இறுதி யுத்தத்தின் முடிவில் தங்கள் குடும்பங்களோடு சரணடைந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் வேளையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் போரின் இறுதிக் கணங்களில், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பல சிறுவர்கள், அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் முதல்நிலை உறுப்பினர்கள் பலரது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
1. விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அறிக்கைப் பொறுப்பாளர் அம்பி அவர்களின் குழந்தைகள் பிரியாளினி பரமேஸ்வரன், பிரதீபன் பரமேஸ்வரன், பிறையாளன் பரமேஸ்வரன்,
2. மணலாறு தாக்குதல் படையணியைச் சேர்ந்த இளங்குமரன் அவர்களின் மகள் அறிவுமதி,
3. யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி அவர்களின் பிள்ளைகளான தமிழொளி மகாலிங்கம், எழிலினி மகாலிங்கம், மகிழினி மகாலிங்கம்,
4. கலை மாஸ்டரின் மகள்மாரான கானிலா திருச்செல்வம், லக்சாயினி திருச்செல்வம்,
5. மணலாறு தளபதி மஜீத் அவர்களின் பிள்ளைகளான சாருஜன் முரளிதரன், அபிதா முரளிதரன்,
6. அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகன் ஜனகன் மகேந்திரன்,
7. நிர்வாகசேவைப் பொறுப்பாளர் பிரியன் அவர்களின் ஒரு வயதேயான மகள் கலைச்சுடர் தயாசிறீ,
8. விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ராஜா அவர்களின் மகன்மாரான சாருஜன் கிருஸ்ணமூர்த்தி, நிகநிலான் கிருஸ்ணமூர்த்தி, ஆதிரையன் கிருஸ்ணமூர்த்தி,
9. வனவளத்துறைப் பொறுப்பாளர் சக்தி அவர்களின் பிள்ளைகளான தமிழின்பன் சத்தியமூர்த்தி, தமிழ்முகிலன் சத்தியமூர்த்தி, இசைநிலா சத்தியமூர்த்தி,
10. சுடர் அவர்களின் குழந்தைகளான அபிராமி சுரேஸ்குமார், அபிசன் சுரேஸ்குமார்,
11. வனவளப் பாதுகாப்புக்கான மன்னார் மாவட்ட பொறுப்பாளர் சுமன் அவர்களின் மகள் தணிகைச்செல்வி செல்வகுமார்,
12. அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன் அவர்களின் பிள்ளைகளான துவாரகன் சுதாகரன், துவாரகா சுதாகரன், துர்க்கா சுதாகரன்,
13. மன்னார் மாவட்ட படையணிப் பொறுப்பாளர் வாகீசன் அவர்களின் பிள்ளைகளான சிந்தரசி நிமலநாதன், கோகலை நிமலநாதன், கலையரசன் நிமலநாதன்,
14. புகைப்படப்பிரிவுப் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் மகள் எழில்நிலா சற்சுதன் உள்ளிட்டோர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சரணடைந்ததற்கான சாட்சிகள் இருக்கிறது .குழந்தைகள் சிறுவர்களுக்கான புதிய சட்டங்கள் சீர்திருத்தங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கிற மேலே குறிப்பிட்ட சிறார்களுக்கு என்ன நடந்தது இவர்களில் பெரும்பாலானோர் எனது மாணவர்கள் ஆவர். சிறைச்சாலைகளில் எத்தனையோ பெண்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குழந்தைகளோடு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பயங்கர வாத தடைச்சட்டத்தின் மூலம் தற்போதும் தமிழர்களை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 39 பேர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைக்கப்படும் கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் ஏனையோரும் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர்.
எமக்கு நினைவேந்தல் செய்கிற உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது எமது பிள்ளைகளை நினைவுகூர முடியாதவர்களாக நாங்கள் இருக்கிறோம் என்றார்.