் தீவிரமாக இருக்கிறார்.

இதுகுறித்து சீன கிரேட் ஹால்லில் நடந்த நிகழ்வு ஒன்றில் இன்று (சனிக்கிழமை) சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசும்போது, “சீனா  அமைதியான முறையில் தாய்வானுடன் ஒன்றிணைய விரும்புகிறது. தாய்வான் சுதந்திர பிரிவினைவாதம் தாய்நாட்டுடன் மீண்டும் ஒன்றிணைப்பதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. சீனா  தனது இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்கும். தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும், நிச்சயமாக நிறைவேற்றப்படும். “ என்று தெரிவித்தார்.

முன்னதாக , சீனா கனவு காண்கிறது. தலிபான்கள் வழியை பின்பற்ற நினைக்கிறது. ஆனால் நாங்கள் எங்களை பாதுகாத்து கொள்வோம் என்று தாய்வான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் வூ தெரிவித்திருந்தார்.

தாய்வான் கடந்த சில மாதங்களாக சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தாய்வான் உருவானது. என்றாலும் தாய்வான் , சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது. தேவைப்பட்டால் தாய்வானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீன ஜனாதிஜபதி ஜி ஜின்பிங் சில மாதங்களுக்கு கூறி இருந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

சீனா சமீபத்திய ஆண்டுகளில் தாய்வானை சுற்றி தனது போர்ப் பயிற்சியையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 18, 19 ஆகிய திகதிகளில் சீனாவின் சுமார் 40 போர் விமானங்கள் சீனா – தாய்வான்  இடையிலான எல்லையை கடந்துள்ளன என்றும் அப்போது படை பலத்தைக் கொண்டு சீனா அச்சுறுத்துவதாக தாய்வான் அதிபர் சாய் இங்-வென் கூறியது குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 80ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது !

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 76 பேர் கைது செய்யப்பட்டதுடன் 18 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மேல் மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் 1,430 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதில் சரியான காரணமின்றி சோதனைச் சாவடிகளைக் கடக்க முயன்ற 232 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நாளாந்தம் வீழ்ச்சி காணும் விவசாயத்துறை – அரசை சாடியுள்ள இலங்கை விவசாயிகள் சம்மேளனம் !

அரசாங்கத்தின் திட்டமில்லாத  முடிவுகளால் நாட்டின் விவசாயத்துறை நாளாந்தம் சரிந்து வருகிறது என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளரான நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர்,

உர நெருக்கடியால் விவசாயிகள் சோர்வடைந்துள்ளதால் நாடு முழுவதும் நெல் வயல்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. பெரும் போகம் வந்துவிட்டது, எனினும் விவசாயிகள் தயாராக இல்லை. விவசாய சமூகம் பெரும் எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அடுத்த வர்த்தமானி அறிவிப்பு உரத்துடன் தொடர்புடைய வர்த்தமானியாகும். வர்த்தமானி அறிவிப்பை மாற்றியமைத்ததால் ஏற்படும் சேதம் பேரழிவை ஏற்படுத்தும். மேலும், நாட்டின் விவசாயத் துறை மற்றும் உணவு உற்பத்திக்கான மிக மோசமான சேதத்திற்கு தற்போதைய நிர்வாகமே பொறுப்பாகும்.

விவசாய நிலங்களின் பரப்பளவு குறைந்து, விளைச்சலைக் குறைத்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளே இதற்கு அடிப்படை காரணமாகும். அத்துடன் தீர்மானங்களை அமுல்படுத்தும் முன்னர் அதனை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

“மாகாண சபை தேர்தலை எந்த வகையிலும் நடத்த முடியாது.” – அமைச்சர் தினேஷ் குணவர்தன

புதிய சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளாமல் பழைய முறைப்படி மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியாது என்பதே சட்டமா அதிபரின் நிலைப்பாடு என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் மற்றும் வாக்களிக்கும் கட்டமைப்பில் அல்லது விதிகளில் திருத்தங்களை கண்டறிய மற்றும் அது தொடர்பில் தேவையான திருத்தங்களை மேற்கொள்தற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவராக அமைச்சர் தினேஷ் குணவர்தன அதன் உறுப்பினர்களுக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் தற்போதுள்ள சட்டம் ரத்து செய்யப்பட்ட போதிலும், புதிய சட்டத்தை இயற்றாமல் மாகாண சபை தேர்தலை எந்த வகையிலும் நடத்த முடியாது என சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் செயல்பட்டு வரும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது அவசியமானாலும், அதற்கு தடையாக இது உள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன குழு உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ் போதுமானது – சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம்

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸை மாத்திரமே வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகமான வைத்தியர். அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு டோஸ் போதுமானது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய அக்டோபர் 21 ஆம் திகதி முதல் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவரக்ளுக்கு தடுப்பூசி வழங்க ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​ இலங்கைக்கு 32.69 மில்லியன் தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆறு லட்சத்தை கடந்த கொவிட் உயிர்பலி – திணரும் பிரேஸில் !

உலகளாவிய ரீதியில் 600,000க்கும் அதிகமான கொவிட்-19 மரணங்களைக் கடந்த இரண்டாவது நாடாகப் பிரேஸில் பதிவாகியுள்ளது.

நேற்றைய நாளில் பிரேஸிலில், 628 கொவிட் மரணங்கள் பதிவான நிலையில், மொத்த மரணங்களின் எண்ணிக்கை 600,493 ஆக அதிகரித்துள்ளது.

உலகில் அதிக கொவிட் மரணங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன.

அங்கு ஏழு இலட்சத்து 32 ஆயிரம் பேர் கொவிட் நோயால் மரணித்துள்ளனர்.

இந்தியாவில், 4 இலட்சத்து 50 ஆயிரம் கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.