23

23

லண்டன் பழைய மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! உங்கள் பழைய மாணவர்களுக்கு இலவச ‘டிரொக்ஸ் புரோகிராம்’ ஒன்றை ஆரம்பியுங்கள்!!!

ஞாயிறு 23/10/2021 யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் லண்டன் ஹரோவில் மாலை மூன்று மணிக்கு கூடுகின்றனர். இந்தச் சந்திப்பில் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் மட்டுமல்ல ஏனைய கல்லூரிகளின் பழைய மாணவர்களும் மதுவுக்கும் போதைவஸ்துக்கும் அடிமையான தங்கள் நண்பர்களை மீட்பதற்கான கூட்டுத் திட்டம் ஒன்றை முன் வைக்க வேண்டும். இந்தப் பழைய மாணவர்களின் குடியும் போதைப் பொருள் பாவனையும் நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சீரழித்து வருகின்றது. இதனால் மற்றுமொரு தலைமுறைச் சிறார்கள் மோசமான பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்த பழைய மாணவர் சங்கங்கள் தலையீடுகள் மற்றும் இவர்களின் நிதி உதவியில் யாழ்ப்பாணத்தினதோ வடக்கினதோ கல்விநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இலங்கையில் கல்வியில் பின் தங்கிய மாகாணமாகவோ மாவட்டமாகவும் தமிழ் பிரதேசங்களே உள்ளன. இந்த பழைய மாணவர் சங்கங்கள் பாடசாலை அதிபர்களை சோம்பேறிகளாகவும் அவர்களை மோசடி செய்யத் தூண்டுபவர்களாகவுமே உள்ளனர். இந்த பழைய மாணவர்கள் ஊருக்குப் போகும் போது கிலுகிலுப்பு காட்டி வருவதைவிட அங்கு பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. இவ்வாறான அரசு செய்ய வேண்டிய வேலைகளை பழைய மாணவர் சங்கங்கள் செய்ய வேண்டிய தேவையில்லை என முன்னாள் கல்விச்செயலாளர் ரவீந்திரன் லண்டன் வந்திருந்த போது மிகத் தெளிவாகவே சுட்டிக்காட்டி இருந்தார்.

இன்று யாழ் இந்துவின் மைந்தர்கள் மட்டுமல்ல மானிப்பாய் இந்துக் கல்லூரி, சென்ஜோன்ஸ், சென்ரல் கொலீஜ், மகாஜனாக் கொலீஜ் என்று பழைய மாணவர் சங்கம் நடத்துபவர்கள் இங்குள்ள தங்கள் உறுப்பினர்களுக்கு ‘டிரொக்ஸ் புரோகிராம்’ செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட பாடசாலைகளைச் சேர்ந்த பல பழைய மாணவர்கள் மதுவுக்கும் போதைப் பொருட்களுக்கும் அடிமையாகி பல பெண்களின் வாழ்வைச் சீரழிக்கின்றனர். இவர்கள் மதுவுக்கும் போதைப் பொருட்களுக்கும் அடிமையானதால் இவர்களின் பிள்ளைகளின் வாழ்வும் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றது. இந்த இந்துக் கல்லூரிகளினதும் கிறிஸ்தவ கல்லூரிகளினதும் மைந்தர்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு டிரொக்ஸ் புரோகிராம் ஒன்றை முன்வைத்து செயற்பட்டால் அழிந்துகொண்டிருக்கின்ற பலரின் வாழ்வைச் சீர்செய்ய முடியும். கோட்டும் ரையும் கட்டி கனவான்களாக வலம் வருவதைவிட்டுவிட்டு முதலில் எம் பெண்கள் சமூகத்தை, குழந்தைகளை இந்த குடிக்கு அடிமையானவர்களிடம் இருந்து காக்க முயற்சிக்கவும்.

கற்க கசடறக் கற்ககற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் உறுப்பினர்களின் சொந்தக்காரர்கள் !

கோட்டை – மாதிவெல பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் வீடுகளை பெற்றுக்கொண்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் அந்த வீடுகளில் குடியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் தமக்கு பாதுகாப்பு வழங்கும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு கொடுத்துள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் தமக்கு கிடைத்த உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களைப் பார்க்காதவர்களும் உண்டு என பாராளுமன்றத்தின் அதிகாரி ஒருவர் லங்காதீப-விற்கு தெரிவித்தார்.

பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ குடியிருப்புகளையும் கொடுத்துள்ளனர். மாதிவெலவில் உள்ள உத்தியோகபூர்வ குடியிருப்புக்கு குறைந்தபட்ச கட்டணம் மாதந்தோறும்  1,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் வீடுகளை வைத்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த வீடுகளைப் பெற்று உறவினர்கள், நண்பர்கள் அல்லது பிறருக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதன்படி, வீட்டுத் திட்டத்தில் வீடுகளைப் பெற்ற எம்.பிக்களின் பட்டியலை உடனடியாக அனுப்புமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பமானது ஐசிசி ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடர் – வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது அவுஸ்திரேலியா !

ஐசிசி ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் இந்த போட்டி இன்று Sheikh Zayed Stadium மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் மர்கரம் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஹசில்வூட், ஜம்பா மற்றும் ஸ்டார்க் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.

அதன்படி, 119 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 19.4 ஒவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 34 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் அன்ரிச்நோர்ச்சே 2 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

இலங்கையில் பொறுப்புக் கூறல் கருத்திட்டத்தை ஸ்தாபித்தது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் !

மனித உரிமைகள் , நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்த போதிலும் இலங்கையில் பொறுப்புக் கூறல் கருத்திட்டத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஸ்தாபித்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்து கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு எதிராக 46 கீழ் ஒன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கான ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் பொறுப்பை வழங்கியுள்ளதுடன் அறிக்கையிட வேண்டிய காலக்கெடுவையும் வழங்கியது.

48 ஆவது அமர்வில் வாய்மொழி மூல அறிக்கையையும் 49ஆவது அமர்வில் எழுத்து மூல அறிக்கையையும் 51 ஆவது அமர்வில் பொறுப்புக்கூறலை மேலும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த சாத்தியப்பாடுகளை உள்ளடக்கிய முழுமையான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறும் தீர்மானம் கேட்டுக்கொண்டது.

அத்தோடு நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் உட்பட இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து அறிக்கையிடுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகதிற்கு மனித உரிமைகள் பேரவை கோரிக்கை விடுத்தது.

மேலும் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் 2.8 மில்லியன் டொலர் நிதியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் மனித உரிமைகள் பேரவையின் ஆணைக்கு இணங்க, இலங்கை தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு என ஜெனிவாவை தளமாக கொண்ட ஒரு புதிய விசேட இலங்கைப் பொறுப்புக்கூறல் கருத்திட்டத்தை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஸ்தாபித்துள்ளது.

அரிசி, பருப்பு விலையை பார்த்துக்கொள்ளவா என்னை நியமித்தீர்கள்.? – ஜனாதிபதி கோட்டாபாய காட்டம் !

நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாக நியமித்தது பருப்பு மற்றும் அரிசியின் விலைகளை பார்த்துக் கொள்வதற்கு என்றால் அதற்கு நான் தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நூறு சதவீதம் கரிம உரத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய பண்ணை ஒன்றை பார்வையிட இன்று (23) சென்ற போது ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

“எங்களது முந்தைய அரசாங்கங்கள் கூட இதைச் செய்ய முயற்சித்தன. இது கடினமான பணி. எனது முன்னோர்களுக்கு தெரியும் பாரம்பரிய பயிற்செய்கையை எப்படி செய்வது என்று. ஆனால் துரதிஷ்டவசமாக எந்த தலைவரும் இந்த முடிவை எடுக்கவில்லை.

என்னை நியமித்தது பருப்பு மற்றும் அரிசியின் விலையைப் பார்த்துக் கொள்வதற்காக என்றால் அதற்கு நான் தேவையில்லை. அதை விட மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்காகவே. விசேடமாக இந்த விவசாயத் துறை தொடர்பில். நான் வந்தது முதல் உரத்தை இலவசமாக வழங்கினேன். உண்மையில் விவசாயியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவே இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல், நெல்லின் உத்தரவாத விலையை அதிகரித்தோம். ” என்றார்.

100% கரிம உரத்தை உற்பத்தி செய்து அதனூடாக வெற்றிகரமாக காய்கறிகள் மற்றும் பழங்களை பயிரிடும் இந்த பண்ணை தொடர்பில் நேற்று (22) அத தெரண 6.55 பிரதான செய்தி அறிக்கையில் வௌிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“சட்டத்தை வேறு எங்கோ உருவாக்கிவிட்டு பாராளுமன்றத்துக்கு கொண்டு வருகிறீர்கள்.” – ஆளுங்கட்சிக்குள்ளிருந்து ஒரு எதிர்ப்புக்குரல் !

சமிக்ஞை வழங்கும் தூண்களாக இருப்பதற்கு மக்கள் எம்மை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யவில்லை என புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் விதம் குறித்து தனது அதிருப்தியை பகிரங்கமாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று (22) நாடாளுமன்றத்தில் பேசிய போதே அவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

எதற்கும் கைகளை உயர்த்தும் சமிக்ஞை வழங்கும் (சிக்னல்) தூண்கள் போன்று இருப்பதற்காக மக்கள் வாக்களித்து எம்மை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கவில்லை.  சட்டங்களை உருவாக்க நாங்கள் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளோம். ஆனால் சட்டங்களை வேறு இடத்தில் உருவாக்கி விட்டு, இங்கு கொண்டு வந்து எம்மை கைகளை உயர்த்துமாறு கூறினால், அது சரியாக இருக்காது.

நாங்கள் முன் பள்ளிக்குச் சென்று பாராளுமன்றத்திற்கு வரவில்லை. அப்படியானவர்கள் இருக்கக் கூடும். நான் 1982 ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்தேன். 1985ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்திரியப் பிரமாணம் செய்தேன். தற்போது 36 ஆண்டுகள். பாராளுமன்றத்தின் மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கிலும் நாங்கள் வாதாடினோம். சிலருக்கு அவை தெரியாது. எனவும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

திருமணத்துக்காக சேமித்த பணத்தில் வறுமையில் வாடும் குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுத்த தம்பதியினர் – குவியும் பாராட்டுக்கள் !

இலங்கையில் திருமணத்துக்காகச் சேமித்த 20 இலட்சம் ரூபா பணத்தில் வறுமையில் வாடும் குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டிக் கொடுத்த தம்பதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனும்  யுவதியும் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். குறித்த இளைஞன் மக்கள் வங்கியிலும் அவரது காதலி ஆயுர்வேத வைத்தியராகவும் பணியாற்றி வருகிறார்கள்.
பிரபல ஹோட்டல் ஒன்றில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு இரண்டு குடும்பத்தினரும் தீர்மானித்திருந்தனர். எனினும் ஒரு நாள் கொண்டாட்டத்துக்காக பிரம்மாண்டமாகத் திருமணம் செய்து பணத்தை வீணடிப்பதற்குப் பதிலாக வறுமையிலுள்ள குடும்பம் ஒன்றுக்கு உதவுவதற்கு இருவரும் தீர்மானித்தனர்.
அதற்கமைய கணவனை இழந்த 3 பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர். தங்கள் திருமணத்துக்காகச் சேமித்த பணத்தைக் கொண்டு அவர்கள் இந்த வீட்டை நிர்மாணிக்க  ஆரம்பித்தனர்.
தற்போது வீடு நிர்மாணிக்கப்பட்டு குறித்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் வடமராட்சி மீனவர்கள் கைது !

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியக் கடற்படையினர் நேற்று இரவு கைது செய்ய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் இந்தியக் கடற்படையினர் நாகபட்டினம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இருவரும் வடமராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எல்லைதாண்டிய மீன்பிடி விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கை மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவின் பசளைகளில் ஆபத்தான பக்டீரியாக்கள் – சீன கப்பல் இலங்கையில் பிரவேசிக்க தடை !

சீனாவிடமிருந்து நாட்டிற்கு சேதன பசளையை கொண்டுவரும் கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக ஹார்பர் மாஸ்டர், கெப்டன் நிர்மால் டி சில்வா தெரிவித்தார்.

20 ஆயிரம் மெட்ரிக் தொன் சேதன பசளையுடன் குறித்த கப்பல் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நாட்டை வந்தடையும் என தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம் கொழும்பு துறைமுகத்திற்கு அறிவித்திருந்தது.

நாட்டிற்கு வருகை தரும் கப்பலில் காணப்படும் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் காணப்படுவதாகவும் தேசிய தாவரங்கள் தொற்று நீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம் தெரிவித்திருந்தது.

எனினும், குறித்த கப்பல் கொழும்பு துறைமுக எல்லைக்குள் இதுவரை பிரவேசிக்கவில்லை எனவும் வருகை தருவது தொடர்பாக எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை எனவும் ஹார்பர் மாஸ்டர் குறிப்பிட்டார்.

சீன நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளப்பட்ட பசளைகளின் மாதிரிகளில் பக்டீரியா காணப்படுகின்றமை இரண்டு சந்தர்ப்பங்களில் உறுதி செய்யப்பட்ட நிலையில் கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் அதிகரிக்கும் பொலிஸாரின் அராஜகம் – பைக்கில் சென்றவரை நிறுத்தி தாக்கிய பொலிஸார் !

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பொதுமகன் ஒருவரை தாக்கும் வகையிலான காணொளி வெளியாகியிருந்தது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் பகுதியில் பொதுமகனை கொடூரமாக தாக்கிய பொலிஸார் - வெளியான காணொளி -  தமிழ்வின்

குறித்த நபரை பின்தொடர்ந்து வந்த பொலிஸ் அதிகாரி இடையில் மறித்து அந்த நபர்மீது தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை உதைத்து கன்னத்தில் அறைந்த பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி இன்று (சனிக்கிழமை) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி தாக்கும் வகையிலான காணொளி வெளியாகி நேற்று (வெள்ளிக்கிழமை) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.

இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

கிழக்கில் காவல்துறையினரின் அடாவடிகள் அண்மைய நாட்களில் அதிகரித்து வருகின்றது.  ஐஸ் போதை பாவித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞனின் மரணம் , இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவல் பொலிஸ் ஒருவரால் பிரஜை கொலைசெய்யப்பட்ட விவகாரம் என்பன குறிப்பிடத்தக்கது.